என் சிறிய வயது கனவு, தேவதைக் கதைகளைவிட வீரக்கதைகளால் நிறைந்தது. நம் வீட்டிற்கு இரு சக்கர வண்டி முதன்முதலாக வந்த போது, உங்களுக்கு முன் அமர்ந்து முடி பறக்க பயணித்த போது, தேசிங்கு ராஜாவின் குதிரையை நினைத்துக் கொள்வேன். தலைக்கு மேல் தூக்கச் சொல்லி உலகக்தினை கீழ் நோக்கிய அலட்சிய பார்வை பார்த்திருக்கிறேன். அலுவலகம் முடிந்து நீங்கள் வரும்போது எனக்கென ஒரு தீனிப் பொட்டலம் இருக்கும். நீங்கள் வெளியூர் சென்று திரும்பும்போது இரவானாலும் காத்திருந்து எதிர் கொள்வேன். உறங்கிவிட்டாலும் உங்கள் குரல் கேட்டவுடன் விழித்துக் கொள்வேன். நீங்கள் வாங்கி வந்திருக்கும் விளையாட்டு பொருளை- பெரும்பாலும் கார் அல்லது குட்டி விமானமாக இருக்கும் - என்னிடம் தந்துவிட்டு " காலைல எழுந்துக்கணும்ல சீக்கிரம் படு" என்று வாய் சொன்னாலும் கைகள் என்னை வருடிக் கொண்டே இருக்கும். அம்மாபோல கதைகள் சொல்லாமல் , பளிச்சென்று நீங்கள் பேசும் வார்த்தைகள் வேதவாக்காய் தோன்றியிருக்கிறன. நம் இருவருக்கும் இடையில் யாருக்கும் அனுமதியில்லாத அந்த உறவு எங்கே மாறிப் போனது?
மாறி வரும் உலகத்தின் புதிதாக பின்னப்பட்ட புதிய சிந்தனைகளின் சிலந்தி வலைக்குள் நான் சிக்கிக் கொண்டு ஒரு மலையுச்சியை நோக்கி ஓடுவதாக நினைத்து உங்கள் கைகளை உதறிவிட்டு விலகினேன். நான் வளர்வதாகவும் நீங்கள் வளராமல் நின்று விட்டதாகவும் தோன்றியது. என்னுடைய முடிவுகளை உங்களிடம் கலந்துரையாடக் கூட தோன்றவில்லை. நிறைய விசயங்கள் நீங்கள் புரிந்து கொள்ளமுடியாதவை , என்னுடைய பார்வை உங்களுக்கு இல்லையென்றும் நான் நினைத்தேன். அது ஒரு ஓட்டம். பொருளாதாரக் குதிரையை போர் குதிரையாக பாவித்து துரத்தி பிடித்து எப்பாடு பட்டாவது பிடித்து கொட்டிலில் அடைப்பதுதான் முக்கிய கொள்கை என்று தோன்றியது. ஓடி ஓடி படித்தேன், ஓடி ஓடி வேலை தேடினேன். உண்மையிலேயே என் ஓட்டம் பல நூறு மைல்கள் கடந்தது.
இதனால் நீங்கள் வருத்தப்பட்டதுபோல அப்போது எனக்குத் தோன்றவில்லை. நான் அருகில் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம் மட்டுமே என்று நினைத்தேன். என்னவோ, முதலில் இருந்த பிரிவின் வலி சற்று நாட்கள் கழித்து மறைந்துவிட்டது. பிறகு அம்மாவிடம் பேசிய அளவு நான் உங்களிடம் பேசியதில்லை. எதையுமே அம்மாவின் வழியாகவே உங்களிடம் தொடர்பு கொண்டேன். இப்போது வாழ் நாளின் பாதி கழிந்தபின் நான் நிற்கும் இடம் சற்று உயரமானதுதான். வெயிலை உணராமல், மழையில் நனையாமல், யாருக்கும் தலை குனிந்து பதில் சொல்லாமல், பவ்வியமாக பேச வேண்டிய தேவை -உங்களைப் போல- இல்லாமல் சௌகரியமான இடம். கண் விழித்த நொடியில் இருந்து உறங்கும்வரை வழுக்கிக் கொண்டே செல்லும் நொடிகள் எனக்கு சொந்தமானவை. சாதிச்சாச்சு...?
சிறிய வயதில் உங்களுடன் பூஜை அறையில் மந்திரம் சொல்லி "எல்லாரையும் நல்லா வச்சிக்க" வேண்டிக் கொண்டது நினைவிற்கு வருகிறது. நன்றாக இருப்பது என்பது இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால்தானா? சாமி நமக்கு மட்டும் வேறுவிதமாக வரம் தந்துவிட்டதோ?.
உங்களை தொலைத்து நான் தேடியதை தொலைத்து என் மகன் திரும்பவும் உங்களை தேட வைக்கின்றான். என்னுடைய விருப்பம் ஒன்றுதான், உங்கள் நினைவு எனக்கு வரும் அந்த வேளையிலேயே உங்கள் முன் என்னை நிறுத்தக்கூடிய ஒரு மந்திரம் வேண்டும். சற்று தாமதித்தித்தாலும் ஏதோவொரு தயக்கம், கழிவிரக்கம், உங்களை நேரில் சந்திக்கும் வேளையில் எப்படி நடந்து கொள்வது என்ற ஒப்பனைகள் - நம்முடைய பழைய சில சந்திப்புகள் அப்படித்தான் நாடகத்தனமாக முடிந்தன- இவை பிரவாகமாக எழுந்து என்னை தடுத்து விடுகின்றன. நான் தொலைத்த என் அப்பா காலங்களின் இருண்ட குகைக்குள் கரைந்து மறைந்து அவரைப் போன்ற ஒரு தோற்றம் மட்டுமே எனக்குக் கிட்டுகிறதோ என்று எனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஒன்று புரிகிறது அப்பா, ஒரு நாள் குட்டி வயதில் கால் பந்து விளையாடுகிறேன் என்று ஓடி கீழே விழுந்து அடிபட்டு போது உலகம் தெரியவில்லை உங்களை மட்டுமே தேடியது அது போல் - தேற்றும் வழியறியாத சிறுவனாக உங்களை கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றைய 'நான்'ஐ கழற்றி வைக்கும் அப்படி ஒரு அடிக்காகவும் வலிக்காகவும் காத்திருக்கிறேன்.
என்றாவது ஒரு நாள் உங்கள் அருகில் அமர்ந்து இதனை வாசித்து உங்களுடைய 'குட்டி ராஸ்கலாக' மாறுவேன். அதுவரை இந்த கடிதத்தை நான் மட்டுமே படிக்க முடியும்.
இருளும் ஒளியுமான உலகத்தின் ஒரு மூலையிலிருந்து
உங்களுடைய குட்டி ராஸ்கல்