மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


                  இந்தமுறை கதை இல்லை. இதற்கு முந்தைய பதிவுகளை பற்றி கொஞ்சம் பேசலாம்.

                 முதலில் வடக்கிருத்தல் பற்றி, தமிழ் இலக்கிய துறையினருக்கு தெரியும்.     இந்த விளக்கம் புதியவர்களுக்காக. பழங்காலத்தில் போரில் தோற்ற மன்னர்கள் தானாகவே தம் உயிரைவிட எண்ணி வடக்கு திசை பார்த்து    அமர்ந்து       உண்ணா     நோன்பிருப்பார்கள்.        இதனைதான் வடக்கிருத்தல் என்பார்கள்.        உண்மையில் வடக்கிருத்தலில் நான் சொல்ல வந்தது கறிசோறு    பற்றியல்ல.        இறுதி  காலத்தில் அந்த மூதாட்டியின்    மனநிலை     பற்றிதான்.       இன்றைய வாழ்க்கை போராட்டத்தில் பிள்ளைகளின் இயலாமை, மற்றவர்களின் அலட்சியம், உலகத்தின் முதியோர் பற்றிய பார்வை- முக்கியமாக அவர்களது உடல் நிலை,இத்தனையும் சேர்ந்து வாழத்தகுதியில்லாதவர்களாக ஆக்கப்படுவதைதான் விலாவாரியாக பேசவிரும்புகிறேன்.

            மேலே குறிப்பிட்டவை மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கே உரிய எதிர்பார்ப்புகள் மறுக்கப்படுவதையும்தான் உணரவேண்டும். இது அமுது படைத்தவளின் விளக்கம். தேவையான வசதி செய்து தந்தால் போதும் , அதையே பெருமையாக நினைத்துக் கொண்டு அவர்களிடம் உரையாடாமல் தவிர்ப்பது.   குடும்ப பிரச்சினைகளில் கலந்தாலோசிக்காதது , சில சமயம் குழந்தைகளைக்கூட அவர்களிடம் விளையாடவிடுவதில்லை - அவர்களின்      இருமல் காரணமாக. வயது மூப்பின் காரணமாக - பசி எடுத்தாலோ, பதட்டப்பட்டாலோ , உணர்ச்சி வசப்பட்டாலோ தொடர்ச்சியான இருமல் வரும் - அதற்கு காச நோய்க்கு உரிய மரியாதை(!)யை தரவேண்டாம். எளிதாக சீரணிக்கூடிய உணவு வகைகள், தெம்பான பானங்கள், பிரியமான வார்த்தைகள் நேரந்தவறாமல் தந்தால் போதும், இருமல் ஓடிவிடும்.

           பொதுவாகவே கோபப்படமட்டுமே தெரிந்த நமக்கு அதனை சரியாக கையாளத்தெரியவில்லை.      அதனால் நோக்கமே மாறிப்போகிறது. சிறியவராயின் சமாதானம், பெரியவரிடம் மன்னிப்பு இதுதான் சூத்திரம். குடும்ப உறவு சீராக இருக்க இதுதான் கட்டாயம் தேவை. ரௌத்திரம் பழகுவீரின் விளக்கம் இதுதான்.

          பெரியவர்களிடம் குறையே இல்லையா? என் மாமியார் இப்படி! மாமனார் அப்படி! என்று புலம்பல்களும் வருகின்றன. அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வார்த்தைகள் மட்டுமல்லாமல் முகபாவங்களிலும் கவனம் தேவை. நமக்கே தெரியாமல் தவறான சேதிகளை அவர்களுக்கு சொல்லக்கூடும். அவ்வாரெனில் தயங்காமல் மன்னிப்பு கோருங்கள் - பெருந்தன்மையான நடப்பு இதுதான். காற்றுக்குமிழ் மற்றும் கலிங்கத்து பரணியின் செய்தியாகும்.

           இனி வரும் பதிவுகளில் வயது முதிர்ந்தவர்களையும் அவர்களின் பிரச்சினைகளையும், தேவைகளையும் புரிந்து கொள்வோம். அப்படியே சின்ன சின்ன சிக்கல்களையும் தீர்த்துக் கொள்வோம்.

         கலிங்கத்து பரணி

அது... இறந்தே விட்டது........!
    படி திரும்புமுன்தான் கவனித்தான்.
கண்ணாடி  வேலைப்பாட்டினருகே
    சிவப்பும் கறுப்புமாய் பட்டாம்பூச்சி
முட்டி மோதி இறந்தே விட்டது!
   நேற்று உயிரோடு அழகாய் படபடத்தது
கண்ணாடிக்கு அந்தபுறம் பூந்தோட்டம்
    அதற்கோ தேன் குடிக்கும் ஆசை
பறந்து பறந்து கண்ணாடியில் மோதியது  
     தோல்வி...தோல்வி...தோல்விதான்....
சற்று பொறுத்து  மீண்டும் படையெடுப்பு
     பட்டாம்பூச்சியின் புறமுதுகிடாத்தனம்..
திருவிற்கு  எதையோ சொல்லியது.
     இரவு முழுவதும் இதே சிந்தனைதான்


எப்போதும் தலையாட்டுவது அவன்தான்
     இந்தமுறை அவனின் முடிவுதான் இறுதி.
காலையில் தன்மான சிங்கமானான்
    மகளின் காதல் கலவரத்தில்
வீட்டின் நிலைமை களேபரம்.
     அம்மாவின் பேத்தி பற்றிய கோட்பாடு
அவரையும் எதிர் முகாமில் தள்ளியது
     கலிங்கபோரில் வெற்றிதான் (தற்காலிகமோ!)

கடமையாய் அலுவலகம் வந்தால்...
     அவனுக்கு கீதோபதேசம் தந்த
முட்டாள் பூச்சி செத்தே விட்டது.
     கண்ணாடியை நம்பாமல் அப்படியே
பார்வையை பின்னாடி திரும்பியிருந்தால்...
      திரு-(திருமாலவன்)-வும்  அப்படித்தானோ
திரும்பி பார்த்தால்.. மெலிந்த தேகம்..
      தளர்ந்த செயல்பாடுகள்.. ஆனால்,
கண்களில் மட்டும் பிரகாசம்
      ஒளி வெள்ளமாய் அவன் அம்மா!
உலகம், வாழ்க்கை... ஏன் மூச்சுகூட
      அத்தனையும் அவனுக்காக மாற்றியவள்.
எப்படி இப்படி மறந்தான்....
      பழங்காலத்தில் போரில் தோற்குமுன் 
பச்சிளம் பாலகனைகூட அனுப்புதல் போல
      அம்மாவை பகடையாக்கி விட்டானோ...


அமைதியை உள்ளேயும் அமலாக்க
       யாராவது விட்டுத்தர வேண்டும்
காதல் விட்டுதராது. அவன்தான்...
       அதற்கும் முன் பொது மன்னிப்பு!
ஆனால் அவனுக்கு தெரியாதது,
      வயதான காரணமோ, உடல் தளர்வோ
தலை சுற்றி விழுந்து மயக்கமாய்
      மருத்துவமனையில் அவன் அம்மா!
- இல்லை,  இல்லை
      அப்படி நினைக்க வேண்டாம்...! நம்புவோம்
திருவும் மன்னிப்பு பெறுவான் என்று.

எந்த போரானாலும் முடிவினில்
      தன்னவர்களை பலியிடாதவன்
தோற்றாலும் ஜெயித்தவனாகிறான்.
      இதுதான் வெற்றி பரணி!




" சாப்பிட்டு விட்டீர்களா? "  
  கையில் மருந்துடன் வெள்ளுடையின் கேள்வி 
            சாதாரண கேட்டலில் கண்ணில் நீர் .
 ஆம்...   இந்தமுறை வேதாவின் சரிதைதான்..
           காவேரி     ஆற்றங்கரையில் 
  கடவுளுக்கு வாழ்க்கைபட்ட பூமியில் 
          அவளுக்கு மட்டுமான வீடு 
சொல்லப்போனால் ,
         குறை ஒன்றுமில்லை அவளுக்கு 
வளத்திலும் நலத்திலும்  
         வேண்டாதது தவிர்த்து 
வேண்டிய அத்தனையும் உண்டு 
        வெளிநாட்டு வேலையில்
வேதாவின் மகன் அருளியது.
        அருளுவதுகூட கடமைதான் 
பின் ஏன் கண்ணீராம் .....?
           மகன்  கேட்க வேண்டிய கேள்வி  
 என்னவோ தெரியவில்லை 
         அதை மட்டும் கேட்பதில்லை 
வழமையான விசாரிப்பு இல்லாமல் 
        என்ன பேச்சு அது ....!
நேற்றுகூட  அவன் பேசினான் 
      பேசியதை பெட்டி செய்தியில் காண்க 
மற்றபடி வேதாவின் விருப்பம்  
      அன்றும் நிரலில் இல்லை 
தொலை பேசியின் குரல் 
       நேயர் விருப்பம் இல்லாத 
வானொலி நிகழ்ச்சி போலானது ..
      அப்புறம் என்னவாயிற்று  ?

ஒருநாள் குட்டி பேரன்  கேட்டான்
       ' பாத்தி மம்மம் சாப்ட்டியா?'
 தொலைபேசி புண்ணியம்தான்
       வேதா அதன் பிறகு பேசவேயில்லை!

பதிமூனாம் நாள் முடித்தபின் 
      கவலையாய் மகன் கேட்டான் 
' அங்கெல்லாம் காக்கா  இல்லை 
      அம்மா எப்படி சாப்பிடுவாங்க ?'

           சில சமயம் நாம் சாதாரணமாக நினைப்பதுகூட அசாதாரணமான விஷயம் ஆகிவிடுகிறது . சொல்லியது மட்டுமல்ல  சொல்லப்படாத வார்த்தைகள் கூட மதிப்பானவையாவது  காதலில் மட்டுமல்ல கடைசி காலத்திலும்தான்.

 " நலமா நண்பரே? எப்போது வந்தீர்கள்?
         அங்கே வசதி எப்படி உள்ளது? "
அர்ஜுனனின் கணைகளாய்      
    சிவராமனின் கேள்விகள்.
உண்மையில் அவரின் ஆசை
        எதிர்பதமான பதில்கள்தான்!
வார்த்தைகள் புரிவதைவிட
       கண்கள் அதிகம் பேசியது
வரதுவிற்கும் அது புரியும்
       பேத்திக்கு பிறந்த நாள் விழா!
அவருக்கும் அழைப்பு வந்தது
     ஆவலாக வந்தால் அவலாக்குகிறார்
        
இந்த வா...ரம்... வரதுதானோ...?
       இருக்காதா பின்னே... 
அவர் அயல்நாடா சென்று வருகிறார்?     
     அனாதை இல்லத்திலிருந்தல்லவா...
- இல்லை இல்லை....
      இந்த வரிகளை வரதுவிற்கு 
தெரியப்படுத்த வேண்டாம்!
       (இது சிவராமனின் உபயம் ) 
து முதியோர் இல்லமாம்..
       மறுபடியும் மன்னிக்கவும் ... 
வசதியானவர்கள் வசிக்கும்
      ஒய்வு இல்லம் என்று சொல்லுவார்.  -
 

தனக்கென சேர்த்த பணத்தையும்
        இருப்பதாக நினைத்துக் கொண்ட
தன்மானத்தையும் செலவழிக்கிறார்
       அவர் இப்படியென்றால் மகன் அப்படி
இருவரின் உள்ளத்து இடைவெளியில் 
        இல்லத்து வியாபாரி நலமோ நலம்.

முகம் பார்த்து நிற்கும்
      சிவராமனுக்கு பதில் வேண்டுமாம்
"காலை தேநீர், அற்புதமான உணவு,
      படிக்க புத்தகங்கள், சுகமான காற்று 
ஆழ்ந்த உறக்கம், வசதிதான்... "
       உள்ளே ரத்தம் வழிந்தாலும் 
எதிரியின் கண்களில் ஏமாற்றம்
      சொன்ன வார்த்தைகளுக்கு
சற்றும் தொடர்பில்லாத உண்மை
      தொண்டைவரை வலித்தது.
 மாத கட்டணம் வசசூலிப்பவருக்கு
      மனதின் எதிர்ப்பார்ப்பு தெரியுமா?  

உறக்கம்வர கட்டாய மாத்திரைகள்
      உப்பில்லாத உணவு - பத்தியமாம்  
 சருகுகள்  செத்துப்போன சத்தம்
      தட்டாம் பூச்சியின்  வெற்று சிறகுகள்
மொட்டுகள் இல்லாத தோட்டம்
      சிரிக்க மறந்த நாட்கள் .....!
பக்கத்து படுக்கை சதாவின்
      இறுதி நாட்கள் இன்னமும் வலி
சுவாசிக்ககூட நுரையீரலுக்கு பயம்
     வெளியே விட்ட காற்று திரும்பாதோ ..?
 இருந்தாலும்............?

வாழ்க்கை வியாபாரத்தில்
       வெற்று கை வீச பயந்து 
காற்று குமிழ்களுடன் ஒப்பந்தம்!
       மறுபடியும் காடாள சென்றார் .

கடுதாசி வந்தது !
 இப்படியே போனால் ....
       மாரிக்கு    கறி சோறாம்!
இது கெடா வெட்டி வச்ச
      மாரியாத்தா படையல் அல்ல
பட்டினிக்காக கழுவேறிய
      பிச்சையின் ஆத்தாவுக்காக
 யாராம் அவள் ?
      முட்டுச்சந்து   மூலையில்
 கட்டில் கடை போட்ட மாரி
 எனக்கோ
      சவ்வு மிட்டாய் கிழவி !
 இன்னும் உப்பு மாங்காய்
     முந்திரி பழம் வெள்ளரி என
பள்ளி நேரத்து சிற்றுண்டி சாலை
அங்கு மட்டும்
      கடன் அன்பை  முறித்ததில்லை!
பாசக்கார கிழவி ...
      படித்த மாத்திரத்தில்
மனதில் எரிமலை ....?
திங்களன்று  சேதி வந்தது
    மாரி கிழவி இறந்தே விட்டாளாம்
 கறி சோறு  தின்று அல்ல ..


    கஞ்சி தண்ணி குடிக்காமல்
கண்மூடி  தவமிருந்து
    கடைசி மூச்சை விட்டாளாம்
 வடக்கிருத்தல் என்றால்
    வடக்கு பார்த்துதான்  என்றில்லை !


                        இன்றைக்கும் மதுரை மாவட்டத்தின்   ஒதுக்குபுற   கிராமங்களில் வயசாளிக்கு கறி சோறு  வைக்கும் பழக்கம் உள்ளது.  கறி விருந்து பற்றி தெரிய வேண்டுமெனில்  விசாரித்து  தெரிந்து கொள்ளுங்கள் .   என்னை    கேட்டால் கறி சோறு மட்டுமல்ல ஒரு சுடு சொல் கூட அவர்களை வழியனுப்பி வைக்கும் என்று  சொல்லுவேன் .






 
      

காய்த்து கல்லடிபட்டும் காயாத மரங்கள்...
கருவாகி காதலாகி கவிதையாகி
கடைசியில் எருவாகிய இதயங்கள்...
இது காலத்தின் பொக்கிஷமாகும்
சிலருக்கோ ....
பழம் நினைவுகளின் முதுமக்கள் தாழி!
இனி வரும் களங்களில் சந்திப்போம்...

ரௌத்திரம் பழகுவீர் 

பக்கத்து இருக்கை பரமன் 
    சிரித்த முகம் இல்லையென்றாலும்   
தனித்து நில்லாத சிநேகபாவம் 
    வந்ததும் எனக்கான புன்னகையுண்டு 
ஆனல் இன்று....
    குறைந்த மின்னழுத்தம் போல  
கொஞ்சம் இருள் சூழ்ந்த முகம்,
    என்னவாயிற்று ....?

 
இடைவேளையில் பதில் வந்தது
     சின்ன மகனுடன் சண்டையாம்
எதற்கோ என்னவோ சொல்லப்போக  
    "எதற்காக பெற்றீர்கள்?" என்றானாம் 

-சித்தாந்த சமயநூல்களை
      கரைத்து குடித்தபின்னல்லவா
இதற்கெல்லாம் பதில் கிட்டும- 
    பதில் தரமுடியாமல் சினம் காத்தால்..

 
அதே கேள்வி மறு ஒலிபரப்பானது 
    பேரனை ஆதரித்த தாத்தாவினால்
சினம் செல்லிடத்து காக்கபட்டது
   அல்லிடத்து காக்கப்படவில்லை

கூரிய வார்த்தைகள் அம்பானதோ...
    முள்ளானதோ... ஊசியாக தைத்ததோ?
அவ்விடத்தில் உருவானது 
    குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம


அவரும் பே...சியிருக்கலாம்...
    அதைவிடுத்து அதென்ன பார்வை!
இமயமலை தவசி போலவே,
    அம்மா இருந்திருந்தாலாவது.....
அவருக்கும் அதே நினைப்புதானோ!
    மதிக்க ஆள் இருந்தால்தானே  மகாராஜா!
அப்பா அடிக்கடி சொல்லுவதுதான்.

பரமன் பெற்றவரிடத்தும் பெரியவரிடத்தும்
    மரியாதை தரும் மதிப்பானவர்தான்
கேட்டால், நிலைதடுமாறிவிட்டராம்
    இப்போதும்தான்.. குரலே  மாறுகிறது
மதிய விடுப்பு எடுத்து மன்னிப்பு கேட்டால்?
    அந்தவேளையில் அலைபேசியின் அழைப்பு 

அலைபேசியின் அந்தப் பக்கம்...
   அவரேதான் ... பரமனின் அப்பா!
பேரனை பெரியவராய் ஆதரிக்கவேண்டி
   அவரும் செல்லிடத்து காக்கவில்லையாம் 

இப்போது மன்னிப்பானது சமநிலையானது.
   இதுதான் ரௌத்திரம் பழகுதல்! 

சினம், சமாதானம், மன்னிப்பு பழகுவீர்!