மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

"ஒரு கதை சொல்லவா...." நான் கேட்க... "நேணாம்" அவன் மறுத்தான்.
"சின்ன சின்ன நாய்குட்டி பாடலாமா" ...... "நேணாம்"
"ஐஸ்கிரீம்...." வேகமாக பதில் வந்தது. "நேணா.....ம்" அவனுடைய ஒத்துழையாமை இயக்கத்தின் காரணம் எனக்குப் புரியவில்லை. கோபமா? அல்லது எல்லாவற்றையும் மறந்துவிட்டானா?

அவன் வினுகுட்டி , என் சினேகிதன். இரண்டு வயது. இந்த வயது நண்பர்கள் எனக்கு அதிகம், நான் வீட்டிலிருக்கும் நேரங்களில் சில் வண்டுகளாய் ரீங்கரித்து மழலை மொழியால் நிரப்பிவிடுவார்கள். மழலை மொழி, சுறுசுறுப்பான சுட்டித்தனம், விவரிக்க இயலாத கள்ளமில்லா சிரிப்பு இவற்றுடன் வினுகுட்டி, அனைவரையும்விட  என் நட்பு வட்டாரத்தில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தான். எங்களுடைய வயது வேற்றுமையை சற்றும் மதிக்காமல் என்னை தோழியாக அங்கீகரித்து கதைகள் பேசி, பாட்டு பாடி என் வயதை குறைத்துவிட்டிருந்தான்.

எங்கள் வீட்டிற்கு அருகில் அவன் அம்மா வழி பாட்டிவீடு. வீட்டிற்கு முதல் பேரன், எனவே கவனிப்பு அதிகம். இரண்டாவது குழந்தையின் பிறப்பிற்காக அவன் அன்னையுடன் இங்கு வந்திருந்தான். அவன் அன்னையின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு அண்டை வீட்டார்கள் அனைவரும் அவனை கவனித்துக் கொண்டோம்.  எனக்கும் அவனுக்குமான சினேகிதம் எங்கள் குடியிருப்பில் பிரசித்தி பெற்றது. காலையில் எழுந்தவுடன் வீட்டிற்கு வருபவன் இரவு உறக்கம் வந்தபின்தான் செல்வான். ஆனால் இடையில் அவன் வீட்டிற்கு சென்று உணவருந்துவது உடை மாற்றுவது என்று தன் வேலைகளையும் கவனித்துக் கொள்வான்.

சென்ற வாரம் அவன் தாயுடனும் தன் புது தங்கையுடன் தன் வீட்டிற்கு சென்றுவிட்டான். இன்று வருவதாக கூறியிருந்தார்கள். அவனும் வந்துவிட்டான்.

வாயிற்படியின் ஓரமாக தலையை குனிந்து கொண்டு விரல் சூப்பிக் கொண்டு நின்றவனை உள்ளே அழைத்துச் சென்று பேச்சு வார்த்தையை தொடங்க போராடிக் கொண்டிருக்கிறேன். "அவன் எல்லாத்தையும் மறந்துட்டானு அம்மா சொல்றாங்க." அவன் அம்மாவின் புலம்பல். எனக்கும் அப்படித்தான் தோன்றியிருந்தது.

தொலைக்காட்சியை கை காட்டி "வீ...ம்" என்றான். அது சோட்டா பீமிற்கான அழைப்பு. போகோவில் சோட்டா பீம் போடவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.  பீமை மறக்காத அவனின் நேர்மை என்னை பொறாமைக்குள்ளாக்கியது.

ஐஸ்கிரீம் அவனிடம் நீட்டப்படவும் வாங்கிக் கொண்டான். தொலைக்காட்சியிலும் அவன் கவனம் இல்லையென்று தெரிந்தது. சற்று விரைப்பாக அவன் அமர்ந்திருந்தது... என் மேல் கோபமோ என்று கேள்வியை கிளப்பியது. என் இனிய சினேகிதனின் முகத்திருப்பலை ஆச்சரியமாக அளவிட்டுக் கொண்டிருந்தேன்.

"ஆண்டி, அங்கே அவனுக்கு அத்தனை சினேகிதர்கள் கிடையாது. உங்களைப் போல கதை சொல்லி பாட்டு பாடி விளையாடவும் ஆளில்லை. அந்த கோபமாக இருக்கும்" வினுவின் அம்மா கூறினாள்.

அமைதியாக கழிந்த அரை மணி நேரத்தின் பின் "நாங்கள் கிளம்பறோம்" என்று வினுவை தூக்கினாள். அவனுக்காக வாங்கியிருந்த விளையாட்டுப் பொருளை அவனிடம் நீட்டினேன். இந்த முறையும் 'நேணா'மை எதிர்பார்த்தேன். கையை நீட்டி வாங்கிக் கொண்டு விரைவாக டாட்டா காட்டினான். அவனை புரிந்து கொள்ள முடியவில்லையோ என்ற ஆதங்கம் வந்தது.

வாயிற்படியை தாண்டும் முன் என் பக்கம் திரும்பி ஒரு ஆழமான பார்வை பார்த்தான். பின் அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டான். "நம்மளையெல்லாம் மறந்துட்டான்" அவன் பாட்டி மீண்டும் குரல் கமற கூறினார்கள். அவர்கள் சென்ற பின்னும் எனக்கு அமைதியான சிந்தனையில்லை.

ஏனெனில், அவனுடைய பார்வை எனக்கு பரிச்சயமானது. ஓடி வரும் போது... ஜம்ப்.. என்று சொல்லிவிட்டு குதிக்கும் போது.... பந்தை துரத்தி கொண்டு வரும்போது... கையில் கிரிக்கெட் மட்டையை பிடித்துக் கொண்டு அடிக்கத் தயாராகும் போது... உறக்கம் கண்களில் சுழன்று இமைகள் மூடிக் கொள்ளப் போகும்போது .... இது போன்ற பார்வைகளை அவனிடம் பார்த்துள்ளேன். நீ என்னுடன் இருப்பாய்தானே.... என்ற கேள்வியும் அதனை உறுதிபடுத்தும் சத்தியமான பதிலும் எதிர்பார்த்த பார்வையது.

எனக்கு சட்டென புரிந்தது... இப்போதும் அவன் அந்த சத்தியத்தை எதிர்பார்க்கிறான். மற்றவர்களிடமும் அதையேதான் எதிர்பார்த்திருக்கிறான். அதனை புரிந்து கொள்ளாமல் நாங்கள் அவனை ஏமாற்றிவிட்டோம். அவனுக்கான உலகம் மாறிவிட்ட சோகம்... அதனை மௌனமாக ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறான். இங்கே அவன் கொண்டாடிய தருணங்கள் நினைவில் மறைய நாளாகும் அதுவரை இந்த அமைதி அவனிடம் இருக்கும்.  அதுவரை அந்த அமைதி கோபம் என்றோ மறதி என்றோ தவறாக புரிந்து கொள்ளப்படும்.

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடைய பள்ளி சினேகிதியின் மௌனம் பொறாமை என்று பெயரிடப்பட்டது.  கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டு விலகிய சினேகிதியின் மௌனம் கோபம் என்று விளங்கிக் கொண்டது. திருமணம் முடிந்த என் சகோதரியின் மௌனம் புது வாழ்க்கையின் மயக்கம் என்றும் என் திருமணத்தின் பின்  என் தாயிடம் நான் கண்ட மௌனம் என்னை மறந்து போய்விட்டதாகவும் கொள்ளப்பட்டது. இது போலவே எண்ணிலடங்கா மனங்களை... சத்தியத்தை எதிர்பார்த்து நின்றவர்களை புரிந்து கொள்ளாமல்  ஏமாற்றிய ஏமாந்து போன என் தவறு எனக்கு புலப்பட்டது.

ஒவ்வொரு பிரிவும் இரண்டு பக்கமும் சில ஏமாற்றங்களையும் ஏக்கங்களையும் விதிக்கிறது. அவை இரண்டு பக்கமும் சரியாக புரிந்து கொள்ளப்படும்போதுதான் பிரிவுகளும் மதிக்கப்படுகின்றன. இல்லையென்றால், எந்த உணர்வும் இல்லாமல் அனாதையாக சில நினைவுகள் நம் இதயத்தின் ஆழத்தில் கசடாக தங்கிப் போய்விடுகின்றன. மழை நேரத்தில் ஒண்ட இடம் தேடும் நாய்குட்டியின் விசும்பல்களாக அவை எப்போதாவது  இரத்தம் இல்லாத கீறல்களை உருவாக்கவும் செய்கின்றன.

வினுவின் பாட்டியை தேடிப் போய் சொன்னேன்."அவனுக்கு மறதியில்லை... ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் மௌனமாக ஏற்றுக் கொள்கிறான். அவனை முடிந்தவரை நாம் அடிக்கடி சென்று பார்ப்போம். " என்று கூறினேன். இதுகூட ஒருவேளை அரை சத்தியத்தை காப்பாற்றுகின்ற முயற்சியாக இருக்கலாம்.


வினுவின் ஸ்பெஷல் பல்டி, ரங்கோலியில்....

ஒரு சிற்றோடை பிறந்தது
மலையரசனின் மகளானது
இயற்கை அன்னை தாலாட்டிட
எட்டி நடை போட்டு துள்ளியது!
குறுமரங்கள், செடி, கொடிகள்
கைவீசி வருடிட குறுஞ்சிரிப்பில்
மலையிலிருந்து குதித்தோடியது!

சற்றே அதன் துள்ளல் குறைந்து
சமவெளியில் அமைதியாக ஓட,
இன்னும் பல வயல்வெளிகளை
மரங்களடர்ந்த வனப்பகுதிகளை
கருணையுடன் ஈரமாக்கியது.
வேர்களின் தாகம் தணித்து
கரைகளில் பசுமை விரித்த
அழகிய ஓட்டத்தின் முடிவில்...
கை விரித்து வாரியது நீலக்கடல்!

உப்பு நீரில் கலக்கும் முன்
திரும்பிய கடைசி பார்வையில்
மலையும் தெரியவில்லை
தாலாட்டிய மரங்களும் இல்லை
சினேகமாய் ஓடியாடி வளர்ந்த
வெள்ளி மீன்கள் கூட துள்ளியோடின.
எதுவும் அதனுடன் வரவில்லை


உறவுகள் சேர்வதும் பிரிவதுமாக
நொடிகளும் யுகங்களுமாக மாறி
காலடியில் நழுவிய கணங்களில்
(வாழ்க்கை....)
கடத்தப்பட்டிருந்ததை உணர்ந்திட
நன்னீருடன் கண்ணீரும் சேர்ந்தது.
ஆனாலும்...
எங்கேயும் தேங்கி நின்றிடாத
நிம்மதியுடன் கடலில் கலந்தது.


எதையும் தனக்கென எதிர்பார்க்காது, அன்பை மட்டுமே பலமாக கொண்டு, குடும்பத்தின் நலனை  தன்னுடைய உயிர் மூச்சாய் நினைத்து,  இன்றைக்கும் கலாச்சார விருட்சத்தின் ஆணிவேரில் உரமாக தன்னை பகிர்ந்து தனிப்பட்ட அடையாளம் இல்லாமல் வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை பெண்களுக்கும் மழை நேரத்து குளிர்காற்றையும் மண்வாசனையையும் குழைத்து 'மகளிர் தின வாழ்த்துக்களை ' இதமாக பகிர்கிறேன்.

பதிவுலகத்திற்கும் எனக்கும் உள்ள தொடர்பு கடிகார முட்களில் கட்டப்பட்டுள்ளது. அவை என்னை சுதந்திரமாக விடுவிக்கும் சொற்ப நேரங்கள் மட்டுமே (மின் தடையில்லாமலும் இருக்க வேண்டும்) பதிவுலகத்தில் வாழ்கிறேன்,. மலைச்சாரலில் மேற்கொள்ளும் இனிய பயணம் போல அது அமைந்துவிடுகிறது. மனதில் உள்ள ஏராளமான சிந்தனைகளை இறக்கி வைத்து புத்துணர்வு பெற இந்த டிஜிட்டல் சஞ்சாரம் அவசியமாகிறது. இதில் இனிமையான நண்பர்கள், பிடித்தமான வலைப்பூக்கள், புதிதான பல விசயங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய வலைப்பூவின் ஹிட்ஸ் பற்றியோ, ராங்க் பற்றியோ கவலைப்பட்டதில்லை. ஏனெனில் பதிவுகளை எழுதுவதும் படிப்பதும் எனக்கு மிகவும் பிடித்த விசயங்கள். ஒரு நதி போல கரையோர அழகுகளை ரசித்துக் கொண்டும், பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டும் என்னுடைய பதிவுலகப் பயணம் இருக்கிறது.

நல்லது, இப்போது என்ன விசயம் என்கிறீர்கள்தானே?. இந்த வாரத்தில் எனக்கு இரண்டு அங்கீகாரம் கிடைத்துள்ளன.

1. என்னுடைய மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஆசிர்வதித்து தரப்பட்ட versatile blogger விருது.
2. எனக்கு மிகவும் பிடித்த கீதமஞ்சரி வலைப்பூவிற்கு சொந்தக்காரரான தோழி.கீதா அவர்களால் பிரியமுடன் தரப்பட்ட liebster விருது.

இவை இரண்டையும் நான் மிக மகிழ்வுடன் பெற்றுக் கொண்டதுடன் நிற்காமல், எனக்குப் பிடித்த இளம் பதிவர்களுக்கும்  தரமுடியும் என்பதே கூடுதல் மகிழ்ச்சி. எனக்கு நிறைய வலைப்பூக்களை
பிடிக்கும், மிகவும் பொறுப்புடன் மன நிறைவுடன் எழுதும் நிறைய பேரை எனக்குப் பிடிக்கும். ஒலிம்பிக் ஜோதி யார் யாரால் ஏந்தப்படும் என்பதை அதனுடைய பயணப்பாதை தீர்மானிக்கிறது. அதுபோல, என்னால் சிலருக்கு மட்டுமே தரக்கூடிய இந்த விருதுகள், என்னுடைய லிஸ்டில் இருக்கும் விடுபட்ட மற்றவர்களுக்கும்  கிட்டும் என்று நம்பிக்கையுடன் இதனை வழங்குகிறேன்

1.   THE VERSATILE BLOGGER AWARD 


இந்த விருது ”Nitya's Knits Quoin" என்ற வலைப்பதிவில் எழுதி வரும் திருமதி நித்யகல்யாணி http://nityakalyani-kalmat.blogspot.in என்ற மற்றொரு ஆங்கிலப்பதிவர் அவர்களால் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டு, பண்முகத் திறமையாளரான அவர், மதிப்பிற்குரிய ஐயா. வை.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கியிருக்கிறார். VGK சாரிடம் இருந்து எனக்கு வழங்கப்பட்டுள்ளது. நன்றி சார். இந்த விருதை பெற்றவர் அவருக்குப் பிடித்த ஏழு விசயங்களை பட்டியலிட்டு, பண்முகத்திறமையாளராக விளங்கிவரும் ஐந்து  பதிவ
ர்களுக்கு வழங்க வேண்டும் என்பதுதான் விருதை பெற்றுக் கொண்டதன் அடையாளமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விருதை பெறப் போகும் நண்பர்கள் தங்களுடைய மனம் கவர்ந்த திறமையாளருக்கு இதனை தர வேண்டுகிறேன்.

எனக்குப் பிடித்த விசயங்கள்.

வாசிப்பது, கற்பது கற்பிப்பது, இசை கேட்பது, அமைதியான இடங்களை நாடுவது, கடற்கரையின் குளுமை மலைப் பாதை பயணங்கள், குழந்தைகளுடன் விளையாடுவது.


1. தொழில் நுட்பக்கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், பிரச்சினைகளுக்குத் தீர்வுகள், சிறந்த பதிவாளர்கள் பேட்டிகள் என பல தரப்பட்ட இலக்கிய ரசனையுடன் வலம்வரும் தமிழ்வாசி  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான திரு.பிரகாஷ்.

2. வாழ்வியல் கவிதைகள், சமூக பொறுப்புடன் கூடிய கதைகள், கட்டுரைகள் என்று பலதரப்பட்ட துறைகளிலும் பதிவுகளை கொண்டிருக்கும் மனசு  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான பரிவை.சே.குமார்.

3. கட்டுரைகள், சுயதொழில் கட்டுரைகள், வரலாற்றுக் குறிப்புகள் என பல தரப்பட்ட பதிவுகளை பதிவு செய்யும் இளம் பதிவர் தங்கம் பழனி   அவர்களுக்கு,

4. கவிதை, சிறுகதைகள் மூலம் சமுதாய பிரச்சினைகளை முன் வைக்கும் திரு.தமிழ் உதயம்  அவர்களுக்கு,

5. சமையல், கோலம், அழகியல் குறிப்புகள் என்று பெண்களுக்கா
அழகிய பதிவுகளை வெளியிடும் காணாமல் போன கனவுகள்   ராஜி அவர்களுக்கு வழங்குகிறேன்.
2. Liebster விருது.


எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு மிகவும் பிடித்த தோழி கீதமஞ்சரி கீதாவால் மகிழம்பூச்சரத்திற்கு (எனக்கு) வழங்கப்பட்டது.  அவருக்கு திருமதி. ஸ்ரவாணி வழங்கியுள்ளார்கள். வலைப்பதிவை தொடர்பவர்கள் எண்ணிக்கை 200க்குள் இருக்கும் இளம் பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும். விருது பெற்ற மகிழ்வுடன் , ஐந்து வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல பிரியமானவ்ரகளுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் அன்று வாழ்த்துகிறேன்.


1. மருத்துவக் குறிப்புகள், அக்கரையுள்ள பதிவுகள் என அழகான வலைப்பூவான் ஆழ்கடல்களஞ்சியத்திற்குசொந்தக்காரரான திருமதி.பிரபா தாமு அவர்களுக்கு,

2. என்னுடைய குட்டி குட்டி நண்பர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளக்கூடிய சமூக நோக்குடன் கூடிய நீதிக் கதைகள் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கான வலைப்பூ சிறுவர் உலகத்தின்  திருமதி.காஞ்சனா அவர்களுக்கு

3. குழந்தைகள் பராமரிப்பு, சமையல் குறிப்புகள், பெண்கள் குறித்த கட்டுரைகள் இவற்றுடன் சமுதாய பிரச்சினைகளையும் பதியும் புதிய வசந்தம்  வலைப்பூவிற்கு சொந்தக்காரரான ஆயிஷாபானு அவர்களுக்கு,

4. காரச்சாரமா
விவாதங்கள், அரசியல் அலசல்கள் என முறுக்கு மீசை பாரதியை தலைப்பில் கொண்டிருக்கும் அவர்கள் உண்மைகள்  மதுரைத் தமிழன் அவர்களுக்கு,

5.  உணர்வுபூர்வமான கடிதங்கள், கவிதைகள் என அழகான மறக்க முடியாத நினைவுகள்   வலைப்பூ சொந்தக்காரரான திரு.கவிப்பிரியன்  அவர்களுக்கு

மகிழ்வுடனும் மன நிறைவுடனும் வழங்குகிறேன்.  வாழ்த்துக்கள்.

இது போன்ற விருதுகள் நாம் ஒரு குடும்பம் என்பதை குறிக்கும் என்பதால், விருதை பெற்றுக் கொண்டு பதிவுலக குடும்பத்தை பெரிதுபடுத்தி மகிழ வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பிட்ட லோகோக்களை தங்களுடைய வலைப்பூவில் பதிந்து கொள்ளுங்கள்.

இது மிகவும் முக்கியமான விசயமாக இருப்பதால் இந்த பதிவை எழுதுகிறேன். .

அவர்கள் அனைவரும் இரண்டிலிருந்து ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். பெரும்பாலும் அவர்கள் சுட்டித்தனமான குழந்தைகள். துருதுருவென இருக்கிறார்கள். பளுமிக்க பொருளை இழுப்பதை பார்க்கும்போது  அதிக வலு இருக்கிறதும் தெரிகிறது. ஒரு பட்டாம் பூச்சியின் பரபரப்பு தெரிகிறது. அறிவு கூர்மையும் கவனிக்கத் தக்கது - ஒரு செயலை நாம் செய்வதை பார்த்துவிட்டால் கூர்ந்து கவனித்து செய்ய முயற்சிக்கின்றனர். இதெல்லாம் நேர்மறையான விவரங்கள்.

ஆனால் எதிர்மறையாக, சிறிய விசயத்திற்கும் மூட் அவுட் ஆவது. அடம் பிடிப்பது. பெருங்குரலெடுத்து அழுவது. ஒல்லியான தேகம். எரிச்சலுற்ற முகபாவங்கள்... இதெல்லாம் சாதாரணமாகவே குழந்தைகளிடம் இருப்பதுதானே என்று சொல்கிறீர்கள்.  ரொம்பவும் சாதாரணம்தான். ஆனால் அடிக்கடி நிகழ்வது என்பதும் குழந்தைக்குரிய மனோபாவம் மாறுவதும் கவனிக்க வேண்டிய விசயமல்லவா? இன்றைய அவசர காலகட்டத்தில் இவற்றை நாம் கூர்ந்து நோக்குவது இல்லை.

இன்னும் கூர்ந்து கவனித்தால் அவர்களிடம் கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறனும் குறைவாக உள்ளது புரிகிறது. அடிக்கடி சளி பிடித்துக் கொள்ளுகிறது. மருத்துவரின் கவனிப்பு அடிக்கடி தேவைப்படுகிறது. ஒரு விசயத்திற்காக அடம்பிடிக்கும்போது வேறு போக்கு காட்டி மாற்ற முடிவதில்லை. ஞாபகமாக மீண்டும் அடம் பிடிப்பதை தொடர்கின்றனர்.

வினு மூன்று வயது குழந்தை. படு சுட்டி. நிறைய பேசுகிறாள். எழுத முயற்சிக்கிறாள். பாடல்களுக்கு அழகாக நடனமாடுகிறாள். ஆனால், அவள் சொன்னதை நாம் செய்யவில்லை எனில் - கவனியுங்கள் நாம் சொல்வதை அவள் கேட்க வேண்டும் என்பதல்ல விசயம் - எரிச்சலூட்டும் செயல்களை செய்கிறாள். பொருட்களை வீசி எறிவது. கத்துவது. தரையில் படுத்து உருள்வது. (விறுவிறுவென்று பூஜை அறைக்குள் சென்று குங்குமத்தை கொட்டுவது). அவளுடைய பெற்றோர் பயந்து போய் அவள் சொல்வதை செய்கின்றனர். உடனயே சமாதானம் ஆகி சிரித்து கொஞ்சுகிறாள்.

நான்கு வயது அர்சுன் இதே போலத்தான். கோபம் வந்தால் கத்துவதில் எங்கள் காலனியே அதிரும். கூடவே புரியாத வார்த்தைகளில் அவன் அம்மாவை திட்டவேறு செய்வான். என்னுடைய இந்த வயது நண்பர்கள் ஓரிருவர் தவிர பெரும்பாலும் இப்படித்தான். ஆனால், என்னிடம் விளையாடும்போது இத்தனை கலாட்டா இல்லை. அவர்களுடைய பெற்றோர் ஆச்சரியமுடன் 'உங்களிடம்தான் அடக்கமாக இருக்கிறான்" என்று கூறுகின்றனர்.  ஏன்? ஒரு விசயம் புலப்பட்டது இதனை என்னுடைய ஹோமியோ மருத்துவரும் உறுதிபடுத்தினார். அவை,

1.  சொல்லத்தெரியாத பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன. இந்த பொம்மை வேண்டும், இந்த பாட்டு போடுங்கள் என்று சொல்ல முடிந்த அவர்களால், சிலவற்றை உணர முடிவதில்லை. முக்கியமாக பசி,உறக்கம் மற்றும் சத்து குறைவு. (இவர்கள் பொருளாதார வசதிமிக்க குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்)

2.  கிட்டதட்ட அனைவருமே குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பானம் குடிக்கிறார்கள். அந்த பானம் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கும் என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. (பாலின் விலையைவிட அதிகம். உபயோகிப்பதும் அதிகரிக்கிறது.)

3.  சில குழந்தைகள் சரிவர சாப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக இந்த பானத்தை ஒரு நாளைக்கு ஐந்து முறைகூட குடிக்கின்றனர். பெரியவர்களுக்கான ஆரோக்கிய பானத்திலேயே ஒரு நாளைக்கு இரு முறை என பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு எத்தனை முறை தருவது என்று குறிப்பிட வேண்டாமா?

4. உண்மை என்னவெனில், உணவை மறுக்கும் குழந்தையை சமாதானம் செய்து சாப்பிட வைக்கும் முயற்சியினை அம்மாக்கள் செய்வதில்லை. "அவன் சாப்பிடவே மாட்டேன் என்கிறான்" என்று கூறிவிடுகின்றனர். நாலுவயது பையன் அரை தோசை சாப்பிடுகிறான். இது எப்படி அவனுக்கு போதும்?  மேலும் அவன் ஒரு துருதுரு குழந்தை.  விசாரித்தால், ஊட்டசத்து பானத்தை தருவதாகவும் அது சக்தி தருவதாகவும் சொல்கின்றனர். இது சரியான கருத்தா?

5. போதுமான உணவு உட்கொள்வது அவசியம் என்றும், அதிலிருந்து ஊட்டச்சத்துகளை உடல் பெற வேண்டும் என்பதும் அவசியம், அதுதான் உள்ளுறுப்புகள் பலப்படுவதற்கு தேவையானது என்கிறார் மருத்துவர்.

6. சில அமைதியான குழந்தைகளின் பின்னனியில் குழந்தைக்கு பொறுமையாக ஊட்டுவது, முக்கியமாக குழந்தைக்கு ஏற்ற உணவை தயார் செய்வது, சரியான அளவில் உறங்கச்செய்வது , போதுமான விளையாட்டு , கனிவான கண்டிப்பு என்று கவனிப்புகள் இருக்கின்றன என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 

7. சத்திற்கு ஊட்டச்சத்து பானமும் பசிக்கு பிஸ்கெட், கொறிப்பு தீனிகள் போன்றவை மட்டும் போதுமா? இந்த அரை தோசை, மூன்று ஸ்பூன் சாதம் போன்றவை போதாது என்பது என் கருத்து. கட்டாயப்படுத்தி ஊட்டக்கூடாது, சரிதான். ஆனால் விளையாட்டு காட்டியாவது ஊட்ட வேண்டாமா?

8. ஒட்டிய வயிறுடன், சட்டென்று சோர்வைடைந்து சிணுங்கிக் கொண்டேயிருக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருக்கும்?


என்னிடம் மட்டும் அடம்பிடிப்பது இல்லை என்று சொன்னேனல்லவா, ஏன் என்றால் அவர்கள் வீட்டிற்குள் வரும்போதே குட்டி குட்டி தட்டுகளில் உணவுப் பொருட்களை நிரம்ப்பிவிடுவேன். சரியாக சாப்பிடவில்லை என்று தெரிந்தால் விளையாட்டாக கதை சொல்லி ஊட்டிவிடுவேன். வயிறு நிறைந்திருக்கும்போது கோபம் வராது என்பது அறிவியல் உண்மை.

இந்தப் பதிவு முடிந்த பின் விவாகரத்து பற்றிய தொடரை தொடர்கிறேன்.

    அவள் 35 வயதான கிராமத்துப் பெண். நான் அவளை சந்தித்தபோது வித்தியாசமாக நடந்து கொண்டாள். நன்றாக பேசிக் கொண்டிருந்தவள், திடீரென்று வினோதமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக மற்றவர் சொன்னபோது, எனக்குத் தோன்றியது ஒன்றுதான். "கருப்பை கோளாறு!". இந்த சந்தேகம் வந்தவுடனேயே வழக்கமாக நான் கேட்கும் கேள்வியை கேட்டேன். "எப்போதாவது கருக்கலைப்பு செய்திருக்கிறாளா?". ஆச்சரியமாக பார்த்துவிட்டு "ஆமாம், பத்து வருடங்களுக்கு முன்பு செய்திருக்கிறாள்" என்றார்கள். கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவின் மாற்றத்தின் விளைவாக இது போன்ற மனக்கோளாறுகள் ஏற்படலாம். சில சமயம் இது கருப்பை புற்று நோய்க்கான ஆரம்பமாகவும் மாறலாம். .

       ஏதோ ஒரு காரணத்திற்காக கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கும் பெண்கள், அதற்குரிய முறையான சிகிச்சை மேற்கொள்வது இல்லை. சரியாக செய்யப்படாத கருகலைப்புகள் பின்னர் புற்று நோய்கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகிவிடுகின்றன.   கிராமப் பகுதியில் இது போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. . கருக்கலைப்பு மட்டுமல்ல மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகள் பற்றிய விழிப்புணர்வும் இல்லாததே காரணம். மாதவிடாய்க்கு துணிகளை பயன்படுத்தும் பழக்கமே அதிகமாக உள்ளது ஆனால் அவற்றை தூய்மையாக பயன்படுத்தும் முறைகள் தெரியவில்லை. பத்து வகுப்பு வரை படித்திருந்தாலும் பள்ளி பாடத்தில் இது பற்றி குறிப்புகள் இல்லாததால் கிராமப்புறத்தில் அதிக பெண்கள் கருப்பை புற்று நோய்க்கு இலக்காகின்றனர்.

சரி, கிராமப்புறத்தில் இந்த காரணங்கள் உள்ளன, நகர்புறத்தில் இது பற்றி என்ன செய்தி கிட்டுகிறது?  ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்வது, கருப்பைக்குள் ஏற்படும் சிறிய கட்டிகள் இவற்றை சரிவர உணராமல் போவதும் காரணமாகின்றன. மேலும் மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை எடுக்கும்போதும், வேறு வகையான புற்று நோய்க்கு ரேடியோ தெரபி சிகிச்சை எடுக்கும்போதும் கருப்பை புற்று நோய் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு பரம்பரை கோளாறுகளாலும் வரும். அதிலும் குழந்தை பெறாத பெண்கள், 55 வயதிற்குப்பின் மெனோபாஸ் கட்டத்தை அடைபவர்கள் ஆகியோர் கருப்பை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.  அதிர்ச்சியூட்டும் விசயம் என்னவெனில் இது போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகளை சரிவர கையாளாமல் புற்று நோய்க்கு வித்திடும் கவனக்குறைவு நகர்புறங்களிலும் அதிகரித்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுகொண்டு விட்டால், சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. இல்லையென்றால் குணப்படுத்த முடியாத சிக்கல் உருவாகிவிடும். நோய் முற்றிவிட்டால், உயிரிழப்பின் சதவிகிதம் அதிகரித்துவிடும்.

முதல் கட்டம்: கருப்பையின் உள்பக்கம் மட்டுமே பாதிக்கப்படும்.
இரண்டாம் கட்டம்: கருப்பை சார்ந்த மற்ற பகுதிகள் பாதிக்கப்படும் உ-ம், ஃபெலோபியன் குழாய்கள்.
மூன்றாம் கட்டம்: கருப்பைக்கு வெளியேயும் பாதிப்புகள் இருக்கும் உ-ம், பெல்விஸ் பகுதிகள்
நான்காம் கட்டம்: கருப்பையை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் உ-ம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியன.

கருப்பை கோளாறினை கண்டறிவதுதான் முதல் படி. சில குறிப்புகள் உள்ளன. ஒழுங்கற்ற மாதவிடாய், அடிவயிற்றில் வீக்கம், முதுகிலும் இடுப்பிலும் வலி, சில சமயம் அடிவயிற்றில் சுரீரென்று உருவாகும் வலி, சிறுநீர் பிரச்சினைகள் ஆகியன ஆரம்பகால குறியீடுகளாக இருக்கலாம். இவை உணர்ந்து கொள்ள முடியாத வகையிலும் இருக்கும். ஏனென்றால், வலியை உணர்வதும், பொறுத்துக் கொள்வதும் ஒருவருடைய சகிப்புத்தன்மையை பொறுத்தது. நீங்களே கவனித்திருக்கலாம், சிறிய காயத்திற்கு கூச்சல் போடுபவர்களும் உண்டு, பெரிய அடிபட்டிருந்தாலும் அமைதியாக பொறுத்துக் கொள்பவரும் உண்டு. பொதுவாகவே பெண்களுக்கு வலியை பொறுத்தமட்டில் சகிப்புத்தன்மை அதிகம் என்பதால் (பிரசவ வலியையே பொறுத்துக் கொண்ட அனுபவம்தான்...) இவற்றை எளிதில் கண்டுணர மாட்டார்கள். மேலும், குடும்ப நலத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதால் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை உணரமாட்டார்கள். எனவே, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கமுடிவது இல்லை.

எனவே இந்த விசயத்தில் வீட்டில் இருக்கும் மற்றவர்கள்தான் அவர்களை கவனிக்க வேண்டும். உங்களுடைய மனைவியோ, அம்மாவோ 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் சற்று கூடுதலாக கவனம் செலுத்துங்களேன். சில குறிப்புகள் தருகிறேன். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனேயே அவர்களுக்கு கருப்பை புற்று நோய் வந்துவிட்டது என்று முடிவு செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அது சாதாரண கருப்பை கோளாறாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இனி உங்களால் கண்டு கொள்ளக்கூடிய அறிகுறிகளை பார்க்கலாமா?

1. கருப்பை புண்கள்தான் கட்டிகளுக்கு ஒருவிதத்தில் காரணமாகின்றன. திடீரென்று அடிவயிற்றில் வலி ஏற்பட்டு துடிப்பார்கள். ஓய்வெடுத்த சற்று நேரத்திலேயே சரி ஆகிவிடும். மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்று சொல்வார்கள். அப்படியே விட்டுவிடாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

2. ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்படும் மாற்றங்கள்தான் அடிப்படை காரணம். இது போன்ற ஹார்மோன் குறைபாடு மனக்கவலை மற்றும் பதட்டத்தை அதிகரிக்கிறது. சிறிய விசயங்களுக்கு கவலைபடுவார்கள், சந்தேகப்படுவார்கள், குறை சொல்ல ஆரம்பிப்பார்கள். எப்போதும் சோர்வுற்ற மன நிலையில் இருப்பார்கள்..

3. உணவு எடுத்துக் கொள்ளும் அளவு குறைய ஆரம்பிக்கும். மாதவிடாய் சமயத்தில் சோர்வு, வெளுத்த முகம், களைப்பு ஆகியவை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும்.

4. சிலர்  மன நோயாளிபோல் நடந்து கொள்வார்கள். கூச்சலிடுவது, காரணமில்லாமல் அழுவது, சண்டைபிடிப்பது போன்றவை இருக்கும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் கருப்பை புற்று நோய் அறிகுறிகள் அல்ல. கருப்பை புற்று நோய் முன்னோடிகளான ஈஸ்ட்ரோஜன் குறைபாடு, கருப்பை கட்டிகளின் உருவாக்கம் ஆகியவற்றை உணர்த்தும். கவனிக்காமல்விட்டால் இவை புற்று நோய்கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது என்பதை மட்டும் வலியுறுத்துகிறேன்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துபடி இந்தியாவில் 12 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்று நோயோ அல்லது மார்பகப் புற்று நோயோ ஏற்படுகிறது. மனித உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறுநீரகம்தான் முக்கிய பொறுப்பு வகிக்கிறது. அது செயலிழப்பது என்பது பல தவறுகள் மற்றும் அலட்சியம் ஆகியன காரணமாகும். அதேபோல ஒரு அழகான இல்லத்தின் அடிப்படை பெண்தான், தன்னுடைய உடல் கோளாறுகளை வெளியே காட்டிக்கொள்ளாத இந்திய பெண்களுக்கு குடும்பத்தினரின் கவனிப்பு இருக்க வேண்டியது அவசியம்.  அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை கவனத்தில் கொள்வோம்.

சுயநலத்தின் வெளிப்படாக
எதிர்பார்த்து ஏமாற்றமுடன்
சீறலும் சினமுமாக 'அது...'
சில சமயம் காயங்களுடனும்,
சில சமயம் வலி
களுடனும்...

ஏதோ செய்து அடக்கிவிட்டு
கொல்லைப்புற இருளில்
கொட்டிலில் கட்டினேன்...
அன்பின் நித்தியத்தையும்
சத்தியத்தையும் ஓதினேன்!

கேட்கும் சக்தி இருந்தபோது
பின்னொரு நாளை எண்ணி
பணிந்து பழகி மௌனித்தது!
கூரிய நகங்களை தீட்டாமல்
அடிபட்ட காயங்களை கிளறி
வலியின் வலிமை தூண்டாமல்
அமைதியாகவே இருந்தது!

மோசமான ஒரு நொடியில்
கொட்டிலை விட்டு சென்று
சிவப்பு சிதிலங்களுடன்
என் நம்பிக்கை சிதைத்து
மீண்டும் திரும்பியது......
இப்போதும் ஏமாற்றப்பட்டேன்!

கட்டவிழ்ந்து போகும் முன்
அந்த நொடியின் நெடி மாற
பூமிக்குள் புதைந்திருக்கலாம்...
கடலலையில் மறைந்திருக்கலாம்
மேகத்தில் தொலைந்திருக்கலாம்
ஏதாவது செய்து மீண்டிருக்கலாம்....

பின் என்ன...? வழக்கம் போலவே.....
நெருப்பில் சுயம் எரித்து மீளும்
உபாயம் தேடி தவமிருக்கிறேன்!