மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

"ஒரு கதை சொல்லவா...." நான் கேட்க... "நேணாம்" அவன் மறுத்தான்.
"சின்ன சின்ன நாய்குட்டி பாடலாமா" ...... "நேணாம்"
"ஐஸ்கிரீம்...." வேகமாக பதில் வந்தது. "நேணா.....ம்" அவனுடைய ஒத்துழையாமை இயக்கத்தின் காரணம் எனக்குப் புரியவில்லை. கோபமா? அல்லது எல்லாவற்றையும் மறந்துவிட்டானா?

அவன் வினுகுட்டி , என் சினேகிதன். இரண்டு வயது. இந்த வயது நண்பர்கள் எனக்கு அதிகம், நான் வீட்டிலிருக்கும் நேரங்களில் சில் வண்டுகளாய் ரீங்கரித்து மழலை மொழியால் நிரப்பிவிடுவார்கள். மழலை மொழி, சுறுசுறுப்பான சுட்டித்தனம், விவரிக்க இயலாத கள்ளமில்லா சிரிப்பு இவற்றுடன் வினுகுட்டி, அனைவரையும்விட  என் நட்பு வட்டாரத்தில் சிறப்பான இடத்தை பிடித்திருந்தான். எங்களுடைய வயது வேற்றுமையை சற்றும் மதிக்காமல் என்னை தோழியாக அங்கீகரித்து கதைகள் பேசி, பாட்டு பாடி என் வயதை குறைத்துவிட்டிருந்தான்.

எங்கள் வீட்டிற்கு அருகில் அவன் அம்மா வழி பாட்டிவீடு. வீட்டிற்கு முதல் பேரன், எனவே கவனிப்பு அதிகம். இரண்டாவது குழந்தையின் பிறப்பிற்காக அவன் அன்னையுடன் இங்கு வந்திருந்தான். அவன் அன்னையின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு அண்டை வீட்டார்கள் அனைவரும் அவனை கவனித்துக் கொண்டோம்.  எனக்கும் அவனுக்குமான சினேகிதம் எங்கள் குடியிருப்பில் பிரசித்தி பெற்றது. காலையில் எழுந்தவுடன் வீட்டிற்கு வருபவன் இரவு உறக்கம் வந்தபின்தான் செல்வான். ஆனால் இடையில் அவன் வீட்டிற்கு சென்று உணவருந்துவது உடை மாற்றுவது என்று தன் வேலைகளையும் கவனித்துக் கொள்வான்.

சென்ற வாரம் அவன் தாயுடனும் தன் புது தங்கையுடன் தன் வீட்டிற்கு சென்றுவிட்டான். இன்று வருவதாக கூறியிருந்தார்கள். அவனும் வந்துவிட்டான்.

வாயிற்படியின் ஓரமாக தலையை குனிந்து கொண்டு விரல் சூப்பிக் கொண்டு நின்றவனை உள்ளே அழைத்துச் சென்று பேச்சு வார்த்தையை தொடங்க போராடிக் கொண்டிருக்கிறேன். "அவன் எல்லாத்தையும் மறந்துட்டானு அம்மா சொல்றாங்க." அவன் அம்மாவின் புலம்பல். எனக்கும் அப்படித்தான் தோன்றியிருந்தது.

தொலைக்காட்சியை கை காட்டி "வீ...ம்" என்றான். அது சோட்டா பீமிற்கான அழைப்பு. போகோவில் சோட்டா பீம் போடவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.  பீமை மறக்காத அவனின் நேர்மை என்னை பொறாமைக்குள்ளாக்கியது.

ஐஸ்கிரீம் அவனிடம் நீட்டப்படவும் வாங்கிக் கொண்டான். தொலைக்காட்சியிலும் அவன் கவனம் இல்லையென்று தெரிந்தது. சற்று விரைப்பாக அவன் அமர்ந்திருந்தது... என் மேல் கோபமோ என்று கேள்வியை கிளப்பியது. என் இனிய சினேகிதனின் முகத்திருப்பலை ஆச்சரியமாக அளவிட்டுக் கொண்டிருந்தேன்.

"ஆண்டி, அங்கே அவனுக்கு அத்தனை சினேகிதர்கள் கிடையாது. உங்களைப் போல கதை சொல்லி பாட்டு பாடி விளையாடவும் ஆளில்லை. அந்த கோபமாக இருக்கும்" வினுவின் அம்மா கூறினாள்.

அமைதியாக கழிந்த அரை மணி நேரத்தின் பின் "நாங்கள் கிளம்பறோம்" என்று வினுவை தூக்கினாள். அவனுக்காக வாங்கியிருந்த விளையாட்டுப் பொருளை அவனிடம் நீட்டினேன். இந்த முறையும் 'நேணா'மை எதிர்பார்த்தேன். கையை நீட்டி வாங்கிக் கொண்டு விரைவாக டாட்டா காட்டினான். அவனை புரிந்து கொள்ள முடியவில்லையோ என்ற ஆதங்கம் வந்தது.

வாயிற்படியை தாண்டும் முன் என் பக்கம் திரும்பி ஒரு ஆழமான பார்வை பார்த்தான். பின் அன்னையின் தோளில் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டான். "நம்மளையெல்லாம் மறந்துட்டான்" அவன் பாட்டி மீண்டும் குரல் கமற கூறினார்கள். அவர்கள் சென்ற பின்னும் எனக்கு அமைதியான சிந்தனையில்லை.

ஏனெனில், அவனுடைய பார்வை எனக்கு பரிச்சயமானது. ஓடி வரும் போது... ஜம்ப்.. என்று சொல்லிவிட்டு குதிக்கும் போது.... பந்தை துரத்தி கொண்டு வரும்போது... கையில் கிரிக்கெட் மட்டையை பிடித்துக் கொண்டு அடிக்கத் தயாராகும் போது... உறக்கம் கண்களில் சுழன்று இமைகள் மூடிக் கொள்ளப் போகும்போது .... இது போன்ற பார்வைகளை அவனிடம் பார்த்துள்ளேன். நீ என்னுடன் இருப்பாய்தானே.... என்ற கேள்வியும் அதனை உறுதிபடுத்தும் சத்தியமான பதிலும் எதிர்பார்த்த பார்வையது.

எனக்கு சட்டென புரிந்தது... இப்போதும் அவன் அந்த சத்தியத்தை எதிர்பார்க்கிறான். மற்றவர்களிடமும் அதையேதான் எதிர்பார்த்திருக்கிறான். அதனை புரிந்து கொள்ளாமல் நாங்கள் அவனை ஏமாற்றிவிட்டோம். அவனுக்கான உலகம் மாறிவிட்ட சோகம்... அதனை மௌனமாக ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறான். இங்கே அவன் கொண்டாடிய தருணங்கள் நினைவில் மறைய நாளாகும் அதுவரை இந்த அமைதி அவனிடம் இருக்கும்.  அதுவரை அந்த அமைதி கோபம் என்றோ மறதி என்றோ தவறாக புரிந்து கொள்ளப்படும்.

நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது என்னுடைய பள்ளி சினேகிதியின் மௌனம் பொறாமை என்று பெயரிடப்பட்டது.  கல்லூரியில் பாதியில் படிப்பை விட்டு விலகிய சினேகிதியின் மௌனம் கோபம் என்று விளங்கிக் கொண்டது. திருமணம் முடிந்த என் சகோதரியின் மௌனம் புது வாழ்க்கையின் மயக்கம் என்றும் என் திருமணத்தின் பின்  என் தாயிடம் நான் கண்ட மௌனம் என்னை மறந்து போய்விட்டதாகவும் கொள்ளப்பட்டது. இது போலவே எண்ணிலடங்கா மனங்களை... சத்தியத்தை எதிர்பார்த்து நின்றவர்களை புரிந்து கொள்ளாமல்  ஏமாற்றிய ஏமாந்து போன என் தவறு எனக்கு புலப்பட்டது.

ஒவ்வொரு பிரிவும் இரண்டு பக்கமும் சில ஏமாற்றங்களையும் ஏக்கங்களையும் விதிக்கிறது. அவை இரண்டு பக்கமும் சரியாக புரிந்து கொள்ளப்படும்போதுதான் பிரிவுகளும் மதிக்கப்படுகின்றன. இல்லையென்றால், எந்த உணர்வும் இல்லாமல் அனாதையாக சில நினைவுகள் நம் இதயத்தின் ஆழத்தில் கசடாக தங்கிப் போய்விடுகின்றன. மழை நேரத்தில் ஒண்ட இடம் தேடும் நாய்குட்டியின் விசும்பல்களாக அவை எப்போதாவது  இரத்தம் இல்லாத கீறல்களை உருவாக்கவும் செய்கின்றன.

வினுவின் பாட்டியை தேடிப் போய் சொன்னேன்."அவனுக்கு மறதியில்லை... ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் மௌனமாக ஏற்றுக் கொள்கிறான். அவனை முடிந்தவரை நாம் அடிக்கடி சென்று பார்ப்போம். " என்று கூறினேன். இதுகூட ஒருவேளை அரை சத்தியத்தை காப்பாற்றுகின்ற முயற்சியாக இருக்கலாம்.


வினுவின் ஸ்பெஷல் பல்டி, ரங்கோலியில்....

22 comments:

சுவையான அதே சமயத்தில் மனதை நெருட வைத்த அனுபவங்கள்!

உண்மைதான். வினுகுட்டியின் மௌனம்போல் பலரின் மௌனம் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

மிகவும் அழகானதொரு சிறிய சம்பவம் தான்.

நீங்கள் அந்தக் குழந்தையின் மன ஏக்கத்தினை அழகாகப் புரிந்து கொண்டு, அதை மிக அழகாக உங்களுக்கே உரித்தான எழுத்து நடையின் விளக்கியுள்ளிர்கள். பாராட்டுக்கள்.

மழையில் நனைந்த நாய்க்குட்டியின் விசும்பல்களோடு ஒப்பிட்டுள்ளதும் அருமை.

//இது போன்ற பார்வைகளை அவனிடம் பார்த்துள்ளேன். நீ என்னுடன் இருப்பாய்தானே.... என்ற கேள்வியும் அதனை உறுதிபடுத்தும் சத்தியமான பதிலும் எதிர்பார்த்த பார்வையது.

எனக்கு சட்டென புரிந்தது... இப்போதும் அவன் அந்த சத்தியத்தை எதிர்பார்க்கிறான். மற்றவர்களிடமும் அதையேதான் எதிர்பார்த்திருக்கிறான். அதனை புரிந்து கொள்ளாமல் நாங்கள் அவனை ஏமாற்றிவிட்டோம். அவனுக்கான உலகம் மாறிவிட்ட சோகம்... அதனை மௌனமாக ஏற்றுக் கொள்ளவும் செய்திருக்கிறான். //

குழந்தைகள் மனம் விசித்திரமானது.
இது போன்ற எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் நியாயமானதே. நம்மால் தான் சிலவற்றை புரிந்து கொள்ள முடியாமல், தப்புக்கணக்கு போட்டு விடுகிறோம்.

பகிர்வுக்கு நன்றிகள்.

என் மனத்தில் இத்தனைநாள் ஒரு ஓரமாய்க் கிடந்த கேள்விக்கு இன்று விடை கிடைத்துவிட்டது. மிகவும் மகிழ்ச்சியும் நன்றியும் சாகம்பரி.

என் மகன் பிறந்த இரண்டாவது மாதம் அம்மா வீட்டிலிருந்து சென்னை வந்தேன். வந்த நாளில் இருந்து எதிர் வீட்டிலிருந்த அம்மாதான் அவனைப் பார்த்துக்கொண்டார்கள்.அவருக்கும் அவர் கணவருக்கும், அவர்கள் மகனுக்கும் இவன்மேல் பிரியமென்றால் பிரியம். அத்தனைப் பிரியம். தங்கள் பேரக்குழந்தைக்கு (மகளின் மகன்) வாங்குவதைப் போல் இருமடங்கு இவனுக்கு வாங்குவார்கள்.

இரவு உறக்கம் மட்டுமே எங்களுடன் என்றாகிப்போனதில் எங்களுக்குப் பெரும் வருத்தம். இவனும் அவர்களை அவ்வா, தாத்தா, கோபியண்ணா என்று மிகுந்த பாசத்துடன் இருந்தான். தமிழோடு தெலுங்கும் கற்றுக்கொண்டு பேசினான்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் பணி நிமித்தமாக பெங்களூரில் குடியேற வேண்டிய சூழல் வந்துவிட்டது. கண்ணீரோடு விடைபெற்றனர். அதன்பின் இரண்டுநாளைக்கொரு முறை போன் செய்து என் மகனிடம் பேசக் கேட்டால் இவன் பேசவே மாட்டான்.
அவர்கள் கெஞ்சுவார்கள். இவனுடைய அழுத்தம் எனக்கு எரிச்சலூட்டும். இரண்டு வயதில் இத்தனைப் பிடிவாதமா என்று கோபமும் வரும். பொறுமையாய் புரியவைத்து, என்ன எடுத்துச் சொன்னாலும் போன் வந்தால் மட்டும் பேசமறுத்துவிடுவான். இவன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் என்று அன்று மட்டுமல்ல, இன்றும் அவர்களைப் பற்றியப் பேச்சு வந்தால் மகனிடம் (இப்போது 12 வயது) கேட்பேன். தான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று தனக்கும் தெரியவில்லை என்பான்.

அந்த விடாப்பிடியான மௌனத்தின் காரணம் இன்று புரிந்தது.

இனி மௌனங்களைத் தவறாய்ப் புரிந்துகொள்ளும் நிலை வராது என்று நம்புகிறேன். நன்றி சாகம்பரி.

தங்கள் பதிவை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_15.html

உள்ளத்தில் உள்ள உணர்வுகளை மிக எளிதாக புரிந்து அதை எழுத்தில் வடித்து எங்களுக்கு வழங்கிய இந்த பதிவு வழக்கம் போல மிக அருமை.குறிஞ்சி பூ போல உங்கள் பதிவுகள் மலர்ந்தாலும் மிக அழகா அருமையாக இருக்கிறது. வழக்கம் போல உங்களக்கு எனது வாழ்த்துக்கள் சாகம்பரி மேடம். வாழ்க வளமுடன்

உங்களின் பின்னுட்டத்தில் கிதமஞ்சரி அவர்கள் அவர் குழந்தையை பற்றி எழுதியுள்ளாரா அல்லது மறைந்து போன என் அம்மா என்னை பற்றி நான் சிறுவயதில் நடந்து கொண்டதை அவரின் மூலம் எழுதியுள்ளாரா என்பதில் எனக்கு மிகவும் வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது

குழந்தைகள் என்பதே ஒரு மக மறைபொருள் தத்துவம் போல
அவர்கள் செய்வது அனைத்தும் விந்தையும் விசித்திரமும்..
பொருள் கொள்ளா பொருள் உணர்வுகளும் நிறைந்திருக்கும்.

அதிலும் இந்த மௌனம் ..
ஆயிரம் ஆயிரம் பொருள் சொல்லும்...

அழகான கருத்தாழமிக்க படைப்பு சகோதரி.

அருமையான பதிவு.

உங்களது ஒரு பதிவுக்கு 100 ஹிட்ஸ் வேண்டுமா...? உடனே http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை இணைத்திடுங்கள்...

ஆமாம்,குழந்தைகள் உள்ளம் பற்றிய புரிந்து கொள்வதில் கூடுதல் கவனம் தேவை.

பிரிவின் தீண்டல்கள் இப்புவியில் படாதஇடம் இல்லை எனலாம்.

@ சாகம்பரி,

வினுவின் ஸ்பெஷல் பல்டியை அழகிய ரங்கோலியாக்கியது தங்கள் கைவண்ணமா? அபார அழகு. பாராட்டுகள்.

@ அவர்கள் உண்மைகள்

என் மகனின் சிறு வயது நிகழ்வு உங்களோடும் ஒத்துப்போனதை எண்ணி வியக்கிறேன். குழந்தைகள் குழந்தைகள்தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

மிக சிறப்பான அலசல். பலருக்குப் பயன் படட்டுமே. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

எண்ணிலடங்கா மனங்களை... சத்தியத்தை எதிர்பார்த்து நின்றவர்களை புரிந்து கொள்ளாமல் ஏமாற்றிய ஏமாந்து போன கணங்களை அருமையாக உணர்த்திய சிற்ப்பான பகிர்வுகள்..

விடை தேடிய பல கேள்விகளுக்கு
பதிவில் அருமையாய் விடைகள்.. பாராட்டுக்கள்..

மௌனத்தை அற்புதமாக மொழி பெயர்த்து அறியச்செய்த அரிய பகிர்வுகள்.. இனிய நன்றிகள்..

மழை நேரத்தில் ஒண்ட இடம் தேடும் நாய்குட்டியின் விசும்பல்களாக அவை எப்போதாவது இரத்தம் இல்லாத கீறல்களை உருவாக்கவும் செய்கின்றன.

வினுவின் பாட்டியை தேடிப் போய் சொன்னேன்."அவனுக்கு மறதியில்லை...

வாசிக்கும்போதே மனசுக்குள் என்னவோ செய்தது. குழந்தைகளிடம் மட்டுமல்ல பெரியவர்களிடம் கூட இதே உணர்வுகள்..

வந்தேன் செல்கிறேன் நலமா சகோதரி...நலம் பல நிறைக!
வேதா. இலங்காதிலகம்.

அருமையான பதிவு

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் போஸ்ட்

To get vote button


தமிழ் போஸ்ட் Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் போஸ்ட்

Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

அருமையான கதை...மௌனத்தின் மற்றுமொரு பரிமானம்...

வணக்கம்
நல்ல கதையமைப்பு..இன்றைய வலைச்சரத்தில் உங்கள் கதை அறிமுகமாகியுள்ளது..நன்றி.