மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    அவள் 35 வயதான கிராமத்துப் பெண். நான் அவளை சந்தித்தபோது வித்தியாசமாக நடந்து கொண்டாள். நன்றாக பேசிக் கொண்டிருந்தவள், திடீரென்று வினோதமாக சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக மற்றவர் சொன்னபோது, எனக்குத் தோன்றியது ஒன்றுதான். "கருப்பை கோளாறு!". இந்த சந்தேகம் வந்தவுடனேயே வழக்கமாக நான் கேட்கும் கேள்வியை கேட்டேன். "எப்போதாவது கருக்கலைப்பு செய்திருக்கிறாளா?". ஆச்சரியமாக பார்த்துவிட்டு "ஆமாம், பத்து வருடங்களுக்கு முன்பு செய்திருக்கிறாள்" என்றார்கள். கருப்பையில் ஏற்படும் பாதிப்புகளினால் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் அளவின் மாற்றத்தின் விளைவாக இது போன்ற மனக்கோளாறுகள் ஏற்படலாம். சில சமயம் இது கருப்பை புற்று நோய்க்கான ஆரம்பமாகவும் மாறலாம். .

       ஏதோ ஒரு காரணத்திற்காக கருக்கலைப்பு செய்ய முடிவெடுக்கும் பெண்கள், அதற்குரிய முறையான சிகிச்சை மேற்கொள்வது இல்லை. சரியாக செய்யப்படாத கருகலைப்புகள் பின்னர் புற்று நோய்கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகிவிடுகின்றன.   கிராமப் பகுதியில் இது போன்ற பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. . கருக்கலைப்பு மட்டுமல்ல மாதவிடாய் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முறைகள் பற்றிய விழிப்புணர்வும் இல்லாததே காரணம். மாதவிடாய்க்கு துணிகளை பயன்படுத்தும் பழக்கமே அதிகமாக உள்ளது ஆனால் அவற்றை தூய்மையாக பயன்படுத்தும் முறைகள் தெரியவில்லை. பத்து வகுப்பு வரை படித்திருந்தாலும் பள்ளி பாடத்தில் இது பற்றி குறிப்புகள் இல்லாததால் கிராமப்புறத்தில் அதிக பெண்கள் கருப்பை புற்று நோய்க்கு இலக்காகின்றனர்.

சரி, கிராமப்புறத்தில் இந்த காரணங்கள் உள்ளன, நகர்புறத்தில் இது பற்றி என்ன செய்தி கிட்டுகிறது?  ஹார்மோன் சிகிச்சை மேற்கொள்வது, கருப்பைக்குள் ஏற்படும் சிறிய கட்டிகள் இவற்றை சரிவர உணராமல் போவதும் காரணமாகின்றன. மேலும் மார்பக புற்று நோய்க்கான சிகிச்சை எடுக்கும்போதும், வேறு வகையான புற்று நோய்க்கு ரேடியோ தெரபி சிகிச்சை எடுக்கும்போதும் கருப்பை புற்று நோய் வர வாய்ப்புள்ளது. சிலருக்கு பரம்பரை கோளாறுகளாலும் வரும். அதிலும் குழந்தை பெறாத பெண்கள், 55 வயதிற்குப்பின் மெனோபாஸ் கட்டத்தை அடைபவர்கள் ஆகியோர் கருப்பை நோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.  அதிர்ச்சியூட்டும் விசயம் என்னவெனில் இது போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகளை சரிவர கையாளாமல் புற்று நோய்க்கு வித்திடும் கவனக்குறைவு நகர்புறங்களிலும் அதிகரித்துள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே கண்டுகொண்டு விட்டால், சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. இல்லையென்றால் குணப்படுத்த முடியாத சிக்கல் உருவாகிவிடும். நோய் முற்றிவிட்டால், உயிரிழப்பின் சதவிகிதம் அதிகரித்துவிடும்.

முதல் கட்டம்: கருப்பையின் உள்பக்கம் மட்டுமே பாதிக்கப்படும்.
இரண்டாம் கட்டம்: கருப்பை சார்ந்த மற்ற பகுதிகள் பாதிக்கப்படும் உ-ம், ஃபெலோபியன் குழாய்கள்.
மூன்றாம் கட்டம்: கருப்பைக்கு வெளியேயும் பாதிப்புகள் இருக்கும் உ-ம், பெல்விஸ் பகுதிகள்
நான்காம் கட்டம்: கருப்பையை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படும் உ-ம், சிறுநீரகம், கல்லீரல் ஆகியன.

கருப்பை கோளாறினை கண்டறிவதுதான் முதல் படி. சில குறிப்புகள் உள்ளன. ஒழுங்கற்ற மாதவிடாய், அடிவயிற்றில் வீக்கம், முதுகிலும் இடுப்பிலும் வலி, சில சமயம் அடிவயிற்றில் சுரீரென்று உருவாகும் வலி, சிறுநீர் பிரச்சினைகள் ஆகியன ஆரம்பகால குறியீடுகளாக இருக்கலாம். இவை உணர்ந்து கொள்ள முடியாத வகையிலும் இருக்கும். ஏனென்றால், வலியை உணர்வதும், பொறுத்துக் கொள்வதும் ஒருவருடைய சகிப்புத்தன்மையை பொறுத்தது. நீங்களே கவனித்திருக்கலாம், சிறிய காயத்திற்கு கூச்சல் போடுபவர்களும் உண்டு, பெரிய அடிபட்டிருந்தாலும் அமைதியாக பொறுத்துக் கொள்பவரும் உண்டு. பொதுவாகவே பெண்களுக்கு வலியை பொறுத்தமட்டில் சகிப்புத்தன்மை அதிகம் என்பதால் (பிரசவ வலியையே பொறுத்துக் கொண்ட அனுபவம்தான்...) இவற்றை எளிதில் கண்டுணர மாட்டார்கள். மேலும், குடும்ப நலத்தையே பெரிதாக நினைத்துக் கொண்டிருப்பதால் அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை உணரமாட்டார்கள். எனவே, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கமுடிவது இல்லை.

எனவே இந்த விசயத்தில் வீட்டில் இருக்கும் மற்றவர்கள்தான் அவர்களை கவனிக்க வேண்டும். உங்களுடைய மனைவியோ, அம்மாவோ 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் சற்று கூடுதலாக கவனம் செலுத்துங்களேன். சில குறிப்புகள் தருகிறேன். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனேயே அவர்களுக்கு கருப்பை புற்று நோய் வந்துவிட்டது என்று முடிவு செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள். அது சாதாரண கருப்பை கோளாறாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இனி உங்களால் கண்டு கொள்ளக்கூடிய அறிகுறிகளை பார்க்கலாமா?

1. கருப்பை புண்கள்தான் கட்டிகளுக்கு ஒருவிதத்தில் காரணமாகின்றன. திடீரென்று அடிவயிற்றில் வலி ஏற்பட்டு துடிப்பார்கள். ஓய்வெடுத்த சற்று நேரத்திலேயே சரி ஆகிவிடும். மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்று சொல்வார்கள். அப்படியே விட்டுவிடாமல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

2. ஈஸ்ட்ரோஜன் அளவில் ஏற்படும் மாற்றங்கள்தான் அடிப்படை காரணம். இது போன்ற ஹார்மோன் குறைபாடு மனக்கவலை மற்றும் பதட்டத்தை அதிகரிக்கிறது. சிறிய விசயங்களுக்கு கவலைபடுவார்கள், சந்தேகப்படுவார்கள், குறை சொல்ல ஆரம்பிப்பார்கள். எப்போதும் சோர்வுற்ற மன நிலையில் இருப்பார்கள்..

3. உணவு எடுத்துக் கொள்ளும் அளவு குறைய ஆரம்பிக்கும். மாதவிடாய் சமயத்தில் சோர்வு, வெளுத்த முகம், களைப்பு ஆகியவை வழக்கத்திற்கு மாறாக அதிகரிக்கும்.

4. சிலர்  மன நோயாளிபோல் நடந்து கொள்வார்கள். கூச்சலிடுவது, காரணமில்லாமல் அழுவது, சண்டைபிடிப்பது போன்றவை இருக்கும்.

மேலே குறிப்பிட்ட அனைத்தும் கருப்பை புற்று நோய் அறிகுறிகள் அல்ல. கருப்பை புற்று நோய் முன்னோடிகளான ஈஸ்ட்ரோஜன் குறைபாடு, கருப்பை கட்டிகளின் உருவாக்கம் ஆகியவற்றை உணர்த்தும். கவனிக்காமல்விட்டால் இவை புற்று நோய்கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது என்பதை மட்டும் வலியுறுத்துகிறேன்.

உலக சுகாதார அமைப்பின் கருத்துபடி இந்தியாவில் 12 பெண்களில் ஒருவருக்கு கருப்பை புற்று நோயோ அல்லது மார்பகப் புற்று நோயோ ஏற்படுகிறது. மனித உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறுநீரகம்தான் முக்கிய பொறுப்பு வகிக்கிறது. அது செயலிழப்பது என்பது பல தவறுகள் மற்றும் அலட்சியம் ஆகியன காரணமாகும். அதேபோல ஒரு அழகான இல்லத்தின் அடிப்படை பெண்தான், தன்னுடைய உடல் கோளாறுகளை வெளியே காட்டிக்கொள்ளாத இந்திய பெண்களுக்கு குடும்பத்தினரின் கவனிப்பு இருக்க வேண்டியது அவசியம்.  அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை கவனத்தில் கொள்வோம்.

16 comments:

"கருப்பை புற்றுநோய் - கவனியுங்கள் - நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கட்டுரை போட்டி"

விழிப்புணர்வு கட்டுரை அருமை..

பாராட்டுக்கள்..

போட்டியில் பரிசு பெற வாழ்த்துகள்..

அருமையான அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
தகவல்களுடன் கூடிய பதிவு
வெற்றி நிச்சயம்
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

மிகச் சிறந்த விழிப்புணர்வு கட்டுரை. போட்டிக்கு என்று எழுதிய கட்டுரை என்றால் வெற்றி வாய்ப்பு நிச்சயம். காரணம் சொல்ல வந்த கருத்தும் அதை சொல்லியவிதமும் மிக நன்றாக உள்ளது. நீங்கள் எழுதுவதெல்லாம் இந்த வலைத்திரட்டிகளில் முஜதன்மையாக வருகிறதோ இல்லையோ அதற்கெல்லாம் கவலைப்படாமல் எழுதுங்கள். காரணம் நீங்கள் எழுதுவதெல்லாம் "பொக்கிஷம்" அது பாதுக்காக்க பட வேண்டியவை. அது யாருக்கு தேவையோ அது அவர்களுக்கு மட்டும் கிடைக்கும். நன்றி. நேரம் கிடைக்கும் போது எல்லாம் தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்

பயனுள்ள கட்டுரை. பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி சுற்றி உள்ளவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள், நோயின் பாதிப்பைவிட பலமடங்கு கிலி ஊட்டக்கூடியவை.

மிகச்சிறப்பாக எழுதப்ப்ட்டுள்ள பயனுள்ள கட்டுரை.

போட்டியில் பரிசுபெற வாழ்த்துகள்.

//அதேபோல ஒரு அழகான இல்லத்தின் அடிப்படை பெண்தான், தன்னுடைய உடல் கோளாறுகளை வெளியே காட்டிக்கொள்ளாத இந்திய பெண்களுக்கு குடும்பத்தினரின் கவனிப்பு இருக்க வேண்டியது அவசியம். அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்தை கவனத்தில் கொள்வோம்.//

அன்பான அழகான அருமையான அவசியமான வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி, மேடம்.

பெண்களின் நலனில் அக்கறை கொண்ட அழகான விழிப்புணர்வுப் பதிவு. அலட்சியத்தால் ஆணிவேரே ஆட்டம் கண்டுவிடக்கூடிய அபாயத்தை ஆழமாகவும் எளிதாகவும் விளக்கியுள்ளமை பாராட்டுக்குரியது. போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள், சாகம்பரி.

Dear Friend!
You are doing a fantastic job indeed! Please do continue. Greetings!

இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்வது நம்முடைய கருத்தை பலர் படிக்க ஏதுவாகிறதல்லவா? வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி.

ஊக்குவிக்கும் பின்னூட்டத்திற்கும் தங்கள் வருகைக்கும் நன்றி ரமணி சார்.

மிக்க நன்றி மதுரைத் தமிழன். நான் ஹிட்ஸ் கணக்கெல்லம் பார்ப்பதில்லை. வருங்கால சந்ததியினருக்கு பயன்படும் என்ற நம்பிக்கையிலேயே எழுதுகிறேன்.

@குலவுசனப்பிரியன்
நன்றி நண்பரே. தங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

தங்களின் வாழ்த்திற்கு நன்றி VGK சார். தங்களின் அழகான பின்னூட்டம் என்னை ஊக்குவிக்கிறது.

dear Lali, thank you very much for your encouraging words.

வணக்கம் கீதா, தங்களின் அருமையான அழகான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அதிகம் உழைத்து எழுதப்பட்ட நல்ல கட்டுரை. வாழ்த்துக்கள்.