மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 'உயிரினும் இனிய பெண்மை' மருத்துவ பதிவிற்கு கிடைத்த ஆதரவிற்கு நன்றி. இது தொடர்பாக சில கேள்விகள் வந்திருந்தன. அவற்றில் தனிப்பட்ட சில கேள்விகளுக்கு நான் பதில் தந்துவிட்டேன். பொதுவான சில கேள்விகளுக்கான பதில்களை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். அவை...
 

1. இது பயப்படவேண்டிய  மனோ வியாதியா?
இது பயப்படவேண்டிய வியாதியல்ல. கவனிக்க வேண்டிய வியாதி. மேலும் இது நிரந்தரமானது அல்ல. ஹார்மோன் அளவு சீரானபின் சரியாகிவிடுவார்கள். இடைப்பட்ட காலத்திற்குள் நாம் கவனமாக பார்த்துக்கொண்டால் போதும்.

2. நான் தனிமையிலிருக்கும் தாய்மையடைந்த பெண். இது போன்ற பிரச்சினையை உணர்ந்து சீர் செய்ய என்ன வழி?

   நீங்கள் தனிமையில் இருக்கிறீர்கள் எனில் சில குறிப்புகளை உணருங்கள். சோகம், கோபம், எரிச்சல், சோர்வு, சந்தேகம் போன்ற உணர்வுகள் உங்களை அலைக்கலைத்தால் போஸ்ட்போர்டம் அழுத்தம் இருக்கலாம். இது போன்ற உணர்வுகள் சாதாரணமான பெண்களுக்கும் வரலாம். ஆனால் எல்லை மீறி வெளிப்பட்டால் மட்டுமே கவலைப்பட வேண்டும். ஏதோ தவறு நடக்கிறது என்பதையும் கட்டுபடுத்த முடியாத இயலாமையையும் நீங்களே உணர்வீர்கள். பிரசவத்திற்கு பிறகான மாதசுழற்சியை கவனியுங்கள். மாதவிடாய் போக்கின் அளவும் பழைய நிலையிலேயே இருக்க வேண்டும்.


 -  உங்களுக்கு மிக நெருக்கமானவருடன் இது பற்றி  லந்தாலோசிக்கலாம். கணவர், தோழி, சகோதரி போன்றவர்கள். இவர்கள் உங்களுடைய மாற்றத்தை  சரியாக எடைபோட்டுவிடுவார்கள்.

  -குழந்தை வளர்ப்பு பற்றி அறிந்தவர்களை உங்களுக்கு உதவியாக வைத்துக் கொள்ளுங்கள். வயதான பெரியவர்களை அருகில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் ஆலோசனையை கேளுங்கள்.

  - உங்களை அலைக்கலைக்கும் சிந்தனைகளை உடனேயே ஆக்ரோசமாக வெளிப்படுத்தாமல், ஒரு சிறிய நோட்டில் குறித்து வையுங்கள். உணர்வுகளின் பிடியிலிருந்து தற்காலிகமாக நீங்கள் வெளிவரும்போதெல்லாம் - நார்மல் ஆக இருக்கும் சமயங்களில் - அதனை வாசித்துப் பாருங்கள். தேவையில்லாத குப்பைகளை ஒதுக்கித் தள்ளும் பக்குவம் நாளடைவில் கிட்டிவிடும்.

-     தியானம் செய்வது, தெய்வ காரியங்களில் ஈடுபடுவது ஒரு சிந்தனை மாற்றத்தைத் தரும்.
 
 -    தனித்து இருந்தாலும் பாலைவனத்தில் இல்லையல்லவா, உங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர்கள் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் உள்ள மற்ற பெண்களிடம் இணக்கமாக இருங்கள். அவர்கள் இது போன்ற சிக்கல்களிலிருந்து மீண்டு வந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள்.

-   மருத்துவரை அணுகுங்கள் - அவர் மகப்பேறு மருத்துவராக இருப்பது நல்லது. அவர் போதுமான கவுன்சிலிங் தருவார். தன்னிச்சையாக மனபதட்டத்தை குறைக்கும் மருந்துகளையும், ஹார்மோன் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளாதீர்கள் -மருத்துவர் கூறினால்கூட ஹார்மோன் மருந்துகளை தவிர்க்கவும். பிற்பாடு பிரச்சினை எழலாம்.

-   புதிதாக தாயாகும் பெண்களுக்கே உரிய ஒரு தவறான சிந்தனையை விலக்குங்கள். அது என்னவென்றால், 'நான் ஒரு சிறப்பான தாயாக இருப்பேன். என் குழந்தையை மிக சிறப்பாக வளர்ப்பேன்' என்பதுதான். ஏனெனில் இந்த சிந்தனை அனுபவமிக்க மற்றவர்களின் கருத்துக்களை புறந்தள்ளத் தூண்டும். மற்றவர்களை குறை சொல்லத் தூண்டும்.

3. இதற்கான கைவைத்தியம், பத்திய உணவு பற்றி தெரிவியுங்கள்:

       பொதுவாகவே உங்கள் மருத்துவர் சொல்லும் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வாயுத் தொல்லை உள்ள வகைகள் - கிழங்கு வகைகள், பட்டாணி, சோயா போன்றவற்றை தவிர்த்திடுங்கள். எளிதில் சீரணிக்ககூடியவற்றை உண்ணுங்கள். தாய்ப்பால் தருவர்கள் எனில் இவை குழந்தையின் உடல் நிலையை பாதிக்கும்.. அதுவும் கூடுதலாக  கவலைப்படவைக்கும். சூப் வகைகள், குறிப்பிட்ட மீன் வகைகள் மிக நல்லது.
  
       ஹார்மோன் குறைபாட்டினை சரிசெய்ய வெந்தயக்களி செய்து சாப்பிடலாம். களி செய்யும் முறை.
       இரண்டு மேஜைக் கரண்டி வெந்தயத்திற்கு, மூன்று பங்கு அரிசி சேர்த்து ஊறவையுங்கள். நன்றாக நீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் இட்டு, அடுப்பில் வைத்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருங்கள். மாவு நிறம் மாறி வெந்த அடையாளம் தெரியும். நீரில் கைவத்து களியினை தொட்டால் ஒட்டிக் கொள்ளாது. இந்த பதத்தில் இறக்கிவிடுங்கள். ஒரு தட்டில் பரப்பி நடுவில் சிறு குழி செய்து கொண்டு அதில் நல்லெண்னையும், பனை வெல்ல பாகு( சூடான கரைசலாக இருந்தாலே போதும்) ஊற்றி மிதமான சூட்டில் ஸ்பூனில் எடுத்து சாப்பிடுங்கள். வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சற்று கசக்கும் தேவையென்றால் பனைவெல்லப்பாகை சேர்த்துக் கொள்ளுங்கள். இது கருப்பையை உறுதிபடுத்தும், ஈஸ்ட்ரோஜனை நிலைப்படுத்தும், வயிற்றுக் கோளாறுகளை போக்கும், பனைவெல்லம் சேர்ப்பதால் குளிர்ச்சியும், இரத்தஓட்டம் சீராகுதலும் கூடுதல் நன்மைகளாக கிட்டும்.

உடலும் உள்ளமும் உறுதிபட்டுவிட்டால், நாளை இது போன்றவர்களுக்கு நாம் வழிக்காட்டியாக இருக்கலாமல்லவா? மற்றவர்களுக்கும் உதவி செய்யுங்கள். இது போன்ற செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    இந்த தொடர் மிகவும் ஆச்சரியப்பட வைப்பதாக  இருந்தாலும். நம்முடைய வாழ்வியல் மாறிப் போனதால் மிக அருகில் இருக்கும் ஆபத்தை சுட்டிக் காட்டகிறது. போன பதிவில் குறிப்பிட்டுள்ள சம்பவங்கள் ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டதால் நடந்தவை. இது மிகவும் குறைந்த சதவிகிதம்தான். ஆனால், பிரச்சினையையே புரிந்து கொள்ளாமல் சிதைவுற்ற குடும்பங்களும் இன்னும் நிம்மதியில்லாமல் இருக்கும் குடும்பங்களும் உங்களுக்கு மிக அருகிலேயே இருக்கும். எனவே இன்னும் சற்று கூடுதல் விளக்கம் தர முயற்சிக்கிறேன்

           அந்தப் பெண் எனக்குத் தெரிந்தவள்தான். திருமணம் பெரியவர்கள் ஆசியுடன் நடைபெற்றதுதான். மிகவும் நல்ல பெண். அன்பானவள். திருமணம் முடித்து சற்று நாள் பொறுத்து பிள்ளைபேறு வந்தது. சற்று சிரமமான பிரசவம். மிகவும் காத்திருந்து வேண்டி விரும்பி வந்த குழந்தை பாக்கியம். மகிழ்ச்சிக்கு அளவில்லாமல் இருக்க வேண்டும். ஆனால், அவள் கணவன் கவலையுடன் இருந்தான். என்னவென்று விசாரித்தால், அவள் யாருடனும் பேசுவதில்லை. ஏனென்றால் வீட்டினருடன் சண்டை.  பிறந்த குழந்தையையும் சரியாக கவனிப்பதில்லை.   ஊரிலிருந்து யாராவது வந்தால் -( பெரியவர்கள் யாருமில்லாமல் இருவர் மட்டும் சென்னையில் தனித்து இருக்கின்றனர்) சண்டை போடுகிறாளாம். "எனக்கு பில்லி சூனியம் செய்து வீட்டை விட்டு பிரிக்கபார்க்கிறார்கள்" என்பது அவளின் வாதம். கணவன் தரப்பில் நினைப்பது என்னவென்றால், குழந்தை பிறந்ததும் இத்தனை அடக்கமாக நடித்தவளின் உண்மை சொரூபம் தெரிகிறது. " என்கிறார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் அடிக்கடி ஏற்பட 'யாரையோ வைத்துக் கொண்ட' பழியையும் சுமத்திவிட்டாள்.  இத்தனையும் விளக்கிவிட்டு  " அவளை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடப் போகிறேன். சற்று நாள் பொறுத்து பார்க்கலாம்" என்று சோகமாக உரைத்தான். இது போஸ்ட்போர்ட்டம் மன அழுத்தத்தின் வேலை என்று எனக்குப் புரிந்துவிட்டது. அவளிடம் சென்று விசாரித்தபோது பொதுவாகவே மாதவிடாய் கோளாறு உண்டு என்பதை உறுதி செய்தாள். அந்தப் பெண்ணிற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடு பொதுவாகவே இருந்ததையும் குழந்தை பிறந்தபின் பாதிக்கும் அளவிற்கு மாறி இருப்பதையும் எடுத்துக் கூறினேன். ஆரம்பத்தில் சிறிதளவே இருந்த மன அழுத்தம், சூழ இருப்பவர்களின் குறை கூறலால் தன்மை பிறழும் அளவிற்கு மாறியிருப்பதையும் உணர்த்தினேன். பிறகு அனைவரும் புரிந்து கொள்ள  மருத்துவ ஆலோசனையுடன் நிலமை சரியானது - மருத்துவரை சந்திக்கும் முன் கூட அந்தப் பெண்ணின் மாமியார் "திமிர் பிடித்து திரிகிறாள். இதற்கெல்லாம் மருந்து இருக்கிறதாமா?" என்று கேட்டிருந்தார்.  ஆனால், தற்சமயம் நிலமையை புரிந்து கொண்டதால், பிள்ளை பேற்றிற்கு பிறகான தாயின் ஆரோக்கியத்தை பராமரிப்பதன் அவசியத்தை அனைவருக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

      ஒரு விசயம் கூற விரும்புகிறேன். இப்போதைய தலைமுறைக்கு முந்தைய தலைமுறை பெண்கள் - அதாவது என்னுடைய வயதிலுள்ளோர் - இந்த காலகட்டத்தில்தான் நன்கு படித்து முக்கியமான பணிகளில் சேர்ந்தனர். அதுவரை வீட்டளவில் குறிப்புகளாக இருந்த சில கை மருத்துவ முறைகள் செவி வழிச் செய்தியாக அடுத்தடுத்த தலைமுறைக்கு மாற்றப்பட்டு வந்தன. இந்த தலைமுறையில் அந்த தொடர்பு உடைந்துவிட்டது. கை வைத்தியம் பற்றிய குறிப்புகள் எதுவும் அவர்களிடம் இல்லை. தற்போது மிகச்சிறந்த மருத்துவ வசதி கிட்டுவதால், மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்த்துக் கொள்கின்றனர். அதிலும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் தரக்கூடிய பெரிய சிரமத்தை தரக்கூடிய அறிகுறிக்கு மட்டுமே மருத்துவரை நாடுகின்றனர். மற்றவற்றிற்கு குறிப்பிட்ட மருந்து வகைகளையே தாமாகவே எடுத்துக் கொள்கின்றனர். காய்ச்சல் போன்றவற்றிற்கு கால்ப்பால் அல்லது ஃபெபானில் போன்றவையும் உடல் வலிக்கு வீரியம் மிக்க ப்ரூஃபென்னையும் எடுக்கின்றனர். இதேதான் பெண்களின் மாதவிடாய் கோளாறுகளுக்கும் நடக்கிறது. அதற்கான மாத்திரைகளை அளவிற்கு அதிகமாக பயன்படுத்துவது பின்னர் மன அழுத்தத்தை உருவாக்கிறது.  மேலும் ஏற்கனவே நான் குறிப்பிட்ட கைவைத்திய தொடர்புச் சங்கிலி அறுந்து போனதால், உடனடியாக கவனிக்க வேண்டிய விசயங்களும் மறக்கப்பட்டு விடுகின்றன. பெண்ணிற்கு பிரசவத்திற்கு பிந்தைய மாதவிடாய் பற்றி அறிந்து கொள்ளக் கூட தாய்க்கு தெரியவில்லை. இந்தத் தெளிவின்மை இது போன்ற புதிய பிரச்சினைகளை கிளப்பிடுகிறது - இதனால் கருப்பை புற்று நோய் போன்ற கொடுமையான வியாதிகள் கூட பின்னாளில் ஏற்பட வாய்ப்புள்ளது.

       மருத்துவர்கள் நகரத்தின் இண்டு இடுக்கில்கூட இருக்கும் இந்த நாளில், ஒரு திறமைமிக்க மருத்துவரை கண்டுபிடிப்பது சிரமம்தான். எனக்கே என்ன நடந்தது என்றால், மேண்டோ டெஸ்ட் எனப்படும் ஒரு மருத்துவ சோதனையை மட்டும் செய்துவிட்டு டி.பி இருப்பதாக அதற்குரிய சிறப்பு மருத்துவரிடம் அனுப்பிவிட்டார் - இவர் ஒரு பெண்களுக்கான மருத்துவத்தில் எம்.டிக்கு படித்தவர்தான். காச நோய் சிறப்பு மருத்துவர் தந்த மருந்துகள் மயக்கம் உண்டாக்க நான் மிகவும் பயந்துபோய் எனக்குத் தெரிந்த  அனுபவமிக்க மருத்துவர் - எம்.பி.பி.எஸ்தான்- அவரிடம் சென்று ஆலோசனை செய்தேன். பார்த்த மாத்திரத்திலேயே "நல்ல ஆரோக்கியமாக இருக்கிறாயம்மா, உனக்கு காச நோய்க்கான அறிகுறி இல்லை" என்று ஆறுதல் கூறினார். பிறகுதான் தெரிந்தது, வலி நிவாரண மாத்திரையினால் அஸிடிட்டி அதிகமாகி இருமல் வந்ததும், அதற்காக எடுத்துக் கொண்ட சளித் தொந்திரவிற்கான ஆண்டிபயாட்டிக்குகளும் என்னை மோசம் செய்ததை புரிந்து கொண்டேன். காரமில்லாத உணவு, வயிற்றுப் புண்ணை ஆற்றக் கூடிய மருந்துகள், கீரைவகைகள் ஆகியன  என்னை நலம் பெறச் செய்தன. இதுபோலவே பெண்களுக்கான மருத்துவத்திலும் பல குளறுபடிகள் உள்ளன. வெறும்  மருந்துகள் மட்டும் உடல் ஆரோக்கியத்தை மீட்டுத் தருவதில்லை, அதற்கான உணவு கட்டுப்பாடும் சேர்ந்தால்தான் முழுமையாக குணமடையமுடியும். பத்திய உணவுகள் இதற்கென்றே சிறப்பாக பின்பற்றப்பட்டு வந்தன.

எது எப்படியிருந்தாலும், ஒரு பிரச்சினையை புரிந்து கொள்வதே சிக்கலை அவிழ்க்கும் வெற்றிக்கான முதல் படியாகிறது. பேறுகால மனக் கோளாறுகளை உணந்து கொண்டு அதற்கான சரியான நடவடிக்கைகளை எடுத்து தாயான பெண்ணை நலபெற வைப்பதும் , நமக்குத் தெரிந்தவர்களுக்கும் இதனை எடுத்துச்சொல்வதும்  நம்முடைய கடமையாகிறது. 'தாயொடு ஆரோக்கியம் போம்' என்று சொல்லி வைத்ததை  நி
னைவு கூர்ந்து இந்தப் பதிவினை முடிக்கிறேன். நன்றி.

உயிரைக் காக்கும்; உயிரினை சேர்த்திடும்;
உயிரினுக்  குயிராய் இன்ப  மாகிடும்;
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா!
                                                             - மகாகவி

    இனி ஒரு சம்பவத்தை பார்க்கலாம்.   குழந்தை பேற்றிற்காக 'அவள்'  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.  அறுவை சிகிச்சை மூலம் தான் குழந்தை பிறப்பு நடந்தது. மருத்துவமனையிலேயே பத்து நாட்கள் இருந்து சிகிச்சை பெற்றாள். பிறகு வீடு திரும்பினாள். இதுவரை சரி, அதற்குப் பின் நடந்ததுதான் பிரச்சினை. அவளுக்கு துணைக்கு வைத்திருந்த வேலைக்கார அம்மாள் வெளியே சென்றபோது குழந்தையை கீறி அழவிட்டு விட்டாள். முதலில் இதற்குக் காரணம் தெரியவில்லையெனினும் பின் வரும் நாட்களில் இது மறுபடியும் தொடர பெற்றவேளேதான் குழந்தையை இம்சிக்கிறாள் என்பது தெரிந்து அதிர்ச்சியுற்றனர். ஏன் இப்படி?  கொஞ்சம் விளக்கமாக பார்க்கலாம்.

    அவளுடையது காதல் திருமணம். வீட்டை விட்டு வெளியேறி நடந்த திருமணம்.  கணவன் மனைவி இருவரும் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். நல்ல சம்பளம். கலகலப்பாக இருந்த அவளும் அவள் கணவனும் இன்னும் மகிழ்வுடன் எதிர்காலத்தை திட்டமிட்டனர். நகரத்திலேயே சிறந்த மருத்துவமனையில் பேறுகால சிகிச்சை மேற்கொண்டனர்.  இரண்டு பேருடைய குடும்ப ஆதரவும் இன்றி அவர்கள் தனித்து அந்த காலக்கட்டத்தை கடந்தனர். வீட்டின் செல்ல மகளாக இருந்த அவளுக்கு ஒரு விசயத்தை பற்றி ஐயம் திரிபற அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம். தன்னுடைய தாய்மை பேறு, குழந்தை பற்றிய பல சந்தேகங்களுக்கு விடை மருத்துவரிடம் , தோழியரிடம் தெரிந்து கொண்டாலும் அவளை பலவீனப்படுத்திய நினைவு ஒன்று உண்டு.  யாருமற்று தனித்து இருந்த நாட்களில் இது விதைவிட்டு விஷவிருட்சமாகியிருந்தது. பெரியவர்களை மறுத்து திருமணம் செய்தபின் அவளுடைய தாயார் வருத்தத்துடன் சொன்ன வார்த்தைகள் சாபம்போல அவளுக்குள் புதைந்து நின்று சமயம் பார்த்து நினைவிற்கு வந்து மனதை அலைக்கலைத்தது. அவர் சொன்னது என்னவென்றால் "ஒழுக்கமாக உன்னை வளர்த்தேன் என்று நினைத்தேன். சிரித்து சிரித்தே என்னை ஏமாற்றிவிட்டாய். உனக்கு ஒரு குழந்தை பிறந்து அது வீட்டைவிட்டு ஓடும்போதுதான் என் வேதனை உனக்குப் புரியும்" என்பதுதான் அது.  அவளுக்கு பெண் குழந்தை பிறக்கக்கூடாது என்று ஊரில் உள்ள கடவுள்கள் எல்லோரிடமும் வேண்டுதல் வைத்திருந்தாள். அதனையும் மீறி அவளுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவளுடைய சிந்தனை சிக்கலாகிவிட்டது.  சாதாரணமாக தெளிவாக சிந்திக்கும் புத்திசாலிப் பெண் என்றாலும் தற்போது ஈஸ்ட்ரோஜன் மாறுபாட்டால் மனம் கலங்கிவிட்டது. குழந்தையின் மீது வெறுப்பு ஆரம்பித்துவிட்டது. அதுதான் பேறுகால மன அழுத்தம் எனப்படும் postpartum depression.

     குழந்தை பிறந்தபின் தாய் சோர்வாக இருப்பது, தளர்வான மன நிலையில் இருப்பது, பசியின்மை, குழந்தையிடம் விலகி இருப்பது போன்றவை பொதுவாகவே காணப்படும். பத்து நாட்களுக்குள் சரியாகிவிடுவார்கள். இது பெண்களுக்கு என்று சிறப்பாக உருவாகும் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோனின் அளவு மாறுவதும் பிறகு சரியாவதுமாகி இடைவெளியில் நடைபெறும் பிரச்சினை.  (இதுதான் கருப்பை கோளாறு ஏற்படாமல் காக்கிறது. மேலும் மன நிலையினை பாதுகாக்கும் சிறப்பும் இதற்கு உண்டு. ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டினால் மன அழுத்தம் எளிதில் உருவாகும்.) இதனை பேபி ப்ளூ எனலாம். சிறிய பிரச்சினைதான்.

    ஆனால் இந்த கோளாறு சீராகாமல் தொடர்ந்தால் அது போஸ்ட்போர்டம் டிப்ரெஸன் ஆகும். இது ஆறு மாத இடைவெளிக்குள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். தொடரும் அறிகுறிகள் - சோகமாக இருப்பது, காரணமில்லாமல் அழுவது, நிம்மதியின்மை, பசியின்மை, எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பது, சோம்பி இருப்பது, தூக்கமின்மை அல்லது அதிக தூக்கம், எதற்கும் தகுதியில்லாதவள் ஆகிவிட்டோமோ என்ற கவலை, புலம்பல், எடை குறைவு அல்லது அதிகரிப்பது, குழந்தையிடமிருந்து விலகுதல். உடன் இருப்பவர்கள் இவற்றை கவனித்து சரி செய்ய வேண்டும். இல்லையெனில் இன்னும் மோசமான   மனச்சிதைவு உண்டாகலாம். அதனை postpartum psychosis என்பார்கள். இதன் விளைவாக  தற்கொலைக்கு முயல்வது அல்லது குழந்தையை கொல்ல முயல்வது போன்றவை நடைபெறலாம். அதற்கு காரணமாக எதையாவது சொல்வார்கள். இது போன்ற செய்திகள் நாளிதழ்களில் இப்போது அடிக்கடி வருகின்றன. யாரோ எங்கோ கவனிக்கமுடியாத தேசத்தில் நடைபெற்றதுபோக இப்போது பக்கத்திலேயே இவை நடைபெறுகின்றன.

இதற்கான சிறப்பு மருத்துவரிடம் " திருமண உறவு புனிதமாக மதிக்கப்படாத மேலை நாட்டில் இது போல நடைபெறலாம். இந்தியாவில் இதுபோல உள்ளதா?" என்று கேட்டதற்கு அவருடைய பதில்" இந்தியாவிலும் இது பரவத் தொடங்கியுள்ளது. மும்பையில் ஒரு பெண் தன் ஒன்றரை மாதக் குழந்தையை மாடியிலிருந்து வீசியெறிந்திருக்கிறாள். கொலை முயற்சியாக மாறியது மட்டுமே பதிவாகிறது. மற்றபடி இதுபோன்ற மனச்சிதைவின் மற்ற வெளிப்பாடுகள் எளிதில் கண்டு கொள்ள முடியாததால் வெளியே தெரிவதில்லை."

இதனை எப்படி தவிர்ப்பது? இது சம்பந்தமான தொன்று தொட்டு வரும் நம்முடைய பழக்க வழக்கங்கள் . அதற்கான நம்முடைய பங்களிப்புகள். இவை பற்றி அடுத்த பதிவில் காணலாமா?.


       நிறைமாதங்களில்கூட பெண்கள் அலுவலகம் செல்கின்றனர். ஏன்? இது குறித்து பல பெண்களிடம் வினா எழுப்பியபோது கிட்டிய பதில் 'பொருளாதார சிக்கல்' என்றாலும், கணிசமான பதில்கள் கவலை கொள்ள வைக்கும் மற்றொரு காரணியை சுட்டுகின்றன. "வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை" என்பதுதான் அது. தனக்கான நிம்மதியை தன் வீட்டில் பெற முடியாத நிலை மிக மோசமானது. . ஈருயிராய் இருக்கும் பெண் தன்னையும் கவனித்துக் கொண்டு வயிற்றுப் பிள்ளையையும் கவனித்துக் கொண்டு பிரியமான கணவனின் தேவைகளையும் அனுசரித்து கம்பி மேல் நடக்கும் வித்தையொன்றை புதிதாக கற்றுக் கொள்கின்றனர். சில கணவர்கள் "வேலையை விடு என்றாலும் விடமாட்டேன் என்கிறாள்" என்று குறை வேறு சொல்கின்றனர். மருத்துவ விடுப்பு எடுப்பதாலோ அல்லது வேலையை விடுவதாலோ ஏற்படும் பின் விளைவுகள் அதற்கான தீர்வுகள் போன்றவற்றை எடுத்துச்சொல்லி அவர்களை ஓய்வு எடுக்க வைப்பது கணவனின் கடமை அல்லவா?  மருத்துவர் ஆலோசனையும் முடிந்தவரை அலுவலகம் செல்வது உடற்பயிற்சிபோல நல்லதுதான். ஆனால் கவனமாக இருப்பது நல்லது என்ற எச்சரிக்கையுடன் அனுமதிக்கின்றனர். இது எந்த அளவிற்கு சாத்தியம்?


   தாயாகிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்கு எத்தனை சங்கடங்கள் ஏற்படுகின்றன. தலைசுற்றல்,மயக்கம், நெஞ்சு எரிச்சல், ஒக்காளிப்பு .... இவற்றை தாண்டி உண்ணுகின்ற அன்னம் பாதி வழிகூட தாண்டாமல் மீண்டு வந்துவிடும். இந்த அவஸ்த்தை இல்லாதபோது வேளை கெட்ட வேளையில் வரும் பசி.  தொண்டைக்கு அருகில் ஏதோ காத்து இருக்கும் பயத்தால் உண்ணப்படும் ஒரு வாய் உணவு . சில வகைகள் மட்டும் வாயில் காப்போனை ஏமாற்றி வயிற்றை அடைந்துவிடும். குழந்தை வளர வளர அடி வயிற்று பாரம் கூடும். மனதிலும் பயத்தின் பாரம் கூடும். இரண்டும் தாங்காமல் கால்களில் கணிசமான வலி. அது என்னவோ அனைவரும் விழித்திருக்கும்போது வருகின்ற உறக்கம், இரவின் அமைதியில் வருவதில்லை. நடப்பது நல்லது என்று மருத்துவர் சொன்னது நினைவு வர உறக்கம் வராமல் மழலை நடை. இன்னும் கொஞ்ச நாள் கழித்து வயிற்றுக்குள் உருளும் குழந்தை சமயத்தில் உதைக்கும். கால் வலியுடன் இப்போது இடுப்பு வலியும் சேர்ந்து கொள்ளும். தேர்போல ஆடி அசைந்து நடந்தாலும் அன்னை மடி தேடும் அயர்வு. 


     உடலுக்குள் ஈஸ்ட்ரோஜன் அளவு மாறுபடுவதால் சிறு கவலைகூட பிரளய தோற்றத்தை உண்டு பண்ணும். கொஞ்சம் அதீத கற்பனைகள் தோன்றும். திடீரென்று ஒரு ஆயாசம் வரும். பிழைத்து வருவோமா? என்ற கவலை தோன்றும். 'அம்மா' என்கிற வார்த்தையின் முழு அர்த்தமும் புரிந்து விடுவதால் தன்னுடைய அன்னையை நினைத்து ஏங்கும் மனது. சிறிது அனுசரனையுடன் யாராவது தலையை வருடினாலே உடைந்து விடும் போல கண்ணில் நீர் தேக்கம்.  பின்னர் நிறைமாதங்களில் அமரவோ நடக்கவோ படுக்கவோ சீராக செய்யமுடியாத ஒரு அஷ்டவதானி நிலை. குழந்தை பிறப்பு வரை இன்னும் பல சோதனைகள். நல்லவேளையாக இதில் எதுவுமே நீடித்து இருப்பதில்லை. தொலைக்காட்சி விளம்பரங்கள் போல நொடிக்கு நொடி மாறி விடும். நினைவில் நிலைத்து நிற்பது குழந்தையின் வளர்ச்சியும் அதன் எதிர்காலமும்தான்.

        நிறை மாதங்களில் உடலுக்கு தரப்படும் சிறு சிறு வேலைகள்கூட ஒரு உடற்பயிற்சிபோல உதவ வேண்டும். சுமை தூக்கக் கூடாது. படியேறக் கூடாது. மூச்சு வாங்க வேலை செய்யக் கூடாது. பதட்டமான சூழ்நிலை இருக்கக் கூடாது. சமதளத்தில் நீண்ட தூரம் நடக்கலாம். அதுவும் ஒரு மாலை நேர நடையாக இருத்தல் நலம். ஒவ்வொருவருடைய உடல் வாகைப் பொறுத்து பிரச்சினைகள் மாறுபடும் பொதுவாக பித்த உடம்பு உள்ள பெண்களுக்கு சிரமம் அதிகம் இருக்கும். இதெல்லாம் பேறுக்காலம் என்பது அருமையான கவனிப்பிலும் அன்பான பேச்சுக்களினாலும் மிக அமைதியாக கடத்தப்பட வேண்டிய ஒன்று என்று குறிக்கின்றனவே. 


      உடலும் மனமும் ஆரோக்கியமாக உள்ள பெண் என்றால் பிரச்சினை இல்லை. தற்போதைய காலகட்டத்தில் அப்படி இல்லையே.  . "அவள் பிள்ளை பிறப்பதற்கு முதல் நாள் வரை வேலைக்கு சென்று வந்தாள். நீயானால் சுருண்டு சுருண்டு விழுகிறாய். என்னதான் வளர்த்தார்களோ?" இதுபோல் அடுத்தவருடன் ஒப்பிட்டு பார்ப்பது இப்போதுகூடி விட்டது. அளவுகோல்கள் அனைவருக்கும் சமமாக இருப்பது நல்லதல்ல. நல்லபடியாக பேறுகாத்தை தாண்டி தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும் எண்ணிக்கையின் சதவிகிதம் குறைந்துவிட்டது.

 

"இல்லையே எனக்குத் தெரிந்து நல்ல ஆரோகியத்துடன்தான் இருக்கின்றனர். பழையபடி தெம்பாக வலம் வருகின்றனர்" என்ற பதில் உங்களிடம் இருக்கும். ஆனால் அவர்களில் எத்தனை பேர் மன நலத்துடனும் இருக்கிறார்கள் என்பதுதான் என் கேள்வி. உடலை பொறுத்தவரை நவீன மருத்துவத்தின் துணையுடன் சிறப்பாக தேறிவிடுகின்றனர். அதே பளிச் புன்னகை, வாய் கொள்ளாத பேச்சு என்று வெளியுலகத்திற்கு மாற்றம் தெரியாத நடவடிக்கை. ஆனால் வீட்டிற்குள்...?. சிறு விசயத்திற்கும் அழுகை, கோபம், குழந்தை அழுவது பிடிக்காது, பரிவாக பேசினால்கூட சிடுசிடுப்பு, சந்தேகம் இதுபோன்ற மருத்துவம் கவனிக்க முடியாத மன ஆரோக்கியத்தை அவர்கள் இழந்துவிட்டதன் அறிகுறிகளை பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் அடுத்த பதிவில் பேசலாமா? 


       குழந்தை பெறுவதும் பிறப்பதும் உன்னதமாக மதிக்கப்படுவது மனித குலத்தில்தான். ஏனெனில் இங்குதான் மனித்துவத்தை போற்றும் அரிய தகவல் பொக்கிஷம் அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படுகிறது. ஒரு வேளை இந்த பொறுப்பு சரிவர நிறைவேற்றப்படாமல் போய்விட்டதென்று வைத்துக் கொள்வோம், புதிதாக பிறக்கும் குழந்தைகள் பசி, தாகம், உறக்கம் மட்டுமே அறிந்தவையாக விலங்குகள்போல் இருக்கும். ஆதி காலத்திலிருந்து மனித குலம் எத்தனையோ முயற்சி செய்து விலங்குகளைவிட மேம்பட்டவர்களாய் உருவாகிய சேதிகள், தொன்று தொட்டு கடத்தி வந்த காலப் பதிவுகள் அழிந்து போய்விடும்.  நம் பெற்றோரிடமிருந்து நமக்கு வந்த செய்திகள் கட்டாயம் நம் பாட்டன் வழிவந்தவையாகவும் இருக்கும். அடுத்த தலைமுறையின் உடல் நலம், மன நலம் பேணும்  இந்த தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடம் பெறுவது தாயின் பங்களிப்புதான்.  அப்படிப்பட்ட தாய்க்கு நம்முடைய கவனிப்பு பேறுகாலத்திற்கு முன்பும் பின்பும் மிக முக்கியம்.
   

   ஒரு பெண் தாய்மை பேற்றை எய்திய நிலையின் ஆரம்பத்திலிருந்தே மிக அருமையான கவனிப்பு தொடங்கிவிடும். இப்படி நடக்கக் கூடாது... அப்படி உட்காரக்கூடாது... புரண்டு படுக்கக்கூடாது... கையூன்றி எழாதே.... இந்த கனிவான கட்டளைகளுடன், ஆகும் ஆகாது பார்த்து உணவு பழக்கம், உடல் நலத்துடன் மன நலம் பேணும் பராமரிப்பு. வீட்டினுள்தான் என்றில்லை, வெளி உலகமும் ஈருயிர் பார்த்து கனிவாக தாங்கும். "அக்கா வரப்போ திடீர்னு கத்தக்கூடாது, புளியாங்கொட்டை அளவில் உள்ள பொருளைக் கூட தூக்கிப் போடாதே..." என்று சிறுவர்கள் கவனப்படுவதும், "முதல் பந்தியில உட்கார வை..., காற்றோட்டமா உட்காரம்மா" என்ற  வெளியிடத்து கவனிப்புகளும் தொடரும். ஒரு வீட்டில் தாய்மை பேறு எய்தியிருக்கும் 'மாசமான பிள்ளை' இருந்தால், சிறு சிறு தூக்குச்சட்டிகளில் குழம்பு வகைகள், புளிப்பு மிட்டாய்கள், சத்தான உணவுகள், கோவில் பிரசாதங்கள் என படையெடுப்பு அக்கம் பக்கத்திலிருந்து நடைபெறும். பேற்றுக்கு பின்பும் 'பச்சை உடம்புக்காரிக்கு' பத்திய  உணவு. பதினைந்து நாட்களுக்குள் இதெல்லாம் சேர்க்க வேண்டும், தாய்ப்பாலிற்கு இவற்றை உண்ண வேண்டும், சூப், லேகியம் கஷாயம் என்று கை மருத்துவம். குழந்தைக்கு உரை மருந்து எனப்படும் தினப்படி உடல் பேணும் மருந்துகள். இது அல்லாமல், தாயையும் சேயையும் உற்சாகப்படுத்தும் விதமான அனுசரனையான பேச்சுக்கள், செயல்கள். இது அத்தனையும் பேறு முடித்து மறுபிழைப்பு பிழைத்து வரும் பெண்ணின் மனம் மற்றும் உடல் நிலையை பேணும் யுக்திகள். இதெல்லாம் ஒரு காலம்! இப்போது....?

 
     குழந்தை பிறக்கும் முந்தைய வாரம் வரை பேருந்து ஏறி இறங்கி (நிறைய இளவயது பயணிகள் எழுந்து இடம் தருவதுகூட இல்லை) காலை முதல் மாலைவரை ஓயாத வேலை. இதில் பெரும்பாலும் அறுவை சிகிச்சையில் குழந்தை பிறப்பு.  இயற்கையான உணவுகள் மற்றும் தேவையான உணவுப் பழக்கம் இன்றி பேற்றுக்குப் பின் உடல் தேறி சாதாரணமாக வெகு நாட்களாகின்றன. கூட்டு குடும்ப முறையில்லாததாலும் வெளியூரில் தனித்து இருப்பதாலும் பிரஸவ கவனிப்பு என்பது முன்னும் பின்னுமாக முப்பது  நாட்கள் மட்டுமே கிட்டுகிறது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் பிரசவகால ஊதியம் தருவதில்லை - சில ஒரு மாதம் தருகின்றன அதுவும் முதல் குழந்தைக்கு மட்டும் (இரண்டாவது பிள்ளை மட்டும் மந்திரத்தில்
ருகிறதா?) எனவே போதிய சத்தின்றி மறுபடியும் அலுவலகப்பணி தொடர்கிறது. கூடுதலாக குழந்தைக்கு புட்டிப்பால் பழக்கமும், தாய்க்கு பாலை நிறுத்தும் முயற்சிகளும் ஆரம்பிக்கின்றன. தாயின் கனிவான கவனிப்பின்றி தன் கால்களினாலேயே புட்டியை பிடித்துக் கொண்டு பாலை அருந்தும் குழந்தையின் சாமார்த்தியத்தை மெச்சிக் கொள்கிறோம். இத்துடன் உடல் அளவில் மட்டுமன்றி மன அளவிலும் சவலையான அடுத்த தலைமுறைதான் தாயின் பங்களிப்பாகிறது.  இதற்கெல்லாம் என்ன காரணம்? இது போன்ற மாற்றங்களின் பின் விளைவுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமல்லவா? முக்கியமாக மிக சமீபகாலமாக இந்தியாவிலும் பரவி வரும், பெற்ற தாயே குழந்தையை வெறுக்கும் உளவியல் பிரச்சினையான Postpartum depression பற்றி தெரிந்து கொள்வோமா? அடுத்த தலைமுறைக்கான நம் பங்களிப்பு தாய்மையடைந்த பெண்ணை (அது அடுத்த வீட்டு பெண்ணாக இருந்தாலும்) கவனிப்பதிலிருந்தும் ஆரம்பிக்கும் முக்கியத்துவத்தை மீன்டும் நினைவுறுத்திக் கொள்வோமா? 

நொடிக்கொரு முறை எந்தன்
கண்ணிமைகள் துடிக்கும்போது
ஒரு நிழற்படம் பதியப்பட்டது...
என்னுடைய தொகுப்பாக நீயும்,
உந்தன் பதிவுகளில் நானுமாக
கணக்கின்றி சேமித்தோமே....!

சூரியபிரகாசமான தாய்மையில்
என்னை நீ அழகாக பதிந்தாய்
விழிகளின் ஓரத்தின் கண்ணீரில்
உன் சிரிப்பைத் தவிர வேறேது?
நெஞ்சில் வைத்துக் கொண்டாடி
தோளில் சாய்த்து வருடினேன்
உறக்கம் வந்த வேளையில்கூட
கண் சிமிட்டலின் புன்னகையில்
முத்தத்துடன் ஒரு அன்புப்பதிவு.

வளர்ந்தபின் மறந்துவிட்டாய்
என்னைத் தேடும் உன் தேடுதல்
மெல்ல மெல்ல பழங்கதையாக,
இருளுக்குள் ஓடி ஒளிந்திட்டாய்.
சாளரத்தின் வெளியே ஒளியில்
உன் மழலை முகத்தின் சாயல்
உன்னைதான் நான் தேடுகிறேன்!

வயிற்றிலிருந்து மடியிலும் ...
மடியிலிருந்து ஏந்தி கைக்கும்....
கையிலிருந்து தோள்களுக்கும்,
மாற்றியே உன்னை சுமந்தேனே
உயிரை உருவி வேற்று பூமிக்கு 
அனுப்பித் தொலைத்தேனா?
ஆனால் நீ மட்டும்.......?


     இதுவரை இந்த கட்டுரையினை தொடர்ந்தவர்களுக்கு , ஒரு சிக்கலான சூழ்நிலையில் மனம் குழம்புவதால் நமக்குத் தெரியாமலே தவறான செயல்களுக்கு நாம் காரணகர்த்தா ஆகிவிடுவதும், தொடர்ந்து வரும் பின் விளைவுகளும் புரிந்து இருக்கும். ஒரு சிறப்பான சுய திறானாய்வு செய்து கொள்ளும் முறைகளையும் அதனை சரி செய்யும் முறைகளையும் தெரிவித்திருந்தேன். இன்னும் சிலருக்கு வேறு மாதிரி பிரச்சினை இருக்கும். இரண்டாவது பதிவில் நான் சுட்டியிருந்த அறிகுறிகள் அனைத்தும் குடும்பத்தில் உள்ள மற்றவருக்கு இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். அதனை எப்படி சீர் செய்வது என்று இந்த பகுதியில் காணலாம்.

    முன்பதிவில் குறிப்பிட்டிருந்த முறைகளை இங்கு நீங்கள் செயல்படுத்திப் பார்க்கலாம். யாருக்கு என்றால் உங்களைவிட வய்தில் சிறியவர், உங்கள் சொல்லை மதிப்பவர், உங்களுக்கு கட்டுப்படுபவர் - அதாவது நீங்கள் அவருக்கு நம்பிக்கையான வழிகாட்டி எனில் உடனிருந்து ஆலோசனை வழங்கலாம். ஆனால், உங்களுக்கு மூத்தஸ்தானத்தில் இருப்பவர் - உ-ம் உங்களுடைய தந்தை, உங்கள் கணவர் - எனில் இந்த முறைகள் பயன்தராது. பாதிக்கப்பட்டவரிடம் நேரிடையாக சொல்ல முடியாது. அவர் அதை சரியான விதத்தில் எடுத்துக் கொள்ளமாட்டார்.

     என்னுடைய தோழி ஒருத்தி அவள் கணவருக்கு இதுபோல் பிரச்சினை இருப்பதை உணர்ந்து கொண்டாள்.. அவர் வெகு திறமைசாலி. கடந்துபோன வாழ்க்கையின் வெற்றியாளராக விளங்குபவர்.  "அவரிடம் இது பற்றி பட்டவர்த்தனமாக குறை சொல்லி உரையாடாதே" என்று சொன்னேன். "இந்த கட்டுரையினை எடுத்து சென்று படித்துக் காட்டவா?" என்று கேட்கிறாள். அதுவும் தவறுதான் ("ஆமா, அந்தம்மாவிற்கு வேற வேலையில்ல" என்று எழுதிய எனக்கும் சேர்த்து திட்டு விழும்). நான் ஏற்கனவே சொன்னதுபோல் முன்னெடுத்து செல்லும் பொறுப்பில் உள்ளவர்களுக்கு ஆதிக்க மனோபாவம் சிறிதாவது இருக்கும். உண்மையிலேயே அவர்கள் திறமைசாலிகள்தான். இந்த ஒரு சிறிய தடுமாற்றத்தை வைத்து நாம் அவர்களை குறை சொல்லி மட்டம் தட்ட முயற்சிப்பது போலாகிவிடும். அதனால்,  பிரச்சினை சரியாகி சாதாரணமாகிவிட்டாலும் தன்னுடைய டிராகிற்கு வரத் தயங்குவார்கள். அது அவர்களை இத்தனை நாள் சிறப்பாக வைத்திருந்த தன்னம்பிக்கையினை ஆட்டம்காண வைத்துவிடும். சரி எப்படி அவர்களை சரி செய்வது?

1. நான் சொன்னதுபோல் நேரிடையாக கை நீட்டி குற்றம் சாட்டிப் பேசக்கூடாது." கொஞ்ச நாளாகவே நீங்கள் சரியில்லை. ராகு தோசம் இருக்குன்னு ஜோசியர் சொன்னார். அது மாதியே பாம்பு மாதிரி சீறுகிறீர்கள்" . இப்படியெல்லாம் பேச வேண்டாம்.

2. குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதை செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் கணவரின் கெடுபிடியால் பிள்ளைகள் மனம் வெறுத்து பேசலாம். கண்டிப்பாக உங்களிடம் மனம்விட்டு பேசுவார்கள்." அவர் முன்ன மாதிரி இல்லை. ரொம்ப கன்னிங் ஆகிட்டார்" என்று குறை கூறும்போது, " ஆமாம், நானும் கவனிச்சிட்டுத்தான் வர்றேன்" என்று பேசாமல், "அப்பாவிற்கு வியாபாரத்தில் சிக்கல்" அல்லது " உடல் நலக்குறைவு இருப்பதாக" குறிப்பிடலாம்.

     ஒரு குடும்பத்தில் இது போல குறை சொன்ன பிள்ளைகளிடம் அம்மா "அவரை கல்யாணம் செஞ்ச நாளிலிருந்து இதுபோலத்தான் கஷ்டப்படறேன்" என்று புலம்ப, சரியான விளக்கம் இல்லாது போக பிள்ளை அப்பாவிடம் சண்டையிட்டுவிட்டான். இது ஒரு சிறிய கீறலாக விழுந்து விரிசலாக மாறி, வேண்டுமென்றே காதல் திருமணம் செய்து கொண்டான். குடும்பத்திற்கு கட்டுப்பட்டு வளர்ந்தவன் திடீரென்று தடம் மாறியதால் சரியான துணையை தேர்வு செய்யமுடியாமல் போக, இப்போது அவன் வாழ்க்கை தடுமாற்றம் ஆகிவிட்டது.

3. அவரால் இத்தனை நாள் நன்றாக இருந்தோம் அல்லவா?. அதனை உணர்ந்து நம்முடைய வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு அமைதியாக நடந்து கொள்ளுங்கள்.  சத்தான தெம்பான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளச்  செய்யுங்கள். உங்களுடைய தேவையாக சுற்றுலா அழைத்துச்
 செல்லுங்கள். அவர்களுக்கு ஆதரவாக நீங்கள் இருப்பதை உணர்த்துங்கள். அன்றாட வேலைகள் செய்வதிலேயே குழப்பம் ஏற்படுவதால், அவர்களுக்கான சிறிய விசயங்களையும் கவனமெடுத்து செய்யுங்கள் - உடைகளை அயர்ன் செய்து தயாராக வைப்பது போன்றவை.

    பிள்ளைகள் முக்கியமாக சந்திக்கும் விசயம் என்னவென்றால் அப்பாவுடைய பொருட்களை பயன்படுத்திவிட்டு  - உ-ம் வண்டியை எடுத்து ஓட்டிவிட்டு சாவியை எங்கேயாவது வைத்து விடுவது, வண்டியில்- பிரச்சினை ஏற்பட்டுள்ளதை சொல்லாமல் விடுவது போன்றவைகூட பிரளயத்தை கிளப்பும். சாதாரணமாக இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் விடுபவர் இந்த சமயத்தில் மிகப் பெரிய பிரச்சினையாக மாற்றிவிடுவார்.  படிப்பில் கவனம் சிதறிய என்னுடைய மாணவன் ஒருவனின் தந்தை கவுன்சிலிங்கின்போது  இது போன்ற 'பொறுப்பில்லாத்தனம்' (வண்டி சாவியை கண்ட இடத்தில் வைப்பது) தன் மகனிடம் இருப்பதை கண்டிக்கும்படி என்னிடம் கூறினார். அந்த பையனை பற்றி எனக்குத் தெரியும் என்பதால், அவனுடைய அம்மாவை அழைத்து விசயத்தை குறிப்பிடாமல் சில ஆலோசனைகளை தந்தேன். மகனிடம் மிகவும் பிரியம் வைத்திருந்த அவர் ஒத்துழைத்ததால் மகன் சரியானபடி படிப்பை முடித்து நல்ல வேலையில் இருக்கிறான்.

  இப்படியெல்லாம் கவனித்துச்  செய்ய வேண்டுமா என்றால் (அடிமைத்தனம் போல் தோன்றினால்) , முந்தைய பதிவுகளில் நான் குறிப்பிட்டது போல் குடும்பம் என்பது ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கும் சிரித்து பேசுவதற்கும் மட்டுமல்ல. ஏதோவொரு சிக்கலில் குடும்ப அங்கத்தினர்  மாட்டிக் கொள்ளும்போது எந்த பாதிப்பும் ஏற்படாமலும் குடும்பம் என்கிற அமைப்பு சிதறிப்போகாமலும் காப்பாற்றும் கடமையும் நம்மிடம் இருக்க வேண்டும். காற்றில் சன்னல் கதவோ, வாயிற்கதவோ ஆடலாம் வீட்டின் அஸ்திவாரமே ஆடிவிடக்கூடாது.

முடிவுரையாக நான் சொல்ல விளைவது  மகாகவியின் வார்த்தைகளைத்தான். "மதிதனை மிகத் தெளிவு செய்து" எந்த சூழலிலும் நாம் சார்ந்த குடும்பம் பாதிக்காமல், நம் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி "என்றும் சந்தோசம் கொண்டிருக்கச் செய்" என்பதுதான். இந்த பதிவினை தொடர்ந்து வந்த அனைவருக்கும் நன்றி.


பிரச்சினை இருப்பதை புரிந்து கொண்டாயிற்று. இனி, என்ன செய்வது என்பதை இரண்டு விதமாக அணுகலாம். பிரச்சினை நமக்கு என்றால் என்ன செய்வது?. நம்முடைய நெருங்கிய உறவினருக்கு என்றால் என்ன செய்வது? என்று பார்க்கலாம்.

நமக்குத்தான் பிரச்சினை:
 1.  தொழில், வேலை அல்லது குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினகளுக்கு உடனடி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். மாற்றி யோசிக்கும் மனோபாவத்தினை செயல்படுத்தும் நம்முடைய ஆழ்மனது தற்சமயம் குழம்பி உள்ளதால் சரியான தீர்வு கிட்டாது. எளிதாக முடிக்கவேண்டிய விசயங்கள் சிக்கலாகிவிடலாம், எனவே, அமைதியாக இருக்க முயற்சியுங்கள்.

2.  யோகாசனம் செய்யலாமே என்று நினைத்தால் புதிதாக ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மையில் யோகா போன்றவற்றை பழக்கத்தில் வைத்திருப்பவர்க்கு இது போன்ற பிரச்சினை வராது.  புதிதாக ஆரம்பிக்க நினைத்தால் முயற்சி இந்த சமயத்தில் கைகூடாது.

3.  உடல் சோரும் போது என்ன செய்வோம்? தற்காலிக ஓய்வு தருவோம். உடலுக்கு சிரமத்தை விளைவிக்கக்கூடியவற்றை தவிர்ப்போம். தெம்பாக இருப்பதற்குத் தேவையான உணவினை உட்கொள்வோம். தொல்லை இல்லாத உறக்கத்தை நாடுவோம். இது அத்தனையும் மனதிற்குத் தரவேண்டும்.

4. மனதை தெளிவுபடுத்த எங்கேயாவது சுற்றுலா செல்லலாம். கிளம்புமுன் உங்களை  குழப்பத்தில் ஆழ்த்திய முக்கிய பிரச்சினையை ஒரு தாளில் எழுதி பூஜை அறையில் வைத்துவிடுங்கள். அல்லது ஒரு சிறிய பெட்டியில் வைத்து மானசீகமாக அதனை அங்கேயே விட்டுச் செல்வதாக மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். சுற்றுலா செல்லுமிடத்தில் போய் எந்த யோசனையும் செய்யாமல் சுற்றிலும் நடப்பதை ரசித்து உணர்ந்து நேரத்தை அனுபவியுங்கள். சுற்றுலா செல்லுமிடம் மலை பகுதியாக இருக்கலாம் அல்லது கடல் சார்ந்த பகுதியாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரிந்தவரை ஒரே வண்ணம் இருப்பது மனதை அமைதிபடுத்தும் -ஹீலிங் செய்யும். புதிய மனிதர்கள், புதிய இடங்கள் மற்றும் புதிய காட்சிகள் ரசனையை தூண்டிவிட்டு மனதிற்கு தெம்பூட்டும். நமக்கு சம்பந்தமில்லாத காட்சிகளில் பார்வையாளராக மட்டுமே இருப்பதால் சிந்திக்கத் தேவையில்லாமல் மனம் உறக்கம் நாடும்.

     -- மனதின் உறக்கம் ஒரு அருமையான புத்துணர்வினை தரும். நாம் உடல் ரீதியாக விழித்துக் கொண்டுதான் இருப்போம்.. ஆனால் நமக்கு தொடர்பில்லாத சூழ்நிலைக்குள் செல்லும்போது நம்முடைய கட்டுபாட்டை சூழ்நிலை எடுத்துக் கொள்வதால் சிந்திக்கத் தூண்டும் மூளையின் செல்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளும். சுற்றுலா செல்லுமிடத்தில் பொறுப்பை யாரிடமாவது தந்துவிட்டு அவர்கள் போக்கில் போக வேண்டும். அலையை எதிர்த்து நீச்சல் அடிப்பது ஒருவகை என்றால், கடல் ஓரமாக முழங்கால் அளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டு அலையின் போக்கிற்கு ஆடிகொண்டேயிருப்பது ஒரு வகை. பின்னதில் மனதிற்கு வேலையில்லை, அனுபவிக்க மட்டுமே செய்தால் போதும். இவையெல்லாம் மனதிற்கு ஓய்வு தரும் வேலைகள்.

   - சிலர் சுற்றுலா திட்டமிட்டு குடும்பத்தையே அழைத்துக்கொண்டுபோய், வழக்கம்போல தலைமை பொறுப்பை தன் கையில் வைத்துக் கொண்டு கர்னல் ஒரு மிலிட்டரி படையினை வழி நடத்தி செல்வதுபோல நடந்து  கொண்டு கத்தி குவித்து இன்னும் சிக்கலாக்கிக் கொண்டு வந்து சேருவார்கள். எனவே இதனை கவனமாக செய்ய வேண்டும்.

5.  புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்வது போன்ற புதிய கலை முயற்சியில் ஈடுபடலாம். இவை வெற்றி பெற்றால் நாம் உள்ளுக்குள்ளேயே பாராட்டி மெச்சிக் கொள்வோம். சரியாக வராமல் தவறாகி விட்டாலும் ஒரு சுவைமிக்க அனுபவம் கிட்டும்.
 
6. எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். நம்முடைய தனித்துவம் உணர்ந்து நமக்காக சிந்திக்கும் ஒருவரை இத்தனை நீண்ட வாழ்க்கையில் தேடுவது கடினம் அல்லவே. அவர்களை மதிப்பதும் பெருமைபடுத்துவதும் நமக்கு நல்லது. அப்படி ஒருவர் உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், கவனித்துப் பாருங்கள் அவரிடம் நமக்கான நேர்மறை சிந்தனைகள் அதிகம் இருக்கும். 
 
7. இது போன்ற மனக்கொந்தளிப்புகள் ஆண்களுக்குத்தான் அதிகம் வரும். பெண்களுக்கு மிகக்குறைவுதான். ஏன் என்றால், கட்டுப்படாத சூழ் நிலையினை உணர்ந்து பெண்கள் கட்டுப்பாட்டு விசையினை ஆண்களிடம் விட்டுவிடுவார்கள். "ஏன், ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறாய்?" என்றும், "நீங்களே சொல்லுங்களேன் என்னவென்றாலும் சரிதான்" என்ற  கழண்டு கொள்ளும் பதில் உரையாடலும் நடக்கும் நிலையது. ஆண்களுக்கு இயல்பான ஈகோ இருப்பதால் புலிவாலை பிடித்து விடுவார்கள் (புலியினை அடக்கவும் தெரியாது, புலி வாலைவிடும் தைரியமும் வராது.) ஆக நம்பிக்கைக்குரிய ஒருவர் நம்முடன் இருப்பது நல்லதுதானே, இது போன்ற சமயங்களில் பயன்படும் (மனைவி, தந்தை மற்ற பெரியவர்கள்). குறைந்தபட்சம் ஆலோசனை கேட்கவாவது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை நாடலாம்.
                        
                               
                                               - அடுத்து,  தொடரின் கடைசி பகுதியில் சந்திப்போம்   ஏன் ஏற்படுகிறது என்பது புரிந்து விட்டது, எப்படி இதை உணர்வது என்பதை பார்க்கலாமா? உணர்வது என்ற வார்த்தை சற்றும் பொருந்தாதுபோல் தெரியும். ஆனால் தவிர்க்கமுடியாமல் பயன்படுத்துகிறேன். நமக்குள் ஒரு குழப்பமான நிலை உருவாகியுள்ளதை எளிதாக நாம் உணர மாட்டோம். ஏகப்பட்ட விசயங்களை ஒரே சமயத்தில் கையாள்வதால், சில நம் தலையீடு இல்லாமலேயே சரியாக நடக்கும். மிகச் சிலவே குழப்பத்தில் முடியும்.  அதற்கும் யாருடைய தவறான லையீடோதான் காரணம் என்று நம்புவோம்.

     இதற்கான அறிகுறிகள் என்பது காய்ச்சல், தலைவலிக்கு வருவது போல் தெள்ளத்தெளிவாக இருக்காது. நம்முடைய தடுமாற்றங்களை உடனிருப்பவர் உணர்வார்கள். ஆனால், நாம்தான் தன்னம்பிக்கை சிகரத்தில் இருக்கிறோமே , மிகவும் வேண்டியவர்கள் சொன்னால்கூட ஒப்புக் கொள்ளாமல் மறுத்துவிடுவோம். "அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னை குறை சொல்ல முயற்சிக்காதீர்கள்" என்று கூறி விடுவோம். சும்மாவும் இருக்க மாட்டோம், அந்த மற்றவரிடம் குறை கண்டு அவரை திசை மாற்றும் வித்தையை மனம் முயற்சிக்கும். இதுவும் ஒரு மனோதத்துவம்தான்.  முன்னெடுத்து நடத்தி செல்லும் தலைமைப் பண்புகள் உடையவருக்கு மற்றவர்களை நுணுக்கமாக கவனிக்கும் திறன் அதிகம் இருக்கும். சாதாரண சமயத்தில் அவர்களுக்கு சரியான குறிப்பு தந்து பொறுப்பாக செயல்படுவோம். ஆனால் இது போன்ற சமயங்களில் "போட்டு பார்ப்பது" என்பார்களே...  அதற்குரிய ஆயுதமாக இதனை பயன்படுத்துவோம். ஏனென்றால்,  தலைமை பண்புகளை உணர்ந்த நம் உள்மனம் குறை சொல்பவர்களை தள்ளி வைக்க நினைக்கும். பலமே பலவீனமாகும் மாயை புரிகிறதா? அதனால்தான் இதனை எவ்வாறு உணரலாம் என்று விளக்க ஆரம்பித்தேன்.


1. அருகில் இருப்பவர்களின் குறைகள் பெரிதாகத் தெரியும்

         - "என்னவொரு பொறுப்பில்லாத்தனம். நான் இதை செய்யவில்லை   
என்றால் இந்த வீட்டில் யாருமே செய்யமாட்டார்கள் போலும்".      உண்மை ன்னவென்றால், அவற்றை செய்வதை நம்முடைய தலையாய கடமையாக இத்தனை நாள் செய்து வந்திருப்போம்.
         - (உ-ம்) செடிகளுக்கு நீர் விடுதல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல் போன்ற வழக்கமான வேலைகள்.

2. ஒருவித அயர்ச்சி தோன்றும்.
        - இது ஏதோ ஒரு முடிவை நோக்கி பயணிப்பதைப்போல உணர்த்தும். "என்ன வாழ்க்கை இது சந்தோசமாகவே இருக்க முடிவதில்லை"
 
3. படுத்தவுடன் உறக்கம் வராது. சிந்தனைகள் எதிர்மறையாக தோன்றும்.
       - . இந்த வேலையை விட்டு விடலாமா? வியாபாரம் சரியாகாது போலிருக்கே? நமக்குப் பிறகு யார் குடும்பத்தை பார்ப்பார்கள்?

4.  குடும்பத்தினர் தவிர மற்றவர்களிடம் குடும்பத்தை பற்றி கவலையுடன் புலம்பித் தீர்ப்பீர்கள். அல்லது மற்றவர்களை உயர்வாக நினைப்பீர்கள்.


5. சமயத்தில் நெஞ்சு வலியைகூட உணர்வீர்கள் - மருத்துவரிடம் செல்லாமல், உடனிருப்பவர்களுக்கு பொறுப்பை திடீரென்று சுமர்த்தி எதிர்பார்த்த செயல்பாடு அவர்களிடம் இல்லாததைக் கண்டு மேலும் பதட்டம்கூடும். இது சுழற்சி முறையில் மறுபடியும் உங்களின் உள்ளுறுப்புகளை பாதிக்கும். மீண்டும் எண் 1 லிருந்து தொடரவும்.

    இதில் ஒன்றிரண்டு இல்லாமல் இருக்கலாம். ஆனால், உங்களின் குடும்பத்தவர்கள் உங்களுடன் பேசுவதை தவிர்த்தாலோ, பார்வையில் படாமல்  ஒதுங்கினாலோ, முன்புபோல உங்களிடம் கருத்து பரிமாற்றம் செய்யாமல் இருந்தாலோ சுதாரிக்க வேண்டும். உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் வார்த்தைகள் அவர்களுக்கு மன வருத்தம் தரும். உதாரணமாக, "எதுக்கு இப்படி வீண் செலவுகள் செய்ற? உருப்படியா எதாச்சும் செய்யமாட்டியா?". உங்களுக்கு மிக சாதாரணமாக தோன்றும். ஏனென்றால், நமக்குப் பிறகு..... என்ற பயமுறுத்தும் கேள்வி சமீபகாலமாக உங்களை சுற்றி வருவதால் இது போன்று பேசத் தோன்றும். ஆனால், நேற்றுவரை "நான் உன்னை நல்ல நிலைக்கு கொண்டு வருவேன். நான் கவனமாக பார்த்துப்பேன். " என்று சொன்ன நீங்கள் இப்படி பேசுவது அவர்களை, முக்கியமாக பிள்ளைகளை மட்டம் தட்டுவது போல நினைக்க வைக்கும். இது போன்ற வார்த்தைகளை பத்தாவது படிக்கும் மகனிடம் பேசப்போக, அவன் வீட்டை விட்டு ஓடிப்போய் ஒரு உணவு விடுதியில் வேலைக்கு சேர்ந்துவிட்டான். தேடிப்பிடித்து அழைத்து வந்து கேட்டால் "அப்பாவே சொல்லிட்டார் நான் எதுக்கும் லாயக்கில்லை என்று" என்று வருந்தினான்.

   கொசுறான டிப்ஸ்  என்னவென்றால் பேசும்போது நம்முடைய பாசத்திற்குரியவர்களின் முகபாவங்களையும், பார்வை மாற்றங்களையும் கண்டுணருங்கள்.

.                                                பிறகு.... என்பதை நாளை தொடரலாமா?

        இது போன்ற சூழ்நிலை எப்போது? ஏன் உருவாகிறது?  குறிப்பிட்ட  உடல் நலக் கோளாறு ஏற்படும்போது - உதாரணமாக பித்தப்பை பாதிப்பு, வயிற்றுப் புண், மூளையில் சுரக்கும் திரவத்தில் (ஆனந்தமைடு) ஏற்படும் மாற்றங்கள் போன்ற வெளிப்படையாக தெரியாத கோளாறுகள் - சிந்திக்கும் திறனை பாதிக்கும். இவை நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்போது வெளிப்படையாகவே உடல் நலமில்லை என்று நமக்குப் புரிந்துவிடும். மருத்துவ ஆலோசனை பெறுவோம். ஆனால் ஏதோ ஒரு சிறிய நெருக்கடியில் சட்டென ஏற்படும் ரசாயன மாற்றங்கள் பெரிய பாதிப்புகளாக தெரிய வராது. இது ஒரு குறுகிய கால பாதிப்புதான். சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் அந்த குறுகிய காலத்திற்குள் நாம் அடுத்தடுத்த தவறுகளை செய்து  இடியாப்ப சிக்கலை உருவாக்கிவிடுவோம். இதனால் குடும்பத்திற்குள் ஏற்படும் குழப்பங்கள் வரையறுக்க முடியாது.

      சரி,  இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும்  ஏற்படக்கூடியதுதான், மற்ற வீடுகளிலும் இது போன்ற குழப்பங்கள் இருப்பதில்லையே என்று கேட்பீர்கள். உண்மைதான், மனதை பாதிக்கும் ஒரு சம்பவம் நடந்தால், உடன் இருப்பவர்கள் அவருக்கு தகுந்த ஆலோசனை கூறி சமன் செய்துவிடுவார்கள்.  உதாரணத்திற்காக சொல்கிறேன், எங்கள் வீட்டில்  ஏதோ ஒரு விசயத்திற்காக சிறியவர்கள் பயந்துவிட்டால் அல்லது அதிர்ச்சியடைந்தால் கொழுமோர் செய்து சட்டென குடிக்கத்தருவார்கள் அல்லது ஒரு ஸ்பூன் சீனியை வாயில் போடுவார்கள்.  இது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை  சீர் செய்துவிடும். உடல் நலம் பாதிக்காது. ஆனால், குடும்பத்தினை முன்னேடுத்து  நடத்திச் செல்லும் முக்கிய பொறுப்பில் நாம் இருக்கும்போது நமக்கு அடுத்தவர் ஆலோசனை சொன்னாலும் பிடிக்காது, நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக  சொல்லவும் அவர்களுக்குத் தோன்றாது. . எனவே சூழ இருப்பவர்கள் உணர்ந்த  "சம்திங் ராங்" என்கிற விசயம் நமக்கு தெரியாமல் போய்விடும். இந்த நிலை கண்டிப்பாக மற்றவர்களையும் பாதிக்கும். ஒரு சறுக்குப்பாதையில் நாம் பயணிப்பதையும் அதன் முடிவு மூச்சு திணறவைக்கும் ஒரு இருள் குகை என்பதும் பயணத்தின் ஆரம்பத்தில் தெரியாது. உடன் இருப்பவர்களுக்கும் இது பற்றி புரிந்து கொள்ளமுடியாது.


     ஒரு மலை பாதையில் பயணிப்பவர் தனித்து செல்லும்போது ரொம்பவும் ஜாக்கிரதையான உணர்வுடன் காலடிகளை எடுத்து வைப்பார்கள். அதுவே ஒரு குழுவாக செல்லும்போது தலைமை ஏற்றிருப்பவர்மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்படி செய்வார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்களும், சரியான பாதையை தேர்வு செய்து வழி நடத்துவார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்குவதால் அவர் வழிகாட்டுதலை மட்டுமே தொடர்வதால் தனக்கென்று ஒரு சிந்தனை இருக்காது. ஏதோ ஒரு இடத்தில் தலைமை பொறுப்பேற்றவர் தவறிவிட்டால், அதனை கவனித்து சரி செய்யவும் தோன்றாது. முடிவு மொத்த குழுவிற்கும் தோல்விதான் கிட்டும். இதேபோலத்தான், குடும்பத்தில் முக்கியமான பொறுப்புகளை தன்வசம் வைத்திருக்கும் ஒருவர் தவறாக சிந்திக்கும்போது அதன் பாதிப்பு மொத்த குடும்பத்திற்கும்தான். ஏன் தெளிவான முடிவுகளை நம்மால் எடுக்க முடியவில்லை என்று கேள்வி தோன்றினாலும் எடுத்து சொல்லத்தயங்குவார்கள். தப்பித்தவறி  சொன்னாலும் கடுமையான பதில்தான் கிட்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.  நாமும்தான் தவறான சிந்தனைகளினால் ஒரு இணக்கமான நிலையினை தவிர்த்து விலகி இருப்போம். நாம் சொல்வதை மறுத்துப்பேசிய தற்சமய சூழ்நிலையை கருத்தில் கொண்டு  கழிவிரக்கத்தினால் இன்னும் அவர்களைத் தவறாக நினைக்க ஆரம்பிப்போம். ஒரு சத்தியமான உண்மை என்னவென்றால், நம் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்களை நாம் நம்பிக்கை வைத்து இருப்பவர்களையும் விலக்க ஆரம்பிக்கும்போதுதான் நம்முடைய தோல்விக் கதையின் முதல் வார்த்தை எழுதப்படுகிறது. 
 
    ஒரு வெற்றி பெற்ற தொழிலதிபர். சிறிய வயதில் வாழ்க்கையை வெறுங்கையுடன் ஆரம்பித்தவர். கடுமையான உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார். அருமையான மனைவி, வளர்ந்த பிள்ளைகள் என அத்தனை பேரும் அவர் சொல்லை தட்டமாட்டார்கள். வயதாகி விட்டது. அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களின் காரணமாக ஒரு நெருக்கடி வந்தது. வெற்றியையே சந்தித்து பழகியவரால் இதனை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. உள்ளுக்குள்ளேயே சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். தன் விசயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அவர் சிந்தனை குழப்பத்தால் தவறான முடிவுகளை எடுக்கிறார். ரொம்ப நாள் கழித்து முதல் தோல்வி. பிள்ளைகளுக்கு தந்தை மேல் இருக்கும் நம்பிக்கை ஆட்டம் காண்கிறது. அவரின் தவறான முடிவுகளை விமர்சிக்கின்றனர். இது மேலும் அவரின் உடல் நிலையினை பாதிக்கிறது. விட்டதை பிடிப்போம் என்கிற நம்பிக்கையில் அதிரடி முடிவுகளை எடுக்கிறார். அதுவும் சிக்கல்.  குடும்ப சிக்கல் மனதை ஓய்த்துவிட்டது. பொருளாதார சிக்கல் ஆரம்பிக்கிறது. மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்று நான் சொன்னது இதனைத்தான்.
 
                                                                          - மீதி அடுத்த பதிவில் தொடரலாமா?

    இந்த வார்த்தை அனேகமாக வாழ்நாளில் ஒரு முறையாவது சொல்லியிருப்போம். "ம்.... கொஞ்ச நாட்களாகவே எதுவும் சரியில்லை. செய்வது எல்லாம் தவறாகப் போகிறது"   யாருமில்லாத உலகம் வேண்டி அமைதியாக இருக்க விரும்புவோம். ஏனென்றால் நம்முடைய அனுபவங்கள் அப்படியிருக்கும். சாதாரண பேச்சு வார்த்தை கடுமையான வாக்குவாதம் ஆகும். நல்லது என்று நினைத்து செய்வது கெடுதியாக போய்முடியும். சுற்றியிருப்போரிடம் வெறுப்பை சந்திக்கும் நிலை என்று ஒரு அசாதாரண சூழல் நிலவும். யோசித்துப் பார்த்தால் உண்மையில் அங்கு தவறுகள் அடுத்தடுத்து நடந்திருப்பது புரியும். அனேகமாக ஆரம்பம் நம்மிடம்தான் இருக்கும் - பிரச்சினை என்னவென்றால் அதை நாம் புரிந்து கொள்ள மாட்டோம். சிக்கல் முடிச்சு ஒன்றொன்றாக விழும்போது ஆரம்பம் நமக்குப் புரியாது. ஒவ்வொரு முடிச்சும் இறுகும்போதுதான் சிக்கல் உருவாகியிருப்பது புரியும். திடீரென்று சந்தேகம்கூட வரும் "என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை, இனி நான் ஏன் இவர்களுக்காக வாழ்நாளை வீணாக்கிக் கொள்ள வேண்டும்"  விளைவு , குடும்பத்தை பிரிந்து செல்லும் முடிவுகளுக்கு தூண்டப்படுவார்கள். ஒரு நெருக்கமான உறவுகளையுடைய கூட்டுக் குடும்பத்தில் இது போன்ற முடிவுகள் தவிர்க்கப்படும் அல்லது தள்ளிப்போடப்படும். ஆனால் அம்மா, அப்பா இரண்டு குழந்தைகள் என்று இருக்கும் சிறிய குடும்பம் எளிதில் உடைந்துவிடும்.  பிறகு சில நாட்கள் கழித்துதான் புரியும் நாம் சரியான முடிவுகளை எடுக்கவில்லை என்பதும், நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் வருத்தப்படுத்தியிருக்கிறோம் என்பதும்.     ஏன் இவ்வாறு நிகழ்கிறது? அடிப்படையில்  உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் கெடும்போது சிறு தவறுகள் நிகழும். சிறிய விசயத்திற்கும் அதிகமாக உணர்ச்சிவசப்படுவோம். நம்முடைய சிந்திக்கும் திறன் மாறுபடும். குழப்பமான மன நிலையில் இது சரியாக வேலை செய்யாது.   மறதி ஏற்படும். பொதுவாக மனித யந்திரம் அறிவுள்ளதாக செயல்பட விசயங்கள் சரிவர உள்வாங்கப்பட வேண்டும்,  ஏற்கனவே பதிய வைக்கப்பட்டுள்ள செய்திகளுடன் ஒப்பிட்டு ஒரு முடிவிற்கு வர வேண்டும் பிறகு அதற்கேற்ப செயல்படவேண்டும்.  சிந்திக்கும் திறன் குறையும் போது  மனதின் ஆழத்தில் பதியவைக்கப்பட்ட செய்திகளை நினைவிற்கு கொண்டு வருவது சிரமமாகிவிடும். அவசரமாக நம்முடைய மேல் மனம் சமீபத்தில் பதிய வைத்த விசயங்களை நினைவுபடுத்தும். 

     உதாரணமாக, ஒரு சம்பவம் பார்க்கலாம். வாசுதேவனுக்கு மகள் மது மீது கோபம். மது மிகவும் பிரியமான பெண். அம்மா அப்பாவிற்கு அடங்கியவள்தான். சிறப்பானவள் என்று சொல்ல முடியாவிட்டாலும் மனதிருப்தியை தருபவள், சிந்தித்து முடிவெடுப்பாள். நிறைய சமயங்களில் அவரே , அவளிடம் ஆலோசனை கேட்டு நடப்பதும் உண்டு. அவள் திருமணமாகி சென்றுவிட்டாள். ஒரு ஆள் நடமாட்டம் வீட்டில் குறைவது சிறிய குடும்பத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். வெளியே சொல்லிக் கொள்ள முடியாத மனவருத்தம் கணவன் மனைவி இருவருக்கும். அவள் நம்மை மறந்துவிட்டாள் என்று புலம்புவார். இந்த சமயத்தில் சம்பந்திகளுக்குள் சிறு பிரச்சினை , மகள் கணவன் பக்கம் நின்று பேசிவிட்டாள். அவமானபடுத்திவிட்டாள் என்று கோபம். "தாய்தகப்பன் முக்கியமில்லை என்று நினைத்துவிட்டாள் போல, எல்லாம் நீ வளர்த்தவிதம்...." என்று மனைவியின் அன்றாட செயல்களில் குற்றம் கண்டுபிடித்து சண்டைபிடித்தார். ஒரு கட்டத்தில் மனைவியும் பதிலுக்கு குறைகளை பட்டியலிட ஆரம்பித்தார். அடிக்கடி வெளி நடப்பு ஆரம்பித்தது.  ஒரு நாள் தனி விடுதியில் போய் தங்கிக்கொள்கிறேன் என்று முடித்துவிட்டார்.. இந்த சம்பவத்தைதான் தொடர்ந்து அலசப்போகிறோம்.

     நான் முதலில் சொன்ன ஆழ்மனச்செய்திகள் இங்கு வாசுதேவனால் நினைவுகூறப்படவில்லை. மகளோ மனைவியோ அவருக்கு செய்திருந்த பல நன்மைகள், அவர்களால் உருவாக்கப்பட்ட இனிய சம்பவங்கள் , முன்னேற்றங்கள் எதுவுமே நினைவிற்கு வரவில்லை. தற்போது மேலோட்டமாக பதியப்பட்ட செய்திகள் மட்டுமே எடைகல்லிற்கு வந்தன. ஒரு வருத்தத்தில் அவர் மனைவி சொன்ன " என்ன சுகப்பட்டேன்" என்ற வார்த்தைதான் ஆகாயத்தின் அடிவானம்வரை அவருக்கு தெரிந்தது. இது போன்ற சிலருக்கு நெஞ்சுவலிகூட வரும்.

    பெரும்பாலும் வயதானவர்களுக்கு மட்டும் வரக்கூடிய இந்த சூழ் நிலை (நினைவு மறதி(?)) இப்போது கடுமையான பணிச்சுமையினால் இளையவர்களுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவு குடும்பம் பிரிதல், விவாகரத்து என்று நிலை மாறுகிறது. நம் மனதில் கொலுப்படிகள் போல அமைத்து முதல் படியில் இவர்கள், இரண்டாவதில் சிலர், விருப்பமான சிலர் மேல்படியில் என்று அமைத்திருப்போம். அதற்கேற்ப அவர்களிடம் நம்முடைய பழகும் தன்மையும் மாறும். மெலே குறிப்பிட்ட சிக்கலான சூழ் நிலையில் படிகட்டு மரபுகள் கலைக்கப்பட்டு தரையிறக்கி வைத்து நாமும் துன்பப்பட்டு அடுத்தவ
ரையும் துன்புறுத்துவோம். இது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய சூழ் நிலைதான். ஏன்? எவ்வாறு? எப்படி? என்று இது குறித்த சில விசயங்களை இனிவரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்ளலாமா?


என்னுடனேயே பிறந்தாய்..
       கைப் பிடித்து  நடந்து ஓடி
ஒன்றாய் கூடி  கதை பேசி
       ஒரு குடம் தண்ணி ஊற்றி
பூப்பூவாக  பூத்து குலுங்கி
       அன்னை தந்தை கொஞ்சி
குவித்த அத்தனை பாசமும்
     கிள்ளி வைத்து பங்கு பிரித்து
கள்ளமின்றி ஆடித் திரிந்தோம்!
இன்று....
ஏனடி பொய்யாக கதைக்கிறாய்?
    எதையோ அடிமனதில் மறைத்து
பார்வையிலிருந்து மறைகிறாய்!
    சிறு சிறு பழியினை சுமத்தி விட்டு
உன்னை தொலைத்து ஓடுகிறாய்!
     வெறுப்பை வலிந்து கேட்கிறாய்!ஏனென்று எனக்குத் தெரியும்!
    உன் 'வீட்டு' தோல்விக் கதை
அத்தனையும் புரியும்... ...
     உயிரோடு உறவு தொலைத்த
என் வேதனையின் வலியை
    உனக்குத்தான் தெரியாது ..!
ஒன்று மட்டும் சொல்லுவேன்....
     என் வேண்டுதலின் பரிசாக
உன் தலை நிமிர்ந்து நிற்கும்
     வெற்றி நாள் ஒன்று வரும்
என்னை பார்த்து சிரிப்பாய்..
   

     அன்று ஓங்கியொரு அறைவிட்டு
தொலைந்த  கதை கேட்பேன்....
     அது வரை என் கேள்வியின்
எல்லைக்குள் வராமல்
      அந்தி வானத்தின் அடியில்
ஒளிந்து கொண்டு இருந்துவிடு.