நமக்குத்தான் பிரச்சினை:
1. தொழில், வேலை அல்லது குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினகளுக்கு உடனடி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். மாற்றி யோசிக்கும் மனோபாவத்தினை செயல்படுத்தும் நம்முடைய ஆழ்மனது தற்சமயம் குழம்பி உள்ளதால் சரியான தீர்வு கிட்டாது. எளிதாக முடிக்கவேண்டிய விசயங்கள் சிக்கலாகிவிடலாம், எனவே, அமைதியாக இருக்க முயற்சியுங்கள்.
2. யோகாசனம் செய்யலாமே என்று நினைத்தால் புதிதாக ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மையில் யோகா போன்றவற்றை பழக்கத்தில் வைத்திருப்பவர்க்கு இது போன்ற பிரச்சினை வராது. புதிதாக ஆரம்பிக்க நினைத்தால் முயற்சி இந்த சமயத்தில் கைகூடாது.
3. உடல் சோரும் போது என்ன செய்வோம்? தற்காலிக ஓய்வு தருவோம். உடலுக்கு சிரமத்தை விளைவிக்கக்கூடியவற்றை தவிர்ப்போம். தெம்பாக இருப்பதற்குத் தேவையான உணவினை உட்கொள்வோம். தொல்லை இல்லாத உறக்கத்தை நாடுவோம். இது அத்தனையும் மனதிற்குத் தரவேண்டும்.
4. மனதை தெளிவுபடுத்த எங்கேயாவது சுற்றுலா செல்லலாம். கிளம்புமுன் உங்களை குழப்பத்தில் ஆழ்த்திய முக்கிய பிரச்சினையை ஒரு தாளில் எழுதி பூஜை அறையில் வைத்துவிடுங்கள். அல்லது ஒரு சிறிய பெட்டியில் வைத்து மானசீகமாக அதனை அங்கேயே விட்டுச் செல்வதாக மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். சுற்றுலா செல்லுமிடத்தில் போய் எந்த யோசனையும் செய்யாமல் சுற்றிலும் நடப்பதை ரசித்து உணர்ந்து நேரத்தை அனுபவியுங்கள். சுற்றுலா செல்லுமிடம் மலை பகுதியாக இருக்கலாம் அல்லது கடல் சார்ந்த பகுதியாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரிந்தவரை ஒரே வண்ணம் இருப்பது மனதை அமைதிபடுத்தும் -ஹீலிங் செய்யும். புதிய மனிதர்கள், புதிய இடங்கள் மற்றும் புதிய காட்சிகள் ரசனையை தூண்டிவிட்டு மனதிற்கு தெம்பூட்டும். நமக்கு சம்பந்தமில்லாத காட்சிகளில் பார்வையாளராக மட்டுமே இருப்பதால் சிந்திக்கத் தேவையில்லாமல் மனம் உறக்கம் நாடும்.
-- மனதின் உறக்கம் ஒரு அருமையான புத்துணர்வினை தரும். நாம் உடல் ரீதியாக விழித்துக் கொண்டுதான் இருப்போம்.. ஆனால் நமக்கு தொடர்பில்லாத சூழ்நிலைக்குள் செல்லும்போது நம்முடைய கட்டுபாட்டை சூழ்நிலை எடுத்துக் கொள்வதால் சிந்திக்கத் தூண்டும் மூளையின் செல்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளும். சுற்றுலா செல்லுமிடத்தில் பொறுப்பை யாரிடமாவது தந்துவிட்டு அவர்கள் போக்கில் போக வேண்டும். அலையை எதிர்த்து நீச்சல் அடிப்பது ஒருவகை என்றால், கடல் ஓரமாக முழங்கால் அளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டு அலையின் போக்கிற்கு ஆடிகொண்டேயிருப்பது ஒரு வகை. பின்னதில் மனதிற்கு வேலையில்லை, அனுபவிக்க மட்டுமே செய்தால் போதும். இவையெல்லாம் மனதிற்கு ஓய்வு தரும் வேலைகள்.
- சிலர் சுற்றுலா திட்டமிட்டு குடும்பத்தையே அழைத்துக்கொண்டுபோய், வழக்கம்போல தலைமை பொறுப்பை தன் கையில் வைத்துக் கொண்டு கர்னல் ஒரு மிலிட்டரி படையினை வழி நடத்தி செல்வதுபோல நடந்து கொண்டு கத்தி குவித்து இன்னும் சிக்கலாக்கிக் கொண்டு வந்து சேருவார்கள். எனவே இதனை கவனமாக செய்ய வேண்டும்.
5. புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்வது போன்ற புதிய கலை முயற்சியில் ஈடுபடலாம். இவை வெற்றி பெற்றால் நாம் உள்ளுக்குள்ளேயே பாராட்டி மெச்சிக் கொள்வோம். சரியாக வராமல் தவறாகி விட்டாலும் ஒரு சுவைமிக்க அனுபவம் கிட்டும்.
- அடுத்து, தொடரின் கடைசி பகுதியில் சந்திப்போம்