மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

     ஒரு சூழலுக்குட்படும்போது நமக்கு தோன்றும் உணர்வுகள் உடனடியாக வெளிப்படும், ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்று ஆராய முடியாது. ஆரம்ப நிலையில் தோன்றவும் செய்யாது. பொதுவாக, புதிதாக ஒரு சூழலுக்குள் தள்ளப்படும்போது நாம் எப்படி செயல்படுவோம் என்று கணிக்க முடியாது. எந்த வித உத்தேசமும் இல்லாமல் சந்திக்கும் போது நாம் படித்த நீதிகளும், மற்றவர்களின் அனுபவங்களும்தான் நமக்கு வழிகாட்டி. ஆனால் நிறைய சமயங்களில் நாம் அவற்றை கையாளுவதில்லை. ஏனென்றால் அவற்றை உணரும்வரை நாம் அவற்றை நம்புவதில்லை.

     உதாரணமாக, சினம் காத்தல் பற்றி திருவள்ளுவர் வரிகளை படித்திருப்போம். செல்லுமிடத்து காப்
துதான் சிறப்பு, அல்லிடத்து காக்காவிட்டாலும் ஒன்றுமில்லை என்றிருப்பார். ஆனால் நாம் செல்லுமிடமாகிய நம்மை சார்ந்திருப்போர், சிறியவர்களிடம்தான் கோபத்தை காட்டுவோம். அதன் விளைவு சில வேளைகளில் துயரமாக முடியலாம். உண்மையென்னவெனில், அல்லிடத்து - நம்மை பாதிக்கக்கூடிய கட்டுப்பாட்டு விசைகளை தன் வசம் வைத்திருப்போர்- சினம் கொண்டால் நாம்தான் பாதிக்கப்படுவோம், செல்லிடத்து சினம் மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி, அவர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைத்து விடும். வெளியே சொல்லிக் கொள்வதில்லை என்றாலும் ஒவ்வொருவரிடமும் மன ஆழத்தில் நியாயபுத்தி இருக்கும். அது பிற்பாடு நம்மை கேள்வி கேட்கும். ஒரு முறை அதன் கேள்வியின் பிடியில் சிக்கி வெளிவந்த பின் செல்லிடத்து காப்பதன் அவசியம் புரியும். உண்மையென்னவெனில், உடனடியாக தராசு தட்டை தூக்கிக் கொண்டு வந்து நீதி சொல்லும் தயாரான நிலையில் மனசாட்சியை நாம் வைத்திருப்பதில்லை. சிறிய தீக்கங்குகளை உள்ளே வைத்து புகையவிடும் வித்தை மட்டும் அதற்கு நன்றாக தெரியும். அதன் விளைவாகவே , சமாதானத்திற்கு இறங்கி வருவது, " உன்னை புரிந்து கொள்ளவில்லை" என்று மன்னிப்பு கேட்பது எல்லாம் நடக்கிறது.( Every man wants to pretend as a perfect man - infront of his super -ego. ) 

    நாம் மற்றவருடைய உணர்வுகளை சரிவர கையாளுவது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாடத்தின் முதல்படி உணர்வுகளை புரிந்து கொள்ளுவது என்பது.
ஒருவருடைய முகபாவனை, செய்கை, வார்த்தைகள் ஆகியவற்றை கொண்டு அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது. அதற்கான காரணங்களை புரிந்து கொள்வது. அதன் நோக்கத்தை கண்டு கொண்டவுடன் தான் சந்தர்ப்பத்தை சரிவர கையாள முடியும். பொறுமையில்லாத பார்வை , கை விரல்களை மூடிக் கொண்டு நிற்பது, வெற்றுப்பார்வை , முகம் சிவக்க ஆரம்பித்தல், அல்லது கறுத்து போகுதல் போன்றவை நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை காட்டிவிடும். கொஞ்சம் பின்வாங்கலாம், இதமாக பேசலாம் அல்லது வேறு விசயத்தை பேசி இயல்பு நிலை வந்த உடன் திரும்பவும் ஆரம்பிக்கலாம். 

      பெரியவர்கள் எனில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மென்மையாக கையாள வேண்டும். அப்படியென்றால் என்ன? ஒரு தோல் உறிக்காத வாழைப்பழத்தி்ல் மெல்லிய ஊசியை மிக மெதுவாக செலுத்தி 0 விலிருந்து 360 டிகிரிவரை குறுக்காக சுற்றிவிடுங்கள்( ஊசி முனை மறுபக்க தோலின் வழியே வெளிவரக்கூடாது. ஊசியை வெளியே எடுத்து விட்டால் முழு பழமாகவே தெரியும். பிறகு உறித்து பார்க்கும்போது இரண்டு துண்டாக வாழைப்பழம் கிட்டும். அப்படித்தான் ஊசி குத்திய வடு தெரியாமல் பழத்தை ( பழத்திற்கே தெரியாது, பார்ப்பவர்க்கும் தெரியாது.) துண்டாக்குவது போல செயல்பட வேண்டும். அதற்கு எத்தனை கவனமாக இருக்க வேண்டும், நிறைய சந்தர்ப்பங்களை அலசி பார்க்கவேண்டும் அது மற்றவருடையதாக இருந்தாலும்.

    புத்திசாலித்தனமாக உணர்வுகளை கையாள என்ன வேண்டும்?. தன்னை அறிதல், மற்றவர்களை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுதல், மற்றவர்களுடன் சரியான தொடர்பில் இருத்தல்.
நம்முடைய புத்திசாலித்தனத்தின் அளவுகோல்கள் - ஒரு உணர்ச்சிகரமான சூழலை சமாளிப்பது,ஈகோவின் தடைகளை உணர்வது, தாழ்வு மனப்பான்மையை களைவது, சூழ் நிலைக்கு தக்க மாறிக்கொள்வது, முக்கியமாக மற்றவரின் உணர்வுகளை சரியாக கண்டுணர்வது, மற்றவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்வது ஆகியனவாகும். உங்களுடைய EIயை இணையத்தில் கிட்டும் on line testஐ பயன்படுத்தி கண்டு கொள்ளுங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை கொண்டு புத்திசாலித்தனத்தை அளவிடுகிறார்கள். இந்த பதிவு ஒரு ஆரம்பம் மட்டுமே உங்களுடைய முயற்சிகள் பயிற்சிகள் மட்டுமே இதனை முழுமை படுத்தும்.  சீரான வாழ்க்கை அமையவும் வெற்றிகரமாக முன்னேறவும் emotional intelligence மிகவும் அவசியமாகிறது. புரிந்து கொண்டு வெற்றியை கைபற்றுங்கள். 
   -  வாழ்த்துக்களுடன் சாகம்பரி.

 

ஏதோ ஒன்று உறுமியது
     சிவந்த கண் கண்டு .....
        சற்றே கவனம் கொண்டேன்!

சினம் கொண்ட எதுவோ சீறிட
     கூரிய நகம் கண்டு
         பாதுகாப்பாக மரம் ஏறினேன்!

மற்றொன்றோ தலை தூக்கி
       விஷப் பற்கள் நீட்டியது
           பத்தடி தள்ளி ஓடினேன் !

சில மிதிக்க வரும்போது
       காலடியில் சிக்காமல் 
           பாறையின் பின் ஒளிந்தேன்!

எதுமே இல்லாத நேரத்தில்
   -    ஆனந்தமாய் தேன் குடித்து
   -    வேர் உண்டு, உறங்கி களித்தேன்
   -    பயம் இல்லாதபோது
   -    சிறிது பாசம் பரிமாறினேன்

வானம், பூமி மாறாத
    கால ஓட்டத்தில் சிக்கி
ஒரு கணப் பொழுதும்
     நிம்மதி உறக்கத்தில் 
இமை மூடமுடியாத
     கட்டிடங்களின் காட்டில்
மரங்களை இழந்து
     தனித்து நிற்கிறேன்.

பார்வையில் பேச்சில்
      செயலில் தெரியாத
மனித தோல் மிருகங்கள்
      என் கவனம் சிதற்றாமல்
ஒளிய இடம் தேடவிடாமல்
     ஓடி செல்ல அவகாசம் இன்றி
நொடிக்கும் நேரத்தில்
     என் உலகத்தை கலைத்திட 
காட்டு வாழ்க்கையை
      மீண்டும் வேண்டினேன்.


       நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது, அவற்றை கையாள்வது, சரியான  செயல்பாட்டிற்காக நம்மை உந்திச்செல்வது, மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து  கொள்வது, உறவுகளுக்கு     மதிப்பு தருவது   போன்றவை முக்கியமானவையாகும். இவற்றை தெளிவாக பார்க்கலாமா? 

     விளக்க எளிதாக இருக்கும் என்பதால், இந்த பதிவில் கோபம் என்கிற உணர்வை எடுத்துக் காட்டாக கொள்கிறேன். 

     நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது . நாம் எப்போது கோபப்படுவோம், வருத்தப்படுவோம், மகிழ்ச்சியாக உணர்வோம் என்பதை புரிந்து வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அவற்றை சரிவர கையாள முடியும். பயன்படுத்துவது வேறு, கையாளுவது வேறு. கோபத்தை பயன்படுத்தி ஒரு விசயத்தை சாதித்துக் கொள்ளக்கூட முடியும், ஆனால் அது உருவாக்கிய எதிர்மறை விளைவுகளை சரி செய்ய முடியாது. கத்தியை கொலை செய்ய பயன்படுத்துவதற்கும், புற்று நோய் கட்டியை அகற்றுவதற்கும் உள்ள வித்தியாசம்தான். லாகவமாக கட்டுப்படுத்தும் தந்திரம் தெரிய வேண்டும். எல்லைகளை உணரும்போது கட்டுப்பாடும் புரிந்து விடும். ஒரு எலாஸ்டிக் நூலை அறுந்து போகாமல் இழுக்கக் கூடிய நீளம்தான் அதன் எல்லை. மீறினால் அறுந்து விடும். 

     உதாரணமாக , நம் நெருங்கிய உறவுகளிடம் கணவன்/மனைவி, மகன்/மகள் தவறு கண்டவிடத்து திருத்தும் வாய்ப்பாக - சரியான பாதைக்கு உந்திச் செல்லும்- கோபப்படலாம் - சமயத்தில் அதிர்ச்சி வைத்தியமாக கையாளலாம். அடுத்தடுத்த நிமிடங்களின் ஓட்டத்தில் கோபத்தை கரைத்துவிட வேண்டும். சற்று பொறுத்து , செய்த தவறினால் ஏற்படக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். சில சமயம் தவறுகளின் விளைவுகளை சரி செய்யவும் நாம் உதவவேண்டும். மணிக்கணக்கில் கோபத்தை இழுத்துபிடித்துக் கொண்டு இருந்தால், நம்மை மீறிய செயல்கள் வருங்காலத்தில் நடைபெற நேரிடும். கவனிக்க வேண்டியது, அப்போதைய தவறு மட்டும் அவர்களிடம் நமக்கு பிடிக்கவில்லை என்று துல்லிமாக காட்டவேண்டும். சில சமயம் ஒரேயடியாக பிடிக்காமல் போய்விட்டதோ என்று நினைத்து விடக்கூடும். தவறு செய்து சிலரிடம் சிக்கி விட்டால், நினைவு தெரிந்த நாள் முதல் நாம் செய்த தவறுகளை மறுபடியும் மெகா சைஸில் மனக்கண்முன் ஓடவிட்டு, முத்தாய்ப்பாக "நீ எதுக்குமே லாயக்கில்லை: என்று முடிப்பார்கள். எதிரிலிருப்பவர்கள், மட்டமான திரைப்படம் ஆரம்பிக்கும் முன் உறங்கிவிடுவது போல், கவனத்தை வேறு எதிலாவது திசை திருப்பி மாய உலகத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். இந்த கோபத்தினால் பயனில்லை. நமக்குத்தான் சக்தி, நேரம் அத்தனையும் விரையம். 

      சரி நெருங்கிய உறவுகள் அல்லாதவரிடம் கோபப்படலாமா? அதற்கு மிக குறுகிய எல்லை மட்டுமே உண்டு. எல்லோரிடமும் கோபப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. வெளியுலகத்தை பொறுத்தவரை ஒருவரை திருத்தும் கடமை நமக்கு குறைவு. அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டலாம். அவர்களின் தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் - நமக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள்- இருந்தால், கண்டிப்பாக பேசலாம் - வார்த்தையோ முகமோ மாறக்கூடாது. அந்த தவறினை சரி செய்ய அவருக்கு உள்ள பொறுப்பையும், தார்மீக கடமையையும் கண்டிப்பாக சொல்ல வேண்டும். தலைமை அதிகாரிக்கும் வேலை பார்ப்பவருக்கும் அப்பா மகன் உறவு நிலவுவது நல்ல முன்னேற்றத்தை தரும் என்பார்கள். மேலாண்மை கோட்பாடானது , பெண் தலைமை அதிகாரிகள் ஒரு பாலமாக நின்று கற்றத்தருவதாகவும், ஆண் அதிகாரிகள் தண்டனை தருவதிலும் வெகுமதி தருவதிலும் வேலையை கற்பிப்பதாகவும் சொல்கிறது. வீட்டிலும் இதுதானே நடைபெறுகிறது. பொதுவாக கோப வீச்சின் நீளம் எதற்காக கோபப்படுகிறோம் என்பதையும், கோபத்தின் பின் விளைவுகளையும் தெளிவாக உணர்ந்து கொண்டால் குறைந்து விடுமாம்.

        சமயத்தில் உணர்ச்சிகரமான சூழல் முடிந்து பொறுமையாக ஆராயும் போது தவறாக வெளிப்படுத்தியிருப்பது புரியும். இதேபோலவே சம்பந்தப்பட்ட மற்றவரும் நினைத்து பார்ப்பார்கள். வெகு சிலரை தவிர்த்து மற்றவர்கள் பொதுவான உணர்வுகளின் பாதையில் பயணிப்பவர்தான். அந்த மற்றவரும் நாம் புரிந்து கொண்டவராக இருந்தால் இணக்கமான தருணத்திற்காக காத்து இருக்கலாமே. பேசி தீர்த்துக்கொள்ள முடியாதா என்ன? பொதுவாக என்னிடம் குடும்ப கவுன்சிலிங்கிற்கு வருபவர்கள் கோபமாக பேச ஆரம்பித்தால், பேச விட்டு விட்டு மறு நாள் வரச்சொல்வேன். மறுபடி மறு நாளும் கொட்டித் தீர்ப்பார்கள். இப்படி சில முறை வந்து சென்றபின் நியாய தர்மங்களுடன் பேச ஆரம்பிப்பார்கள். அவர்களாகவே தன்னுடைய தவறை ஒப்புக்கொள்வார்கள். மற்றவர்கள் செயலுக்கும் நியாயம் கற்பிப்பார்கள். ஏன் அப்படி மாறிப்போகிறார்கள்? உணர்வுகளை சரிவர கையாளத் தேவையான மற்ற குணங்கள் என்னென்ன? மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம். 

உணர்வுகள் என்னும் ஆயுதம - 4

     சிலரின் அனுபவங்கள் வேறு மாதிரி இருக்கும். வெப்ப வீச்சுகளை ஏற்படுத்தாமல், தனக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தோல்வி பயத்தை உண்டு பண்ணி விடும். அவர்கள் வாழ்க்கையை நேர்மையான பார்வையில் பார்க்கமுடியாமல் சிக்கலாக்கி கொள்வதும், தவறான முடிவுகளை கையாள்வதும், மன நோய்க்கு ஆளாவதும் உண்டு. இதுவும் ஒருவகையான விளைவுதான்.

      உதாரணமாக, அலுவலகத்தில் ஒரு செயலை சரி வர முடிக்க முடியாமல் போகும்போது அதற்குரிய விளக்கத்தை தரலாம். இன்னும் கொஞ்சம் சந்தர்ப்பம் தர சொல்லலாம். இரண்டும் இல்லாமல் " அந்த வேலையை செய்யும் தகுதி எனக்கில்லை" என்று குமைவதும், மேலதிகாரியை சந்திக்க மறுத்து மட்டம் போடுவதும் மனதளவில் நம் உறுதியை குலைத்து முன்னேற்றத்தை தடுக்கும். அதைவிட கூட வேலை செய்பவர்களே நம்மை மதிக்கமாட்டார்கள். வெற்றி பெற்றவர்களை விமர்சனம் செய்து மனதளவில் தரம் குறைந்துவிடுவது உண்டு. வீட்டிலும் இப்படித்தான், நெருக்கமான உறவினர்களிடம் இது பிடிக்கும் இது பிடிக்காது என்று ஒளிவு மறைவின்றி செயல்படுவதை விடுத்து, மனதிற்குள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கொண்டு எதிலும் ஒட்டாமல் தனக்குள்ளேயே நியாயம் கற்பித்துக் கொண்டு, தியாக வாழ்வு வாழ்வதாக சாசனம் எழுதிக் கொண்டு. கூட்டுப் புழு போல் சுருண்டு கொண்டு வாழ்வது மொத்த குடும்பத்தையும் அவமானப்படுத்தும் விசயம் அல்லவா? என்றாவது ஒரு நாள் அத்தனை உள்ளக் குமுறல்களையும் கொட்டி தீர்க்கும்போது உறவுகள் கலைந்துவிடாதா? அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டதுதான், அது நாம் விரும்பிய மாற்றமாக இருக்க வேண்டுமெனில் உணர்ச்சிபூர்வமான சூழ்நிலைகளை சரிவர கையாள வேண்டுமல்லவா?


      உணர்வுகள் என்னும் ஆயுதம் என்று நான் குறிப்பிட்டதின் காரணமும் அதுதான். ஏதோ பிரச்சினை ஏற்பட்டதால்தான் , உணர்ச்சிவசப்படும் சூழலை சந்திக்கின்றோம் - பதவி உயர்வு தவறிப் போயிருக்கலாம், ஒரு வேலையை கையாள்வதில் சக ஊழியருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருக்கலாம், சொன்ன பேச்சை மகன் / மனைவி கேட்காமல் ஒரு சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம், இது எதுவுமே இல்லாமல் இன்ன காரணம் என்று சொல்லமுடியாமல் சிலருடன் உரசல்கள், முகம் திருப்பல்கள் ஏற்படலாம். நொடிக்குள் வயிற்றுக்குள் அமிலத்தை சுரக்க வைத்து இரத்த ஓட்டத்தை தலைக்கு செலுத்தி மூளை படிக்கும் முன்பே வார்த்தைகள் வெளிப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. இது போன்ற தருணங்கள் கத்தியை கையாள்வது போன்றது. அது மருத்துவர் கை கத்தி போல செயல்பட்டு வியாதியை களைந்தெறிய வேண்டும். அதைவிடுத்து கொலை வாள் போலாகி மற்றவரை குலைத்துவிடக்கூடாது. எந்த கத்தியாக இருந்தாலும் கைப்பிடியை மாற்றி கூர்முனையை பிடித்தால் நம் கையையும் இழக்க நேரிடும்.

  இப்போது தலைபிற்கு வரலாம் - emotional intelligence - உணர்வு பூர்வமான புத்திசாலித்தனம் என்று நேரிடை மொழியாக்கம் செய்யப்படுகிறது. என்னை கேட்டால், உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாள்வது என்று விளக்கம் சொல்வேன். Intelligence என்றால் தேவைப்பட்ட சமயத்தில் ஏற்கனவே பதியவைக்கப்பட்ட செய்திகளை கொண்டு செயல்படுவது ஆகும். இது கணிப்பொறி உலகின் விளக்கம். உதாரணமாக சாலையில் செல்லும்போது வேகமாக வரும் பேருந்தினை பார்த்து விலக முயற்சிப்போம். அப்படியில்லையெனில், சாமர்த்தியமாக பிரேக் போட்ட ஓட்டுனரின் " அறிவில்லையா?" என்ற கேள்வியை எதிர்கொள்ள நேரிடும். அவருக்கும் இல்லையெனில் மருத்துவரிடம் இதே கேள்விக்கு பதில் சொல்ல நேரிடும். வேகமாக விலக வேண்டும் என்று எப்படித் தோன்றியது? எப்போதோ நமக்குள் பதியவைக்கப்பட்ட கருத்துதான் செயல்பட வைக்கிறது. சரிதானே? எனவே emotional intelligence , உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு , கட்டுபடுத்துவது எப்படி என்று சொல்லலாமா? அதற்கு சில புரிந்து கொள்ளல்கள் தேவை.


     நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது, அவற்றை கையாள்வது, சரியான செயல்பாட்டிற்காக நம்மை உந்திச்செல்வது, மற்றவர்களுடைய உண்ரவுகளை புரிந்து கொள்வது, உறவுகளுக்கு மதிப்பு தருவது போன்றவை முக்கியமானவையாகும். இவற்றை இன்னும் தெளிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாமா? 

உணர்வுகள் என்னும் ஆயுதம் -3 

         இது பற்றி சற்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கிட்டதட்ட மலரினும் மெல்லிய மனதில் சொல்லப்பட்ட கருத்துகள்தான். அதற்கு அழகான தலைப்பு கொடுத்து வந்துள்ளது. EMOTIONAL INTELLIGENCE, உணர்வுபூர்வமான புத்திசாலித்தனம். நம்மை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மீது உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சூழ்நிலையில் உள்ளவர்களின் வேறுபட்ட பங்களிப்புகள் நமக்குள் சில சிந்தனைகளை தூண்டிவிடுகின்றன. என்ன நடக்கிறது என்று தெரியாத அந்த நிமிடத்து தடுமாறல்கள் ஒரு அலையை கிளப்பிவிடுகின்றன. குடும்ப சூழலோ அல்லது அலுவலகமோ நம்முடைய உணர்வு பூர்வமான வெளிப்பாடு அந்த நிமிடத்தின் செயல்பாட்டினை தன்வசப்படுத்தி, சூழ்நிலை கட்டுப்பாட்டினை குலைத்து நொடியில் நம்முடைய ஆக்கபூர்வமான திட்டங்களை கலைத்துவிடும்.

      உதாரணமாக , நம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டல். சட்டென கோபப்பட்டு நாம் பல தீர்மானங்களை அறிவிப்போம். எதிரிலிருப்பவர்க்கு பதில் சொல்லும் முனைப்பில் பல பதில் கேள்விகளை குற்றச்சாட்டல்களாக முன்வைப்போம். அலுவலகம் எனில் "இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை." என்று அறிவிப்போம். வீடு எனில் "என்னை குறை சொல்ல உனக்கு எந்த தகுதியும் கிடையாது" என்று மட்டம் தட்ட முயற்சிப்போம். அலுவலகத்தின் எதிர் நடவடிக்கையாக இன்னும் நம்மை குற்றவாளியாக்க முனைப்பு காட்டப்படும். உயர்பதவியில் இருப்பவர்கள் இதை செய்வதும் எளிது. நம்மிடம் தவறு இல்லை எனும்போது வார்த்தைகள் அக்க்னி ஏவல்களாக வெளிவரும். சரிதான், நம்மை சுற்றி இருப்பவர்கள் கூட நம் நியாயத்தை புரிந்து கொள்ளமுடியும். ஒரு தவிர்க்கமுடியாத கட்டத்தில் குற்றம் சாட்டியவர் ஒப்புக்கொள்ளும் நிலை வரும். இந்த பிரச்சினை இருவிதமாக வழிபடுத்தும். நாம் ஆர்பாட்டமாக கருத்துக்களை முன்வைத்து போராடும்போது வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தவர் ஆவோம். ஏனெனில் எதிரணியில் ஒருவரை - நமக்கு எதிராக - நாமாகவே சேர்த்துவிடுகிறோம். தோல்வியின் கங்குகள் பொத்திவைக்கப்பட்டு ஒரு பெரிய அழிவை ஏற்படுத்த காத்திருக்கும். அந்த சூழலில் நாம் வெளிப்படுத்திய எதிர்மறையான உணர்வு வெளிப்பாடுகள் - கோபமாக பேசுதல், தவறான வார்த்தை பிரயோகங்கள்- பார்வையாளர்களில் சிலரையும் எதிர்மறையாக எண்ணவைக்கும். நட்புகளை இழக்கலாம், வேலைகூட இழக்க நேரிடும் - நம் விருப்பம் இல்லாமல்.

    இதுவே குடும்ப சூழல் எனில், நம் எதிரே இருப்பவர் - இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் பங்கேற்கும்- நம் உறவினர்தான் என்று எண்ணாமல் வார்த்தைகள் வெளிப்பட்டு, புயல்வேகத்தில் அவர்களை தூக்கி எறிந்து பிரபஞ்சத்தில் தொலைத்துவிடும். பிறகு எல்லாம் முடிந்தபின் எஞ்சியிருப்பது எலும்பு மற்றும் சதையாலான ஒரு பிண்டம்தான். சில சமயம் வெறித்து பார்த்து புழுவென மாற்றும், சில வேளைகளில் கூட்டுபுழுவென மாறி ஒரு திரையிட்டு மறைந்து கொள்ளும். இதுவே நெருங்கிய உறவுகள் இல்லையெனில் மதியாதார் வாசல் மிதியாதே என்று வசனம் பேசிவிட்டு, உறவை மறுத்து துவேசம் கிளப்பிச் செல்லும். பிற்காலத்தில் நாமே சொல்லிக்கொள்வோம் " நான் நல்லாயிருக்கேன் என்று பொறாமை" . ஒருவருடைய முன்னேற்றத்தில் சந்தோசப்படாத உறவுகளுக்கு நாம் தந்த உள்ளீடுகளே காரணமாக இருக்கும். சமயத்தில், நம்மை சார்ந்தவர்கள் தந்தவற்றிகான பலனும்கூட நமக்கும் கிட்டும். இது போன்ற சிக்கல்களுக்கு காரணம் கண நேரத்தில் நாம் செயல்பட்டவிதம்தான். - வெகு சிலர் மட்டுமே இதுபோன்ற சூழலில் கட்டுப்பாடில்லாமல் செயல்பட்டுவிட்டு, பிறகு எப்பாடு பட்டாவது அந்த சிக்கலை சரிசெய்வர் - அது போன்ற தந்திரங்களை பயன்படுத்துவதில் பெரும்பாலானோருக்கு உடன்பாடு இருக்காது. . 
                                                                                                                                        -தொடரும்

- மகளுக்கான கடிதம் இடையிடயே தொடரும். அம்மா கடிதம் போட வேண்டிய தேவை அவ்வப்போதுதான் வருகிறது -சாகம்பரி.
உணர்வுகள் என்னும் ஆயுதம் -2

  


வெள்ளை மனமும் 
     முல்லை மணமுமாக
வீதியெங்கும் திரிந்த
     என் மூதாதையர்
அள்ளி அள்ளி வைத்த
     வள்ளல் கதையெல்லாம்
கொள்ளியிட்டு மறைந்தன.
     இழந்ததைத் தேடி
கோவில் வாசலில்
     முக்காடிட்டு அமர்ந்தன. 


தலையெழுத்து மாற்றம்
    தலைமுறைக்கும் மாற்றம்!
கம்பன் இளங்கோவடிகள்
   கர்வம் கொண்டு சொல்லிய
எந்தை பழந்தமிழ் கதைகள்
    மானுடம் மறையுமுன்
தானாய் மறைந்தனவோ!
    முடங்கிய மனம் சென்றது

களம் இழந்த பறவையாய்
    வான்வெளியைத் தேடி்!

ஆதி முதல் வாசம் கொண்டு
       பல சேதிகள் சுமந்து
இன்று காறி உமிழ்ந்த
      எச்சில்கள் பட்ட காற்று
சொல்லிப் போன செய்தி...
     அழித்தொழிக்கும் வித்தையில்
காலதேவனின் கறார் விதிகள்
    மனிதன் மாறினாலும் மாறாமல்
மறைந்த மானுடம் புதிதாய்
     மீண்டும் மீண்டும் பிறந்து
கொண்டேயிருக்கும் என்றது
.

---- முதியோர் இல்லத்திலிருந்து....

அன்பு குட்டிம்மாவிற்கு,

        நலமாக இருக்கிறாயா? வீட்டில் உன் கணவரும் மற்றவர்களும் நலமா? உன்னுடைய மன நலம் , உடல் நலம் நன்றாக இருக்க வேண்டுகிறேன். மன நலம் பற்றி ஏன் சொல்கிறேன் ? எல்லாம் ராதுவின் திருமணத்தில் வைத்து நடந்த விசயம் குறித்துதான் பேசுகிறேன். 

     அங்கு நீ நடந்து கொண்ட முறை என்னை ஆச்சரியப்படுத்தியது. அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் எதிர்த்து நின்று குரல் உயர்த்தி பேசுவார்கள். தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று வலியுறுத்தப் பார்ப்பார்கள். அத்தனை பேருக்கும் காட்சிப்பொருளாவது பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஒரு பிரளயத்தை எதிர்பார்த்து , நான் கூட பயந்து போனேன். ஆனால் நீ முகம் மாறாமல் மெல்லிய குரலில் பேசி, அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டாய். எத்தனை அருமையான பக்குவப்பட்ட செயல். மேற்கொண்டு பிரச்சினை செய்ய வழியில்லாமல் அமைதியை தந்தாய். வாழ்க்கையிலேயே நான் பெருமையாக நினைக்கும் நிமிடங்கள் அவை. அடி நெஞ்சின் ஆழத்தில் இது என்றென்றும் பனித்துளியென நின்று என்னை குளிர்வித்துக் கொண்டிருக்கும். எதனால் நீ மௌனபுரட்சி செய்தாய் என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. ஒருவேளை மனித மனதின் விந்தைகளுள் ஒன்றாக, நான் உன் செயலை ஏதோ ஒரு சுயலாபத்திற்காக செய்திருப்பாய் என்று முடிவெழுதிவிடுவேனோ என்று ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் அந்த நிமிடத்து பலனாக குடும்ப மரியாதை காக்கப்பட்டது. அதன் பிறகும் நீ நிதானமாக நடந்து இன்னும் உயர்ந்துவிட்டாய். அண்ணன் , அப்பாவிற்கு கூட தெரியாமல் அணைக்கப்பட்டது.

        இது போல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நம் குடும்ப கௌரவத்தை காப்பது நம் நடத்தையில்தான் உள்ளது. ஒன்றுமில்லாத விசயத்தை பெரிதுபடுத்தி பூகம்பம் உண்டாக்குவது உறவுகளுக்கிடையே விரிசலை தரும். அதை தவிர்ப்பது நம் பொறுப்புதான். ஏன் வசு அப்படி பேசினாள் என்று புரியவில்லை. திருமணமாகி இரண்டு மாதங்களில் அவள் நல்ல பெண்ணாகதான் நடந்து கொண்டாள். உன்னிடம் ஏன் அப்படி பேசினாள்?
ஒரு நிகழ்வு நடக்கும்போது அதில் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகள், குணாதிசயங்கள் ஒரு காரணியாக செயல்பட்டு நிகழ்வினை கடத்துகிறது, அது சந்தோச அலைகளையோ , கோப அலைகளையோ உண்டாக்கி மாறாத நினைவுகளை பதிவிட்டுவிடுகிறது. சில சமயம் எதுவுமே நிகழாமல் கடந்து சென்றாலும் நல்லதுதான்.

   வசு இன்னும் புதுப்பெண்தான், கண்ணம்மா. ஒரு குழந்தை வளர்ந்துவரும்போது தாயை நம்பிக்கையாக உணரும். பத்துமாத பந்தம் அல்லவா?. பிறகு தகப்பன் குரலை அடையாளம் கண்டு பாதுகாப்பாக உணரும். நல்ல அதிர்வலைகளை உணர்ந்தபின் மற்றவர்களிடம் அன்பு பாராட்டும். உணர்தல் என்றால் பழக்கம் வேண்டுமல்லாவா? திருமணம் முடிந்து வந்தபின் உன்னுடைய உடல் நிலை காரணமாக நீ வரவில்லை. வசுவும் புதுப்பெண்ணின் திரையகற்றி முதல் சந்திப்பு இதுதான். நான் ரொம்பவும் பெருமையாக அவளிடம் உன்னை பற்றி சொல்லியதில்லை. அது வீண் பெருமை பேசுவதாக ஆகிவிடும் என்று நினைத்தேன்.
பெருமை பேசுவது விற்பனை தந்திரமாக மட்டுமே நான் நினைத்ததால், உன்னை அவள் தானாகவே உணர்வதுதான் எனக்குப் பிறகான காலத்தின் தொடர்புகளுக்கு அடிப்படையாகும். அதனால்தான் உன்னிடமும் அவளுடைய குணாதிசயத்தை சொல்லவில்லை. எனவே அந்த சந்திப்பிற்காக எந்தவித ஒத்திகையும் நடத்தப்பட்டிருக்காது என்பது என் கணிப்பு. நான் கவனிக்காத ஒன்று , நாத்தனார் என்ற முகமூடி ( ஏற்கனவே தயாரிக்கப்பட்டு) உனக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்- கொஞ்சம் தொல்லைபிடித்த சாயல்கூட அதில் இருந்திருக்கலாம். எனக்குகூட அதுபோல ஒரு கொடூரமான முகமூடி இருந்திருக்கலாம், ஆனால் அவள் புதுப்பெண்ணாக இருந்ததால், அந்த முகமூடி பழகும் முறையினால் எளிதில் உடைக்கப்பட்டது. ஒரு வேளை தற்சமயம் அவளுடைய நிம்மதியான வாழ்க்கை உன்னால் பாதிக்கப்படலாம் என்ற பாட்டன் வழிக்கதைகளின் வழிகாட்டல் அவளை செயல்பட வைத்திருக்கலாம். கண்டிப்பாக ஒன்று சொல்வேன் அது விஷத்தை கக்கும் நாகத்தின் சீற்றம் அல்ல. புரியாமல் துள்ளி குதிக்கும் புள்ளிமானின் பாதுகாப்பு நடவடிக்கைதான்.

      எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திறந்த மனதுடன் நீ இருந்தாய் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. அவள் தவறாக பேசிய பின்னும் நீ " சென்றுவருகிறேன், அண்ணி " என்று விடைபெற்றதும், அமைதியாக சென்றதும் அவளை குற்ற உணர்வில் ஆழ்த்திவிட்டது. இப்போதும்
நான் உனக்காக அவளிடம் அதுவும் பேசவில்லை. அது உன் பக்கமாக பேசுவதாக தவறாக வழிகாட்டப்படும். அது பற்றி எதுவுமே பேசாத என் மௌனம் சிந்திக்க வைக்கும் என்று நம்பினேன். இரண்டு நாள் கழித்து அவளாகவே உன்னை பற்றி என்னிடம் விசாரித்தாள். என் கண்மணியை பற்றி சொல்ல எனக்குத் தெரியாதா என்ன? திரும்பவும் ஒரு நாள் கழித்து அந்த நிகழ்விற்காக வருத்தம் தெரிவிக்க விரும்புவதாக கூறினாள்.. கவனிக்க வேண்டியது என்னிடம் வருத்தம் தெரிவிக்க இல்லை, உன்னிடம் கேட்க வேண்டுகிறாள். அதாவது உனக்கும் அவளுக்குமான உறவை சீர்படுத்திக்கொள்ள விரும்புகிறாள், எனக்காக என்று இல்லாமல். இதுதான் நான் விரும்பியது. இளையவர்களுக்கிடையே எந்தவித கட்டாயமும் இல்லாமல் உறவு மேம்படவது நல்லது. அது புரிந்து கொள்ளுதலினால் மட்டுமே வரும். கை நீட்டும் குழந்தையின் கரம் பற்ற நீயும் விரும்புவாய் என்று எனக்குத் தெரியும். நாளை உன்னிடம் அலைபேசியில் பேசுவாள். புதிதாக ஆரம்பிக்கலாமா குட்டிம்மா?

உனக்கு பிடித்த அனைத்தையும் செய்து கொண்டு அடுத்த வாரம், நேரில் வருகிறேன்.
அன்புடன்,
ஒரு மகளின் மகளான அன்னை.

செல்ல மகளுக்கு,

       இங்கு அனைவரும் நலம். அங்கு அனைவரும் நலமா? உன் மாமியாரிடம் திருமண நாள் வாழ்த்துக்கள் சொன்னதாக தெரிவித்துவிடு. எப்படி தெரியும் என்கிறாயா? புதிய உறவுகளிடம் பேசும்போது பிடித்தமானவை மட்டுமல்ல அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட இனிய நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
மற்றவர்களை பற்றி வீண் பேச்சு பேசுவது தவிர்க்கப்படும். அவர்களூக்கும் நம்மிடம் மரியாதை கிட்டும். பிற்பாடு தேவையில்லாத பிரச்சைகளில் நம்மை பற்றி யாரும் பேச முடியாது. " அவங்க இதுபோல பேசியிருக்க மாட்டார்களே" என்ற பதில்தான் கிட்டும்.

   நீ உன்னை நல்லபடியாக கவனித்துக் கொள்ளவேண்டும். கண்டிப்பாக நம்மை சுற்றி இருப்பவர்கள் கவனித்துக் கொண்டாலும் ஒருவித ஜாக்கிரதை உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு மருத்துவர் ஆலோசனைபடி நடந்து கொள். மூத்த பெண்மணியான உன் மாமியாரும் சொல்வார்கள். ஆனால்
மனம், எண்ணங்கள் சம்பந்தப்பட்ட விசயம் நீதான் கவனமாக இருக்க வேண்டும. வயிற்றில் குழந்தை இருக்கும்போது பய உணர்வு இருக்கக்கூடாது. மிகவும் பதட்டமாகவும் சிறிய விசயகளுக்கெல்லாம் கவலைப்படுகிறவர்கள் - அவர்கள் தாயின் வயிற்றில் இருந்தபோதே பயத்தால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று மருத்துவம் சொல்கிறது. சற்று வயதாகும்போதே எளிதாக இரத்த அழுத்தம், பதட்டம் இவற்றிற்கு ஆளாகி விடுகிறார்கள். இன்னும் கூட பல பிரச்சினைகள் குழந்தைக்கு எதிர்காலத்தில் வரலாம். எனவே தனியாக எங்கும் செல்லாதே, இரவில் அடுத்த அறைக்கு சென்றாலும் விளக்கை போட்டுவிட்ட செல். குழந்தைகள் ஓடி விளையாடும் இடத்தில் பாதுகாப்பான தொலைவில் நில். திடீரென்று ஓசை எழுந்தால் அதிர நேரிடலாம். வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில் இவ்வளவு பார்க்கமுடியாது. அதனால் மன தைரியத்திற்காக நல்ல விசயங்களை படிக்கலாம். சிந்திக்கலாம். ஆன்மீக விசயங்களை மனதில் பதிய வைக்கலாம். வயிற்றுக் குழந்தை விழிப்புடன் உன்னுடைய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளும். சில குழந்தைகள் சமர்த்து என்பதன் அடிப்படை கருவில் இருக்கும்போதே தரப்படும் உள்ளீடுகள்தான். ஆழமாக பதிக்கப்படும் கருத்துக்கள் காலம் முழுமைக்கும் அவர்களுக்கு நாம் தரப்போகும் பாதுகாப்பு பத்திரம் - இன்றியமையாத சொத்து.

    அபிமன்யு அன்னையின் வயிற்றில் இருந்தபோது சக்கரவியூகம் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லிக்கொண்டிருந்தார். போர் முனையில் போராளிகள் எதிரிகளை அதிர் கொள்ளவும் அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கவும் சில அமைப்புகளில் நிறுத்தப்படுவார்கள். தாமரை மலர் விரிந்தது போன்ற அமைப்பு, சுருள் வடிவ சக்கர அமைப்பு, சர்ப்ப வடிவ அமைப்பு போன்றவை அவற்றில் சில. இதில் சக்கர வியூகம் என்பது மிக தந்திரமானது வட்டவடிவ அமைப்பில் நடுவேதான் எதிரியின் தலைமை வீரன் இருப்பான். சக்கர வியூகம் நகர நகர இந்த பக்கத்தில் யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. ஒரு அடிகூட முன்னேறமுடியாமல் மலைத்து நிற்க வேண்டியதுதான். இதன் அமைப்பை விவரித்து கொண்டிருந்த போது அர்சுனனின் மைந்தன் அபிமன்யும் கேட்டுக்கொண்டிருந்தான். வியூகத்தை உடைத்து உள்ளே புகும் மட்டும் கேட்டுவிட்டிருந்தவன், ஏதோ ஒரு அயர்ச்சியினால் அன்னை உறங்க ஆரம்பிக்க ஸ்ரீகிருஷ்ணர் பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் சக்கர வியூகத்திலிருந்து வெளியே வரும் வழி அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. பின்னாளில்
அர்சுனன் சக்கர்வியூகம் பற்றி சொல்லும்போது, ஏற்கனவே தெரிந்த விசயம் போல இருந்ததாம். அதனலேயே அந்த விசயம் முதலில் தெளிவான தோற்றம் காட்டி பின்னர் வரக்கூடிய தெளிவில்லாத முடிவை மறைத்தது. அதுவே அபிமன்யூவின் முடிவிற்கும் காரணமானது. உண்மையில் இது கர்ப்பிணி பெண்கள் கேட்க வேண்டிய கதையாகும். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே நிறைய விசயங்களை உள்வாங்குகிறது என்பதுதான்.

   நல்ல எண்ணங்கள் ஒரு நல்ல மகவை உனக்கு தரும். ஒரு தாய் வயிற்றுக்குழந்தைகளிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் இருக்க இதுவே காரணம். அவை கருவறையில் இருக்கும்போது வெவ்வேறு சூழ் நிலைகள் அமைந்திருக்கலாம். எல்லோரும் சொல்வதுபோல்
ஒரு குழந்தை நம் தேவையல்ல. நல்லவனாக வலம் வரப்போகும் மனிதனை தருவதுதான் முக்கியம். சின்ன விசயங்களுக்கெல்லாம் மனதை பாதிக்க விட்டோமெனில் பெரிய இழப்பு நம் குழந்தைக்கும்தான். எனவே கவனமாக இந்த பத்து மாதங்களையும் கடக்க வேண்டும்.

உன்னிடத்தில் இருக்கும் எங்கள் வீட்டுப்பெண் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள். நீட்டிகின்ற கரத்தை பற்றிக் கொண்டு உடன் வருகிறாள். மகிழ்ச்சி. மீதி அடுத்த கடித்ததில்
அன்புடன்
ஒரு மகளின் மகளான அன்னை. 6. ஒரு மகளின் மகளான அன்னை 

உயிரான சிலை ஒன்று
வடிக்க நினைத்து....
கருவிலே பிண்டம் சுமந்து,
கடவுளிடம் இரவல் வாங்கி,
உயிர் மூச்சு கொடுத்து
உலவ விட்டவள், அன்னை!
இறக்கி வைத்துவிட்டாலும்
இறக்கி வைக்க மனமில்லாமல்,
மனதில் பிரியம் சுமந்து
கடைசி மூச்சு விட்டவளை
பிரிந்தாலும் பிரியாமல்
நினைவு சுமந்து அலைகிறேன்
கண்ணீரில் கலைகிறேன்
நினைவுகளின் கர்ப்பகாலம்
எத்தனை வருடங்களோ?

அன்பு கண்மணிக்கு,
      நலமாக இருக்கிறாயா? வீட்டில் உன் கணவரும் மற்றவர்களும் நலமா? எனக்கு ஒன்றுமில்லை. வயதாகிறது அல்லவா? ஏதாவது வரத்தான் செய்யும். தலைசுற்றி விட்டது. இனி விரதங்கள் இருப்பதை தவிர்க்கச் சொல்கிறார்கள். சட்டென்று விடமுடியாது அல்லவா? யாருக்காவது கெடுதல் வந்துவிடுமோ என்று பயம் தோன்றுகிறது. ஆனால் உனக்காக விரத நாட்களையும்,  விதிமுறைகளையும் குறைத்துக் கொள்கிறேன். அங்கு நீ என்னை பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. உன் அப்பாதான் , உனக்கு தகவல் தெரிவித்து தேவையில்லாமல் ஆர்பாட்டம் செய்துவிட்டார். குடும்பத் தலைவர் , பொருளாதாரத்தை பற்றி மட்டுமே தெரிந்தவர், மற்
தெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன். திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனதால் பதட்டப்பட்டுவிட்டார்.

   போன கடிதத்தில் "இன்றைய வரவு செலவுகளை மட்டும் பார்ப்பதற்கு பெட்டிக் கடையா நடத்துகிறோம்" என்று சொல்லியிருந்தேன். அது அனுபவமிக்க கருத்து பொதிந்த வார்த்தைகள். உனக்கு புரியவில்லை என்று வேறு சொல்லி விட்டாய்.
இன்றைய அவசர யுகத்தில் முடிவுகளும் தீர்மானங்களும் அவசரமாக எடுக்கப்படுகின்றன. என்னுடைய தோழி கலையரசியின் சொந்தக்கார பெண் பெரிய வேலையில் இருக்கிறாள். திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்து விட்டது. திடீரென்று ஒரு நாள் தூக்கு போட்டு இறந்துவிட்டாள், குழம்பு வைப்பதற்காக காய் வெட்டியது வெட்டியபடி இருக்கிறது.மறு நாள் அலுவலகத்திற்கு உடுத்த சலவை செய்ய துணிகள் கொடுத்து விட்ட சில நிமிடங்களில் இப்படி முடிவெடுத்து விட்டாள். மனைவியை இழந்த துயரத்தில் இருந்தவனிடம் விசாரித்தால், குழந்தையை அம்மா வீட்டில் விட்டு வளர்க்கலாம் என்று முடிவெடுத்தது பிடிக்கவில்லையாம். " என்னை புரிந்து கொள்ளவில்லையா?" என்பதுதான் அவனிடம் அலைப்பேசியில் பேசிய கடைசி வார்த்தை. குழந்தையை பிரிய விரும்பாதவள் சிறு குழந்தையை தவிக்க விட்டு பொறுப்பில்லாமல் தற்கொலை ஏன் செய்து கொள்ளவேண்டும். அப்போதைய பிரச்சினையை மனதில் கொண்டு வாழ்நாள் முழுவதிற்கும் அப்படியேதான் நடக்கும் என்று தீர்மானிப்பது தவறில்லையா. குட்டிம்மா, காரணம் பற்றியே நான் பேசவில்லை, விளைவுகளைதான் பேசுகிறேன்.

    " நீ எனக்கு என்ன செய்து விட்டாய் ?" என்ற கேள்வி எங்கள் காலத்தில் எப்போதாவது எழும். நகை, பட்டுப்புடவை என எதையாவது கேட்டு அடம் பிடித்து வாங்கும்போது ஒரு பேச்சிற்காக வரும். கோரிக்கை நிறைவேறினாலும் இல்லாவிட்டாலும் அந்த கோபமும் காற்றில் வைத்த கற்பூரமாய் மறைந்துவிடும். ஆனால் இப்போது இந்த
கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. பொருளாதார பிரச்சினை இல்லாவிடினும், நாளைக்கொருதரம் சில சமயம் மணிக்கொருமுறைகூட பல்வேறு வடிவங்களில் கேட்கப்படுகின்றன. இதற்கு அப்போதைக்கு சமாதானமாக பதில் கிடைத்தாலும், நாளடைவில் அலுத்துப் போய்விடாதா. நமக்கு பிடித்தமான வார்த்தைகளே திரும்பத்திரும்ப கேட்கும் போது ஒருவித யந்திரத்தனம் வந்துவிடுகிறது. கேள்விகள் நாளடைவில் மனதில் எதிர்மறையான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

    நான் என்ன சொல்லுகிறேன் என்றால்,
இன்றைக்கு நம் வானில் இடி இடிக்கலாம். இருக்கட்டும் நேற்றைய வானில் நட்சத்திரம் கண்சிமிட்டியதே. ஏன் நாளைய வானில் வானவில் கூட வரலாம். ஏன் நம்முடைய வாழ்க்கையை இடி இடிப்பதுடன் முடித்துக் கொள்ளவேண்டும், கடைசியில் வான வில்லின் வர்ணஜாலங்களை பார்க்க முடியாமலே போய்விடுகிறது அல்லவா?. பெட்டிக்கடைக்காரர்தான் அன்றைய வரவுசெலவு பார்த்து லாபக்கணக்கு சொல்வார். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் வருடமுடிவில்தான் கணக்கு தயாரிக்கும். ஒரு நாள் நஷ்டம் சில நாள் கழித்து லாபமானது தெரியும். இல்லை, நீ நினைப்பதுபோல் இல்லை கண்ணம்மா. எல்லாவற்றிற்கும் தாமதம் தேவையில்லை. கர்ணன் தானம் கேட்ட ஒருவருக்கு இடது கையிலேயே கொடுத்துவிட்டான். அது தவறு என்றபோது, கர்ணன் சொன்னது என்னவெனில் " அவர் கேட்ட வெள்ளிப் பாத்திரம் என் இடது கையிலேயே இருந்தது, அதை நான் வலது கைக்கு மாற்றும் முன் தர்மம் செய்ய வேண்டும் என்ற மனம் மாறிவிடக் கூடாது என்று தோன்றியது . உடனேயே தந்துவிட்டேன்".
ஒரு நல்ல எண்ணம் தோன்றினால் உடனேயே செயல்படுத்திவிடு. அத்தைக்கு புடவை வாங்குவது, நாத்தனாரின் கைவேலைபாடினை பாராட்டுவது போன்றவை. இதுவே தவ்றான எண்ணம் எனில் சற்று தாமதப்படுத்து. சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளத் தாமதம் ஆகும். மகாபாரதப் போரில் " அசுவத்தாமன் யானை இறந்து விட்டது " என்ற வாக்கியத்தில் யானையை மெல்ல சொல்ல , சரியாக காதில் வாங்கிக்கொள்ளாத துரோணச்சாரியார் தன் மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டதாக கருதி , கவனச்சிதறல் ஏற்பட்டு உயிரை விட்டார். இத்தனைக்கும் அசுவத்தாமன் சிரஞ்சீவிகளின் ஒருவன் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. .

   உன்னை பற்றி உன் மாமியாருக்கு பெருமை. வினு கல்யாணத்தில் பார்த்தபோது சொன்னார். உன்னை ஏன் அழைத்து வரவில்லை என்றால், உடல் நிலை சரியில்லை என்கிறார். எனக்கு புரியாமல் இருக்குமா? பொதுவில் வைத்து சொல்லக்கூடாது என்று பார்க்கிறார் என்று எண்ணிக்கொண்டேன். மருத்துவரிடம் சென்று ஆலோசித்தபின் என்னிடம் சொல்வாராம். அப்புறம் நான் என் கண்மணியை பார்க்க ஓடி வந்துவிடுவேன்.

மற்றவை நேரில்
ஆசையுடன் காத்திருக்கும் அன்னை.

பி.கு: உன் அண்ணனுக்கு ஒரு பெண் பார்த்து விட்டோம். புகைப்படம் மற்ற விவரங்கள் நேரில் சொல்கிறேன். 5. ஒரு மகளின் மகளான அன்னை.

நீண்ட கிளையின்
நெடிய வீசலுக்கு
சில்லிட்ட காற்றலை
தன்னிச்சையாய் கிளம்பி
வானத்தை வளைக்க
சற்றே சோம்பல் முறித்து
நீர்குட மேகம் உருள
வள்ளல் பெருந்தகையென
விண்ணிருந்து இறங்கியது
கோடைக்கால மழை!

அழையாத விருந்தாளியால்
தலைக்கு கைக்குடை பிடித்து
யாவரும் எதையோ தேடி ஓட
எதுவோ துரத்தும் பாவனையில்
வாகனங்கள் வழி கேட்டுஅலறி
மழையினை தொலைத்து ஓட
கைவண்டி கட்டவண்டி
அத்தனயும் நிமிடத்தில்
தடம் மறைத்து நகர்ந்திட
காலை குளித்து முடித்து
விரிந்த கூந்தல் பெண்ணாக,
அழுக்கு தொலைத்து
அழகாய் தனித்து நீண்டது
மழை நேரத்து சாலை!

அன்பு செல்லத்திற்கு,

ஆசிர்வாதங்களுடன் அம்மா எழுதிக் கொண்டது. நலமாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். உன் கணவர் வீட்டில் அனைவரும் நலமா? நான் விசாரித்ததாக சொல்லவும். உன் கடிதம் கிடைத்தது. உன்னுடன் பேச நினைக்கும் போதெல்லாம் நள்ளிரவென்றலும் கூட உன் கடித்ததை எடுத்து கையில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக எழுதி இருக்கிறாய். என்னை புரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுதான் எனக்கு வேண்டியது,

    இங்கு உன் அண்ணனுக்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். உனக்குத் தெரியும் நம் இனிய குடும்பத்தில் மருமகளாக ஒரு நல்ல பெண் வரவேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எதிர்பார்ப்பு. உன் அத்தை சொல்கிறார் அதிக பெண் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டாமாம், அடிக்கடி ஏதாவது விசேசம் வந்து விடுமாம். வந்தால் என்ன விசேசங்களில் நம் பங்களிப்பு மிக முக்கியம்தானே, அது பணமாகவும் நல்ல மனமாகவும் இருக்க வேண்டும். என்னை பொறுத்த வரை நிறைய பெண்களுடன் வளர்ந்தால் பொறுப்பும் தானாகவே தன் கடமைகளை செய்யும் பக்குவமும் இருக்கும் என நம்புகிறேன். சகோதரிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் அதே சமயத்தில் புகுந்த வீட்டின் மேன்மையையும் பாராட்டுவார்கள்.

   அதேபோல ஒரு பெண்ணாக இருக்கும் வீட்டிலும் பெண் எடுக்க வேண்டாமாம். செல்லமாக வளர்ந்து இருப்பாள் , அவளை தன்னருகில் வைத்துக் கொள்ள பிறந்த வீட்டிலும் விரும்புவார்களாம், சிறிய விசயங்கள் பெரிது படுத்தப்பட்டுவிடுமாம். நீ அப்படியா இருக்கிறாய்? இதெல்லாம் வளர்ப்பு சம்பந்தப்பட்ட விசயம் அல்லவா?

      அப்புறம் அம்மா இல்லாத வீட்டில் பெண்ணேடுக்க வேண்டாமாம் , பிற்பாடு பிரசவம் என்று வந்துவிட்டால் வைத்துப்பார்த்துக் கொள்ள ஆள் கிடையாதாம். அவள் மேல் நான் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ள மாட்டேனா? அட, மருமகள் வரும் முன்பேயே பாசத்தை பார் என்கிறாயா? என் போலவே அவளும் வாழ வரும் பெண்ணல்லவா? இப்படியெல்லாம் தங்கத்தை உரசுவது போல உரசினால் உறவு ஒட்டுமா?

     நீ இந்த வீட்டுப் பெண்ணாக பிறந்தவள். தானாகவே எல்லோருடைய பிரியமும் கிட்டியிருக்கும். இங்கே வரும்போதெல்லாம் உன் உரிமை கொஞ்சல்கள் அதிகரிக்கும். ஆனால் நான் வேறு வீட்டிலிருந்து வந்தவள். ஒரு மங்கலமான நாளில் கணவன் கை பிடித்து இங்கு வருவதுடன் இது என் வீடாகி விடவில்லை. பெரியோர் புரிந்து கொள்ளவும், சிறியவர்கள் மதிப்பை பெறவும், சம வயதுடையோர் தோழமை பெறவும் பல சந்தர்ப்பங்கள் தேவைப்பட்டன. பயிற்றுவித்த அத்தனை நல்ல குணங்களும் சமயத்தில் எனக்கு உதவி என்னை நற்பெயர் எடுக்க வைத்தன.
கூட்டுக் குடும்பத்தில் நல்ல பெயரோ கெட்ட பெயரோ அழுத்தமாக கிட்டி விடும். சிக்கலான தருணத்தில் இவை யாராலாவது நினைவு கூறப்பட்டு நம்மை மறுபடியும் எடை போட்டு பார்க்கும். பிரச்சினையை சரியாக் கையாண்டு வென்று விட்டோமெனில், அன்பான குரலில் புதுப்புது பதவிகளில் அழைக்கப்படும் மகிழ்ச்சி இருக்கிறதே அதுதான் உண்மையானது. இது போன்ற எந்தவித திடீர் உற்சாகமும் தனித்து இருப்பதில் கிட்டாது. என் வாழ்க்கை என் முடிவுகள் என்று ஒரு வித கைப்புணர்வு வந்துவிடும். புகுந்த வீட்டில் வேறு வேறு சந்தர்ப்பத்தில் என்னை ஒவ்வொருவரும் ஒப்புக்கொண்ட பொழுது இனிய பரிசுகள் எனக்கு தந்து வாழ்த்துவது உன் அப்பாவின் பழக்கம். இது போன்ற அனுசரனை நம்மை எந்த சூழலையும் சமாளிக்க வைத்துவிடாதா?.

    பெண்ணெடுக்கும் போது நல்ல குடும்பமாக இருந்தால் போதுமானது என்று நினைக்கிறேன். பிறகு உனக்கும் நாத்தனார் பதவி கிடைக்கும். நாத்தனார் என்று சொல்லும்போதுதான் நினைவிற்கு வருகிறது, வசந்தா சித்தியின் பெண் கௌசியின் புகுந்த வீட்டில் அவள் நாத்தனார் ஊரிலிருந்து வந்தாலே கெடுபிடிதானாம். இவள் அவளுடன் மல்லுகட்டி கெட்டபெயர் வாங்கிகொண்டுவிட்டாள். சில சமயம் க
ணவன் வீட்டில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக பிறந்த வீட்டில் கொஞ்சம் அதிக செல்லம் கொஞ்சுவார்கள் - அதிகளம்கூட செய்வார்கள். ஒரு கோடைக்கால (வெக்கையுடன் கூடிய விடுமுறை) விடுமுறைபோல அதை அனுபவிக்க வேண்டும். வீட்டுப் பெண்களை நாம் மதிக்கப் பழகும்போது வீட்டில் இருக்கும் மற்றவர்களும் நம்மை தவறாக புரிந்து கொள்ளமாட்டார்கள். இத்தனை வருடம் வளர்ந்த வளர்த்த பாசத்தை விட்டு விட்டு மனைவி பக்கம் ஆண்கள் கட்சி தாவி விட வேண்டும் என்று விரும்பினால் நம்மை விட்டு வேறு பக்கம் தாவ எவ்வளவு நேரம் ஆகும்? இதையெல்லாம் அவளுக்கு எடுத்து சொல்லி அனுப்பினோம். உனக்கும் புரியும் என்று நினைக்கிறேன். நீ அப்படியில்லை என்றாலும் ஒரு சமாதானமாக இதை குறிப்பிடுகிறேன்.

   
இன்றைய வரவு செலவுகளை மட்டும் பார்ப்பதற்கு பெட்டிக் கடையா நடத்துகிறோம். பொறுமையான புரிந்து கொள்ளல்கள் மட்டுமே உறவுகளின் உறுதி பத்திரமாகும். எல்லாவற்றிற்கும் அடிப்படையான அன்பு சரியான பாதையில் நம்மை கொண்டு செல்லும். இந்த முறை மருமகள் புராணமாகி விட்டது, பரவாயில்லை இது நம் இருவருக்குமே பொருந்தும் நிலைதானே. அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.

ஒரு நற் செய்திக்காக காத்திருக்கும் அம்மா.4..ஒரு மகளின் மகளான அன்னை. 

            மகிழம்பூச்சரத்தில் 100வது பதிவு. பெருமைபட்டுக்கொள்ள இந்த பதிவு அல்ல. பதிவுலகத்திற்கு   நான்   வந்த  நோக்கம் , வழியெங்கும் நான் கண்ட உண்மைகள் கை குலுக்கிக் கொண்ட உன்னத நண்பர்கள் இவற்றை பற்றியெல்லாம் கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன். 

         பொதுவாகவே நம் சமுதாயத்தில் குறைந்து வருகின்ற மனிதாபிமானத்தினால் பாதிக்கப்படுபவர்கள் முதியோரும், குழந்தைகளும்தான். அனாதரவான குழந்தைகள் மீது செலுத்தும் கனிவு பார்வைகள் முதியோரிடம் இல்லை என்ற கவலை எனக்குண்டு. எப்படி ஒரு உயிரை வரவேற்று வாழவைக்கிறோமோ அது போலவே ஒரு உயிரையும் கடைசி நாள் வரை காப்பாற்றி நல்லபடியாக அனுப்பி வைப்பது மனித சமுதாயத்தின் கடமை என்று நினைத்தேன். அப்படியில்லாத முதியோருடைய வாழ்வியல் சிக்கல்களிடம் சமுதாயத்தின் பார்வையை திருப்ப விரும்பினேன். சில சமயம் personality development வகுப்பில் என் மாணவர்களிடம் எடுத்து சொல்வேன். இன்னும் பரவலாக செய்ய வேண்டும் என்று விரும்பி ஆரம்பித்தது இந்த வலைப்பூ. இந்த ஆரம்பத்திற்காக என் மகன் அன்னை பூமி பதிவர் ராகவிற்கு நன்றி. என் எழுத்துக்களின் முதல் ரசிகர் என் கணவர், அழகிய தமிழ் சொற்களை தெரிந்து கொண்டதாக சொல்லும் என் இரண்டாவது மகன் சிவாவிற்கும் நன்றி. மற்ற அன்னை பூமி ப்ளாக்கர் ப்ரணவன் ஆச்சரியமான மகிழ்ச்சி கலந்த பார்வைகளுக்கு "எப்படிம்மா எழுதுறீங்க?" நன்றிகள்.

என்னுடைய முதல் கவிதைக்கு வெளி உலக ஆதரவாக முதல் பாராட்டு தந்த திரு.முல்லை அமுதன்.-  ஒரு வாழ்த்து இன்று நூற்றுக்கணக்கில் பெருகியிருக்கிறது. அப்போது சொல்லாத நன்றி இப்போது தெரிவிக்கிறேன். நன்றி சார்.

வலைப்பதிவர்களில் ஆரம்பத்தில் முதல் முறையாக வாழ்த்துக்கள் தெரிவித்த சென்னை பித்தன் , மதுரை சரவணன்  ஆகியோருக்கு என் நன்றிகள். தொடர் பதிவை வாழ்த்தி கட்டுரை எழுத ஊக்குவித்த பதிவர் ஆர்.கே. சதீஷ்குமார்.  அவர்களுக்கு நன்றி.

கவிதைகளுக்கு பாரட்டு தெரிவித்து ஊக்குவித்த கவிதை வீதி சௌந்தருக்கும், , பதிவர் வேடந்தாங்கல் கருனுக்கும  , பதிவர் நாஞ்சில் மனோ  அவர்களுக்கும்    நன்றிகள்.

என்னுடைய மதிப்பிற்குரிய சக பதிவர்  திரு.எல்.கே ,  இவரின் கவனமான கருத்துரைகள் உலகத்தின் பார்வையில் என்னுடைய கட்டுரைகளை படிக்கவைத்தன . நிறைய P.V வந்ததும் இதன பிறகே. நன்றி சார்.

ரொம்ப சென்சிடிவான கட்டுரைகள் எழுதி , என்னுடைய நோக்கத்தை -இனிய இல்லறம்- வேறு வகையில் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் (வயதில் சிறிய) சகோதரர் திரு. சண்முகவேல , அவர்களுக்கு நன்றிகள்

ஃபாலோவர் ஆன நாள் முதல் கிட்டதட்ட எல்லா பதிவுகளுக்கும் கருத்துரையிட்டு ஊக்குவித்துக்கொண்டிருக்கும் சக பெண் பதிவர். இராஜராஜேஸ்வரி, அவர்களுக்கும், நல்ல கருத்துரைகளை பதிவு செய்யும் கீத மஞ்சரி  கீதாவிற்கு ,  கீதா6 ,  திருமதி.ஸ்ரீதர் க்கும்     என் நன்றிகள்

தன்னுடைய கருத்துக்களை ஒளிவு மறைவில்லாமல் ஆர்வமாக சொல்லும் அருமை மகளாக நான் கருதும் ராஜிக்கு என் நன்றிகள்.

மிக ஆர்வமாக தங்களுடைய  பங்களிப்பினை செலுத்தி உற்சாகப்படுத்து சக மதுரை பதிவர்கள் தமிழ் வாசி பிரகாஷ் ,  ரமணி சார் அவர்களுக்கும்
 நன்றிகள். 

 கருத்துரைகள் மூலம் இந்த வலைப்பூவை மதிப்பு மிக்கதாக ஆக்கும் மதிப்பிற்குரிய ஐயா வை. கோபால கிருஷ்ணன், வலைச்சரம் ஆசிரியர் சீனா ஐயா அவர்களுக்கு நன்றிகள். 

தமிழ்தோட்ட நண்பர்கள் யூஜின், சிசு , அரசன், ரஜெப்டீன், அரொனி, ப்ரஷா, நிலாமதி, திரு.ராமனாதன், கவிக்காதலன், கவிதைகள் அனைவருக்கும் நன்றிகள். 

மேலும் பதிவர்கள் நா. மணிவண்ணன, VELU.G  ராஜராஜராஜன்,, ஆரூர்.மூணா. செந்திலு, நையாண்டி மேளம் , பாட்டு ரசிகன்  ,ஜீவன் சிவம்  , ரங்கன், உழவன் , ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி  , அவர்கள் உண்மைகள்   சக பெண்பதிவர்கள் முத்து லெட்சுமி ,  லட்சுமி மேடம் , மாலதி , விஜி மேடம்  அனைவருக்கும் நன்றிகள்.
 
மற்றும் மனசே மனசே, தனிக்காட்டு ராஜா, திரு.சங்கவி, திரு.பாரத் பாரதி, திரு.திகழ், திரு.விஷ்ணு, திரு.அல்ஃபோன்ஸ் செல்வராஜ், திரு.மனோ,திரு அசோக் ஆகியவர்களுக்கும் என் நன்றிகள்.

இன்றுடன் நூறு இனி எத்தனை என்று தெரியாது, ஆனால் அத்தனையிலும் மகிழம்பூச்சரத்தின் நோக்கம் மாறாது , இன்னும் தெளிவான கருத்துக்களுடன் உங்களுடன் பதிவுலகில் என் காலடித்தடங்களும் தொடரும். நன்றி.