மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

     சிலரின் அனுபவங்கள் வேறு மாதிரி இருக்கும். வெப்ப வீச்சுகளை ஏற்படுத்தாமல், தனக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தோல்வி பயத்தை உண்டு பண்ணி விடும். அவர்கள் வாழ்க்கையை நேர்மையான பார்வையில் பார்க்கமுடியாமல் சிக்கலாக்கி கொள்வதும், தவறான முடிவுகளை கையாள்வதும், மன நோய்க்கு ஆளாவதும் உண்டு. இதுவும் ஒருவகையான விளைவுதான்.

      உதாரணமாக, அலுவலகத்தில் ஒரு செயலை சரி வர முடிக்க முடியாமல் போகும்போது அதற்குரிய விளக்கத்தை தரலாம். இன்னும் கொஞ்சம் சந்தர்ப்பம் தர சொல்லலாம். இரண்டும் இல்லாமல் " அந்த வேலையை செய்யும் தகுதி எனக்கில்லை" என்று குமைவதும், மேலதிகாரியை சந்திக்க மறுத்து மட்டம் போடுவதும் மனதளவில் நம் உறுதியை குலைத்து முன்னேற்றத்தை தடுக்கும். அதைவிட கூட வேலை செய்பவர்களே நம்மை மதிக்கமாட்டார்கள். வெற்றி பெற்றவர்களை விமர்சனம் செய்து மனதளவில் தரம் குறைந்துவிடுவது உண்டு. வீட்டிலும் இப்படித்தான், நெருக்கமான உறவினர்களிடம் இது பிடிக்கும் இது பிடிக்காது என்று ஒளிவு மறைவின்றி செயல்படுவதை விடுத்து, மனதிற்குள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கொண்டு எதிலும் ஒட்டாமல் தனக்குள்ளேயே நியாயம் கற்பித்துக் கொண்டு, தியாக வாழ்வு வாழ்வதாக சாசனம் எழுதிக் கொண்டு. கூட்டுப் புழு போல் சுருண்டு கொண்டு வாழ்வது மொத்த குடும்பத்தையும் அவமானப்படுத்தும் விசயம் அல்லவா? என்றாவது ஒரு நாள் அத்தனை உள்ளக் குமுறல்களையும் கொட்டி தீர்க்கும்போது உறவுகள் கலைந்துவிடாதா? அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டதுதான், அது நாம் விரும்பிய மாற்றமாக இருக்க வேண்டுமெனில் உணர்ச்சிபூர்வமான சூழ்நிலைகளை சரிவர கையாள வேண்டுமல்லவா?


      உணர்வுகள் என்னும் ஆயுதம் என்று நான் குறிப்பிட்டதின் காரணமும் அதுதான். ஏதோ பிரச்சினை ஏற்பட்டதால்தான் , உணர்ச்சிவசப்படும் சூழலை சந்திக்கின்றோம் - பதவி உயர்வு தவறிப் போயிருக்கலாம், ஒரு வேலையை கையாள்வதில் சக ஊழியருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருக்கலாம், சொன்ன பேச்சை மகன் / மனைவி கேட்காமல் ஒரு சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம், இது எதுவுமே இல்லாமல் இன்ன காரணம் என்று சொல்லமுடியாமல் சிலருடன் உரசல்கள், முகம் திருப்பல்கள் ஏற்படலாம். நொடிக்குள் வயிற்றுக்குள் அமிலத்தை சுரக்க வைத்து இரத்த ஓட்டத்தை தலைக்கு செலுத்தி மூளை படிக்கும் முன்பே வார்த்தைகள் வெளிப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. இது போன்ற தருணங்கள் கத்தியை கையாள்வது போன்றது. அது மருத்துவர் கை கத்தி போல செயல்பட்டு வியாதியை களைந்தெறிய வேண்டும். அதைவிடுத்து கொலை வாள் போலாகி மற்றவரை குலைத்துவிடக்கூடாது. எந்த கத்தியாக இருந்தாலும் கைப்பிடியை மாற்றி கூர்முனையை பிடித்தால் நம் கையையும் இழக்க நேரிடும்.

  இப்போது தலைபிற்கு வரலாம் - emotional intelligence - உணர்வு பூர்வமான புத்திசாலித்தனம் என்று நேரிடை மொழியாக்கம் செய்யப்படுகிறது. என்னை கேட்டால், உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாள்வது என்று விளக்கம் சொல்வேன். Intelligence என்றால் தேவைப்பட்ட சமயத்தில் ஏற்கனவே பதியவைக்கப்பட்ட செய்திகளை கொண்டு செயல்படுவது ஆகும். இது கணிப்பொறி உலகின் விளக்கம். உதாரணமாக சாலையில் செல்லும்போது வேகமாக வரும் பேருந்தினை பார்த்து விலக முயற்சிப்போம். அப்படியில்லையெனில், சாமர்த்தியமாக பிரேக் போட்ட ஓட்டுனரின் " அறிவில்லையா?" என்ற கேள்வியை எதிர்கொள்ள நேரிடும். அவருக்கும் இல்லையெனில் மருத்துவரிடம் இதே கேள்விக்கு பதில் சொல்ல நேரிடும். வேகமாக விலக வேண்டும் என்று எப்படித் தோன்றியது? எப்போதோ நமக்குள் பதியவைக்கப்பட்ட கருத்துதான் செயல்பட வைக்கிறது. சரிதானே? எனவே emotional intelligence , உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு , கட்டுபடுத்துவது எப்படி என்று சொல்லலாமா? அதற்கு சில புரிந்து கொள்ளல்கள் தேவை.


     நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது, அவற்றை கையாள்வது, சரியான செயல்பாட்டிற்காக நம்மை உந்திச்செல்வது, மற்றவர்களுடைய உண்ரவுகளை புரிந்து கொள்வது, உறவுகளுக்கு மதிப்பு தருவது போன்றவை முக்கியமானவையாகும். இவற்றை இன்னும் தெளிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாமா? 

உணர்வுகள் என்னும் ஆயுதம் -3 

16 comments:

சிறப்பாக செல்கிறது.வாழ்த்துக்கள்.

உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது கலை

நல்ல தொடர்... அடுத்தது எப்போ?

நல்ல தொடர் பதிவு மிகவும் அருமையாக செல்கிறது. இதற்காக உங்களுக்கு அவார்டு தரலாம். ஆனால் அவார்டு தரும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை அதனால் எனது வாழ்த்துகளையே உங்களுக்கு அவார்டாக தருகிறேன்.

Note : உங்கள் பதிவுகளையெல்லாம் நான் தொடர்ந்து படித்து வருகிறேன். நேரமின்மை என்ற காரணத்தால் சில நேரங்களில் பதில் இடமுடியவில்லை மன்னிக்கவும் ஆனால் எனது ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு தோழியே சாகம்பரி

அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டதுதான், அது நாம் விரும்பிய மாற்றமாக இருக்க வேண்டுமெனில் உணர்ச்சிபூர்வமான சூழ்நிலைகளை சரிவர கையாள வேண்டுமல்லவா?//
அருமை!அருமை!!

//நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது, அவற்றை கையாள்வது, சரியான செயல்பாட்டிற்காக நம்மை உந்திச்செல்வது, மற்றவர்களுடைய உண்ரவுகளை புரிந்து கொள்வது, உறவுகளுக்கு மதிப்பு தருவது போன்றவை முக்கியமானவையாகும்//


//எந்த கத்தியாக இருந்தாலும் கைப்பிடியை மாற்றி கூர்முனையை பிடித்தால் நம் கையையும் இழக்க நேரிடும்.//

வாழ்க்கைக்கு மிக முக்கியமான அறிவுரைகளை அழகாக எடுத்துச்சொல்லுகிறது இந்தப்பதிவு.

பாராட்டுக்கள்.

//சிறப்பாக செல்கிறது.வாழ்த்துக்கள்.//நன்றி திரு.சண்முகவேல்

கலை இப்போது கல்வியாகிவிட்டது எல்.கே சார். MNC நிறுவனங்களில் இதற்கான வகுப்புகள் எடுக்கிறார்கள்.

தயாராயிட்டே இருக்கு நன்றி திரு.பிரகாஷ்

எனது ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு தோழியே சாகம்பரி

//ஆதரவிற்கு நன்றி.

நன்றி இராஜராஜேஸ்வரி

//வாழ்க்கைக்கு மிக முக்கியமான அறிவுரைகளை அழகாக எடுத்துச்சொல்லுகிறது இந்தப்பதிவு.

பாராட்டுக்கள்.// பாராட்டிற்கு நன்றி சார்.

நல்ல பதிவு, தொடருங்கள்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.ரமேஷ்.

உங்கள் பதிவுகள் என்னை செதுக்கி கொள்ள உபயோகமா இருக்கு மிக்க நன்றி...!!

தேவைப்படுவோரிடம் இதைவிட அழகாக கொண்டு சேர்ப்பீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன். நன்றி திரு.மனோ.