மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

அன்பு செல்லத்திற்கு,

ஆசிர்வாதங்களுடன் அம்மா எழுதிக் கொண்டது. நலமாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். உன் கணவர் வீட்டில் அனைவரும் நலமா? நான் விசாரித்ததாக சொல்லவும். உன் கடிதம் கிடைத்தது. உன்னுடன் பேச நினைக்கும் போதெல்லாம் நள்ளிரவென்றலும் கூட உன் கடித்ததை எடுத்து கையில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக எழுதி இருக்கிறாய். என்னை புரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுதான் எனக்கு வேண்டியது,

    இங்கு உன் அண்ணனுக்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். உனக்குத் தெரியும் நம் இனிய குடும்பத்தில் மருமகளாக ஒரு நல்ல பெண் வரவேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எதிர்பார்ப்பு. உன் அத்தை சொல்கிறார் அதிக பெண் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டாமாம், அடிக்கடி ஏதாவது விசேசம் வந்து விடுமாம். வந்தால் என்ன விசேசங்களில் நம் பங்களிப்பு மிக முக்கியம்தானே, அது பணமாகவும் நல்ல மனமாகவும் இருக்க வேண்டும். என்னை பொறுத்த வரை நிறைய பெண்களுடன் வளர்ந்தால் பொறுப்பும் தானாகவே தன் கடமைகளை செய்யும் பக்குவமும் இருக்கும் என நம்புகிறேன். சகோதரிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் அதே சமயத்தில் புகுந்த வீட்டின் மேன்மையையும் பாராட்டுவார்கள்.

   அதேபோல ஒரு பெண்ணாக இருக்கும் வீட்டிலும் பெண் எடுக்க வேண்டாமாம். செல்லமாக வளர்ந்து இருப்பாள் , அவளை தன்னருகில் வைத்துக் கொள்ள பிறந்த வீட்டிலும் விரும்புவார்களாம், சிறிய விசயங்கள் பெரிது படுத்தப்பட்டுவிடுமாம். நீ அப்படியா இருக்கிறாய்? இதெல்லாம் வளர்ப்பு சம்பந்தப்பட்ட விசயம் அல்லவா?

      அப்புறம் அம்மா இல்லாத வீட்டில் பெண்ணேடுக்க வேண்டாமாம் , பிற்பாடு பிரசவம் என்று வந்துவிட்டால் வைத்துப்பார்த்துக் கொள்ள ஆள் கிடையாதாம். அவள் மேல் நான் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ள மாட்டேனா? அட, மருமகள் வரும் முன்பேயே பாசத்தை பார் என்கிறாயா? என் போலவே அவளும் வாழ வரும் பெண்ணல்லவா? இப்படியெல்லாம் தங்கத்தை உரசுவது போல உரசினால் உறவு ஒட்டுமா?

     நீ இந்த வீட்டுப் பெண்ணாக பிறந்தவள். தானாகவே எல்லோருடைய பிரியமும் கிட்டியிருக்கும். இங்கே வரும்போதெல்லாம் உன் உரிமை கொஞ்சல்கள் அதிகரிக்கும். ஆனால் நான் வேறு வீட்டிலிருந்து வந்தவள். ஒரு மங்கலமான நாளில் கணவன் கை பிடித்து இங்கு வருவதுடன் இது என் வீடாகி விடவில்லை. பெரியோர் புரிந்து கொள்ளவும், சிறியவர்கள் மதிப்பை பெறவும், சம வயதுடையோர் தோழமை பெறவும் பல சந்தர்ப்பங்கள் தேவைப்பட்டன. பயிற்றுவித்த அத்தனை நல்ல குணங்களும் சமயத்தில் எனக்கு உதவி என்னை நற்பெயர் எடுக்க வைத்தன.
கூட்டுக் குடும்பத்தில் நல்ல பெயரோ கெட்ட பெயரோ அழுத்தமாக கிட்டி விடும். சிக்கலான தருணத்தில் இவை யாராலாவது நினைவு கூறப்பட்டு நம்மை மறுபடியும் எடை போட்டு பார்க்கும். பிரச்சினையை சரியாக் கையாண்டு வென்று விட்டோமெனில், அன்பான குரலில் புதுப்புது பதவிகளில் அழைக்கப்படும் மகிழ்ச்சி இருக்கிறதே அதுதான் உண்மையானது. இது போன்ற எந்தவித திடீர் உற்சாகமும் தனித்து இருப்பதில் கிட்டாது. என் வாழ்க்கை என் முடிவுகள் என்று ஒரு வித கைப்புணர்வு வந்துவிடும். புகுந்த வீட்டில் வேறு வேறு சந்தர்ப்பத்தில் என்னை ஒவ்வொருவரும் ஒப்புக்கொண்ட பொழுது இனிய பரிசுகள் எனக்கு தந்து வாழ்த்துவது உன் அப்பாவின் பழக்கம். இது போன்ற அனுசரனை நம்மை எந்த சூழலையும் சமாளிக்க வைத்துவிடாதா?.

    பெண்ணெடுக்கும் போது நல்ல குடும்பமாக இருந்தால் போதுமானது என்று நினைக்கிறேன். பிறகு உனக்கும் நாத்தனார் பதவி கிடைக்கும். நாத்தனார் என்று சொல்லும்போதுதான் நினைவிற்கு வருகிறது, வசந்தா சித்தியின் பெண் கௌசியின் புகுந்த வீட்டில் அவள் நாத்தனார் ஊரிலிருந்து வந்தாலே கெடுபிடிதானாம். இவள் அவளுடன் மல்லுகட்டி கெட்டபெயர் வாங்கிகொண்டுவிட்டாள். சில சமயம் க
ணவன் வீட்டில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக பிறந்த வீட்டில் கொஞ்சம் அதிக செல்லம் கொஞ்சுவார்கள் - அதிகளம்கூட செய்வார்கள். ஒரு கோடைக்கால (வெக்கையுடன் கூடிய விடுமுறை) விடுமுறைபோல அதை அனுபவிக்க வேண்டும். வீட்டுப் பெண்களை நாம் மதிக்கப் பழகும்போது வீட்டில் இருக்கும் மற்றவர்களும் நம்மை தவறாக புரிந்து கொள்ளமாட்டார்கள். இத்தனை வருடம் வளர்ந்த வளர்த்த பாசத்தை விட்டு விட்டு மனைவி பக்கம் ஆண்கள் கட்சி தாவி விட வேண்டும் என்று விரும்பினால் நம்மை விட்டு வேறு பக்கம் தாவ எவ்வளவு நேரம் ஆகும்? இதையெல்லாம் அவளுக்கு எடுத்து சொல்லி அனுப்பினோம். உனக்கும் புரியும் என்று நினைக்கிறேன். நீ அப்படியில்லை என்றாலும் ஒரு சமாதானமாக இதை குறிப்பிடுகிறேன்.

   
இன்றைய வரவு செலவுகளை மட்டும் பார்ப்பதற்கு பெட்டிக் கடையா நடத்துகிறோம். பொறுமையான புரிந்து கொள்ளல்கள் மட்டுமே உறவுகளின் உறுதி பத்திரமாகும். எல்லாவற்றிற்கும் அடிப்படையான அன்பு சரியான பாதையில் நம்மை கொண்டு செல்லும். இந்த முறை மருமகள் புராணமாகி விட்டது, பரவாயில்லை இது நம் இருவருக்குமே பொருந்தும் நிலைதானே. அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.

ஒரு நற் செய்திக்காக காத்திருக்கும் அம்மா.



4..ஒரு மகளின் மகளான அன்னை. 

18 comments:

//பொறுமையான புரிந்து கொள்ளல்கள் மட்டுமே உறவுகளின் உறுதி பத்திரமாகும். எல்லாவற்றிற்கும் அடிப்படையான அன்பு சரியான பாதையில் நம்மை கொண்டு செல்லும். //

//ஒரு நற் செய்திக்காக காத்திருக்கும் அம்மா.//

கடிதம் மிகவும் நன்றாக யோசித்து அனுபவத்தை அறிவுரையாக்கி எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள்.

Aha!!
Very fine writings.
viji

உங்கள் கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை போதிக்கின்றன. கடிதங்கள் தொடரட்டும் சாகம்பரி

கணவன் கை பிடித்து இங்கு வந்தவுடன்இது என் வீடாகி விடவில்லை
இந்த சொற்றொடரையும் கூட அடிக்கோடிட்டு இருக்கலாம்
அருமையான உணர்வுபூர்வமான அனைவரும் அவசியம்
படிக்கவேண்டிய கடிதங்கள்
மிகச் சிறந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அருமையான கருத்துகள் கடிதத்தில்..

கடிதம் படிப்பது போலவே இல்லை. பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது போல இருக்கு. மிக மிக அருமை

பொறுமையான புரிந்து கொள்ளல்கள் மட்டுமே உறவுகளின் உறுதி பத்திரமாகும். உன்மையான வரிகள் அம்மா. . . புரிதல் வந்துவிட்ட இடத்தில் பூகம்பங்களுக்கு வழியில்லை. . .

அனுபவம் என்பது என்னிடம் கௌன்சிலிங்கிற்காக வருபவர்களிடம் பேசியதுதான் சார். மற்றபடி பெண்ணை வளர்த்து கட்டி கொடுத்து வாழ்வரசியாக்கி பார்த்த கொடுப்பினை எனக்கு இல்லை சார். அதனாலேயே வயதில் சிறிய பெண்கள் என்னிடம் பேசினால் மகள் என்று நினைத்து பழகுவேன். அம்மா மாதிரி என்று சொல்வதில் மகிழ்ந்து போவேன். பாரட்டிற்கு நன்றி சார்.

//Very fine writings. //
அட , அருமையாக பாரட்டுகிறீர்களே. நன்றி விஜி மேடம்.

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.எல்.கே.

நீங்கள் சொன்ன பிறகுதான் கவனித்தேன். உண்மைதான். வாழ்த்துக்களுக்கு நன்றி சார்.

//புதுகைத் தென்றல் said...

கடிதம் படிப்பது போலவே இல்லை. பக்கத்தில் உட்கார்ந்து பேசுவது போல இருக்கு. மிக மிக அருமை//
அப்படியா இருக்கிறது. கடிதம் என்பது படிப்பவர்களுடன் ஒருவித பிணைப்பை ஏற்படுத்தும் இலக்கியம்தானே. உங்களுடைய பாரட்டிற்கு நன்றி.

இந்த வயதிலேயே புரிந்து கொண்டது மகிழ்ச்சி. இந்த புரிதல் நம்மை சுற்றி இருக்கும் உறவுகளையும் மகிழ்விக்கும். நன்றி பிரணவன்.

//அமைதிச்சாரல் said...

அருமையான கருத்துகள் கடிதத்தில்..//பாராட்டிற்கு நன்றி.

உங்கள் ப்ளாக்கிற்கு இப்ப தான் வருகிறேன்,அருமையான பகிர்வுகள்.

வணக்கம் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஆசியா மேடம்.

என்ன அழகாக சொல்ல வந்ததை சுவை கூட்டி சொல்லியுலீர்கள் .கவுன்சிலிங் கொடுப்பீர்களா நல்லது மதுரையில் எந்த கல்லூரியில் பணியற்றுகிறீர்கள் .உங்கள் மாணவ செல்வங்கள் கொடுத்து வைத்தவர்கள் அருமை உங்கள் எழுத்துக்கள் நன்றி

நல்ல மாணவர்களைவிட வழி தவறிய மாணவர்களை சரி செய்ய முயற்சிப்பேன். அதற்கு குடும்ப கௌன்சிலிங் செய்ய வேண்டும். அடிப்படை அன்பை கண்டு கொண்டால் அனைவரும் புனிதரே. கல்லூரி.... ஆது அது ஒரு தனியார் நிறுவனம். நன்றி பிபாஷ்கரன்.