உதாரணமாக, சினம் காத்தல் பற்றி திருவள்ளுவர் வரிகளை படித்திருப்போம். செல்லுமிடத்து காப்பதுதான் சிறப்பு, அல்லிடத்து காக்காவிட்டாலும் ஒன்றுமில்லை என்றிருப்பார். ஆனால் நாம் செல்லுமிடமாகிய நம்மை சார்ந்திருப்போர், சிறியவர்களிடம்தான் கோபத்தை காட்டுவோம். அதன் விளைவு சில வேளைகளில் துயரமாக முடியலாம். உண்மையென்னவெனில், அல்லிடத்து - நம்மை பாதிக்கக்கூடிய கட்டுப்பாட்டு விசைகளை தன் வசம் வைத்திருப்போர்- சினம் கொண்டால் நாம்தான் பாதிக்கப்படுவோம், செல்லிடத்து சினம் மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி, அவர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைத்து விடும். வெளியே சொல்லிக் கொள்வதில்லை என்றாலும் ஒவ்வொருவரிடமும் மன ஆழத்தில் நியாயபுத்தி இருக்கும். அது பிற்பாடு நம்மை கேள்வி கேட்கும். ஒரு முறை அதன் கேள்வியின் பிடியில் சிக்கி வெளிவந்த பின் செல்லிடத்து காப்பதன் அவசியம் புரியும். உண்மையென்னவெனில், உடனடியாக தராசு தட்டை தூக்கிக் கொண்டு வந்து நீதி சொல்லும் தயாரான நிலையில் மனசாட்சியை நாம் வைத்திருப்பதில்லை. சிறிய தீக்கங்குகளை உள்ளே வைத்து புகையவிடும் வித்தை மட்டும் அதற்கு நன்றாக தெரியும். அதன் விளைவாகவே , சமாதானத்திற்கு இறங்கி வருவது, " உன்னை புரிந்து கொள்ளவில்லை" என்று மன்னிப்பு கேட்பது எல்லாம் நடக்கிறது.( Every man wants to pretend as a perfect man - infront of his super -ego. )
நாம் மற்றவருடைய உணர்வுகளை சரிவர கையாளுவது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாடத்தின் முதல்படி உணர்வுகளை புரிந்து கொள்ளுவது என்பது. ஒருவருடைய முகபாவனை, செய்கை, வார்த்தைகள் ஆகியவற்றை கொண்டு அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது. அதற்கான காரணங்களை புரிந்து கொள்வது. அதன் நோக்கத்தை கண்டு கொண்டவுடன் தான் சந்தர்ப்பத்தை சரிவர கையாள முடியும். பொறுமையில்லாத பார்வை , கை விரல்களை மூடிக் கொண்டு நிற்பது, வெற்றுப்பார்வை , முகம் சிவக்க ஆரம்பித்தல், அல்லது கறுத்து போகுதல் போன்றவை நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை காட்டிவிடும். கொஞ்சம் பின்வாங்கலாம், இதமாக பேசலாம் அல்லது வேறு விசயத்தை பேசி இயல்பு நிலை வந்த உடன் திரும்பவும் ஆரம்பிக்கலாம்.
புத்திசாலித்தனமாக உணர்வுகளை கையாள என்ன வேண்டும்?. தன்னை அறிதல், மற்றவர்களை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுதல், மற்றவர்களுடன் சரியான தொடர்பில் இருத்தல். நம்முடைய புத்திசாலித்தனத்தின் அளவுகோல்கள் - ஒரு உணர்ச்சிகரமான சூழலை சமாளிப்பது,ஈகோவின் தடைகளை உணர்வது, தாழ்வு மனப்பான்மையை களைவது, சூழ் நிலைக்கு தக்க மாறிக்கொள்வது, முக்கியமாக மற்றவரின் உணர்வுகளை சரியாக கண்டுணர்வது, மற்றவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்வது ஆகியனவாகும். உங்களுடைய EIயை இணையத்தில் கிட்டும் on line testஐ பயன்படுத்தி கண்டு கொள்ளுங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை கொண்டு புத்திசாலித்தனத்தை அளவிடுகிறார்கள். இந்த பதிவு ஒரு ஆரம்பம் மட்டுமே உங்களுடைய முயற்சிகள் பயிற்சிகள் மட்டுமே இதனை முழுமை படுத்தும். சீரான வாழ்க்கை அமையவும் வெற்றிகரமாக முன்னேறவும் emotional intelligence மிகவும் அவசியமாகிறது. புரிந்து கொண்டு வெற்றியை கைபற்றுங்கள்.