நலமாக இருக்கிறாயா? வீட்டில் உன் கணவரும் மற்றவர்களும் நலமா? உன்னுடைய மன நலம் , உடல் நலம் நன்றாக இருக்க வேண்டுகிறேன். மன நலம் பற்றி ஏன் சொல்கிறேன் ? எல்லாம் ராதுவின் திருமணத்தில் வைத்து நடந்த விசயம் குறித்துதான் பேசுகிறேன்.
இது போல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நம் குடும்ப கௌரவத்தை காப்பது நம் நடத்தையில்தான் உள்ளது. ஒன்றுமில்லாத விசயத்தை பெரிதுபடுத்தி பூகம்பம் உண்டாக்குவது உறவுகளுக்கிடையே விரிசலை தரும். அதை தவிர்ப்பது நம் பொறுப்புதான். ஏன் வசு அப்படி பேசினாள் என்று புரியவில்லை. திருமணமாகி இரண்டு மாதங்களில் அவள் நல்ல பெண்ணாகதான் நடந்து கொண்டாள். உன்னிடம் ஏன் அப்படி பேசினாள்? ஒரு நிகழ்வு நடக்கும்போது அதில் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகள், குணாதிசயங்கள் ஒரு காரணியாக செயல்பட்டு நிகழ்வினை கடத்துகிறது, அது சந்தோச அலைகளையோ , கோப அலைகளையோ உண்டாக்கி மாறாத நினைவுகளை பதிவிட்டுவிடுகிறது. சில சமயம் எதுவுமே நிகழாமல் கடந்து சென்றாலும் நல்லதுதான்.
வசு இன்னும் புதுப்பெண்தான், கண்ணம்மா. ஒரு குழந்தை வளர்ந்துவரும்போது தாயை நம்பிக்கையாக உணரும். பத்துமாத பந்தம் அல்லவா?. பிறகு தகப்பன் குரலை அடையாளம் கண்டு பாதுகாப்பாக உணரும். நல்ல அதிர்வலைகளை உணர்ந்தபின் மற்றவர்களிடம் அன்பு பாராட்டும். உணர்தல் என்றால் பழக்கம் வேண்டுமல்லாவா? திருமணம் முடிந்து வந்தபின் உன்னுடைய உடல் நிலை காரணமாக நீ வரவில்லை. வசுவும் புதுப்பெண்ணின் திரையகற்றி முதல் சந்திப்பு இதுதான். நான் ரொம்பவும் பெருமையாக அவளிடம் உன்னை பற்றி சொல்லியதில்லை. அது வீண் பெருமை பேசுவதாக ஆகிவிடும் என்று நினைத்தேன். பெருமை பேசுவது விற்பனை தந்திரமாக மட்டுமே நான் நினைத்ததால், உன்னை அவள் தானாகவே உணர்வதுதான் எனக்குப் பிறகான காலத்தின் தொடர்புகளுக்கு அடிப்படையாகும். அதனால்தான் உன்னிடமும் அவளுடைய குணாதிசயத்தை சொல்லவில்லை. எனவே அந்த சந்திப்பிற்காக எந்தவித ஒத்திகையும் நடத்தப்பட்டிருக்காது என்பது என் கணிப்பு. நான் கவனிக்காத ஒன்று , நாத்தனார் என்ற முகமூடி ( ஏற்கனவே தயாரிக்கப்பட்டு) உனக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்- கொஞ்சம் தொல்லைபிடித்த சாயல்கூட அதில் இருந்திருக்கலாம். எனக்குகூட அதுபோல ஒரு கொடூரமான முகமூடி இருந்திருக்கலாம், ஆனால் அவள் புதுப்பெண்ணாக இருந்ததால், அந்த முகமூடி பழகும் முறையினால் எளிதில் உடைக்கப்பட்டது. ஒரு வேளை தற்சமயம் அவளுடைய நிம்மதியான வாழ்க்கை உன்னால் பாதிக்கப்படலாம் என்ற பாட்டன் வழிக்கதைகளின் வழிகாட்டல் அவளை செயல்பட வைத்திருக்கலாம். கண்டிப்பாக ஒன்று சொல்வேன் அது விஷத்தை கக்கும் நாகத்தின் சீற்றம் அல்ல. புரியாமல் துள்ளி குதிக்கும் புள்ளிமானின் பாதுகாப்பு நடவடிக்கைதான்.
எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திறந்த மனதுடன் நீ இருந்தாய் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. அவள் தவறாக பேசிய பின்னும் நீ " சென்றுவருகிறேன், அண்ணி " என்று விடைபெற்றதும், அமைதியாக சென்றதும் அவளை குற்ற உணர்வில் ஆழ்த்திவிட்டது. இப்போதும் நான் உனக்காக அவளிடம் அதுவும் பேசவில்லை. அது உன் பக்கமாக பேசுவதாக தவறாக வழிகாட்டப்படும். அது பற்றி எதுவுமே பேசாத என் மௌனம் சிந்திக்க வைக்கும் என்று நம்பினேன். இரண்டு நாள் கழித்து அவளாகவே உன்னை பற்றி என்னிடம் விசாரித்தாள். என் கண்மணியை பற்றி சொல்ல எனக்குத் தெரியாதா என்ன? திரும்பவும் ஒரு நாள் கழித்து அந்த நிகழ்விற்காக வருத்தம் தெரிவிக்க விரும்புவதாக கூறினாள்.. கவனிக்க வேண்டியது என்னிடம் வருத்தம் தெரிவிக்க இல்லை, உன்னிடம் கேட்க வேண்டுகிறாள். அதாவது உனக்கும் அவளுக்குமான உறவை சீர்படுத்திக்கொள்ள விரும்புகிறாள், எனக்காக என்று இல்லாமல். இதுதான் நான் விரும்பியது. இளையவர்களுக்கிடையே எந்தவித கட்டாயமும் இல்லாமல் உறவு மேம்படவது நல்லது. அது புரிந்து கொள்ளுதலினால் மட்டுமே வரும். கை நீட்டும் குழந்தையின் கரம் பற்ற நீயும் விரும்புவாய் என்று எனக்குத் தெரியும். நாளை உன்னிடம் அலைபேசியில் பேசுவாள். புதிதாக ஆரம்பிக்கலாமா குட்டிம்மா?
உனக்கு பிடித்த அனைத்தையும் செய்து கொண்டு அடுத்த வாரம், நேரில் வருகிறேன்.
அன்புடன்,
ஒரு மகளின் மகளான அன்னை.