மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

அன்பு கண்மணிக்கு,
      நலமாக இருக்கிறாயா? வீட்டில் உன் கணவரும் மற்றவர்களும் நலமா? எனக்கு ஒன்றுமில்லை. வயதாகிறது அல்லவா? ஏதாவது வரத்தான் செய்யும். தலைசுற்றி விட்டது. இனி விரதங்கள் இருப்பதை தவிர்க்கச் சொல்கிறார்கள். சட்டென்று விடமுடியாது அல்லவா? யாருக்காவது கெடுதல் வந்துவிடுமோ என்று பயம் தோன்றுகிறது. ஆனால் உனக்காக விரத நாட்களையும்,  விதிமுறைகளையும் குறைத்துக் கொள்கிறேன். அங்கு நீ என்னை பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. உன் அப்பாதான் , உனக்கு தகவல் தெரிவித்து தேவையில்லாமல் ஆர்பாட்டம் செய்துவிட்டார். குடும்பத் தலைவர் , பொருளாதாரத்தை பற்றி மட்டுமே தெரிந்தவர், மற்
தெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன். திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனதால் பதட்டப்பட்டுவிட்டார்.

   போன கடிதத்தில் "இன்றைய வரவு செலவுகளை மட்டும் பார்ப்பதற்கு பெட்டிக் கடையா நடத்துகிறோம்" என்று சொல்லியிருந்தேன். அது அனுபவமிக்க கருத்து பொதிந்த வார்த்தைகள். உனக்கு புரியவில்லை என்று வேறு சொல்லி விட்டாய்.
இன்றைய அவசர யுகத்தில் முடிவுகளும் தீர்மானங்களும் அவசரமாக எடுக்கப்படுகின்றன. என்னுடைய தோழி கலையரசியின் சொந்தக்கார பெண் பெரிய வேலையில் இருக்கிறாள். திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்து விட்டது. திடீரென்று ஒரு நாள் தூக்கு போட்டு இறந்துவிட்டாள், குழம்பு வைப்பதற்காக காய் வெட்டியது வெட்டியபடி இருக்கிறது.மறு நாள் அலுவலகத்திற்கு உடுத்த சலவை செய்ய துணிகள் கொடுத்து விட்ட சில நிமிடங்களில் இப்படி முடிவெடுத்து விட்டாள். மனைவியை இழந்த துயரத்தில் இருந்தவனிடம் விசாரித்தால், குழந்தையை அம்மா வீட்டில் விட்டு வளர்க்கலாம் என்று முடிவெடுத்தது பிடிக்கவில்லையாம். " என்னை புரிந்து கொள்ளவில்லையா?" என்பதுதான் அவனிடம் அலைப்பேசியில் பேசிய கடைசி வார்த்தை. குழந்தையை பிரிய விரும்பாதவள் சிறு குழந்தையை தவிக்க விட்டு பொறுப்பில்லாமல் தற்கொலை ஏன் செய்து கொள்ளவேண்டும். அப்போதைய பிரச்சினையை மனதில் கொண்டு வாழ்நாள் முழுவதிற்கும் அப்படியேதான் நடக்கும் என்று தீர்மானிப்பது தவறில்லையா. குட்டிம்மா, காரணம் பற்றியே நான் பேசவில்லை, விளைவுகளைதான் பேசுகிறேன்.

    " நீ எனக்கு என்ன செய்து விட்டாய் ?" என்ற கேள்வி எங்கள் காலத்தில் எப்போதாவது எழும். நகை, பட்டுப்புடவை என எதையாவது கேட்டு அடம் பிடித்து வாங்கும்போது ஒரு பேச்சிற்காக வரும். கோரிக்கை நிறைவேறினாலும் இல்லாவிட்டாலும் அந்த கோபமும் காற்றில் வைத்த கற்பூரமாய் மறைந்துவிடும். ஆனால் இப்போது இந்த
கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. பொருளாதார பிரச்சினை இல்லாவிடினும், நாளைக்கொருதரம் சில சமயம் மணிக்கொருமுறைகூட பல்வேறு வடிவங்களில் கேட்கப்படுகின்றன. இதற்கு அப்போதைக்கு சமாதானமாக பதில் கிடைத்தாலும், நாளடைவில் அலுத்துப் போய்விடாதா. நமக்கு பிடித்தமான வார்த்தைகளே திரும்பத்திரும்ப கேட்கும் போது ஒருவித யந்திரத்தனம் வந்துவிடுகிறது. கேள்விகள் நாளடைவில் மனதில் எதிர்மறையான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

    நான் என்ன சொல்லுகிறேன் என்றால்,
இன்றைக்கு நம் வானில் இடி இடிக்கலாம். இருக்கட்டும் நேற்றைய வானில் நட்சத்திரம் கண்சிமிட்டியதே. ஏன் நாளைய வானில் வானவில் கூட வரலாம். ஏன் நம்முடைய வாழ்க்கையை இடி இடிப்பதுடன் முடித்துக் கொள்ளவேண்டும், கடைசியில் வான வில்லின் வர்ணஜாலங்களை பார்க்க முடியாமலே போய்விடுகிறது அல்லவா?. பெட்டிக்கடைக்காரர்தான் அன்றைய வரவுசெலவு பார்த்து லாபக்கணக்கு சொல்வார். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் வருடமுடிவில்தான் கணக்கு தயாரிக்கும். ஒரு நாள் நஷ்டம் சில நாள் கழித்து லாபமானது தெரியும். இல்லை, நீ நினைப்பதுபோல் இல்லை கண்ணம்மா. எல்லாவற்றிற்கும் தாமதம் தேவையில்லை. கர்ணன் தானம் கேட்ட ஒருவருக்கு இடது கையிலேயே கொடுத்துவிட்டான். அது தவறு என்றபோது, கர்ணன் சொன்னது என்னவெனில் " அவர் கேட்ட வெள்ளிப் பாத்திரம் என் இடது கையிலேயே இருந்தது, அதை நான் வலது கைக்கு மாற்றும் முன் தர்மம் செய்ய வேண்டும் என்ற மனம் மாறிவிடக் கூடாது என்று தோன்றியது . உடனேயே தந்துவிட்டேன்".
ஒரு நல்ல எண்ணம் தோன்றினால் உடனேயே செயல்படுத்திவிடு. அத்தைக்கு புடவை வாங்குவது, நாத்தனாரின் கைவேலைபாடினை பாராட்டுவது போன்றவை. இதுவே தவ்றான எண்ணம் எனில் சற்று தாமதப்படுத்து. சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளத் தாமதம் ஆகும். மகாபாரதப் போரில் " அசுவத்தாமன் யானை இறந்து விட்டது " என்ற வாக்கியத்தில் யானையை மெல்ல சொல்ல , சரியாக காதில் வாங்கிக்கொள்ளாத துரோணச்சாரியார் தன் மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டதாக கருதி , கவனச்சிதறல் ஏற்பட்டு உயிரை விட்டார். இத்தனைக்கும் அசுவத்தாமன் சிரஞ்சீவிகளின் ஒருவன் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. .

   உன்னை பற்றி உன் மாமியாருக்கு பெருமை. வினு கல்யாணத்தில் பார்த்தபோது சொன்னார். உன்னை ஏன் அழைத்து வரவில்லை என்றால், உடல் நிலை சரியில்லை என்கிறார். எனக்கு புரியாமல் இருக்குமா? பொதுவில் வைத்து சொல்லக்கூடாது என்று பார்க்கிறார் என்று எண்ணிக்கொண்டேன். மருத்துவரிடம் சென்று ஆலோசித்தபின் என்னிடம் சொல்வாராம். அப்புறம் நான் என் கண்மணியை பார்க்க ஓடி வந்துவிடுவேன்.

மற்றவை நேரில்
ஆசையுடன் காத்திருக்கும் அன்னை.

பி.கு: உன் அண்ணனுக்கு ஒரு பெண் பார்த்து விட்டோம். புகைப்படம் மற்ற விவரங்கள் நேரில் சொல்கிறேன். 5. ஒரு மகளின் மகளான அன்னை.

16 comments:

காரணம் பற்றியே நான் பேசவில்லை, விளைவுகளைதான் பேசுகிறேன்.//
அனுபவ மொழிகள்.
நல்ல செய்தி கிடைக்க
வாழ்த்துக்கள்.

வாழ்வில் வலிகளோடு இருக்கும் பெண்ணிற்கு நம்பிக்கையூட்டும் வரிகளாகவும், புராணக் கதைகளினை உதாரணப்படுத்தி, மனதில் தெம்பினை ஏற்படுத்தும் வன்ணமும் உங்கள் கடிதத்தைப் படைத்திருக்கிறீர்கள்.
அடுத்த பகுதிக்காக வெய்யிட்டிங்..

ஒரு குடும்பத்தின் சூழல் கண்முன்னே வருகிறது....

பகிர்வுக்கு நன்றி..

புராண இதிகாசங்களிலிருந்து, தாய் ஸ்னானத்திலிருக்கும் தங்களின் அருமையான அறிவுரைகள். தங்களின் மகளுக்கு மட்டும் அல்ல, எங்கள் அனைவருக்குமே தான். பாராட்டுக்கள்.

நன்று .அன்னையர் தின வாழ்த்துக்கள்

/ சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளத் தாமதம் ஆகும்//

இதையும் போல்டாக காட்டி இருக்கலாமோ ??

மிக அழகாக தொடர்கிறது கடிதம். உங்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்கள்

இன்றைக்கு நம் வானில் இடி இடிக்கலாம். இருக்கட்டும் நேற்றைய வானில் நட்சத்திரம் கண்சிமிட்டியதே. ஏன் நாளைய வானில் வானவில் கூட வரலாம். நாளைய வாழ்வுக்கு நம்பிக்கையூட்டும் வரிகள் அம்மா. . .

காரணம் எதுவாக இருந்தாலும் பாதிப்பு மறுக்க முடியாததுதானே, நன்றி இராஜராஜேஸ்வரி.

சில விசயங்களில் எங்கள் காலத்தைவிட திறமைசாலிகளாக இருக்கும் இன்றைய பெண்கள், குடும்ப வாழ்க்கையில் தோல்வி தழுவுவதற்கு காரணம் தங்களுடைய முக்கியத்துவம் தெரியாததால்தான் என்று நினைக்கிறேன். நன்றி நிருபன்

நன்றி திரு/சௌந்தர்

சில செய்திகளை இன்றைய பெண்களுக்கு , ஒரு தாயின் நிலையில் இருந்து சொல்ல நினைத்தேன். பாராட்டுக்களுக்கு நன்றி சார்.

வாழ்த்துக்களுக்கு நன்றி திரு.சண்முகவேல்.

சொல்லவந்ததே அதுதான். let us wait. அலுவலகத்தில் அவசரமான முடிவுகள் எடுத்தால் பாராட்டு கிட்டும். மற்றவரை முந்திக் கொள்ளலாம். ஆனால் வாழ்க்கையில்.....? வாழ்த்துக்களுக்கு நன்றி எல்.கே சார்.

அப்படித்தான் பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நன்றி பிரணவன்.

என்ன சொல்வது ,எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. மிகவும் அருமை...!!!!கருத்துக்கள் மிகவும் பொதிந்து கிடக்கும் பதிவு. உங்கள் எழுத்துக்கள் எனக்கு கிடைத்த புதையல்.

//உங்கள் எழுத்துக்கள் எனக்கு கிடைத்த புதையல்.// இதயபூர்வமான பாராட்டிற்கு நன்றி