வெள்ளை மனமும்
முல்லை மணமுமாக
வீதியெங்கும் திரிந்த
என் மூதாதையர்
அள்ளி அள்ளி வைத்த
வள்ளல் கதையெல்லாம்
கொள்ளியிட்டு மறைந்தன.
இழந்ததைத் தேடி
கோவில் வாசலில்
முக்காடிட்டு அமர்ந்தன.
தலையெழுத்து மாற்றம்
தலைமுறைக்கும் மாற்றம்!
கம்பன் இளங்கோவடிகள்
கர்வம் கொண்டு சொல்லிய
எந்தை பழந்தமிழ் கதைகள்
மானுடம் மறையுமுன்
தானாய் மறைந்தனவோ!
முடங்கிய மனம் சென்றது
களம் இழந்த பறவையாய்
வான்வெளியைத் தேடி்!
ஆதி முதல் வாசம் கொண்டு
பல சேதிகள் சுமந்து
இன்று காறி உமிழ்ந்த
எச்சில்கள் பட்ட காற்று
சொல்லிப் போன செய்தி...
அழித்தொழிக்கும் வித்தையில்
காலதேவனின் கறார் விதிகள்
மனிதன் மாறினாலும் மாறாமல்
மறைந்த மானுடம் புதிதாய்
மீண்டும் மீண்டும் பிறந்து
கொண்டேயிருக்கும் என்றது.
---- முதியோர் இல்லத்திலிருந்து....