என்னுடனேயே பிறந்தாய்..
கைப் பிடித்து நடந்து ஓடி
ஒன்றாய் கூடி கதை பேசி
ஒரு குடம் தண்ணி ஊற்றி
பூப்பூவாக பூத்து குலுங்கி
அன்னை தந்தை கொஞ்சி
குவித்த அத்தனை பாசமும்
கிள்ளி வைத்து பங்கு பிரித்து
கள்ளமின்றி ஆடித் திரிந்தோம்!
இன்று....
ஏனடி பொய்யாக கதைக்கிறாய்?
எதையோ அடிமனதில் மறைத்து
பார்வையிலிருந்து மறைகிறாய்!
சிறு சிறு பழியினை சுமத்தி விட்டு
உன்னை தொலைத்து ஓடுகிறாய்!
வெறுப்பை வலிந்து கேட்கிறாய்!
ஏனென்று எனக்குத் தெரியும்!
உன் 'வீட்டு' தோல்விக் கதை
அத்தனையும் புரியும்... ...
உயிரோடு உறவு தொலைத்த
என் வேதனையின் வலியை
உனக்குத்தான் தெரியாது ..!
ஒன்று மட்டும் சொல்லுவேன்....
என் வேண்டுதலின் பரிசாக
உன் தலை நிமிர்ந்து நிற்கும்
வெற்றி நாள் ஒன்று வரும்
என்னை பார்த்து சிரிப்பாய்..
அன்று ஓங்கியொரு அறைவிட்டு
தொலைந்த கதை கேட்பேன்....
அது வரை என் கேள்வியின்
எல்லைக்குள் வராமல்
அந்தி வானத்தின் அடியில்
ஒளிந்து கொண்டு இருந்துவிடு.