கண்ணிமைகள் துடிக்கும்போது
ஒரு நிழற்படம் பதியப்பட்டது...
என்னுடைய தொகுப்பாக நீயும்,
உந்தன் பதிவுகளில் நானுமாக
கணக்கின்றி சேமித்தோமே....!
சூரியபிரகாசமான தாய்மையில்
என்னை நீ அழகாக பதிந்தாய்
விழிகளின் ஓரத்தின் கண்ணீரில்
உன் சிரிப்பைத் தவிர வேறேது?
நெஞ்சில் வைத்துக் கொண்டாடி
தோளில் சாய்த்து வருடினேன்
உறக்கம் வந்த வேளையில்கூட
கண் சிமிட்டலின் புன்னகையில்
முத்தத்துடன் ஒரு அன்புப்பதிவு.
வளர்ந்தபின் மறந்துவிட்டாய்
என்னைத் தேடும் உன் தேடுதல்
மெல்ல மெல்ல பழங்கதையாக,
இருளுக்குள் ஓடி ஒளிந்திட்டாய்.
சாளரத்தின் வெளியே ஒளியில்
உன் மழலை முகத்தின் சாயல்
உன்னைதான் நான் தேடுகிறேன்!
வயிற்றிலிருந்து மடியிலும் ...
மடியிலிருந்து ஏந்தி கைக்கும்....
கையிலிருந்து தோள்களுக்கும்,
மாற்றியே உன்னை சுமந்தேனே
உயிரை உருவி வேற்று பூமிக்கு
அனுப்பித் தொலைத்தேனா?
ஆனால் நீ மட்டும்.......?