மலையரசனின் மகளானது
இயற்கை அன்னை தாலாட்டிட
எட்டி நடை போட்டு துள்ளியது!
குறுமரங்கள், செடி, கொடிகள்
கைவீசி வருடிட குறுஞ்சிரிப்பில்
மலையிலிருந்து குதித்தோடியது!
சற்றே அதன் துள்ளல் குறைந்து
சமவெளியில் அமைதியாக ஓட,
இன்னும் பல வயல்வெளிகளை
மரங்களடர்ந்த வனப்பகுதிகளை
கருணையுடன் ஈரமாக்கியது.
வேர்களின் தாகம் தணித்து
கரைகளில் பசுமை விரித்த
அழகிய ஓட்டத்தின் முடிவில்...
கை விரித்து வாரியது நீலக்கடல்!
உப்பு நீரில் கலக்கும் முன்
திரும்பிய கடைசி பார்வையில்
மலையும் தெரியவில்லை
தாலாட்டிய மரங்களும் இல்லை
சினேகமாய் ஓடியாடி வளர்ந்த
வெள்ளி மீன்கள் கூட துள்ளியோடின.
எதுவும் அதனுடன் வரவில்லை
உறவுகள் சேர்வதும் பிரிவதுமாக
நொடிகளும் யுகங்களுமாக மாறி
காலடியில் நழுவிய கணங்களில்
(வாழ்க்கை....)
கடத்தப்பட்டிருந்ததை உணர்ந்திட
நன்னீருடன் கண்ணீரும் சேர்ந்தது.
ஆனாலும்...
எங்கேயும் தேங்கி நின்றிடாத
நிம்மதியுடன் கடலில் கலந்தது.