இந்தமுறை கதை இல்லை. இதற்கு முந்தைய பதிவுகளை பற்றி கொஞ்சம் பேசலாம்.
முதலில் வடக்கிருத்தல் பற்றி, தமிழ் இலக்கிய துறையினருக்கு தெரியும். இந்த விளக்கம் புதியவர்களுக்காக. பழங்காலத்தில் போரில் தோற்ற மன்னர்கள் தானாகவே தம் உயிரைவிட எண்ணி வடக்கு திசை பார்த்து அமர்ந்து உண்ணா நோன்பிருப்பார்கள். இதனைதான் வடக்கிருத்தல் என்பார்கள். உண்மையில் வடக்கிருத்தலில் நான் சொல்ல வந்தது கறிசோறு பற்றியல்ல. இறுதி காலத்தில் அந்த மூதாட்டியின் மனநிலை பற்றிதான். இன்றைய வாழ்க்கை போராட்டத்தில் பிள்ளைகளின் இயலாமை, மற்றவர்களின் அலட்சியம், உலகத்தின் முதியோர் பற்றிய பார்வை- முக்கியமாக அவர்களது உடல் நிலை,இத்தனையும் சேர்ந்து வாழத்தகுதியில்லாதவர்களாக ஆக்கப்படுவதைதான் விலாவாரியாக பேசவிரும்புகிறேன்.
மேலே குறிப்பிட்டவை மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கே உரிய எதிர்பார்ப்புகள் மறுக்கப்படுவதையும்தான் உணரவேண்டும். இது அமுது படைத்தவளின் விளக்கம். தேவையான வசதி செய்து தந்தால் போதும் , அதையே பெருமையாக நினைத்துக் கொண்டு அவர்களிடம் உரையாடாமல் தவிர்ப்பது. குடும்ப பிரச்சினைகளில் கலந்தாலோசிக்காதது , சில சமயம் குழந்தைகளைக்கூட அவர்களிடம் விளையாடவிடுவதில்லை - அவர்களின் இருமல் காரணமாக. வயது மூப்பின் காரணமாக - பசி எடுத்தாலோ, பதட்டப்பட்டாலோ , உணர்ச்சி வசப்பட்டாலோ தொடர்ச்சியான இருமல் வரும் - அதற்கு காச நோய்க்கு உரிய மரியாதை(!)யை தரவேண்டாம். எளிதாக சீரணிக்கூடிய உணவு வகைகள், தெம்பான பானங்கள், பிரியமான வார்த்தைகள் நேரந்தவறாமல் தந்தால் போதும், இருமல் ஓடிவிடும்.
பொதுவாகவே கோபப்படமட்டுமே தெரிந்த நமக்கு அதனை சரியாக கையாளத்தெரியவில்லை. அதனால் நோக்கமே மாறிப்போகிறது. சிறியவராயின் சமாதானம், பெரியவரிடம் மன்னிப்பு இதுதான் சூத்திரம். குடும்ப உறவு சீராக இருக்க இதுதான் கட்டாயம் தேவை. ரௌத்திரம் பழகுவீரின் விளக்கம் இதுதான்.
பெரியவர்களிடம் குறையே இல்லையா? என் மாமியார் இப்படி! மாமனார் அப்படி! என்று புலம்பல்களும் வருகின்றன. அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வார்த்தைகள் மட்டுமல்லாமல் முகபாவங்களிலும் கவனம் தேவை. நமக்கே தெரியாமல் தவறான சேதிகளை அவர்களுக்கு சொல்லக்கூடும். அவ்வாரெனில் தயங்காமல் மன்னிப்பு கோருங்கள் - பெருந்தன்மையான நடப்பு இதுதான். காற்றுக்குமிழ் மற்றும் கலிங்கத்து பரணியின் செய்தியாகும்.
இனி வரும் பதிவுகளில் வயது முதிர்ந்தவர்களையும் அவர்களின் பிரச்சினைகளையும், தேவைகளையும் புரிந்து கொள்வோம். அப்படியே சின்ன சின்ன சிக்கல்களையும் தீர்த்துக் கொள்வோம்.
நமக்குள்ளே ...
1 day ago