ஆரம்பம் ஏதுமறியா வெள்ளை!
தாயிடம் முகம் புதைந்து தாலாட்டு,
விரல்களை நீட்டி உலக ஸ்பரிசம்!
வெளிக்காற்று பட்ட நொடியில்...
சிவப்பு... நீலம்... பச்சை... மஞ்சள்...
குணங்களின் வண்ண சாரல் மழை!
தூறல் பட்டு அடையாளம் ஆனேன்...
மகளாய் மனைவியாய் அன்னையாய்
ஒவ்வொன்றும் ஓவியமாக மாறியது.
ஆனாலும் ஒன்று, இந்த நிறமாற்றம்
வழுக்கிக் சென்ற நாட்களின் லயிப்பில்
என்னுள் விமர்சிக்கப்பட்டதில்லை
எப்போதாவது அடிமனம் தேடும்
எனக்கென்று நிறம் இல்லையா?
எனை நனைத்து நிறம் கரைத்து
இயல்பினை காட்டும் மழைக்காக
நீண்ட நெடிய ரகசிய காத்திருப்பு!
ஒரு கடைசி நேரத்து தூறலில்
என்னிடமிருந்து நான் விலகி தனித்து
பிரித்தறியா காற்றில் கலந்த நொடி
தெள்ளியமாய் புரிந்து போனது...
நிறமில்லாத இயற்கைதான் 'நான்'