மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

     
       மன்னிப்பு சில வரைகளுக்கு உட்பட்டது. மிகச் சாதாரணமாக சொல்லப்படும் "மன்னித்துக் கொள்" என்கிற வார்த்தை மட்டும் இதனை முழுமையாக்கி விடாது. இது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு செயல். கடந்த காலம் நிகழ்காலத்தை பாதிக்கும் அது எதிர்காலத்தை பாதிக்காமல் சரியான வழியில் கொண்டு செல்லும் ஒரு செயல். சில விசயங்கள் மட்டுமே அந்த சம்பவத்தில் தொடர்புடைய அத்தனைபேரையும் அமைதியடைய மகிழ்ச்சியடைய செய்யும். அதில் மன்னிப்பும் ஒன்று.

     ஆதிகாலத்தில் மனித நாகரிகம் ஏற்படாத போது இந்த வார்த்தையும் இல்லை. அப்போது மிருகங்கள் போல வாழ்ந்த மனிதர்களுக்கு மன்னிப்பு கேட்கும் சந்தர்ப்பமும் மன்னிப்பை தரும் பக்குவமும் ஏற்படவில்லை. நாகரிகத்தின் அடையாளமாக தோன்றிய ஒரு செயல். முதலில் மன்னிப்பு கேட்டது இயற்கையிடமும் கடவுளிடமும்தான். அவர்களால் எதுவும் தீமை ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் கேட்கப்பட்டது. பிறகு அரசாள்பவனின் கோபத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்கும் குறுக்கு வழியாக இது பயன்படுத்தப்பட்டது. இது வீரர்களால் ஒரு போதும் பயன்படுத்தப்பட்டதில்லை. மதங்கள்  தோன்றிய பின் பாவத்தின் சுமையுடன் இருக்கும் ஆழ்மனதினை அமைதிபடுத்தி ஆன்மாவை நல்வழியில் திருப்பும் ஒரு புனித செயலாக அங்கீகரிக்கப்பட்டது. பொதுவாக மதங்கள் மறைமுகமாக செய்வது ஒன்றுதான் நம்முடைய ஆழ்மனத்தின் வலிமையை அதிகப்படுத்தி மேம்பட்ட வாழ்க்கையை அடையத் தேவையான உந்து சக்தியை தருவதுதான். குற்ற உணர்வுடன் இருக்கும் மனம் அதிலிருந்து மீண்டு சரியான பாதைக்குச் செல்வதன் மூலம் மனித வாழ்க்கை உன்னதமான எல்லையை அடைகிறது. அடிமைகளின் முதுகெழும்பில் பதியவைக்கப்பட்ட மன்னிப்பு என்ற செயல் மனித நாகரிகத்தின் அடையாளமாக உயர்வான செயலாக  முகமாற்றம் பெற்றது. சங்கத்தமிழில் இதனை பொறுதி என்பார்கள். பொறுத்துக்கொள் என்று அர்த்தமாகிறது.


    அறிவியல்படி ஒரு பொருள் வானில் நிலை நிறுத்தப்பட, அவை தனக்குரிய சுழல் அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு வேறு ஒரு பொருளையும் அச்சின் மையமாக நீள்வட்டப்பாதயில் சுற்றி வரும். இதனால் மைய நோக்கு விசை , மைய விலக்கு விசை ஆகியவை எதிரெதிர் திசையில் செயல்பட்டு ஒன்றுக்கொன்று ஆதாரமாக அண்டவெளியில் நிறுத்தப்பட்டிருக்கும். நாம் விண்ணில் செலுத்தும் செயற்கை கோளும் இத்தகையதுதான். அதனை, சரியான அச்சில் நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. மன்னிப்பின் விதிமுறைகளும் இவற்றை பின்பற்றவேண்டும்.

    ஒருவரை ஒருவர் சார்ந்து அமைவதுதான் நாம் வாழும் வாழ்க்கை. சில சமயம்  நம்முடைய ஒரு செயல் மற்றவரை பாதிக்கப்படலாம். எப்படி செயற்கை கோள் தன் அச்சிலிருந்து விலகும் அபாயம் ஏற்படுகிறதோ அதேபோல நம்முடைய கடுமையான செயல் அவர்களை ஒரு நிலையில் நிற்கவிடாமல் அலைகழிக்கிறது. அடுத்த நிமிட ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த அதிசயமான வாழ்க்கையில் இத்தகைய மனபிறழ்வுகள் தன்னுடைய வாழ் நாளை நீட்டிப்பது குடும்பத்தின் அடிப்படையையே ஆட்டம் காணவைத்து விடாதா? 

      நாம் ஆதி மனிதர்கள் இல்லை. துறவிகள் போல் தாமரை இலைத் தண்ணீராக வாழ்வதற்கு. மேலும் இன்றைய சவால்கள் நிறைந்த உலகம் நம்மை சாட்டையில் சுற்றிய பம்பரமாக ஆட்டி வைக்கும் போது, ஆணியின் கீறல்கள் நம்மை சார்ந்து இருப்பவரை காயப்படுத்துவது சகஜமாகிவிட்டது. முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது மன்னிப்பு கேட்பது நம்மை தரம் குறைக்கும் செயலாகாது. குடும்பத்தின் உறுப்பினராக நம்முடைய கடமையும்கூட. நாம் செய்த தவறினை நியாயப்படுத்த விளைவது அடிவேரில் சுடு நீரை ஊற்றும் செயலாகும். அப்போதைக்கு ஒன்றும் தெரியாது, தொடர்ந்து வரும் நாட்களில் மெல்ல செடியின் நிலைமை புரிந்துவிடும். . சிக்கலுக்கும் நமக்கும்தான் சவாலே தவிர நமக்கும் மற்றவர்களுக்கும் இல்லை. ஒரு மகாராஜாவின் மனோபாவத்துடன் மன்னிப்பு கேட்பது "நானே கேட்டுட்டேன். உடனே சரியாகி விட வேண்டாமா? இன்னும் முகத்தை தூக்கிக் கொண்டு திரிந்தால் எனக்கு என்ன நஷ்டம்?",  இது தவறு. அதனால் நோயை தீர்த்து நிலையை சரி செய்யும் ஒரு மருத்துவரின் மனோபாவம் நமக்கு வேண்டும்.  இனி மன்னிப்பு கேட்கும் படலம் நாளைய இறுதிப் பதிவில் (கண்டிப்பாக).

16 comments:

//மன்னிப்பு சில வரைகளுக்கு உட்பட்டது. மிகச் சாதாரணமாக சொல்லப்படும் "மன்னித்துக் கொள்" என்கிற வார்த்தை மட்டும் இதனை முழுமையாக்கி விடாது. இது வெறும் வார்த்தைகள் அல்ல//

பலருக்கும் இது சடங்குதான்.நல்ல பதிவு.

மன்னிப்பை - மாண்புமிகு என்று சொல்லும் போதே, அதன் மேன்மையும் மரியாதையும் பிடிபடுகிறது. மன்னிப்பு, தவறுகளுக்கு பின் இதயங்களை இணைக்கும் பசை என்று சொல்லலாமா.

நாம் ஆதி மனிதர்கள் இல்லை. துறவிகள் போல் தாமரை இலைத் தண்ணீராக வாழ்வதற்கு.//

ஆழ்ந்த பயனுள்ள அர்த்தமுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

ஒருவரை சார்ந்து ஒருவர் இருக்க வேண்டும் உண்மை தான்...

வழக்கம்போல தெளிவைத்தரும் தெளிவான பதிவு
பயத்தில் துவங்கியது என்பது மிகச் சரியான கருத்து
பின் சரணாகதியெனத் தொடர்ந்து
இப்போது அவ்வப்போது தப்பித்துக்கொள்வதற்கான
எளிய உபாயமாக கையாளப்படுகிறது
தாங்கள் குறிப்பிடுவது போல மிகச் சரியாக
அந்தச் சொல் புரிந்துகொள்ளப்படாமல்தான் உள்ளது
தங்கள் பதிவு தெளிவைத் தந்து போகிறது
பயனுள்ள நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்
முதலில் தாமதம்
ஆகிவிட்டது
மன்னிக்கவும்
மிகவும் தெளிவா எழுதுறீங்க டீச்சர்
வாழ்த்த வயதில்லை
இருந்தாலும் வாழ்க வளமுடன்
நலமுடன்

உண்மைதான். கருத்துரைக்கு நன்றி திரு.சண்முகவேல்.

சரிதான். இணைப்பே தெரியாமல் இணைக்கும் பசை. நன்றி.திரு.தமிழ் உதயம்

// ஆழ்ந்த பயனுள்ள அர்த்தமுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.// நன்றி இராஜராஜேஸ்வரி

அதுதான் இனிய வாழ்க்கையின் அஸ்திவாரம். நன்றி திரு.பிரகாஷ்

மிகவும் தெளிவான, விரிவான கருத்துரைக்கு நன்றி ரமணி சார்.

சில புத்திசாலி மாணவர் வகுப்பை கட் அடித்தாலும் பாடத்தை எளிதாக தொடர்ந்துவிடுவார்கள். நன்றி சிவா.

// பிறகு அரசாள்பவனின் கோபத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்கும் குறுக்கு வழியாக இது பயன்படுத்தப்பட்டது. இது வீரர்களால் ஒரு போதும் பயன்படுத்தப்பட்டதில்லை.//
எதார்த்த நிதர்சன உண்மை வரிகள் சகோ , மனதை தைத்தது

//குற்ற உணர்வுடன் இருக்கும் மனம் அதிலிருந்து மீண்டு சரியான பாதைக்குச் செல்வதன் மூலம் மனித வாழ்க்கை உன்னதமான எல்லையை அடைகிறது. அடிமைகளின் முதுகெழும்பில் பதியவைக்கப்பட்ட மன்னிப்பு என்ற செயல் மனித நாகரிகத்தின் அடையாளமாக உயர்வான செயலாக முகமாற்றம் பெற்றது///

வலிமையான வரிகளை துணைக் கொண்டு வளமான பதிவு , மன்னிப்பு வார்த்தை அல்ல , வாழ்க்கை முறை என சொன்ன விதம் அருமை சகோ

அருமையான அலசல். நம்பக்கம் தவறிருக்கும் பட்சத்தில் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்பதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்பதில் எனக்கும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. உங்கள் மனவளத்தொடர் மேலும் எண்ணங்களுக்கு வலுவூட்டுகிறது என்பதால் மகிழ்ந்து பாராட்டுகிறேன், சாகம்பரி.

//வலிமையான வரிகளை துணைக் கொண்டு வளமான பதிவு , மன்னிப்பு வார்த்தை அல்ல , வாழ்க்கை முறை என சொன்ன விதம் அருமை சகோ//
இந்த பதிவின் நோக்கத்தை அழுத்தமாக தெரிவித்த கருத்துரைக்கு நன்றி ச.கோ

//மன்னிப்புக் கேட்பதன் மூலம் பல பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்பதில் எனக்கும் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு//இந்த குணம் குடும்பத்தில் மற்றவருக்கும் எதிரொலிக்கும். இனிய இல்லறம் ஒரு தொடர்கதையாகும். நன்றி கீதா.