மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


   அடிக்கடி குறை சொல்லிக்கொண்டும் கோபப்பட்டுக் கொண்டிருக்கும் வயதானவர்களை சமாளிப்பது எப்படி? இது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் பெரியவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதுதான். இது சரிபடாது என்று விட்டுத்தள்ளாமலும், வேறு எங்கேயும் கொண்டு தள்ளாமலும் இருப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்.

          முதலில் குறை சொல்வது பற்றி. socio psyco analytic theoryன்படி குறை சொல்பவர்கள் மற்றவரை சார்ந்து இருக்கிறார்கள். சார்ப்பு தன்மை என்பதே நம்பிக்கையின் அடிப்படையில்தான் வரும். அவர்கள் நம் மீது அக்கரையும், நம்பிக்கையும் வைத்து இருக்கிறார்கள் , அப்படி என்றால் நாம் சரியாகவே நடந்து கொள்கிறோம் என்றாகிறது. அதையும் மீறி குறை சொல்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

       ஏதாவது தவறாக நடந்துவிடுமோ ? அதன் விளைவாக குடும்பத்திற்கு தீங்கு எதுவும் நேர்ந்து விடுமோ என்ற பயம்தான். பெரியவர்கள் அவர்களுக்கு பிறகான காலத்திற்கும் குடும்ப நலனை எதிர்பார்ப்பார்கள். சில சமயம் தகுந்த விவரம் சொல்லாமல் நாம் விடுவதும் காரணமாக இருக்கும். உதாரணமாக இரவு வீடு திரும்ப நேரமாகும் என்பதை முன்பே தெரிவித்து இருக்கலாம். அந்த சில மணி நேரத் தாமதம், பயத்தினை ஏற்படுத்தி பதட்டப்பட வைக்கும். இது போன்ற சூழ்நிலையில் அட்ரினலின் சுரந்து உடலை சமப்படுத்தும். ஆனால் வயதானவர்களுக்கு இது குறைவதால், வயிற்றில் அமில சுரப்பு ஏற்பட்டு அல்சர் உருவாகலாம். பிறகு சூழ்நிலை சீரானாலும்கூட இந்த பாதிப்பு இருக்கும். மருத்துவருக்கு சிறிய அளவில் தோன்றும் இந்த கோளாறு நடைமுறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உணவை மறுத்தல், சத்து குறைதல், கை கால் குடைசல் எடுப்பது போன்றவை ஏற்படும். எழுந்து நடக்கவே தெம்பில்லாதது போல ஆகிவிடும். மன ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும். 
          
         தன்னை பற்றிய கழிவிரக்கம் கூடிப்போய் சுற்றி இருப்பவர்களை பற்றி தவறாக நினைக்கத்தோன்றும். தவறான வார்த்தைகள் வரும் - "என்னை மதிப்பது இல்லை , என்னை ஏமாற்றி விட்டாய், எனக்கு மட்டும் நல்ல பிள்ளையை கடவுள் கொடுக்காமல் போய்விட்டார் , நான் எப்ப போய் சேருவேன்னு காத்திருக்க" - இதில் ஒன்றிரண்டு வார்த்தைகளைக்கூட தாங்கும் சக்தி நியாயமான உள்ளங்களுக்கு இருக்காது. உண்மை என்னவென்றால், அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் இவை வெளிவருகின்றன. பதிலுக்கு நாம் பேசினால் இது இன்னும் அதிகரிக்கும். அதன் விளைவாக ஏற்படும் கோபம், அழுகை போன்றவை அவர்கள் உடல் நலத்தை பாதிக்கும். கண்டிப்பாக நாம் விரும்பும் சூழ்நிலை வீட்டில் இருக்காது. நமது பிரியத்திற்குரிய பெற்றோருக்கும் நமக்குமான உறவு மனைவி முன்பாகவோ குழந்தைகள் அல்லது மற்றவர் முன்பாகவோ கேள்விக்குறியாவதை விரும்பமாட்டோம். இதனால் நமக்கும் மன அழுத்தம் ஏற்படும்.

  இத்தனைக்கும் காரணம் நாம் அவர்களுடன் சரிவர செய்தி பரிமாறிக்கொள்வதில்லை என்பதுதான். வாய் மொழியாக தரப்படும் விவரங்களின் அர்த்தங்களைகூட அங்க அசைவுகள் தவறாக மொழி பெயர்க்கும். அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கும்போது எதிர் கேள்விகளுக்கு விளக்கம் நிறைய தரவேண்டி இருந்தாலும் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்க்க முடியும். அதனால் நம் மீதே நமக்கு நம்பிக்கைகூடும். நல்லதுதானே! இத்தனை பார்த்து பார்த்து பழக வேண்டுமா என்று கேட்டால் ஒரு காலத்தில் நம்முடைய மழலையை மொழிபெயர்த்து நம்மை புரிந்து கொண்டவர்களை நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.  

           பல்வகை மாண்பினிடையே - கொஞ்சம்
                         பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு
          நல்வழி செல்லுபவரை மனம்
                        நையும்வரை சோதனைசெய் நடத்தையுண்டு
                                                  - கண்ணன் என் தந்தையில் பாரதியார்


1 comments:

Respected Madam,

இந்தப்பதிவினை இன்று 14/6/11 இப்போது தான் படித்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி.


//அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கும்போது எதிர் கேள்விகளுக்கு விளக்கம் நிறைய தரவேண்டி இருந்தாலும் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்க்க முடியும். அதனால் நம் மீதே நமக்கு நம்பிக்கைகூடும். நல்லதுதானே! இத்தனை பார்த்து பார்த்து பழக வேண்டுமா என்று கேட்டால் ஒரு காலத்தில் நம்முடைய மழலையை மொழிபெயர்த்து நம்மை புரிந்து கொண்டவர்களை நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். //

இது மிக அருமையான உதாரணமும், அறிவுரையும் தான்.

நீங்கள் என் பதிவுக்கு இன்று எழுதியுள்ள கருத்துக்களில் VALUE ADDED
முதியோர் இல்லங்கள் என்ற CONCEPT என்னை மிகவும் யோசிக்க வைத்தது.
மிகவும் நன்றிகள் மேடம்.

அன்புடன் vgk