மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

 தோற்றத்தில் ஏதாவது மாற்றமா?
    கண்ணாடி ஏதும் சொல்லவில்லை
நேற்றுவரை இருந்த அதே உருவம்தான்
    கோபித்துச் சென்ற தலை முடிகள்
காலி செய்த மேற்பரப்பின் மிச்சத்தை
    கோடிட்டது வெள்ளை கடலாய் நரை
முகத்தின் சுருக்கம்கூட புதிதல்ல
    இடை இடையே வரும் இருமல்
இன்றும் அதே சுருதிதான்
    நடையில் வந்த தடுமாற்றம்கூட
பத்துமாத பழையதுதான்
    அப்படியேதான் மனதில் துணையில்லாத 
ஆயிரம் நாட்களான தனிமை
     எல்லாமே நேற்றைய சங்கதிதான்
ஆனால்,
     தெளிவில்லாத பார்வையில் பட்ட
சன்னலோரத்து ரோஜா சிரித்தது
     மூத்தகுடிமகனை வாழ்த்தியதோ...?
தாத்தாவிற்கு அறுபதின் தொடக்கம்!
    எண்களின் விளையாட்டின் ஆரம்பம்!

இனி ரயில் பயண கட்டண சலுகைகள்
        - பக்கத்து ஊருக்குகூட சென்றதில்லை
வருமான வரியில் கழிவு
        - இந்த வயதில் வருமானமா? 
சொத்தை பாதுகாக்க சட்டம்
       - சேர்த்து    வைத்திருந்தால்தானே
முதியோர் உதவித்தொகை
       - எப்படி?  யாரிடம் வாங்குவதாம்? 
இன்னும் பல செல்ல அறிவிப்புகள்.

தாத்தாவின் இன்றைய நிலைக்கு 
   தேவையில்லாத பல இருந்தாலும்
மெச்சிக்கொள்ளத்தக்க சேதிகள்தான்
    கிராமத்து பனையேறி தாத்தாவின்
பனையேறாத நாட்களின் தேவை ஒன்றுதான்
    இன்றைய கேள்வியும் அதுதான்

மதிய உணவு இன்றைக்காவது கிட்டுமா?


                                  மூத்தகுடிமக்களுக்காக அரசாங்கம் ஆயிரம் சலுகைகள் அறிவித்தாலும் சட்டங்கள் போட்டாலும் உரியவரிடம் உரிய நேரத்தில் இவற்றை கொண்டு சேர்க்கவேண்டியது நம் போன்றோரின் கடமையுமாகும். இது போன்ற விபரங்களை தெரிந்து கொள்வது, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது நல்ல விஷயம்தானே. நம்முடைய மனிதாபிமானம் மட்டுமே மனித்துவத்தை காக்கும்.

6 comments:

அருமைங்க ... வரிகளில் வலி தெறிக்கிறது

நெஞ்சார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் ...

அருமை கவிதை உரைக்கிறது...

//மதிய உணவு இன்றைக்காவது கிட்டுமா?//
’பளார்,பளார்’
பொங்கல் வாழ்த்துகள்!

என்னை போன்ற உணர்வுடையவர்களின் கருத்துரை
மனதை அமைதிபடுத்துகிறது. வலிக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

முதியோர்க்கான அருமையான செய்திகள்.
அருமை. வாழ்த்துக்கள்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.