மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


      நமது காலப் பயணத்தில் சற்று பின் நோக்கி பயணித்தால்.... இல்லை இல்லை ரொம்பவும் செல்ல வேண்டாம். அப்போதெல்லாம் மனித இனமே இல்லை. டைனோசர்கள், அவைகளின் சக பெரிய உயிரினங்களுக்கான பூமி மட்டுமே இருந்தது. அவை அழிந்த பின்புதான் முதல் குடியான நியாண்டர்தால் மனிதன் தோன்றினான். இயல்பில் பயந்த சுபாவத்தினன். வேட்டையாடி பிழைப்பு நடத்தினான். பெரிய மிருகங்களுடன் மோத வேண்டியது இருந்தது. உயிர் தப்பிக்கும் நோக்கம் மட்டுமே பலம். சரியாக பயன்படுத்தியவன் வெற்றி பெற்றான். பெருங்கூட்டத்திற்கு தலைவனானான். அவனின் தயவு இருந்தால் நமக்கும் பாதுகாப்பு கிட்டும் என்று எண்ணியவர்கள் அவனை சுற்றி பல பரிமாணங்களில் இடம் பெற்றனர். சிலரின் கால்வருடித்தனம் அவனின் அருகே ஒரு இடத்தை பெற்றுத்தந்தது கூடவே அவனுடைய திமிரையும் எல்லையில்லாமல் அதிகரித்தது. மனிதனையே வேட்டையாடினான். இதே போல பலம் உள்ள பலர் மிருகமாய் மாற மனித இனத்தை வாழ்க்கை பயம் சூழ்ந்தது - இம்முறை மிருகங்களால் மட்டுமல்ல மனிதர்களாலும்தான். உடல் பலமில்லாத சாதாரணர்களுக்கு வாழ்க்கை வசப்படவில்லை. பிற்காலத் தேடலில் இருந்த மூளையுள்ள சிலர் வாழும் முறையை மதிப்பு மிக்கதாக்கி அந்த நுட்பங்களின் மூலம் தங்களை முக்கியமான இடத்தில் நிறுத்திக் கொண்டனர். உணவு, உடை உறையுள் போன்றவற்றிற்குத் தேவையான முக்கிய தொழில்களை செய்தனர். சில செயல்கள் அதன் விளைவுகள் என அறிவியலை பதிவுசெய்தனர். வாழ்க்கையின் தேடல்களை அர்த்தப்படுத்திக் கொள்ள எண்களை கண்டுபிடித்தனர். போராட்டத்திற்கும் நியாயம் கற்பிக்கும் வகையில் உறவுகள், குடும்பம் என உருவாக்கினர். இரத்த தொடர்பு, தொப்புள் கொடி தொடர்பு என காரணம் கண்டுபிடித்து உணர்ச்சிகரமான வார்த்தைகளுக்கு வடிவம் தந்து பாதுகாப்பு அரண் அமைத்துக் கொண்டனர். அத்தனையும் சேர்த்து சாத்திரம் பல செய்தனர்.,

        கற்காலத்திலிருந்து மனித இனம் இந்த வகையில் பயணித்துக் கொண்டிருந்த போது அவ்வப்போது ஏவாள் கை ஆப்பிள் பல கைகள் மாறி தன்னுடைய வேலையை செய்து கொண்டிருந்தது .கண் விழித்த போது இருந்த வீடு கண் உறங்க வரும்போது காணாமல் போனது. காலை வரையிருந்த பெண் தானே வேறிடம் மாறிப்போயிருப்பாள் அல்லது பிறன் வல்லமையால் மாற்றப்பட்டிருப்பாள். ரத்தம், தொப்புள் கொடி உரிமை என்றெல்லாம் நியாயம் பேசி கைகொள்ள முடியாத அந்நியப் பெண்ணிற்கு எப்படி உரிமை சாசனம் எழுத முடியும். பலவான் சண்டையிட்டு தன் உரிமையை நிலைநாட்டினான். சாதாரணன்......? அங்கே தோன்றியதுதான் இன்று உலகம் முழுவதும் மலர்களை ஆயுதமாக பயன்படுத்தி செய்து கொண்டிருக்கும் ரத்தமில்லாத யுத்தமான காதல் என்கிற - வெங்காயம்..? கத்திக்காய்..? அல்லது ஏதோ ஒன்று. ஆக, பெண்ணை அடிமைபடுத்தி தன் வசம் வைத்திருக்க சாதாரணன்களால் உருவாக்கப்பட்ட இந்த வித்தையானது பல சமயங்களில் ஆண்களையும் அழித்தது. ஏன் சில சிறப்பு மிக்க தேசங்களையும் அழித்து வரலாற்றுக் களங்கமானது. கட்டுகடங்காமல் போன இந்த காட்டாற்றுக்கு அணை கட்டவே திருமணம் என்கிற பந்தம் உருவானது- இதில் ஒரு நிம்மதி என்னவென்றால் காதலிற்கு தேவையான சாகசங்கள், வார்த்தை அலங்காரங்கள், வாக்குறுதிகள் போன்றவற்றை நித்தமும் தேடவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக சில சட்டதிட்டங்கள் கற்பு, கட்டுப்பாடு, வாழ்க்கை பாதுகாப்பு போன்ற வார்த்தைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் சந்தையில் சொத்தை வெ...., க..... கூட விலை போயின.

         ஆகா, பெண்ணடிமை பற்றிய தொடரா என்று நினைக்கவேண்டாம். இது இல்லறத்தின் அடிப்படையான திருமண உறவின் வெற்றி தோல்வி பற்றிய தொடராகும். எந்த காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருந்தாலும் நல்ல சமுதாயதிற்கு அடிப்படை இந்த திருமணம் என்ற பந்தம் என்பதில் ஐயம் இல்லை. காலம் காலமாக கணவன்- மனைவி என்கிற இந்த உறவினை உயிர் பிரியும் வரை இன்பப்பட்டோ துன்பப்பட்டோ பாதுகாத்து.... பல தியாகங்கள் செய்து.... தன்னலம் கருதாது அதற்குரிய மரியாதையை பெற்றுத்தந்தவர்கள் , தந்து கொண்டிருக்கிறவர்கள் ( ஆண், பெண் இருவரும்தான்) சார்பாக எழுதப்போகிறேன் . கடைசி வாக்கியத்தில் நான் சற்றும் கேலி பேசவில்லை என்பது பின் குறிப்பு. நாளை சந்திப்போம்....

1 comments:

அருமையான பதிவு
வாழ்த்துக்கள் அம்மா