இது பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமானது.
நம் பிள்ளைகளிடமிருந்து நாம் விலகும் சந்தர்ப்பங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். பொதுவாக அவர்கள் உங்களை விட்டு விலகுவதாக நீங்கள் நினைக்கும் சந்தர்ப்பங்கள்தான் அவை. சிறிய வயதில் உங்கள் விரலை பற்றிக்கொண்டு நடந்தவர்களுடன், இனி கை கோர்த்து செல்ல வேண்டியது நம் பொறுப்பு. இப்போது சற்று வளர்ந்துவிட்ட நம் பிள்ளைகளுக்கு நம் கைகளை உதறும் எண்ணம் வராமல் மென்மையாக வழி நடத்திச் செல்ல வேண்டும்.
முதலில் படிப்பு. பள்ளிப் படிப்பிலேயே அவர்களின் எதிர்காலத்தை நோக்கி நகர்த்துங்கள். ஆனால், பிள்ளைகளின் எதிர்காலத்தை நம் விருப்பமாக செய்யக் கூடாது - உதாரணமாக, கணக்கே பிடிக்காத பையனை பொறியியல் படிக்க அனுப்புவது போன்றவை. விளக்கமாக சொல்லப்போனால், தன் படிப்பினை அவன் தேர்ந்தெடுக்க வேண்டும் அது நம் விருப்பமாகவும் இருக்க வேண்டும் . எப்படியென்றால் , பள்ளி வகுப்பிலேயே கணக்கை விரும்பும்படி சிறப்பு பயிற்சியினை தரலாம் (அதற்குரிய ஆசிரியரை தேர்ந்தெடுக்க வேண்டும், சிலர் ஆசிரியரை குளிர்விக்கும் விதமாக அவரிடமே பயிற்சிக்கு அனுப்புவார்கள். "பாஸ் போட்டுருவாங்கப்பா" என்று) நேரம் கிடைக்கும்போது பொறியியல் படிப்பின் மகத்துவத்தை சொல்ல வேண்டும் - அடிக்கடி சொல்லக் கூடாது. அப்படியும் அவன் விரும்பவில்லை என்றால் விருப்பப்பட்ட படிப்பு அவர்களுக்கு கிடைக்க அனுமதிக்க வேண்டும். முக்கியமான விசயம் நல்ல கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் பிரிவு எதுவாக இருந்தாலும் .
இன்றைய சூழ்நிலையில் எல்லா படிப்புமே சமுதாயத்திற்குத் தேவையானவைதான். இத்தனை விட்டுக் கொடுத்தல்களும் இளநிலை படிப்பிற்கு மட்டும்தான் . அதன் பிறகு என்ன படித்தால் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரலாம் என்று கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். இன்றைய சூழ்நிலையில் முதுநிலை படிப்புகள்தான் வேலை வாய்ப்பை பெற்றுத் தருகின்றன. நல்ல கல்லூரிகளில் இதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஒரு விவசாயக் கல்லூரியில் அதிக அளவில் சிவில் சர்வீஸ் எழுத வைக்கின்றனர். நிறைய மாணவர்கள் அதில் தேர்வு பெற்று அரசு வேலையில் இருக்கின்றனர். இது போன்ற வழிகாட்டுதல்கள்தான் அவர்களுக்கு தேவை.அதற்கு அவர்களை தயார் செய்ய வேண்டும். உங்கள் கட்டாயத்தினால் அவர்கள் படித்தால், நல்ல நிலையை அமைத்துக் கொடுக்கலாம். ஆனால் வேறு சில விசயங்களில் நாம் விட்டுத்தர வேண்டியிருக்கும். " நான்தான் படிக்கிறேன்ல. இந்த விசயத்தில் தலையிடாதீர்கள்" என்று பேரம் பேசுவார்கள். நாம் விலக்கி வைக்கப்படுவது மட்டுமல்ல அவர்கள் தலைகீழாக மாறிப்போவதும் இந்த இடத்தில்தான். மற்றவர்கள் முன் பெருமையாக பேசுவதற்காக இது போன்ற பேரங்களை நடத்தக்கூடாது. இந்த பெருமையெல்லாம் தற்காலிகமானது.
அதைவிட "உன்னுடைய விருப்பம் போல் படி. நான் உன் துணைக்கு இருந்து உன்னை உன் பாதையிலேயே சிறப்பான நிலைக்கு கொண்டுவருவேன்." என்ற உங்கள் ஆதரவு அவர்களை வழி தவற வைக்காது. எந்த பிரச்சினை என்றாலும் அவர்கள் நம்மிடம் ஆலோசனை செய்வார்கள். வாழ்க்கையின் அடுத்தபடிக்கு செல்லும் போதும் என் குடும்பம் என் பெற்றோர் என்கிற எண்ணம் இருக்கும். நான் சொல்வது காதல், கல்யாணம் என்று தடம் மாறிப்போவதைதான். இது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
இது போன்ற பதிவுகள் செய்யும்போது படிப்பவர்களுக்கு ஏதாவது கருத்து இருக்கலாம். விளக்கம் தேவைபடலாம். அவற்றை கேள்வியாக கருத்துரைமூலம் பதிவு செய்தால் , இந்த தொடரின் கடைசி பதிவில் விளக்கம் தரமுடியும் (frequently asked questions). அப்போதுதான் இந்த பதிவின் நோக்கம் முழுமை பெறும்.
இன்பத்தை இனிதெனவும் - துன்பம்
இனிதில்லை யென்றுமவன் எண்ணுவத்தில்லை
அன்பு மிக உடையான் - தெளிந்
தறிவினில் உயிர்க்குலம் ஏற்றமுறவே .......
- கண்ணன் என் தந்தையில் மகாகவி பாரதியார்
குடும்ப உறவில் முரண்பாடுகள் தவிர்ப்பது எப்படி? - பாகம் 5