மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

    இப்போது நாம் பல வகையான பிரிவுகளில் பிள்ளைகளின் மனமாற்றங்களை பார்க்கலாம். முதலில் தப்பே செய்யாமல் தவறு செய்த சூழ்நிலையில் சிக்கிக் கொள்பவர்கள். இந்த வகையில் உங்கள் பிள்ளைகள் இருந்து அவர்களை நம்பாமல் நீங்கள் கேட்கும் கேள்விகளும், சந்தேகமான பார்வைகளும் , உங்களையும் அறியாமல் சொல்லும் வார்த்தைகளும், அவர்கள் மனதில் ஒரு மூலையில் குவிந்து கொண்டே இருக்கும். "பீலி பெய் சாக்காடும் ..." போல ஒரு நாள் பாரம் கூடி உங்களுக்கு அந்த மனதில் இடம் இல்லாமல் செய்து விடும். இங்கே லட்சுமணன் கோடு மதிக்கப்படமாட்டாது. யோசித்துப் பார்த்தால் அந்த கோட்டினை நாம்தான் தாண்டியிருப்போம். சரி செய்ய நாம்தான் தணிந்து போக வேண்டும். அவர்கள் இப்போது முரட்டுத்தனம், பிடிவாதம் நிறைந்த குழந்தைகளாகக்கூட இருக்கலாம். ஏதோ ஒரு புள்ளியில் மாறிப்போன அவர்கள், மனதிற்குள் இன்னும் குழந்தைகளாகவே இருப்பார்கள் - எத்தனை வயதானாலும்.... மென்மையான உங்களுடைய அன்பு அவர்களை சரி செய்யும்.

      இரண்டாவது வகையில் தவறு செய்துவிட்டு அதை மறைப்பவர்கள். இங்கேயும் நாம்தான் காரணமாவோம். முதல் தவறை அவர்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையினால் கவனிக்காமல் விட்டுவிட்டு அதே பாதையில் செல்ல விடுவது. அவர்களை நீங்கள் புரிந்து கொள்ளும்போது , கோட்டை தாண்டியது அவர்களாகவே இருப்பார்கள். . ஆனால் ஒன்று உங்களுடைய அன்பு உறுதியாக இருந்து, அவர்களை திருத்த வேண்டும் என்று நினைத்தீர்களானால் கண்டிப்பாக முடியும். நல்ல முயற்சிகள் , நண்பர்களின் ஆலோசனை , சில சமயம் மருத்துவர்களின் ஆலோசனைகூட பெறலாம். நம் ஆழ்மனதின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். ஒரு போதும் எக்கேடோ கெட்டு ஒழியட்டும் என்று நினைக்காதீர்கள். உலகத்தின் பார்வையில் நன்மதிப்பை அவர்கள் பெறும்போது லட்சுமணன் கோடு மீண்டும் உருவாகியிருக்கும்.

     சில சமயம் உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டு தங்கள் உலகில் பார்வையில் சிறந்தவர்களாக, பொறுப்பானவர்களாக இருக்கலாம். அவர்கள் மீதுள்ள உங்கள் அன்பில் எந்த தவறும் இல்லாமல் கூட இருக்கும். உங்கள் வாழ்க்கைமுறை சிக்கல்களால் அவர்கள் மனதளவில் விலகி இருக்கலாம் ( விவாகரத்து, மறுமணம், துணையை இழந்த கவலையில் சிறு வயது பிள்ளையிடம் பிரியம் காட்டாமல் இருந்தது ....) . இங்கே கோட்டை யாருமே தாண்டியிருக்க மாட்டார்கள், கோட்டின் நிறம்தான் - பொன்னிறம்- கறுப்பு நிறமாகியிருக்கும். வேறு வழியேயில்லை அவர்கள் காலப்போக்கில் உங்களின் அன்பை உணர்ந்து திரும்பிவரும்வரை காத்திருக்க வேண்டியதுதான்.

    வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நின்று யோசிக்கும்போது இந்த லட்சுமணன் கோட்டை நாம் மதித்ததனால் உறவுகள் சூழநிற்பது புரியும் - என்ன நமக்குத் தேவையானவர்களிடம் மட்டும் அதனை காத்திருப்போம்.
நிறைவான வாழ்க்கை என்பது மன நிறைவில்தான் உணரப்படும்.

லட்சுமணன் கோடு. Part-2 

6 comments:

///உங்கள் பிள்ளைகள் உங்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டு தங்கள் உலகில் பார்வையில் சிறந்தவர்களாக, பொறுப்பானவர்களாக இருக்கலாம்.///

உண்மை தான்... நம் பிள்ளைகளின் பெருமை நமக்கு தெரிவதில்லையே...

நம் பிள்ளைகளின் பெருமை நமக்கு தெரிவதில்லை என்பதுதான் உளவியல் ரீதியான பிரச்சினை. நன்றி திரு பிரகாஷ்

//மென்மையான உங்களுடைய அன்பு அவர்களை சரி செய்யும்.//

//நிறைவான வாழ்க்கை என்பது மன நிறைவில்தான் உணரப்படும்.//

சத்தியமான வார்த்தைகள்
பகிர்விற்கு நன்றி

பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பும் கோபமும் எவ்வளவுத் தவறோ அந்த அளவுக்கு செல்லமும் தவறு

கருத்துரைக்கு நன்றி ராஜி. மென்மையான வார்த்தைகளுக்கு எப்போதுமே மதிப்பு உண்டு.

சரிதான் திரு.எல்.கே. அவை இரண்டுமே வரையறுக்கப்பட்ட எல்லைகளை உடையன