மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

        நேற்றைய  பதிவில் நான் குறிப்பிட்ட லட்சுமணன்  கோடு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இடையிலும் இருக்கும் ( கணவன் மனைவி தவிர்த்து) . அது நாம் மற்றவர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைகையை உறுதி படுத்தும் எல்லை கோடு. எல்லையை தாண்டினால் நம்பகத்தன்மை பாதிக்கப்படும். அதனால் நம்மைவிட்டு விலகி விடுவார்கள்.  மற்றவர்கள் எனில் சற்று பொறுமையாகவோ, சில சமயம் தானாகவே இந்த விலகல் சரி செய்யப்பட்டு விடும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை பிரிந்த உறவுகளை மீண்டும் இணைக்கும் பாலமாக மாறும்.  இடைபட்ட நாட்கள் நம்மை பாதிக்காது.  இந்த பாதிப்பு பிள்ளைகளுக்கும்பெற்றவருக்குமிடையே வந்தால்....?

          பிள்ளைகள் பற்றி நான்  இங்கு ஏன் சொல்கிறேன் என்றால், அவர்கள் தான் நம் இன்றைய பெருமை,  நாளைய நம்பிக்கை. இந்த உறவுமுறை நம்பிக்கையிழந்து விட்டால்,  கடமை தவறியதாகிவிடும்.  நம் வாழ்க்கையும் பாதிக்கப்படும். ஆலமரமும் அதன் விழுதுகளும் ஒன்றின் மேல் மற்றொன்று நம்பிக்கை வைத்திருக்க வேண்டுமல்லவா?  நம் பிள்ளைகளிடம் நாம் நினைத்தபடி தடங்கல் இல்லாமல் உரையாட முடிந்தால் நாம் லட்சுமணன் கோட்டை பராமரித்து வருகிறோம் என்று பொருள்.

        உதாரணமாக , புதிதான நட்பு ஏற்பட்டால் உங்களுக்கும் தெரிவிப்பது. வெளியில் செல்லும் முன் சொல்லிவிட்டு செல்வது. தொலை தூரம் எனில் முன்கூட்டியே தெரிவிப்பது. அன்றைய நாளின் நடப்புகளை பகிர்ந்து கொள்வது.   எதிர்காலத்திட்டங்களை பற்றி ஆலோசிப்பது. வீட்டின் பொருளாதார நிலையை கலந்துரையாடுவது  (வளமான வங்கி இருப்புகள், சேமிப்புகள்  பற்றி சொல்லத்தேவையில்லை , அவர்கள் பொறுப்பை உணரும்  அளவிற்கு தெரிவித்தே ஆகவேண்டும்.) ஆகியவை நல்ல அறிகுறிகள்.


      இந்த எல்லைக்கோடு எப்போதெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று பார்க்கலாம். பிள்ளைகள் பெரியவர்களாகும் போது முதன் முதலில் வெள்ளை மனதோடு தாங்கள் செய்த தவறினை மனமுவந்து ஒப்புக்கொள்ள வந்த போது நம்முடைய வெளிப்பாடு தவறாக இருந்திருக்கலாம். தவறின் முதல்பகுதியை மட்டும் சொல்வதாக மனதிற்குள் நினைத்து வாய் வார்த்தை வெளிவந்திருக்கலாம். உதாரணமாக , பையனின் சட்டையில் புகை பிடித்த வாசம் வருவது ( அநேகமாக பையன்கள் செய்யும் முதல் தவறு 
இதுவாகத்தான்  இருக்கும்), பெண்ணிற்கு அடிக்கடி அலைப்பேசி அழைப்பு வருவது, பரிசுப் பொருட்கள் இருப்பது ( சில அப்பாவி பெற்றோர்கள் தங்களுடைய சொந்த எண்ணையே தந்து பேசச்சொல்வார்கள், வரம்பு மீறி எதுவும் நடக்காதாம்...?). இது போன்றவற்றிற்கு அவர்கள் தரும் விளக்கங்களை நம்புங்கள் - தேநீர் கடையில் நண்பனுக்காக நின்றபோது பக்கத்திலுள்ளவர் புகை பிடித்தது எனலாம், தோழி தந்தது எனலாம்- அந்த சமயத்தில் விட்டுப்பிடியுங்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம் 1 சதவிகிதம் என்றாலும் நம்புங்கள். ஆனால் , இது போன்ற தவறுகளின் பின் விளைவுகளை உன் நட்பிடம் சொல் என்று சில உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் தர மாட்டார்கள். நான் சொன்ன லட்சுமணன் கோடு இங்குதான் வருகிறது. நீங்கள் கோடு போட்டதாகவும் இருக்கும் , அவர்களை நம்புவதாகவும் இருக்கும். அதனால் கோடு தாண்டுதல் குறையும். ஒரு விசயம் - இருந்தாலும் உங்கள் பிள்ளையின் நடவடிக்கையில் ஒரு கண் வைத்திருங்கள். 
                                                                                         - நாளை கட்டாயம் கடைசி பகுதி

லட்சுமணன் கோடு. Part-1 

12 comments:

இந்த காலத்துல பிள்ளைங்க விஷயத்தில் ரொம்ப ஜாக்குரதையா இருக்கணும்....அருமையான பதிவு....

ஹேய் வடையும் எனக்கா....

நன்றி திரு.மனோ. அது என்ன இரண்டாவது கருத்துரை புரியவில்லை . தப்பா போட்டீங்களா?

// லட்சுமணன் கோடு, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இடையிலும் இருக்கும் ( கணவன் மனைவி தவிர்த்து) //

உண்மையில் நடப்பு காலத்தில் (விவாகரத்து பெருகி வரும் இக்காலத்தில்)
தம்பதிகளுக்குள்ளும் கூட
இது அவசியமாகி விடுகிறது சாகம்பரி.

//எல்லையை தாண்டினால் நம்பகத்தன்மை பாதிக்கப்படும்.//

இது எந்த உறவிற்கும் பொருந்தும்

//உங்கள் பிள்ளையின் நடவடிக்கையில் ஒரு கண் வைத்திருங்கள்//

இது பெற்றோர்கள் அவசியம் அறிய வேண்டிய விழிப்புணர்வு வாக்கியம்

//MANO நாஞ்சில் மனோ said...
ஹேய் வடையும் எனக்கா..//

திரு மனோ அவர்களின் இரண்டாவது கருத்துரைக்கு அர்த்தம் :

பதிவுலகில் முதலில் கருத்துரை இடுபவர்கள்
கூறும் வார்த்தை (ஹை! நான்தான் ஃபர்ஸ்ட்டா? என்று அர்த்தம் சாகம்பரி)

இரண்டாவதாக கருத்துரை இடுபவர்கள்
ஹை!பஜ்ஜி எனக்கா என்றும் எனக்கு காபியா அல்லது
எனக்கு டீ யா? என்றெல்லாம் போடுவதுண்டு

அருமையான விளக்கம் ராஜி..

இந்த காலத்தில் பிள்ளைகளை நன்றாக வளர்ப்பதும் ஒரு சாதனையே...

நன்றி ராஜி . வடை பற்றி அறிந்து கொண்டேன். அது நண்பர்கள் மத்தியில் இருக்கும் சங்கேத குறியீடு என நினைத்தேன்.

கோடு, சதுரம் போன்ற எல்லைகளெல்லாம் கண்வன் மனைவிக்குள் இருக்கக்கூடாது என்று நினைப்பவள் நான். புரிந்து கொள்ளும் தன்மை, மன்னிக்கும் தன்மையும் இல்லாதவர்களுக்கிடையே இந்த கோடு போடலாம். . இறைவனிடம் உண்மை அன்பு வைத்திருப்பவர்கள் சாயாரூபம் அடைவார்கள் - இறைவனின் உருவத்தை அடைதல் என்பார்களே, அது போல , நீ நானாகி..., நான் நீயாகி... என்னும் உறவிற்கு இடையே கோடு எங்கே போடமுடியும். ஆனால் அது உண்மையான அன்பிற்கு கிடைக்கும் ஒரு வரம் ராஜி. முடிந்தவர்கள் முயற்சித்து அடையட்டுமே. கோடு வேண்டாம். நன்றி ராஜி.

கருத்துரைக்கு நன்றி திரு.கருன். பிள்ளைகள் நன்றாக வளர்ப்பதில் தனி கவனம் எடுத்தால் பெருமைதான்.

சிறுவயதில் இருந்தே பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேசி பழகினால், பின் வளர்ந்து பதின்மம் வரும் பொழுது நம்மிடம் எதையும் மறைக்க மாட்டார்கள்