பதின் வயது பிள்ளைகள் இருக்கும் இல்லத்தில் இன்றைக்கு இருக்கும் தலையாய பிரச்சினை கேள்வி கேட்பதுதான். கேள்வி கேட்பது ஒரு பெரிய கலை. கேட்பவரின் நோக்கம் அல்லது வழிகாட்டுதல் , கேட்கப்படுபவரின் தற்போதைய நிலை , நோக்கம் ஆகியவற்றை தெரிவிப்பது அல்லது தெரிந்து கொள்வதுதான், கேள்வியின் காரணம். நம்மை நம் பெற்றோர் கேள்வி கேட்டனர் நாம் பதில் சொன்னோம். நமக்கும் அவர்களுக்கும் எழுதப்படாத ஒரு புரிதல் ஒப்பந்தம் இருந்ததால் சரியான பதில் சொல்லி தெளிவுபடுத்தினோம்.
உதாரணமாக " ஊரிலிருந்து தாத்தா எப்ப வரார்?" என்ற கேள்வி கேட்டவுடன் - தாத்தா வருவது அப்பாவிற்கு எப்படி தெரியாமலிருக்கும்? - நம்முடைய பங்களிப்பை உறுதி செய்வதற்காக கேட்கப்படும் கேள்வி. அதற்கு பதிலாக " வெள்ளிகிழமை வர்றார். நான் போய் அழைத்து வருகிறேன். மறுநாள் கோவிலுக்கு போக அக்கா பார்த்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறாள் ....." என்று இன்னபிற விசயங்களும் இருக்கும். " கல்வி சுற்றுலா போயே ஆக வேண்டுமா?" என்று கேட்டால், பணசிக்கல், நம்முடைய பாதுகாப்பை தெரிந்து கொள்ள, சில சமயம் கிரக நிலை சரியில்லை என்றால் கூட தடுப்பு கேள்வி வரும். நாம் அதை புரிந்து கொண்டு அதற்கேற்ப பதில் சொல்லுவோம். பதில் கேள்விகள் கேட்டதாக எனக்கு நினைவில்லை.
கேள்வி என்பது நம் மேல் வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடாகக்கூட இருக்கும். அதன் பின் தொக்கி நிற்கும் உண்மையான நோக்கம் புரிந்து கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கிடையே ஒரு புரிதல் இருக்க வேண்டும்.அதே சமயம் இருவருக்கும் இடையே தாண்டக்கூடாத லட்சுமணன் கோடு கண்ணுக்குத் தெரியாமல் நிற்கும். அது ஆயிரம் எதிர்பார்ப்புகளை தூண்டிவிடும். ஒரு நேர்மறையான எண்ணம் நமக்குள்ளே எழுந்து நம் நன்மைக்காகவே என்று நினைக்க வைக்கும். இது இப்போது இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.
பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் இடைவெளி குறைந்து விட்ட இந்த காலத்தில் , புரிந்து கொள்ளூதல் அதிகரித்து இருக்க வேண்டும் - பையனுடைய சட்டையை அப்பா போட்டுக்கொள்வது, அப்பா வண்டியை மகன் ஓட்டிச் செல்வது போன்றவை இடைவெளியை குறைக்கின்றன. மனநல மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த இடைவெளி குறைத்தல் சரியாக வேலை செய்கிறதா? முன்பு " ஏன் இன்றைக்கு இவ்வளவு நேரம் கழித்து வருகிறாய் " என்றால் , சில சமயம் கேட்கும் முன்பே சொல்லி விடுவோம். தொலைபேசி அரிதாக இருந்த காலத்திலேயே, முன் கூட்டியே தெரிவித்து விடுவோம். ஆனால், இப்போது என்ன நடக்கிறது சரியான பதில், உண்மையான பதில் கிடைப்பதில்லை. அப்போது மட்டும் உண்மையா சொன்னோம்? என்று கேட்க வேண்டாம், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஊரில் நம் நடவடிக்கையை பற்றிய தகவல் நமக்கு முன்பாகவே வீட்டிற்கு சென்றுவிடும். எனவே பொய் சொல்லவோ தப்பு செய்யவோ வாய்ப்பிருக்காது. தொழில் காரணமாக ஆங்காங்கு பிரிந்து வாழும் இன்றைய நிலையில் இந்த தகவல் பரிமாற்றம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே நம் பிள்ளைக்கும் நமக்குமான உண்மை உரைகல் அடிக்கடி சரிவர தீர்ப்பு சொல்வதில்லை. கேள்விகள் எதிர்மறையான எண்ணங்களை அவர்களுக்கு தெரிவிக்கின்றனவே. ஏன்?
சரி நாம் அந்த லட்சுமணன் கோட்டின் அவசியத்தையும் , அதை பிள்ளைகள் நோகாமல் எப்படி இடுவது என்றும் பார்க்கலாம்.