தவறு புரிந்து போனது
எப்படி பொறுத்து கொள்வது
தவறு மனதிற்கு பட்டபின்
திருத்துதல் கடமை
வேதியியல் மாற்றம்
மூளைக்குள் உருவாகி
வயிற்றுக்குள் இறங்கி
ஒரு பேரலை உருவானது
எத்தனை பயிற்றுவித்தும்
பொறுமை மறந்து போய்
எண்ணங்கள் ஒலியாயின
வார்த்தைகள் ஏவுகணையாய்
இலக்கினை தாக்கின
எதிர்புறமோ எதிர்ப்பின்றி
வரவர வாரிக்கொள்ளும்
நுரையலை கடலானது
அகராதியில் உள்ள
அத்தனை வசை பாடலும்
முடிந்த பின்னும்
பரிதாபமான பார்வை
ஆனாலும்.....
ஏன் இப்படி கேசம் கலைந்து...
சிவந்து போன கண்கள்...
கண்ணாடியில் என் முகம்
கலங்கித் தெரிந்தது
எனக்கு மட்டுமே புரிந்த
என் தவறு வெளியில்
தெரியாத சில சமயம்
இப்படித்தான் ஆகிறது
தவறு செய்த நான்
கண்ணாடிக்குள் நிற்க
மனசாட்சி நீதிபதியாக
மறுக்க முடியாத
தீர்ப்பு சொல்லத் தயாரானது!