குழந்தையாய் இருந்த நாளிலிருந்து பெரியவர்களாக நாம் மாறும் வரை நம்மை உருவாக்குவது சூழ்நிலைதான். புலங்களின் வழியாக உள்ளிடுதலாக நமக்குத் தரப்படும் செய்திகள் பல்வேறு அர்த்தத்தை தரக்கூடியவை. எந்த விசயமும் நம்மை பாதிக்காத வகையில் பகுத்துணரவேண்டும். அது நமது உள்ளத்தை பாதிக்காதபடி மாற்றிக் கொண்டால், எல்லாம் நன்மைக்கே என்ற தத்துவம் புரிந்துவிடும். அதற்காக பாராட்டுதல் கிட்டும்போது ஞானி போல் இருக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை. அந்த நேர சந்தோசம் இதயத்திற்கும் மூளைக்கும் நல்லது. ஆனால் அதற்கு எதிர்மறையாக நடந்துவிட்டால், உடனே துவளத் தேவையில்லை. உதாரணமாக யாராவது திட்டிவிட்டால், திட்டுபவரின் தகுதியை எடை போட்டு நாம் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவோம். சமயத்தில் மனதிற்குள்ளேயே பதில் பேசிக்கொள்வோம். திட்டியது
- அப்பா, அம்மா எனில் வருத்தம் போல காட்டிக்கொள்வோம். உணவை புறக்கணிப்பது, ஒத்துழையாமையை கடைபிடிப்பது போன்றவை நடைபெறும். சில சமயம் மிரட்டல் கூட விடுவோம். வீட்டைவிட்டு ஓடிப்போய் விடுவேன் என்று. இது போல் நடந்து கொள்வது வாழ்க்கைத் தடம் மாறிவிடும். ஏனெனில் பெற்றோர் பயந்துபோய் தவறுதல்களை சுட்டிக் காட்டமாட்டார்கள். ஓடிப்போனவன்கூட வாழ்க்கையை புரிந்து கொள்வான், இதுபோல் மிரட்டுபவன் தன்னிலை அறிய நாட்களாகும். காலம் தவறியும் போகலாம். அதை விட குறையை ஒப்புக்கொண்டு திருத்திக் கொள்ள முயற்சிக்கலாம்.
- நலம் விரும்பிகள் அல்லது பிரியத்துகுரியவர் எனில் அந்த நிமிடம் எதிர்த்துப் பேசி அவர்கள் வாயை மூட முயற்சிப்போம். ஆனாலும் மனதிற்குள் உண்மையை ஒப்புக் கொண்டு தவறை திருத்த முயற்சிப்போம்.
- நமக்குப் பிடிக்காதவர் நம்மை குறை சொன்னால்தான் பிரச்சினை. பதிலுக்கு நாமும் வாய் பேசி பெரிய ரகளை செய்து நம்முடைய தரப்பை உறுதி செய்வதாக நினைத்துக் கொண்டு தரத்தை தாழ்த்திக் கொள்வோம். அவர்களை எதிரியாக்காமல் ஓயமாட்டோம். உண்மையென்னவெனில் நமக்குப் பிடிக்காதவர்கள்தான் நம்மை வளர்த்துவிடுபவர்கள். "இவனெல்லாம் சொல்கிற அளவிற்கு நாம் குறைந்துவிட்டோமா" என நினைத்து நம்மை உயர்த்த பார்ப்போம். குறைகளை சரி செய்வோம்.
அதனால் நான் சொல்வது என்னவென்றால் எதிரிகளை அல்ல, எதிர்ப்புகளை எதிர் நோக்குங்கள். தகர்த்தெறிய பாருங்கள் , உங்கள் தரத்தை உயர்த்திக் கொள்ளுங்கள். அடுத்த முறை இன்னும் பெரிய எதிர்ப்பை எதிர் நோக்க தயாராகுங்கள். எதிர்ப்பு இல்லைவெனில் அடுத்த அடிக்கு செல்லும் உந்து விசை குறைந்து விடும்.