ஒருவேளை பெண்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி எழுத பெண் எழுத்தரால்தான் முடியும் என்றும் பெண் எழுத்திற்கு முகவுரை கூறுகிறார்களோ? பெண் மனதின் மென்மையை எழுத்தால் தெரிவிக்க முடியுமா என்ன? குடும்பத்தின் அச்சாணியாய் திகழும் பெண்ணின் எண்ணங்களை தனிப்பட பிரித்து பேசமுடியாது. கணவனுக்காய் சிந்திக்கும்போது ஆணின் மனமும், குழந்தைகளுக்காய் சிந்திக்கும்போது குழந்தையின் பார்வையும் கொண்டு அவரவர்க்கு உரியதை முழுமையாக தந்து தன்னையும் சிறப்பாக பார்த்துக் கொள்ளும் பெண்ணை பற்றி ஆண்களுக்கும் தெரியாது. எப்போதும் தன்னுடைய எண்ணங்களை மனதிற்குள் வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்பதை தனக்குள்ளேயே முடிவெடுத்து அதனை மற்றவர்க்கும் புரியவைத்து அவர்களின் முடிவுபோல் செயல்பட வைக்கும் குடும்பத்தலைவியின் திறமை ரகசியம்தானே. கலாச்சாரத்தின் அச்சாணியாய் திகழும் பெண்ணின் ஆழ்மனம் மூடி வைக்கப்பட்டுத்தான் இருக்க வேண்டும். இல்லையென்றால், பாதுகாப்பு இல்லாமல் போய்விடும் என்று நான் கருதுகிறேன். அகத்தியனின் 'விடுகதை' படம் பார்த்துவிட்டு மகள் வயதிலுள்ள சின்னப் பெண்களிடம் தவறான பார்வை பார்த்த ஆண்கள் எத்தனை பேர்? ஒரு நுணுக்கமான உளவியல் பிரச்சினை தவறான விளைவுகளை ஏற்படுத்தியது. இது போல்தானே மற்றவைகளும் தவறாக கையாளப்படுகின்றன.
ஆண்கள், பெண்ணை பற்றி எழுதும் செய்திகள் உறுதியாக்கபட்ட செய்திகள் கிடையாது. செயல் படுத்துவதில் ஒரு சந்தேகம் இருக்கும். ஆனால் ஒரு பெண் நுணுக்கமான உணர்வுகளை பற்றி எழுதுவது, எலியை பிடிக்க பூனைக்கு வரைபடம் போட்டுத்தருவது போலாகிவிடும். ஒரு திறமையான பெண் எழுத்தாளர் இது போன்ற விசயங்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல எழுத முடியும். இதுபோன்ற எழுத்துகளினால், கல்வியறிவில் அடி மட்டத்தில் இருக்கும் பெண்களின் வாழ்க்கையையே குலைத்துவிடாதா. இது போன்ற ஒரு பார்வைதான் 'இரண்டு பேர்' கதையிலும் அன்றைக்குப் பார்க்கப்பட்டது.
ஏன் ஆண்களை பற்றி தவறாகவே நினைக்கிறீர்கள். என் நண்பன் என்னை பற்றித் தெரிந்து கொள்வது தவறா என்று எண்ணலாம். நண்பனின் நண்பனுக்கு யார் நன்னடத்தை சான்றிதழ் தருவார்களாம். ஒரு ஊடகத்தில் எழுதப்படும் எழுத்துக்கள் பரவலாக பலரை சென்று அடையும். இங்கு ஒரு சமுதாய பொறுப்பு இருக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். படித்த தெளிவான பெண்கள், மற்ற பெண்களின் பாதுகாப்பு பற்றி கவலைப்பட வேண்டும். மாதவிடாய் சமயத்தில் பெண்ணின் உணர்வுகளை நுணுக்கமாக எழுதிய பெண் எழுத்தரின் எழுத்து பெரிய அளவில் பேசப்பட்டது, ஆனால் அதன் பாதிப்பு மிக மோசமானது. (எழுத்தாளரின் பெயரையும், சொன்ன விசயத்தையும் எழுத விரும்பவில்லை நான்.). இருபது வருசத்திற்கு முந்தைய வாசிப்பாளினிகளுக்கு புரியும்.
நாசுக்கான விசயங்களை பெண்கள் கையாள வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது தேவையும் இல்லை. இது போன்ற விசயங்கள் ஒரு சிறந்த எழுத்தாளரை வேண்டுமானால் அடையாளம் காட்டலாம். ஆனால், ஒரு நல்ல எழுத்தாளரை தொலைத்துவிடும். வெறும் புகழுக்காக எழுதுவதாக புகார் வேறு எழும். காதல்,பாசம்,அன்பு,குடும்பப் பின்னணி, சமூகப் பார்வை, மருத்துவம்,மன வளம் இவற்றுடன் ஒரு சக்கர வியூகத்திலிருந்து வெளி வரும் நுட்பமான அறிவினை வளர்க்கும் பெண்களின் தன்மானம், வீரம், நெஞ்சுரம், முன் யோசனை போன்றவற்றை எழுதலாமே. எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது உங்கள் பதிலானால் பெண் எழுத்து என்கிற வார்த்தையே தேவையில்லை என்றுதான் பொருள்.
என் பார்வையை பதிலாக தந்துள்ளேன், நிறைய திட்டு விழுந்தாலும் ஒன்றிரண்டு மயிலிறகு வருடல்கள் கிட்டும் என்று நம்புகிறேன். இந்த தொடரினை தொடர அமைதியான அழகான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆன பதிவர் இராஜராஜேஸ்வரியையும், அருமையான மன வளக்கட்டுரைகள் எழுதும் சக பதிவர் சண்முகவேலையும் அழைக்கிறேன்.