இவர்கள் உலகத்தின் பார்வையில் சின்னவர்கள். நம்மை போன்று சுய சிந்தனை இல்லாதவர்கள். நாம் சொன்னதை கேட்கும் பொம்மைகள். பசி, உறக்கம் போன்றவற்றை மட்டுமே உணர்ந்தவர்கள், அவர்கள் அழுகைக்கூட அதற்கு மட்டுமே என்று நினைத்தோம். அவர்களுக்கு என்று சுய விருப்பம் இல்லாதவர்கள், தேர்ந்தெடுக்கத் தெரியாதோ என்று நாம் சந்தேகிக்கிறோம். ரொம்ப நாட்களாகவே அவர்களை நாம் சரிவர புரிந்து கொண்டதில்லை. உண்மையில் அவர்களுடைய உலகத்தின் மொழி தெரியாத அறியாமையில் சிக்கி இருப்பவர்கள் நாம்தான். அப்படி நாம் குறைத்து மதிப்பிடுவது குழந்தைகளைத்தான்.
வயிற்றில் இருக்கும்போதே குழந்தை ஒலியலைகளை உணரத்தொடங்கிவிடும் - பிரகலாதன் கதை, அபிமன்யுவின் கதை இதனை ஆதரிக்கிறது. ஆனால் இது வெறும் புராண மேற்கோள் மட்டுமல்ல அறிவியல் உலகத்தின் உறுதிபடுத்தப்பட்ட உண்மையும் இதுதான். அம்மாவின் சுவாசம் வழியாக அவர்கள் உலகத்தின் அதிர்வையும், ஒலியையும் உணர்கிறார்கள், நல்ல எண்ணங்கள் தேவக்குழந்தைகளை உருவாக்குகின்றன. பிறந்தபின் ஒளிவடிவங்களையும் புரிந்து கொள்கிறார்கள். பல சந்தேகங்கள் இருந்தாலும் நம்மிடம் தொடர்புகொள்ள முடியாமல் , நினைவுகளில் தேக்கி வைக்கப் படுகின்றன. பொதுவாக சின்ன குழந்தையிடம் பேசும்போது மம்மம் , தயி மம்மம் , பிக்கா என்று நாம் பேசுவோம். உண்மையில் நம்முடைய மொழியை சரிவர பேச முடியாமல் அப்படி ஆகிறதே தவிர அது அவர்களின் மொழியல்ல. அதை ஒரு மொழியாக நினைத்து நாம் பேசும்போது அவை சிரிக்கக்கூட செய்யும் ( நாம்தான் பாப்பா சீக்குது... என்று மேலும் காமெடியாகி விடுகிறோம்)
என் தம்பி மகள் இரண்டு வயதுதான், கோவிலுக்கு மகிழுந்தில் செல்கையில், சாலையின் இருபுறமும் மலைகள். அவள் பேச ஆரம்பித்த பின் முதல் தடவையாக மலைகளை பார்க்கிறாள். " அது என்ன ?" என்றாள். "மலை" என்றோம். இதே கேள்வியை அனைவரிடமும் கேட்டாள், எங்கள் பதில் "மலைதான்". சந்தேகமாக அவள் பார்க்கவும் நாங்கள் சுதாரித்து "அது என்ன பாப்பா?" என்றோம். " மண்ண குவிச்சு வச்சிருக்காங்க " என்றாளே பார்க்கலாம் ( அதுதான் உண்மையென்று புவியியல் அறிஞர்கள் கருத்து. பூமித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதியபோது நிலப்பகுதி உயர்ந்து மலைகளாகியதாம்.). குழந்தைகளுக்கென்று தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. இதுபோல கோர்வையாய் நான் பேச ஆரம்பித்தது என்னுடைய ஐந்தாவது வயதில்தான், அதற்குள் சுற்றி இருப்பவர்கள் உலக அகராதியை எனக்குள் புகுத்திவிட அவர்கள் சொல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இப்போதைய ஒலி மற்றும் ஒளி வடிவமான உலகத்தில் அவர்களுக்கு பல விதமான உள்வாங்குதல் உள்ளது. எதிர்வீட்டு குட்டிப் பெண்- நான்கு வயதுதான், கோபமாக இருந்தாள். அப்பாவிற்கும் பெண்ணிற்கும் சண்டையாம். விசாரிக்கலாம், என்று நான் எண்ணி ஆரம்பித்து தப்பாகிவிட்டது. " அப்பா அடித்தாரா... " என்றேன். அவள் தன்மானத்திற்கு இழுக்கு வந்துவிட்டாற்போல அதி வேகமாக "இல்லை... இல்லை திட்டினாரு" என்று உர்ரென்று முறைத்தபடி கூறினாள்.. "அடித்திருந்தால் அவள் அப்பா கதி அவ்வளவுதான் போல"என்றேண்ணிக்கொண்டேன். பத்து வயதில் நாம் பெற்றிருந்த வளர்ச்சியை ஐந்து வயதிலேயே பெற்று விடுகின்றனர்.
நவீன உலகத்தில் குழந்தைகளின் அதிவேக உள்வாங்குதலை புரிந்து கொள்ளாமல், நாம் பழையபடியே பேசிக்கொண்டிருந்தால், மக்கு பெரியவர்களாகி விடுவோம். நம்முடைய எதிர்கால திட்டத்தில் அவர்களுக்கான உலகமும் இருப்பதை புரிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் , இந்த குட்டி மனிதர்களிடம் நம்முடைய தவறுகளுக்கு விளக்கம் அளிக்க நேரிடும்.