கண்ணில் வெற்றிடத்தை காட்ட
முட்டிக் கொள்ளும் தூரத்தில்
வாழ்க்கையின் கேள்வி
அடுத்தது என்ன?....
அதை ஆண்டவன்தான்
பார்த்துக் கொள்ள வேண்டும்
எங்கோ ஒரு மூலையில்
நினைவு துளிர்த்தது
கடவுள் எங்கேயிருக்கிறார்?
கோவிலில்... பூசையில் ....
மணியோசையில் .... மந்திரத்தில்...
எதிலும் காணாமல்
குருவைத் தேடி சென்றான்
கண் திறந்த குருவும்
காட்டிற்குச் செல் என்றார்
வீட்டிலிருந்த மனிதன்
காட்டிற்கு கிளம்பினான்
கடைகோடிக்கு சென்றபின்
கையில் கோடரியுடன்
வரிசையாய் மரங்களின் மீது
கவனமான பார்வையுடன் வந்தான்
கண்ணன் விறகு வெட்டியாய்,
கடவுள் நீயா என்ற கேள்விக்கு
கள்ளச்சிரிப்புடன் ஆம் என்றான்
வியப்பில் கேள்வி எழுந்தது
கையசைவில் எல்லாம் கிட்டும்!
ஏன் விறகு வெட்டும் வேலை?
''வாழ்ந்து பார்த்தால்தான்
வாழ்க்கை ரகசியம் புரியும்
ஏனென்றால்...
அனுபவம் என்பதே நான்தான்"