திருமணம் முடித்து மறுநாள் சொக்கருடன் மீனாட்சி திருத்தேரில் நகர்வலம். இன்றிலிருந்து எட்டு மாதத்திற்கு சொக்கரின் ஆட்சிதான். மீதி நான்கு மாதங்கள் மட்டுமே மீனாட்சி ஆட்சி. புதிய மன்னரிடம் நாட்டு மக்கள் வருகை பதிவு செய்ய வேண்டுமல்லவா அதுதான் தேரோட்டம். எப்போதும் கள்ளழகர் தங்கையின் திருமணத்திற்கு தேருக்கு மறுநாள்தான் தாமதமாக வருவார். எனவே மதுரை மக்கள் அவரை எதிர்கொண்டு அழைக்கும் எதிர்சேவை திருத்தேருக்கு மறு நாள்தான் வரும். இந்த வருடம் தேரில் மீனாட்சி அலங்காரமாக வரும்போதே, மதுரை வந்துவிட்டார் அழகர். தங்கையின் திருமணக்கோலம் கண்டு இந்த முறை கோபிக்கமாட்டார் என்று நினைத்தால் , இந்த முறையும் கோபம் கொண்டு வண்டியூர் சென்று விட்டார். ( புதிய தங்க குதிரை வாகனம் அத்தனை எடுப்பாக இல்லை ஒன்றரை கோடியாம்)
அதனால் என்ன, தேர் திருவீதி உலாவரும்போது இனிமையான காட்சிகள் நிறைய கிட்டின. மனவி மக்கள் அத்தனை பேரையும் ஒரு பாதுகாப்பான இடத்தில் நிற்க வைப்பதும், பலூன், பஞ்சு மிட்டாய் என பிள்ளைகளின் தேவைகளுக்காய் பர்ஸை திறக்கும் குடும்பத்தலைவர்களின் பொறுப்பு. ஊரிலிருந்து வந்திருக்கும் அத்தை அல்லது மாமன் மகளுக்காக முண்டியடித்துச் சென்று இலவசமாக வினியோகிப்படும் பொங்கல், பானங்கள் ஆகியவற்றை வாங்கி வந்து " சாப்பிடுலேய்" என்று சொல்லும் குட்டி முறைமாமன்கள். ( இதில் சுற்றும் முற்றும் பெருமையாய் ஒரு பார்வை வேறு).
எதிர் சேவையின் போது, விரதமிருந்து அழகர் வேசம் போட்டு வருபவர்கள் தண்ணீரை தெளிக்கும்போது நேயர் விருப்பமாக சிலர் கேட்டு நனைந்து செல்வர். இரவு முழுவதும் தண்ணீர் பீய்ச்சும் அவர்கள், மறுநாள் அழகர் மீது தீர்த்தவாரி செய்வதுதான் வேண்டுதலின் முக்கிய கட்டம். புதிதாக மாலை போட்டு இருப்பவர்களுக்கு தண்ணீர் பீய்ச்சத் தெரியாமல் திணறுவது ஒரு வேடிக்கை. ஓரு குட்டி அழகர் ரொம்ப நேரம் திணறிவிட்டு ஒரு துளியை தெளித்துவிட்டு வாய்விட்டு சிரித்தது ரம்மியமான காட்சி.
இந்த சமயத்தில் மதுரையில் எங்காவது நின்று கொண்டு " அவரை எங்கே பார்க்கலாம்?" என்று பொதுவாக கேட்டால்கூட, புதூர் மாரியம்மன் கோவில்,டிஆர்வோ காலனி, டிவிஎஸ் பங்களா என ஏதாவது ஒரு இடத்தை யாராவது சொல்லிவிடுவார்கள். இந்த இடத்தில் அவர் என்பது அழகரைத்தான் குறிக்கும். " அழகர் கண்ணுல சிக்கலேயே " என்பதுபோல தேடி ஓடஓட எங்காவது மண்டகப்படிக்கு மின்னல் வேகத்தில் சென்றுவிடுவார். அழகரை கண்டுபிடிக்க வண்டியில் வரும் உண்டியலையும் சொல்வார்கள். மலையிலிருந்து வரும்போதே அவருடன் ஒர் டஜன் உண்டியல்கள் வரும். உண்டியல் வந்த கால் மணி நேரத்தில் அழகர் வந்து விடுவார். இங்கேயும் இரு சக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக் கொண்டு சந்து பொந்து புகுந்து எப்படியாவது அழகரை பார்க்கவைத்து மனைவியிடம் பாஸ் மார்க் வாங்கி வெற்றி வீரர்களாவது கணவர்களின் கடமை.
என்னது திருவிழாவை பற்றி பக்தியான விசயங்கள் சொல்லாமல் இப்படி ரன்னிங் கமெண்ட்ரியாக வருகிறதே என்று யோசிக்கிறீர்களா. திருவிழாவினால் என்ன நன்மை என்று தெரிய வேன்டாமா. இவ்வளவு களேபரத்தில் குடும்பச்சண்டைகள் குறைந்து இனிமை திரும்புவது நல்ல விசயம்தானே. இந்த நாட்களில் மனதின் பதட்டம் அழுத்தம் குறைந்து ஒரு புத்துணர்ச்சி பரவுவதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இதற்கு மேல் சொக்கர், மீனாட்சி, அழகரின் அருள் எல்லாம் கூடுதல் நன்மைகள். இனிய உறவுகள் உற்சாகம் பெற திருவிழாக்கள் அவசியம். என்ன நான் சொல்வது சரிதானே.