வாழ்க்கையில் முதல் முறையாக தவறிழைக்கும்போது ஒருவித எதிர்ப்பு நம் உள்ளுக்குள்ளிருந்து வரும். அதை அலட்சித்து சில செயல்களை செய்துவிட்டு. பிறகு அதை நினைத்து வருத்தப்படுவோம். ஷேக்ஸ்பியரின் மெக்பெத் கதையில் லேடி மெக்பெத் தன்னுடைய கைகளில் இரத்தக்கறை இருப்பதுபோன்றே ஒரு வித மாயையில் சிக்கி அடிக்கடி கையை கழுவிக் கொண்டே இருப்பாள் - ஏனெனில் ஏற்கனவே அவள் பல கொலைகளை செய்திருப்பாள். நம் பண்டைய இலக்கியங்களில் இது போன்ற செய்திகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. குற்றத்தை உணர்ந்த மறு நிமிடமே உயிர்த்தியாகம்தான் - மதுரையின் பாண்டிய நெடுஞ்செழியன் செய்ததுபோல்- செய்துவிடுவார்கள்.
தற்காலத்தில் நீதி நெறிமுறைகள் சற்று தளர்ந்துவிட்டாலும், குற்றமுள்ள நெஞ்சம் பேசுக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பிடியில் இருந்து தப்பிக்கும் வழியறியாமல் நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதும், இனிய குடும்பத்தை மனதளவில் பிரிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஒரு உண்மை எண்ணவெனில் நம்மை பாதுகாக்கும் சக்திகளாக திகழ்வது அன்புள்ளவர்களின் அருகாமையும், தூய்மையான இதயமும்தான். மேலே நான் குறிப்பிட்ட சூழலில் இவை இரண்டையும் நாம் இழந்துவிடுவோம். விளைவு, மனிதன் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து விலங்கின் போர்வையை போர்த்துக் கொள்ள வேண்டி வரும்.
என்னைப் பொறுத்தவரை குற்றமுள்ள நெஞ்சம் பேசுவதும் பேசிக் கொல்வதும் மென்மையான இதயங்களில் மட்டுமே. ஒரு முறை அதன் பிடியில் சிக்கியவர்கள் வெளி வரத்தெரியாமல் தன்னுடைய இனிமையான சூழலை விட்டு விலகுவதும், அதனால் மேலும் அதே தவறினை செய்து புதை சேற்றில் சிக்கிக் கொண்டு தன்னை தொலைத்தவர்களும் உண்டு. என்றைக்காவது தனிமை கிட்டும்போது தன்னை பற்றிய நினைவு வரும்போது கண்ணில் வரும் நீர் துளிகள் மன்னிக்க முடியாத வார்த்தைகளை தெரிவிக்கும். எனவே இது போன்ற மாய வலைக்குள் சிக்கிக் கொள்ளும் முன் மீளும் முனைப்பு முதல் திருப்பத்திலேயே வந்துவிட வேண்டும். அப்படி வரும்போது மீளும் வழிகளை தெரிந்து கொள்ளுவது முக்கியமான விசயமாகிவிடுகிறது அல்லவா?