தடுப்பார் யாருமின்றி பற்றற்று
ஒரு காற்றாக நான் திரிந்தேன்
சேருவதற்கு இடமில்லாமல்
ஆகாயத்தில் தனித்து திரிந்தேன்
நெருப்புடன் சேர்ந்து பார்த்தேன்
சுற்றியிருப்பவற்றை கொளுத்தி
சிறிய தீயை தூண்டி அழித்தது
காற்றுதான் என்று ஏசினார்கள்
கடலுடன் சேர்ந்து பார்த்தேன்
ஆழிப்பேரலையாகி ஆடினேன்
உயிர் பலிகொண்ட கருவியான
பழிச்சொல்தான் மிச்சமானது.
இனம் இனத்தோடு சேரலாமே
காற்றோடு சேர்ந்து பார்த்தேன்
சூறாவளியாகி சுழன்று வீசிட
மிச்சமும் மீதியின்றி பறந்தது.
வெறுத்துப்போன வேளையில்
சுழன்றாடும் சோழியை பிரித்து
பல்லாங்குழி ஆடுவது போல்
சீற்றம் குறைத்து தணிந்தேன்
சிறிது சிறிதாக பிரிந்து ....
மூங்கிலில் புகுந்து இசையாகி
சந்தன வாசத் தென்றாலாகி
முகை நறுமணம் சுமந்தோடி
சிறிதே பிரணவம் கொண்டு நான்
மூச்சு காற்றாகி உயிரானேன்.