மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

நமக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் ஒரு தவறிழைத்துவிட்டு அதன் பின் விளைவை உணர்ந்தபின் ஏதோ ஒரு சொல்லவொன்னாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும்போது நம் நெஞ்சம் படும் வேதனை சொல்ல முடியாது. அதிலும் தன் தவறான செயல் எண்ணித் தவித்து அதனால் மேலும் ஏதாவது துன்பம் விளையுமோ என்ற அச்சமும் சேர்ந்து கொண்டால் 'ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி' என்று அபிராமி பட்டர் பாடியதுபோல அமைதியிழந்து அலைகழித்துவிடும்.  இதனைத்தான் குற்றமுள்ள நெஞ்சம் என்று சொல்கிறார்களோ?

வாழ்க்கையில் முதல் முறையாக தவறிழைக்கும்போது ஒருவித எதிர்ப்பு நம் உள்ளுக்குள்ளிருந்து வரும். அதை அலட்சித்து சில செயல்களை செய்துவிட்டு.  பிறகு அதை நினைத்து வருத்தப்படுவோம். ஷேக்ஸ்பியரின் மெக்பெத் கதையில் லேடி மெக்பெத் தன்னுடைய கைகளில் இரத்தக்கறை இருப்பதுபோன்றே ஒரு வித மாயையில் சிக்கி அடிக்கடி கையை கழுவிக் கொண்டே இருப்பாள் - ஏனெனில் ஏற்கனவே அவள் பல கொலைகளை செய்திருப்பாள். நம் பண்டைய இலக்கியங்களில் இது போன்ற செய்திகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. குற்றத்தை உணர்ந்த மறு நிமிடமே உயிர்த்தியாகம்தான் - மதுரையின் பாண்டிய நெடுஞ்செழியன் செய்ததுபோல்- செய்துவிடுவார்கள்.

தற்காலத்தில் நீதி நெறிமுறைகள் சற்று தளர்ந்துவிட்டாலும், குற்றமுள்ள நெஞ்சம் பேசுக் கொண்டேதான் இருக்கிறது. அதன் பிடியில் இருந்து தப்பிக்கும் வழியறியாமல் நோயின் பிடியில் சிக்கிக் கொள்வதும், இனிய குடும்பத்தை மனதளவில் பிரிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஒரு உண்மை எண்ணவெனில் நம்மை பாதுகாக்கும் சக்திகளாக திகழ்வது அன்புள்ளவர்களின் அருகாமையும், தூய்மையான இதயமும்தான். மேலே நான் குறிப்பிட்ட சூழலில் இவை இரண்டையும் நாம் இழந்துவிடுவோம். விளைவு, மனிதன் என்ற நிலையிலிருந்து தாழ்ந்து விலங்கின் போர்வையை போர்த்துக் கொள்ள வேண்டி வரும்.

என்னைப் பொறுத்தவரை குற்றமுள்ள நெஞ்சம் பேசுவதும் பேசிக் கொல்வதும் மென்மையான இதயங்களில் மட்டுமே. ஒரு முறை அதன் பிடியில் சிக்கியவர்கள் வெளி வரத்தெரியாமல் தன்னுடைய இனிமையான சூழலை விட்டு விலகுவதும்,  அதனால் மேலும் அதே தவறினை செய்து புதை சேற்றில் சிக்கிக் கொண்டு தன்னை தொலைத்தவர்களும் உண்டு. என்றைக்காவது தனிமை கிட்டும்போது தன்னை பற்றிய நினைவு வரும்போது கண்ணில் வரும் நீர் துளிகள் மன்னிக்க முடியாத வார்த்தைகளை தெரிவிக்கும். எனவே இது போன்ற மாய வலைக்குள் சிக்கிக் கொள்ளும் முன் மீளும் முனைப்பு முதல் திருப்பத்திலேயே வந்துவிட வேண்டும். அப்படி வரும்போது மீளும் வழிகளை தெரிந்து கொள்ளுவது முக்கியமான விசயமாகிவிடுகிறது அல்லவா? 

                                       - அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக பார்ப்போம்.

பிரச்சினை இருப்பதை புரிந்து கொண்டாயிற்று. இனி, என்ன செய்வது என்பதை இரண்டு விதமாக அணுகலாம். பிரச்சினை நமக்கு என்றால் என்ன செய்வது?. நம்முடைய நெருங்கிய உறவினருக்கு என்றால் என்ன செய்வது? என்று பார்க்கலாம்.

நமக்குத்தான் பிரச்சினை:
 1.  தொழில், வேலை அல்லது குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினகளுக்கு உடனடி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். மாற்றி யோசிக்கும் மனோபாவத்தினை செயல்படுத்தும் நம்முடைய ஆழ்மனது தற்சமயம் குழம்பி உள்ளதால் சரியான தீர்வு கிட்டாது. எளிதாக முடிக்கவேண்டிய விசயங்கள் சிக்கலாகிவிடலாம், எனவே, அமைதியாக இருக்க முயற்சியுங்கள்.

2.  யோகாசனம் செய்யலாமே என்று நினைத்தால் புதிதாக ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டாம். உண்மையில் யோகா போன்றவற்றை பழக்கத்தில் வைத்திருப்பவர்க்கு இது போன்ற பிரச்சினை வராது.  புதிதாக ஆரம்பிக்க நினைத்தால் முயற்சி இந்த சமயத்தில் கைகூடாது.

3.  உடல் சோரும் போது என்ன செய்வோம்? தற்காலிக ஓய்வு தருவோம். உடலுக்கு சிரமத்தை விளைவிக்கக்கூடியவற்றை தவிர்ப்போம். தெம்பாக இருப்பதற்குத் தேவையான உணவினை உட்கொள்வோம். தொல்லை இல்லாத உறக்கத்தை நாடுவோம். இது அத்தனையும் மனதிற்குத் தரவேண்டும்.

4. மனதை தெளிவுபடுத்த எங்கேயாவது சுற்றுலா செல்லலாம். கிளம்புமுன் உங்களை  குழப்பத்தில் ஆழ்த்திய முக்கிய பிரச்சினையை ஒரு தாளில் எழுதி பூஜை அறையில் வைத்துவிடுங்கள். அல்லது ஒரு சிறிய பெட்டியில் வைத்து மானசீகமாக அதனை அங்கேயே விட்டுச் செல்வதாக மனதிற்குள் சொல்லிக் கொள்ளுங்கள். சுற்றுலா செல்லுமிடத்தில் போய் எந்த யோசனையும் செய்யாமல் சுற்றிலும் நடப்பதை ரசித்து உணர்ந்து நேரத்தை அனுபவியுங்கள். சுற்றுலா செல்லுமிடம் மலை பகுதியாக இருக்கலாம் அல்லது கடல் சார்ந்த பகுதியாக இருக்கலாம். கண்ணுக்குத் தெரிந்தவரை ஒரே வண்ணம் இருப்பது மனதை அமைதிபடுத்தும் -ஹீலிங் செய்யும். புதிய மனிதர்கள், புதிய இடங்கள் மற்றும் புதிய காட்சிகள் ரசனையை தூண்டிவிட்டு மனதிற்கு தெம்பூட்டும். நமக்கு சம்பந்தமில்லாத காட்சிகளில் பார்வையாளராக மட்டுமே இருப்பதால் சிந்திக்கத் தேவையில்லாமல் மனம் உறக்கம் நாடும்.

     -- மனதின் உறக்கம் ஒரு அருமையான புத்துணர்வினை தரும். நாம் உடல் ரீதியாக விழித்துக் கொண்டுதான் இருப்போம்.. ஆனால் நமக்கு தொடர்பில்லாத சூழ்நிலைக்குள் செல்லும்போது நம்முடைய கட்டுபாட்டை சூழ்நிலை எடுத்துக் கொள்வதால் சிந்திக்கத் தூண்டும் மூளையின் செல்கள் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளும். சுற்றுலா செல்லுமிடத்தில் பொறுப்பை யாரிடமாவது தந்துவிட்டு அவர்கள் போக்கில் போக வேண்டும். அலையை எதிர்த்து நீச்சல் அடிப்பது ஒருவகை என்றால், கடல் ஓரமாக முழங்கால் அளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டு அலையின் போக்கிற்கு ஆடிகொண்டேயிருப்பது ஒரு வகை. பின்னதில் மனதிற்கு வேலையில்லை, அனுபவிக்க மட்டுமே செய்தால் போதும். இவையெல்லாம் மனதிற்கு ஓய்வு தரும் வேலைகள்.

   - சிலர் சுற்றுலா திட்டமிட்டு குடும்பத்தையே அழைத்துக்கொண்டுபோய், வழக்கம்போல தலைமை பொறுப்பை தன் கையில் வைத்துக் கொண்டு கர்னல் ஒரு மிலிட்டரி படையினை வழி நடத்தி செல்வதுபோல நடந்து  கொண்டு கத்தி குவித்து இன்னும் சிக்கலாக்கிக் கொண்டு வந்து சேருவார்கள். எனவே இதனை கவனமாக செய்ய வேண்டும்.

5.  புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைவது, இசை கருவிகள் வாசிக்க கற்றுக் கொள்வது போன்ற புதிய கலை முயற்சியில் ஈடுபடலாம். இவை வெற்றி பெற்றால் நாம் உள்ளுக்குள்ளேயே பாராட்டி மெச்சிக் கொள்வோம். சரியாக வராமல் தவறாகி விட்டாலும் ஒரு சுவைமிக்க அனுபவம் கிட்டும்.
 
6. எல்லாவற்றிற்கும் மேலாக நமக்கென்று ஒருவர் இருக்க வேண்டும். நம்முடைய தனித்துவம் உணர்ந்து நமக்காக சிந்திக்கும் ஒருவரை இத்தனை நீண்ட வாழ்க்கையில் தேடுவது கடினம் அல்லவே. அவர்களை மதிப்பதும் பெருமைபடுத்துவதும் நமக்கு நல்லது. அப்படி ஒருவர் உங்களுக்கு ஏற்கனவே இருந்தால், கவனித்துப் பாருங்கள் அவரிடம் நமக்கான நேர்மறை சிந்தனைகள் அதிகம் இருக்கும். 
 
7. இது போன்ற மனக்கொந்தளிப்புகள் ஆண்களுக்குத்தான் அதிகம் வரும். பெண்களுக்கு மிகக்குறைவுதான். ஏன் என்றால், கட்டுப்படாத சூழ் நிலையினை உணர்ந்து பெண்கள் கட்டுப்பாட்டு விசையினை ஆண்களிடம் விட்டுவிடுவார்கள். "ஏன், ஒரு கருத்தும் கூறாமல் இருக்கிறாய்?" என்றும், "நீங்களே சொல்லுங்களேன் என்னவென்றாலும் சரிதான்" என்ற  கழண்டு கொள்ளும் பதில் உரையாடலும் நடக்கும் நிலையது. ஆண்களுக்கு இயல்பான ஈகோ இருப்பதால் புலிவாலை பிடித்து விடுவார்கள் (புலியினை அடக்கவும் தெரியாது, புலி வாலைவிடும் தைரியமும் வராது.) ஆக நம்பிக்கைக்குரிய ஒருவர் நம்முடன் இருப்பது நல்லதுதானே, இது போன்ற சமயங்களில் பயன்படும் (மனைவி, தந்தை மற்ற பெரியவர்கள்). குறைந்தபட்சம் ஆலோசனை கேட்கவாவது குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களை நாடலாம்.
                        
                               
                                               - அடுத்து,  தொடரின் கடைசி பகுதியில் சந்திப்போம்


        இது போன்ற சூழ்நிலை எப்போது? ஏன் உருவாகிறது?  குறிப்பிட்ட  உடல் நலக் கோளாறு ஏற்படும்போது - உதாரணமாக பித்தப்பை பாதிப்பு, வயிற்றுப் புண், மூளையில் சுரக்கும் திரவத்தில் (ஆனந்தமைடு) ஏற்படும் மாற்றங்கள் போன்ற வெளிப்படையாக தெரியாத கோளாறுகள் - சிந்திக்கும் திறனை பாதிக்கும். இவை நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும்போது வெளிப்படையாகவே உடல் நலமில்லை என்று நமக்குப் புரிந்துவிடும். மருத்துவ ஆலோசனை பெறுவோம். ஆனால் ஏதோ ஒரு சிறிய நெருக்கடியில் சட்டென ஏற்படும் ரசாயன மாற்றங்கள் பெரிய பாதிப்புகளாக தெரிய வராது. இது ஒரு குறுகிய கால பாதிப்புதான். சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் அந்த குறுகிய காலத்திற்குள் நாம் அடுத்தடுத்த தவறுகளை செய்து  இடியாப்ப சிக்கலை உருவாக்கிவிடுவோம். இதனால் குடும்பத்திற்குள் ஏற்படும் குழப்பங்கள் வரையறுக்க முடியாது.

      சரி,  இது போன்ற சந்தர்ப்பங்கள் எல்லோருக்கும்  ஏற்படக்கூடியதுதான், மற்ற வீடுகளிலும் இது போன்ற குழப்பங்கள் இருப்பதில்லையே என்று கேட்பீர்கள். உண்மைதான், மனதை பாதிக்கும் ஒரு சம்பவம் நடந்தால், உடன் இருப்பவர்கள் அவருக்கு தகுந்த ஆலோசனை கூறி சமன் செய்துவிடுவார்கள்.  உதாரணத்திற்காக சொல்கிறேன், எங்கள் வீட்டில்  ஏதோ ஒரு விசயத்திற்காக சிறியவர்கள் பயந்துவிட்டால் அல்லது அதிர்ச்சியடைந்தால் கொழுமோர் செய்து சட்டென குடிக்கத்தருவார்கள் அல்லது ஒரு ஸ்பூன் சீனியை வாயில் போடுவார்கள்.  இது உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை  சீர் செய்துவிடும். உடல் நலம் பாதிக்காது. ஆனால், குடும்பத்தினை முன்னேடுத்து  நடத்திச் செல்லும் முக்கிய பொறுப்பில் நாம் இருக்கும்போது நமக்கு அடுத்தவர் ஆலோசனை சொன்னாலும் பிடிக்காது, நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக  சொல்லவும் அவர்களுக்குத் தோன்றாது. . எனவே சூழ இருப்பவர்கள் உணர்ந்த  "சம்திங் ராங்" என்கிற விசயம் நமக்கு தெரியாமல் போய்விடும். இந்த நிலை கண்டிப்பாக மற்றவர்களையும் பாதிக்கும். ஒரு சறுக்குப்பாதையில் நாம் பயணிப்பதையும் அதன் முடிவு மூச்சு திணறவைக்கும் ஒரு இருள் குகை என்பதும் பயணத்தின் ஆரம்பத்தில் தெரியாது. உடன் இருப்பவர்களுக்கும் இது பற்றி புரிந்து கொள்ளமுடியாது.


     ஒரு மலை பாதையில் பயணிப்பவர் தனித்து செல்லும்போது ரொம்பவும் ஜாக்கிரதையான உணர்வுடன் காலடிகளை எடுத்து வைப்பார்கள். அதுவே ஒரு குழுவாக செல்லும்போது தலைமை ஏற்றிருப்பவர்மீது நம்பிக்கை வைத்து அவர் சொல்படி செய்வார்கள். தலைமை பொறுப்பில் உள்ளவர்களும், சரியான பாதையை தேர்வு செய்து வழி நடத்துவார்கள். முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, தலைமைக்கு கட்டுப்பட்டு இயங்குவதால் அவர் வழிகாட்டுதலை மட்டுமே தொடர்வதால் தனக்கென்று ஒரு சிந்தனை இருக்காது. ஏதோ ஒரு இடத்தில் தலைமை பொறுப்பேற்றவர் தவறிவிட்டால், அதனை கவனித்து சரி செய்யவும் தோன்றாது. முடிவு மொத்த குழுவிற்கும் தோல்விதான் கிட்டும். இதேபோலத்தான், குடும்பத்தில் முக்கியமான பொறுப்புகளை தன்வசம் வைத்திருக்கும் ஒருவர் தவறாக சிந்திக்கும்போது அதன் பாதிப்பு மொத்த குடும்பத்திற்கும்தான். ஏன் தெளிவான முடிவுகளை நம்மால் எடுக்க முடியவில்லை என்று கேள்வி தோன்றினாலும் எடுத்து சொல்லத்தயங்குவார்கள். தப்பித்தவறி  சொன்னாலும் கடுமையான பதில்தான் கிட்டும் என்று அவர்களுக்குத் தெரியும்.  நாமும்தான் தவறான சிந்தனைகளினால் ஒரு இணக்கமான நிலையினை தவிர்த்து விலகி இருப்போம். நாம் சொல்வதை மறுத்துப்பேசிய தற்சமய சூழ்நிலையை கருத்தில் கொண்டு  கழிவிரக்கத்தினால் இன்னும் அவர்களைத் தவறாக நினைக்க ஆரம்பிப்போம். ஒரு சத்தியமான உண்மை என்னவென்றால், நம் மீது நம்பிக்கை வைத்து இருப்பவர்களை நாம் நம்பிக்கை வைத்து இருப்பவர்களையும் விலக்க ஆரம்பிக்கும்போதுதான் நம்முடைய தோல்விக் கதையின் முதல் வார்த்தை எழுதப்படுகிறது. 
 
    ஒரு வெற்றி பெற்ற தொழிலதிபர். சிறிய வயதில் வாழ்க்கையை வெறுங்கையுடன் ஆரம்பித்தவர். கடுமையான உழைப்பினால் உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டார். அருமையான மனைவி, வளர்ந்த பிள்ளைகள் என அத்தனை பேரும் அவர் சொல்லை தட்டமாட்டார்கள். வயதாகி விட்டது. அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்களின் காரணமாக ஒரு நெருக்கடி வந்தது. வெற்றியையே சந்தித்து பழகியவரால் இதனை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. உள்ளுக்குள்ளேயே சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். தன் விசயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத அவர் சிந்தனை குழப்பத்தால் தவறான முடிவுகளை எடுக்கிறார். ரொம்ப நாள் கழித்து முதல் தோல்வி. பிள்ளைகளுக்கு தந்தை மேல் இருக்கும் நம்பிக்கை ஆட்டம் காண்கிறது. அவரின் தவறான முடிவுகளை விமர்சிக்கின்றனர். இது மேலும் அவரின் உடல் நிலையினை பாதிக்கிறது. விட்டதை பிடிப்போம் என்கிற நம்பிக்கையில் அதிரடி முடிவுகளை எடுக்கிறார். அதுவும் சிக்கல்.  குடும்ப சிக்கல் மனதை ஓய்த்துவிட்டது. பொருளாதார சிக்கல் ஆரம்பிக்கிறது. மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் என்று நான் சொன்னது இதனைத்தான்.
 
                                                                          - மீதி அடுத்த பதிவில் தொடரலாமா?

     மன்னிப்பு என்பது ஒரு செயல் திட்டம்தான். ஆங்கிலத்தில் RRR என்பார்கள். அவை Regret, Responsiblity, Remedy ஆகும்.  நாம் செய்தவற்றிற்கு வருந்த வேண்டும், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நாம்தான் பொறுப்பு என்பதால் அதனை நாம்தான் சரி செய்ய வேண்டும் என்பதும் நம் பொறுப்புதான், அதற்குரிய சீர் செய்யும் செயலையும் நாம்தான் செய்ய வேண்டும். நிறைய சமயங்களில் நோக்கம் மாறிப்போய் முன்னைவிட அதிக பாதிப்பினை ஏற்படுத்தவும் கூடும்.

    உதாரணமாக, மகனுடைய பிரச்சினையை எடுத்துக்கொள்வோம். அவனுடைய படிப்பு நிலவரத்தை சரியாக கவனிக்கவில்லை என்று மனைவியிடம் சண்டை. மகனின் நிலவரமே தெரியாத தவறு நம்மிடம் இருக்கும். எழுபது சதவிகிதம் மதிப்பெண் வாங்கக்கூடிய பையன் தொன்னூறு சதவிகிதம் வாங்கவில்லை என்று  சண்டை பிடித்த தவறு நம்முடையது. அதற்காக மனைவியிடம் வாக்குவாதம் செய்த தவறினை ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த விசயத்தில் அவருக்கு இரண்டு வருத்தம் இருக்கும். ஒன்று மகனின் எதிர்காலம் பற்றிய திட்டம், இரண்டு எப்போதும்போல முந்திக்கொண்டு பழியை திருப்பிவிடும் கணவனின் செயல். முதல் வருத்தத்தை சரி செய்ய முயற்சிப்போமே தவிர இரண்டாவதிற்கு முக்கியத்துவம் தரமாட்டோம். மனைவி புரிந்து கொள்ளாத கணவனா? இதற்கு முன்புகூட இதுபோல நடந்திருக்கும். எனவே மனைவியிடம் மன்னிப்புகூட கேட்கத்தோன்றாது. சரி, வேண்டாம், ஆனால் தவறாக நடந்து கொண்டதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாமா?  அப்போதைய வலி நாம் சகஜமாக பேசுவதால் சரியாகிவிட்டது என்று எண்ண முடியாதே? சிலர் முதல் நடவடிக்கையாகவே "அவுட்டிங் போகலாமா?" என்று கேட்பார்கள். ஒரு உணவு விடுதிக்கு செல்வதும், திரைப்படம் பார்ப்பது மேலாக பூசலை மறைக்கும் முயற்சிதான்.  முந்தைய தலைமுறைப் பெண்கள்தான் இவற்றை சமாதான உடன்படிக்கையாக புரிந்து கொண்டு கோபத்தை விடுத்து சகஜமாகிறார்கள்.  எனவே அதை செய்யாவிடினும் பரவாயில்லை, நேர்மையாக தவறினை ஒப்புக் கொள்ள வேண்டும். இனி இது போன்ற தவறு நடக்காது என்று உறுதி கூற வேண்டும்.  அந்த சமயத்தில் அவர்கள் விளக்கம் கூற முற்பட்டால் பொறுமையாக கேட்க வேண்டும். உங்கள் பக்க எதிர்பார்ப்புக்களை சொல்ல வேண்டும். அவர்களின் பொறுப்புணர்வில் நம்பிக்கை வைத்து இருந்தால் எடுத்துக் கூற வேண்டும். இருவரும் சேர்ந்து மகனின் எதிர்காலம் பற்றி ஆலோசனை செய்யலாம். ஒரு வேளை இதற்கு ஒரு சரியான யோசனை அவர்களிடம் இருக்கும், அதை தெரிந்து கொள்வதும் நல்லதுதானே.. நம்முடைய மன்னிப்பின் பயணத்தையும் அது தடம் மாறிப்போகும் விதத்தையும் இப்போது வரிசையாக பார்க்கலாம்.

1.. தவறுக்கு வருந்துவது - ஒரு முன் கோபத்தில் இவ்வாறு நடந்து விட்டது  நீ நன்றாக படித்தவள் என்பதால் இதனை கவனித்துக் கொள்வாய் என்று நினைத்தேன் - இப்படியெல்லாம் விளக்கம் தரலாம்.

தடம் மாறுவது: இனி உன்னிடம் இது பற்றி விளக்கம் கேட்கமாட்டேன். நானே பார்த்துக் கொள்கிறேன் - அவர்களை தள்ளி வைக்கும் செயல். சற்று அவமானமாகவும் இருக்கும். மனதில் ஒரு வடுவை பதிக்கும். மகனிடம் இனி இது பற்றி பேசக்கூட தயக்கம் பிறக்கும்.

2. பொறுப்பேற்றுக் கொள்வது - இந்த விசயத்தில் நானும் கவனிக்காமல் விட்டேன். அது என் தவறுதான் ஒப்புக் கொள்ளலாம்.

தடம் மாறுவது: தானாகவே தன் பங்களிப்பை தருவதாக இருக்க வேண்டும். "என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறபடி செய்தால் போதும்." என்று சொல்லக்கூடாது. இதிலும் பிரச்சினை தீராது. " நாம் முடிவெடுக்கலாம்" என்பதுதான் சரி.

3. சீர் செய்வது: இது பற்றி மனைவியின் கருத்தையும் கேட்க வேண்டும் என்றேனே ஏனெனில் இது விசயமாக வாக்குவாதம் எழாமல் இருக்க இது அவசியம். மகனின் உண்மையான தகுதி மனைவிக்கு தெரிந்திருக்கும். உயர்தர பள்ளியில் சேர்ப்பதாலோ, சிறப்பு வகுப்புகள் கொடுப்பதாலோ சீராகி விடாது. அவனுடைய விருப்பம் Validate (திறணாய்வு?) செய்யப்பட வேண்டும். நிலமையை சீர் தூக்கிப் பார்த்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சில சமயம் கடைசியில் " எப்பாடுபட்டாவது அவன் பொறியியல் படித்தே ஆக வேண்டும்" என்று முடிவுரை எழுதப்படும். கண்டிப்பாக சொல்கிறேன் இதுபோன்ற ஒருதலைபட்சமான முடிவுரைகள் மீண்டும் சிக்கலை கிளப்பும். அடுத்த முறை நாம் கேட்கப்போகும் மன்னிப்பின் மீது நமக்கே மரியாதை இருக்காது.

   தன் அச்சை விட்டு விலகிய செயற்கைக்கோளை ஏவுகணை செலுத்தி சரியான ஆர்பிட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதுபோல் என்று இதனைதான் குறிப்பிட்டேன். சரியான வேகத்தில் சரியான திசையில் தேவையான கட்டுப்பாட்டில் ஏவுகணை செல்லுவதுபோல், நாம் கேட்கப்போகும் மன்னிப்பும் சரியான இலக்கை அடைய வேண்டும். இவ்வளவு கவனம் எடுத்தால்தான் மீண்டும் தவறு ஏற்படாது, உண்மையில் நம் உள்மனமும் இது போன்ற தருணம் திரும்ப ஏற்படும்போது நம்மை எச்சரிக்கை செய்யும்.

    நான் சொல்லுவது என்னவென்றால் மன்னிப்பு கேட்டல் என்பது  தண்டனையை அனுபவிப்பதைவிட சிரமமானது. உணர்ந்து மனசாட்சிபடி மன்னிப்பை வேண்டுபவர் மீண்டும் தவறு செய்ய மாட்டார்கள். ஏனெனில்  தன்னை பற்றி தனக்குள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மரியாதைக்குரிய பிம்பம் மீண்டும் கலைவதை பார்க்க யாரும் விரும்பமாட்டார்கள். ஆனால் இத்தனை லட்சணங்களும் பொருந்திய மன்னிப்பு ஒரு அதிசயமான மருந்தாக, உறவுகளை இணைக்கும் பாலமாக வியக்கத்தக்க விதத்தில் செயல்படும். இன்னும்கூட இறுக்கமான பிணைப்புகளை உங்களுக்கு பெற்றுத் தரும். பழுதுபட்ட உறவுகளை சரி செய்து புதுப்பித்து தரும் இதனை நாலாவது R - Regenerateஆக சொல்லலாமா? . மன்னிப்பு கேட்டல் மனிதத்துவம் என்றால் மன்னித்தல்  தெய்வீகமாகும்.

     
       மன்னிப்பு சில வரைகளுக்கு உட்பட்டது. மிகச் சாதாரணமாக சொல்லப்படும் "மன்னித்துக் கொள்" என்கிற வார்த்தை மட்டும் இதனை முழுமையாக்கி விடாது. இது வெறும் வார்த்தைகள் அல்ல. ஒரு செயல். கடந்த காலம் நிகழ்காலத்தை பாதிக்கும் அது எதிர்காலத்தை பாதிக்காமல் சரியான வழியில் கொண்டு செல்லும் ஒரு செயல். சில விசயங்கள் மட்டுமே அந்த சம்பவத்தில் தொடர்புடைய அத்தனைபேரையும் அமைதியடைய மகிழ்ச்சியடைய செய்யும். அதில் மன்னிப்பும் ஒன்று.

     ஆதிகாலத்தில் மனித நாகரிகம் ஏற்படாத போது இந்த வார்த்தையும் இல்லை. அப்போது மிருகங்கள் போல வாழ்ந்த மனிதர்களுக்கு மன்னிப்பு கேட்கும் சந்தர்ப்பமும் மன்னிப்பை தரும் பக்குவமும் ஏற்படவில்லை. நாகரிகத்தின் அடையாளமாக தோன்றிய ஒரு செயல். முதலில் மன்னிப்பு கேட்டது இயற்கையிடமும் கடவுளிடமும்தான். அவர்களால் எதுவும் தீமை ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் கேட்கப்பட்டது. பிறகு அரசாள்பவனின் கோபத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்கும் குறுக்கு வழியாக இது பயன்படுத்தப்பட்டது. இது வீரர்களால் ஒரு போதும் பயன்படுத்தப்பட்டதில்லை. மதங்கள்  தோன்றிய பின் பாவத்தின் சுமையுடன் இருக்கும் ஆழ்மனதினை அமைதிபடுத்தி ஆன்மாவை நல்வழியில் திருப்பும் ஒரு புனித செயலாக அங்கீகரிக்கப்பட்டது. பொதுவாக மதங்கள் மறைமுகமாக செய்வது ஒன்றுதான் நம்முடைய ஆழ்மனத்தின் வலிமையை அதிகப்படுத்தி மேம்பட்ட வாழ்க்கையை அடையத் தேவையான உந்து சக்தியை தருவதுதான். குற்ற உணர்வுடன் இருக்கும் மனம் அதிலிருந்து மீண்டு சரியான பாதைக்குச் செல்வதன் மூலம் மனித வாழ்க்கை உன்னதமான எல்லையை அடைகிறது. அடிமைகளின் முதுகெழும்பில் பதியவைக்கப்பட்ட மன்னிப்பு என்ற செயல் மனித நாகரிகத்தின் அடையாளமாக உயர்வான செயலாக  முகமாற்றம் பெற்றது. சங்கத்தமிழில் இதனை பொறுதி என்பார்கள். பொறுத்துக்கொள் என்று அர்த்தமாகிறது.


    அறிவியல்படி ஒரு பொருள் வானில் நிலை நிறுத்தப்பட, அவை தனக்குரிய சுழல் அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு வேறு ஒரு பொருளையும் அச்சின் மையமாக நீள்வட்டப்பாதயில் சுற்றி வரும். இதனால் மைய நோக்கு விசை , மைய விலக்கு விசை ஆகியவை எதிரெதிர் திசையில் செயல்பட்டு ஒன்றுக்கொன்று ஆதாரமாக அண்டவெளியில் நிறுத்தப்பட்டிருக்கும். நாம் விண்ணில் செலுத்தும் செயற்கை கோளும் இத்தகையதுதான். அதனை, சரியான அச்சில் நிலைநிறுத்த முயற்சிக்கும் ஒவ்வொரு முறையும் ஏவுகணைகள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. மன்னிப்பின் விதிமுறைகளும் இவற்றை பின்பற்றவேண்டும்.

    ஒருவரை ஒருவர் சார்ந்து அமைவதுதான் நாம் வாழும் வாழ்க்கை. சில சமயம்  நம்முடைய ஒரு செயல் மற்றவரை பாதிக்கப்படலாம். எப்படி செயற்கை கோள் தன் அச்சிலிருந்து விலகும் அபாயம் ஏற்படுகிறதோ அதேபோல நம்முடைய கடுமையான செயல் அவர்களை ஒரு நிலையில் நிற்கவிடாமல் அலைகழிக்கிறது. அடுத்த நிமிட ஆச்சரியங்களை தன்னகத்தே கொண்டுள்ள இந்த அதிசயமான வாழ்க்கையில் இத்தகைய மனபிறழ்வுகள் தன்னுடைய வாழ் நாளை நீட்டிப்பது குடும்பத்தின் அடிப்படையையே ஆட்டம் காணவைத்து விடாதா? 

      நாம் ஆதி மனிதர்கள் இல்லை. துறவிகள் போல் தாமரை இலைத் தண்ணீராக வாழ்வதற்கு. மேலும் இன்றைய சவால்கள் நிறைந்த உலகம் நம்மை சாட்டையில் சுற்றிய பம்பரமாக ஆட்டி வைக்கும் போது, ஆணியின் கீறல்கள் நம்மை சார்ந்து இருப்பவரை காயப்படுத்துவது சகஜமாகிவிட்டது. முதலில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது மன்னிப்பு கேட்பது நம்மை தரம் குறைக்கும் செயலாகாது. குடும்பத்தின் உறுப்பினராக நம்முடைய கடமையும்கூட. நாம் செய்த தவறினை நியாயப்படுத்த விளைவது அடிவேரில் சுடு நீரை ஊற்றும் செயலாகும். அப்போதைக்கு ஒன்றும் தெரியாது, தொடர்ந்து வரும் நாட்களில் மெல்ல செடியின் நிலைமை புரிந்துவிடும். . சிக்கலுக்கும் நமக்கும்தான் சவாலே தவிர நமக்கும் மற்றவர்களுக்கும் இல்லை. ஒரு மகாராஜாவின் மனோபாவத்துடன் மன்னிப்பு கேட்பது "நானே கேட்டுட்டேன். உடனே சரியாகி விட வேண்டாமா? இன்னும் முகத்தை தூக்கிக் கொண்டு திரிந்தால் எனக்கு என்ன நஷ்டம்?",  இது தவறு. அதனால் நோயை தீர்த்து நிலையை சரி செய்யும் ஒரு மருத்துவரின் மனோபாவம் நமக்கு வேண்டும்.  இனி மன்னிப்பு கேட்கும் படலம் நாளைய இறுதிப் பதிவில் (கண்டிப்பாக).

    இது பிரச்சினைகளை கையாளுவதன் தொடர். உறவுகளுக்கும், நட்புகளுக்குமிடையேயான பிரச்சினைகளை பேசித் தீர்க்க முயற்சிக்கலாம். நாமும் நிறைய சமயம் முயற்சி செய்திருப்போம், சில சமயம் வெள்ளை கொடி பறக்கவிடப்பட்டு இருக்கும். சில சமயம் ஒட்டாமல் உடைந்துவிடும். ஏதோ ஒரு நோக்கத்தில் ஆரம்பிக்க அது வேறு மாதிரி முடிவது சங்கடத்தில் ஆழ்த்திவிடும். எல்லாவற்றிற்கும் ஒரு வெற்றி குறிப்புகள் இருக்கும். அதனை கையாண்டால் வெற்றி அடையலாம். சிலருக்கு இது பிறவிக்கலை.  பேச்சு வார்த்தையில் கடைசி வார்த்தை அவர்களுடையதாகவே இருக்கும். பேச்சு நடக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

    பிரச்சினை ஆரம்பித்த உடனேயே சம்பந்தப்பட்டவரிடம் நேரிடையாகவே பேசி விளக்கம் கேட்பது நல்லது. பிரச்சினையின் ஆரம்பம் நம்மிடம் இருந்து - அவர்கள் மேல் சந்தேகமோ, கோபமோ இருந்தால் உடனேயே பிரச்சினையை பற்றி பேச வேண்டாம். கொஞ்சம் இடைவெளி தந்து சுமுகமான முறையில் ஆரம்பிக்க வேண்டும். 
   அப்படி உணர்ச்சிவசப்படாமல் பேச முடியாது என்றால், வேறு வழியில் முயற்சிக்கலாம். கடிதம் எழுதுதல்.. ஒரு கடிதமாக உங்களுடைய நியாயமான எண்ணங்களை பதிவு செய்வது நல்லது. வீட்டிற்குள்ளேயே கடிதமா என்று கேட்க வேண்டாம். சம்பந்தப்பட்ட இருவரும் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டி முறித்துக் கொள்வதைவிட எழுதும்போது ஒருவித கட்டுப்பாடு வரும். நம் பங்களிப்பை சரிவர செய்துவிட்டால் அடுத்தவரை சரி செய்யும் தெளிவு கிட்டும். ஒரு முறை எழுதி மட்டும் பாருங்கள், அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை கை வசம் வந்துவிடும். உங்களுடைய வருத்தம், கோபம், எதிர்பார்ப்பு, விட்டு கொடுக்க விரும்பும் விசயம் அனைத்தையும் எழுதுங்கள். படித்து புரிந்து கொள்ளும்போது "ரிப்பீட்டு" போட முடிவதால் பிடித்தமான வரிகளுக்கு விரிவான விளக்கங்கள் கிட்டும். பேசுவதில் இல்லாத கூடுதல் ப்ளஸ் ...ப்ளஸ் இது. எழுதி முடித்தபின் கோபம்  குறைந்த உணர்வு வரும். அடுத்தவர் பக்க நியாயம்கூட தெளிவாகும். சரி, நாம் பேசுவதற்கு வரலாம். பேச்சு வார்த்தைக்கு ஒப்புக் கொண்டால் ,
 
மற்றவர் பேசும்போது செய்ய வேண்டியவை:  மற்றவர் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் சொற்களை சரியாக மொழிபெயர்ப்பு செய்து இதயத்திற்கு தர மூளையின் ஒத்துழைப்பு வேண்டும். அதற்கு ஒரு பதட்டமில்லாத மன நிலை அவசியம்.  சரியான இடம், நேரம் ஆகியவற்றையும் கவனியுங்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் பேச ஆரம்பிக்கும் முன் அலைபேசி அழைப்பு வந்துவிடும்.  இது போன்ற தடங்கல்களை தவிர்த்திடுங்கள். மற்றவர் பேசுவதை அமைதியாக கவனியுங்கள். பாதியில் குறுக்கிட்டாலோ, தவறான முகபாவனைகளோ பேச்சு வார்த்தையை திசை மாற்றிவிடும்.

செய்யக்கூடாதவை:  குறுக்கிட்டு குழப்ப வேண்டாம். உங்கள் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை உடனேயே மறுத்து பேச வேண்டாம். ஏன் அவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடும். பிறகு கொஞ்ச நாள் கழித்து இதுவே திரும்ப நடைபெறும். ஒருவரின் வார்த்தைகளின் உண்மைக்கு மதிப்பு கொடுங்கள். "நீ எந்த விசயத்தையுமே பெரிதுபடுத்திதான் பேசுகிறாய்" என்று வாயை அடைக்காதீர்கள். இதுவும் மன வருத்ததிற்கு 'தொடரும்' போட்டுவிடும். நீங்கள் நினைப்பதுதான் சரி மற்றவர் நினைப்பது தவறு என்று முடிவு செய்ய வேண்டாம். சிலரிடம் நம்முடைய மனவருத்தத்தை சொல்லும்போதே "நீ மட்டும் யோக்கியமா?" என்று பதில் பழி வந்து சேரும்.  அதன் பிறகு பேசி தீ......ர்க்கத்தான் முடியும். சிலரிடம் பேசும்போதே ஒருவித சோர்வு வந்துவிடும், நம்மை பேச விடாமல் "நீ அதை பற்றித்தானே வருத்தப்படுகிறாய். எனக்கு புரிந்துவிட்டது நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பார்கள். மருத்துவரிடம் சென்றால்கூட  நம்முடைய பிரச்சினைகளை  காது கொடுத்துக் கேட்டு ஆறுதல் கூறியபின் கொடுக்கப்படும் மருந்திற்குதான் வியாதி கட்டுப்படும். சரிதானே, அதேதான் இங்கேயும் கடைபிடிக்கப்பட விரும்புவோம். நாமும் மற்றவரிடம் பேசும்போது இது போன்று 'மனதை படிக்கும் வித்தையை' கைவிட்டு நேர்மையாக அணுக வேண்டும். "என்னவோ சொல், கேட்டுத் தொலைக்கிறேன்' என்பது போன்ற இறுக்கத்தை தவிர்க்க வேண்டும்.

நாம் பேசும்போது செய்ய வேண்டியவை:
     பிரச்சினையின் பாதிப்புகள், மாற்றிக் கொள்ளவேண்டிய கருத்துக்கள், ஏன் அவற்றை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெளிவாக அமைதியாக சொல்ல வேண்டும். அவர்கள் குறுக்கிட்டால் , மிகவும் நிதானமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் உங்களுடைய விளக்கத்தை தொடருங்கள். ஏனெனில் சமாதனப் பேச்சிற்கு அழைத்தது நீங்கள்தான். " குறுக்கிட்டு பேசாதே" என்று அதட்டுவது, கோபம் கொள்வது போன்றவை ' தடங்கலுக்கு வருத்துகிறோம்' போட வைத்துவிடும். பேச்சு வார்த்தையின் முழு கட்டுப்பாடும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.  ஒரு சமாதானமான முடிவிற்கு வந்தே தீர வேண்டும் என்ற உறுதி மிக முக்கியம். 

செய்யக்கூடாதவை: அவர்களுடைய குண நலன்களை விமர்சிக்க வேண்டாம். "அப்பவே அவன் சொன்னான் நீ சரியான முசுடு என்று. இப்ப புரிஞ்சுகிட்டேன்" இது போன்ற வார்த்தைகள் மற்றவரை காயப்படுத்தும். சில நேரங்களில், தனிமையில் நம்மையும் காயப்படுத்தும். அப்புறம் , மத்தியஸ்த்தம் பேச வேறு யாராவது வர வேண்டும். எப்போதுமே நாம்தான் வெற்றி பெற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். விட்டுக் கொடுத்தல்கள் வாழ்க்கையை விலை மதிப்பற்றதாக்கும். கணவன் மனைவி சண்டையில் தோல்வியை ஒப்புக்கொண்டவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்பார்கள்.   ஆகவே வார்த்தைக்கு வார்த்தை மல்லுகட்டி கடைசி வார்த்தையை நூல் பிடித்து திருப்பி என வளர்த்துக் கொண்டே போக வேண்டாம்.

பேச்சு வார்த்தை என்பது மாசுபட்ட கண்ணாடியை துடைத்து , முகம் பார்த்தல் போல அழகாக இருக்க வேண்டும். அதே கண்ணாடியை கீழே போட்டு உடைத்து  சிதிலமடைந்த பல முகங்களாக நம்மை பார்ப்பதற்கல்ல. 


பிரச்சினை என்பது
      1. நமக்குள்ளேயே இருக்கும் உள் மனப்போராட்டமாக இருக்கலாம். - படிப்பு, திருமணம், வேலை போன்ற முக்கியமான பிரச்சினைகள்.
      2. நமக்கும் மற்றவருக்கும் இடையே நடைபெறலாம் - உறவுகள் தொடர்பானவை
      3. நமக்கும் சூழ்நிலைக்கும் இடையே ஏற்படலாம்.- பொருளாதார சிக்கல், தவறாகிப் போன செயல்களின் விளைவுகள், தடங்கல்கள்.
      4. சமுதாய கோட்பாடுகள் தொடர்பான சிக்கலாக இருக்கலாம் - கோவில் திருவிழா போன்றவை.
      5. சந்தர்ப்பவசத்தால் ஏற்படலாம் - (விதிவசம் என்று சொல்லலாமோ?) - அப்போதே தோன்றியது இது சிக்கல்தான் என்று சொல்லப்படும் அனைத்தும்.
                                                                        தவிர்க்க நினைத்தும் மாட்டிக் கொள்வது

ஒரளவிற்கு அனைத்தையும் குறிப்பிட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். இவற்றை உதாரணமாக கொண்டால் விளக்குவது எளிது என்று கொள்கிறேன்.

முதல் பிரிவு நல்ல நண்பர்கள், பெற்றோர், நம் நலனில் கவனம் கொள்ளும் உறவுகள் இவர்களிடம் மனம் விட்டு பேசி தீர்வு தேடலாம். ஆலோசனை தருபவர்கள், முக்கியமாக பிரச்சினைக்கு சம்பந்தமில்லாதவர்களாக இருக்கு வேண்டும்.  அவ்வாறு இல்லையெனில் அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை பெறலாம்.

இரண்டாவது பிரிவு ரிலேசன்ஷிப் மேனேஜ்மெண்ட் - பேசித் தீர்த்துக்கொள்வது, இது ஒரு கலை. இது பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.


மூன்றாவது பிரிவில் சாணக்கிய தந்திரத்தை பயன்படுத்தலாம். .  நாம்தான் ஏற்கனவே 360 டிகிரி அலசல் செய்துள்ளோமே. பலவீனமான பக்கம் எது என்று தெரியுமல்லவா? அதனை பயன்படுத்த முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒரு சிக்கலை தீர்க்க முடியவில்லை என்றால் அங்கு 360 டிகிரி அலசல் நடைபெறவில்லை என்று அர்த்தம். இந்த வகையில் கண்டிப்பாக மற்றவர்களின் உதவியும் தேவை. சில சமயம் இதிலேயே ஆழ்ந்து போய் சரியானபடி யோசிக்ககூட முடியாமல் போய்விடும்.

பிரச்சினை:   ஒருவரால் ஒரு காரியம் ஆக வேண்டும். பலவீனம் - நமக்குத் தெரிந்தவர் இல்லை. அவர் நேர்மையானவராம். வெளியாட்களிடம் பிடி கொடுத்துப் பேச மாட்டாராம். இதெல்லாம் அந்த விசயம் வெற்றி பெறாது என்பதாற்கான காரணங்கள். இவைதான் பலமான தடுப்புச்சுவர்களும்கூட. நிறைய சமயம் சுவரை உடைக்க முயற்சி செய்வோம். அது தவறு. சுவர் என்று இருந்தால் வாயில் என்று ஒன்று இருக்கும் அல்லவா? அதைத் தேடுவோம். நமக்குத் தெரிந்தவர் இல்லை என்றால் அவருக்குத் தெரிந்தவர்களை கண்டுபிடிப்போம், நேர்மையானவர் என்றால் நேர்மையாகவே அணுகுவோம், ஒரு வித ஒளிவு மறைவில்லாத அணுகு முறை தேவை. இதுதான் என் பிரச்சினை தீர்க்க முடியுமா என்று பேசலாம். நாம் வேறு ஒருவர் மூலமாக அணுகும்போது, அந்த ஒருவரின் குண நலங்களும் கவனிக்கப்பட வேண்டும். சரியான நபர் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
    
பிரச்சினை :  ஒரு பரிட்சையில் வெற்றிபெற - நம்முடைய பலவீனமான பக்கங்கள் என்று சொல்லப்படுவது. படிக்கவே பிடிக்கவில்லை. மறந்து போய்விடுகிறது. என்னத்தை எழுதறாங்க படித்தாலே தூக்கம் வருகிறது. ஒரு விசயமும் பதியவில்லை. அடுத்த முறை பார்த்துக்கலாமா? இதெல்லாம் பிரச்சினையின் பலமான பக்கங்கள். நம்முடைய புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ற புத்தங்களை தேடி வேண்டும் - கணிதம் தொடர்பான பாடங்களுக்கு ராஜாராம் எழுதியவை நன்று என்போம். அடிப்படை புரிந்து கொண்டால், ஆர்வம் வந்துவிடும், மறதி வராது. சாதாரண நாட்களில் பதட்டம் இல்லாமல் வாசித்து  புத்தகத்துடன் நட்பு கொள்ளவேண்டும், உறக்கம் வராது. பரிட்சைக்காக படிக்கும்போது தடங்கல்  இன்றி பதியப்படும்.

நான்காவது பிரிவு: ஊர்கூடி தேர் இழுப்பது. இதனால் அந்த அளவிற்கு மன உளைச்சல் சாதாரணமானவர்களுக்குத் தோன்றாது. முயற்சி செய்வோம் எது வந்தாலும்  ஏற்றுக் கொள்வோம் என்ற மனப்பான்மைதான் இருக்கும்.



ஐந்தாவது பிரிவில் தீர்த்தே ஆக வேண்டுமா என்று தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பிறகு பிரச்சினையின் மையம் கண்டு மேலே குறிப்பட்ட வழிகளில் எதையாவது முயற்சி செய்யுங்கள்.

 பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணமே முன்னோடியாக செயல்பட்டு வெற்றியை அடைய வைக்கும்.  எண்ணத்தின் வலிமை மிக முக்கியம். கடவுள் போல கூடவே வரும்.  எதிர்பாராத வழியிலிருந்தெல்லாம் நமக்கு தீர்வு கிடைக்கும். அடுத்த பகுதியில் பேசி தீர்க்கும் கலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பிரச்சினையை களைவது எப்படி?  முன்னர்  குறிப்பிட்ட இரண்டிற்கும் அனுபவத்தின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அவை மந்திரமாக செயல்படும். இதற்கு தந்திரம் வேண்டும் - அதைத்தான் சாணக்கிய தந்திரம் என்பார்கள். அப்படியென்றால்...?

அதற்கு முன் சிக்கலை தீர்க்க முடியும் என்ற 'ஊக்கமும், உள்வலியும், உண்மையின்மீது பற்றும்'  இருக்க வேண்டும் . இதுவும் மகாகவியின் வார்த்தைகள்தான். பிரச்சினையிலேயே ஆழ்ந்து கொண்டு பலவீனமடைந்து நிற்பவர் மாக்களுக்கு சமம் என்கிறார். உள் வலி என்பது மனதில் ஏற்படும் தாக்கம் அதுதான் தாண்டி குதிக்க தூண்டும். உண்மையில் பற்று என்பது எப்போது வரும்? நம் செயல்களில் நமக்கு நம்பிக்கை இருந்தால் மட்டுமே கிட்டும்.

  பிரச்சினையை மனதளவில் பகுத்தாய்வு செய்ய வேண்டும். 360 டிகிரி மதிப்பிடல்தான். பல கோணங்களில் பார்க்கும்போது அதன் முழு பரிமாணம் பலம், பலவீனம் ஆகியன தெரியும்.இது போன்ற திறனாய்வு செய்யும் போது என் நண்பர் முற்றிலும் தனக்கு எதிராக சிந்திக்கும் எதிர்போக்கு நபரை உடன்  வைத்துக் கொள்வார். அடுத்த கட்டம் செல்லும் போது அந்த  நபரை கழட்டி விட்டு விடுவார். வேறுபட்ட கோணங்களை பார்க்க இது உதவும். உண்மையில் ஏன் அந்த பிரச்சினையை சமாளிக்க முடியாது என்பதற்கான பலமான காரணங்கள் கிட்டும்.  முடியாது என்பதற்கான காரணங்கள்தான் முடியும் என்பதற்கான பதிலை தேடும். வெற்றிக்கான வரைபடம் கிட்டிவிடும்.

அதென்ன சாணக்கிய தந்திரம்?  பிரசித்தி பெற்ற நந்தப் பேரரசை அழித்து சந்திரகுப்த மௌரியரின் தலைமையில் குப்தப் பேரரசை நிறுவியதில் சாணக்கியரின் பங்கையும் அரசியல் தந்திரங்களையும் வரலாறு பெருமையாக பேசும். சந்திரகுப்தரை பேரரசராக உருவாக்கிய பெருமையும் அவரையே சார்ந்த்து. ஆனால், ஆரம்பகாலத்தில் இளைஞனாக இருந்தபோது சந்திர குப்தர் நாடிழந்து அகதியாய் காட்டில் திரிந்தார். தட்சசீலத்திலிருந்து வெளியேறிய சாணக்கியரும் காட்டில்தான் சந்த்தித்தார். சந்திர குப்தரின் நம்பிக்கை மிக்க போராளிகளைக் கொண்டு மகதத்தின்மீது படையெடுப்பதும் தோற்பதும் மீண்டும் காடு திரும்புவதும் நடைபெற்றகாலம் அது. தோல்வியின் காரணம் புரியாமல் காட்டில் திரிந்தனர். எப்போதாவது ஏற்படும் பசி அப்போதும் தோன்றியது. காட்டில் சிறு குடிசையை கண்டனர். அதில் ஒரு கிழவியும் சிறு வயது பேரனும் வசித்து வந்தனர். அவளிடம் உணவு கேட்டபோது, யாரென்று தெரியாமலே , சற்று பொறுத்திருக்கும்படியும் தானிய அடை செய்து தருவதாகவும் கூறினாள். சற்று பொறுத்து சுடசுட அடையும் வந்தது. பாட்டியின் பேரனும் உடனமர்ந்து உண்ண முற்பட்டான். மிகவும் சூடாக இருந்த அடையில் கை வைத்து விட்டு ' ஆ' என்று அலறினான். "உண்ணும் தந்திரம் தெரியாமல், நீயும் அந்த சாணக்கியன் போலவே முட்டாள்தனம் செய்கிறாயே." அந்த கிழவியின் அதட்டல் சாணக்கியரை திடுக்கிட வைத்தது.  முட்டாளா சாணக்கியரா? கோபம் கொள்ளாமல் விளக்கம் கேட்டார். அந்த கிழவி சொன்ன பதில்தான் பின்னாளின் புகழ்பெற்ற குப்தப்பேரரசை நிறுவியது.

"ஐயா, அடையின் நடுப்பகுதி சற்று தடிமனானது, ஓரத்தில் மெலிந்து இருக்கும். எனவே அடையின் நடுப்பகுதியைவிட ஓரத்தில் சூடு விரைவில் தணிந்துவிடும். எனவே ஓரத்தில் இருந்து அடையை பிய்த்து உண்ண ஆரம்பிக்க வேண்டும். அதுபோலவே ஒரு நாட்டின் தலை நகர் அரசர் இருக்கும் இடமாகையால், மிகவும் பாதுகாப்பாக இருக்கும். நாட்டின் எல்லை பகுதியில் காவல் குறைவாக இருக்கும். அங்கே போர் தொடுத்து சிறிது சிறிதாக முன்னேறாமல் நேரிடையாக தலை நகரை தாக்கி தோற்றுவிடுகிறார். இது முட்டாள்தனம்தானே". உண்மையே. இதனை பின்பற்றி சாணக்கியர் கொஞ்சம் கொஞ்சமாக மகதத்தை கைபற்றும் முயற்சியை தொடங்கி இறுதியில் வெற்றி பெற்றனர். நாட்டின் எல்லையை பாதுகாக்கும் திட்டங்களும் பின்னர் முக்கியத்துவம் பெற்றன.


இதே முறையை  பிரச்சினையை சரி செய்யவும் கையாளலாமா? நாளைய பதிவில் தொடரலாம்.

    பிரச்சினைகளை கையாள்வது எப்படி? உண்மையில் மேலாண்மை தொடர்புடைய ஒரு தலைப்பு. நமக்கு பயன்படுமா என்று பார்க்கலாம். கையாள்வது என்றால் பிரச்சினை வராமல் தடுப்பது, , பிரச்சினையை வரும்போது சரிவர எதிர்கொள்வது, வந்து விட்டால் தீர்த்துக்கொள்வது ஆகியனவாகும்.

   முதலில் பிரச்சினை என்றால் என்ன? நம்முடைய சிந்தனையை சிக்கலாக்கி செயலை,  நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் முன்னேற்றத்தை  தடுக்கும் விசயங்கள்  இதனால் அடுத்த கட்டத்திற்கு செல்லமுடியாமல் ஒரே இடத்திலேயே தேங்கி கிடக்கும் அபாயம் நேரிடலாம். அது விளைவுகளை சந்திக்க பயப்படும் நம்முடைய உள்மனதின் தடைகளாகவோ, முக்கியமானவர்களுடன் ஏற்படும் மனஸ்தாபமாகவோ, மற்றவர்களின் தேவையில்லாத குறுக்கிடல்களாகவோ,  முட்டுச்சந்தில் சிக்க வைக்கும் சூழ்நிலைகளாகவோ இருக்கலாம். சிலர் இவற்றை எதிர்கொள்ள பயந்து தானாகவே சரியாகிவிடும் என்று அமைதி காப்பார்கள். அது நல்லதல்ல. கண்டிப்பாக சரி செய்தே தீருவேன் என்கிற மனபான்மைதான் வெற்றியின் ரகசியம்.

பிரச்சினையை வரவிடாமல் தடுப்பது :  இதற்கு நம் உள் மனம் ஒரு பெரிய பட்டியலையே -data base - தயார் செய்து வைத்திருக்கும். எல்லாம் கடந்தகால தோல்விகளின் பதிவுகள்தான். நம்முடைய அனுபவம் என்றில்லாமல் மற்றவர்களின் அனுபவங்களும் பதியப்படும். ஒரு விபத்து நடைபெறுவதை பார்க்கும்போதே ஏன்? எப்படி? தவிர்த்திருக்கலாமோ? என்று பல விசயங்கள் கேள்விகளாக நம்மில் பதிக்கப்படுகின்றன. அதுபோலவே சிக்கலை உருவாக்கும் சிலரைக் கண்டாலே ஒதுங்கிவிடுவோம். பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளையும் உணர்ந்துவிடுவோம். பொதுவாக  பிரச்சினைகள் உருவாவது எல்லை மீறிய சந்தர்ப்பங்களால்தான். எல்லைகளை சரிவர பராமரித்தால், மீறாமல் இருந்தால் இவற்றை தவிர்த்துவிடலாம்.  வரவு மீறிய செலவு - பொருளாதார சிக்கல், கட்டுப்பாடற்ற செயல்கள், வார்த்தைகள் - உறவு முறை சிக்கல்கள், வரைமுறையற்ற சிந்தனைகள் - சிக்கலுக்கு தூதுவிடுகின்றன. சில சமயம் 'அவரு பெரிய அப்பா டக்கரா?' என்று கேட்டுக் கொண்டே சமாளிக்கிறேன் பேர்வழி என்று தானாகவே போய் சிக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனம்கூட ஒரு தலைவலி உருவாக காரணமாகிவிடும்.    

பிரச்சினையை எதிர் கொள்வது : இதுவும் டேட்டாபேஸ் சார்ந்த செயல்தான். தவிர்க்கமுடியாமல் 'வஞ்சனை பேய்'களிடம் மாட்டிக்கொண்டாலும் ரொம்பவும் சாமர்த்தியமாக தப்பித்துவிட வேண்டும் -  அப்போதைக்கு தலையை ஆட்டி வைப்பது, வாயை இறுக மூடிக்கொண்டு சிரிப்பை வரைந்து கொண்டு , முழுகட்டுப்பாட்டையும் கையாண்டு  அந்த நிமிடங்களை கடந்துவிட வேண்டும். , .' 'லாகவம் பயிற்சி செய்' என்று மகாகவி சொன்னதும் இதைத்தான் போலும்.  அலுவலகத்தில் இது போன்ற வழிமுறைகள் நம்மை எதிர்பாராத சிக்கலில் இருந்து காப்பாற்றும். சில சமயம் வேண்டுமென்றே சீண்டி பிரச்சினைக்குள்ளாக்குவார்கள். நாமும் உணர்வுகளின் பிடியில்  சிக்கிக் கொண்டு தவறாக வெளிப்படுத்தி பொதுவில் ஒரு கெட்ட பெயரை பதிவு செய்து கொள்வோம் - சரியான முரட்டுப் பேர்வழி, வாயாடி, கோபக்காரன், யார் கூடவும் ஒத்துபோக முடியாதவன்..... 360 டிகிரி மதிப்பிடல்  நடைபெறும் இந்த காலக்கட்டத்தில் இது போன்ற பெயர்கள் நம்மை வழி மாற வைக்கும். வீட்டிலேயும்தான், யாரிடமோ கோபப்பட, குழந்தைகள் நம்மீது கோபக்கார முத்திரை குத்தி ஒதுங்கிவிடுவார்கள், வளர்ந்தபின் ஒதுக்கி விடுவார்கள். இது மனிதர்களால் வரும் பிரச்சினையை சமாளிப்பது. 

    சில சமயம் சூழ்நிலையே  பிரச்சினையாக உருவாக்கும். 'அந்த நிமிடத்தை கடப்பதுதான்' காப்பாற்றும் மந்திரம். இதற்கும் அந்த டேட்டாபேஸ்தான் உதவும். பேருந்தை தவறவிட்டாச்சு, அலுவலகத்திற்கு நேரத்திற்கு செல்ல என்ன செய்யலாம், ஆட்டோவில் செல்லலாம், நண்பனிடம் உதவிகேட்கலாம் - உதவக்கூடிய நண்பனின் பட்டியல் இருக்க வேண்டும்.தாமதமாக வர மேலதிகாரியிடம் அனுமதி கேட்கலாம் அல்லது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் - தாமதமாக சென்று காரணம் சொல்வதைவிட இது பரவாயில்லை. எதுவுமே செய்யாமல் திகைத்து நிற்பது பதட்டத்தை அதிகரிக்கும். கூடவே இருக்கும் சிலர் 'அப்பவே சொன்னேன் ' என்று கோபத்தை வேறு கிளறுவார்கள். அது வேறு பிரச்சினயை கிளப்பும்.

சரி மூன்றாவதான பிரச்சினையை களைவது எப்படி?  முன்னர்  குறிப்பிட்ட இரண்டிற்கும் அனுபத்தின் வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அவை மந்திரமாக செயல்படும். இதற்கு தந்திரம் வேண்டும் - அதைத்தான் சாணக்கிய தந்திரம் என்பார்கள். அடுத்த பதிவில் பார்க்கலாம்.

     ஒரு சூழலுக்குட்படும்போது நமக்கு தோன்றும் உணர்வுகள் உடனடியாக வெளிப்படும், ஏன் அப்படி நடந்து கொண்டோம் என்று ஆராய முடியாது. ஆரம்ப நிலையில் தோன்றவும் செய்யாது. பொதுவாக, புதிதாக ஒரு சூழலுக்குள் தள்ளப்படும்போது நாம் எப்படி செயல்படுவோம் என்று கணிக்க முடியாது. எந்த வித உத்தேசமும் இல்லாமல் சந்திக்கும் போது நாம் படித்த நீதிகளும், மற்றவர்களின் அனுபவங்களும்தான் நமக்கு வழிகாட்டி. ஆனால் நிறைய சமயங்களில் நாம் அவற்றை கையாளுவதில்லை. ஏனென்றால் அவற்றை உணரும்வரை நாம் அவற்றை நம்புவதில்லை.

     உதாரணமாக, சினம் காத்தல் பற்றி திருவள்ளுவர் வரிகளை படித்திருப்போம். செல்லுமிடத்து காப்
துதான் சிறப்பு, அல்லிடத்து காக்காவிட்டாலும் ஒன்றுமில்லை என்றிருப்பார். ஆனால் நாம் செல்லுமிடமாகிய நம்மை சார்ந்திருப்போர், சிறியவர்களிடம்தான் கோபத்தை காட்டுவோம். அதன் விளைவு சில வேளைகளில் துயரமாக முடியலாம். உண்மையென்னவெனில், அல்லிடத்து - நம்மை பாதிக்கக்கூடிய கட்டுப்பாட்டு விசைகளை தன் வசம் வைத்திருப்போர்- சினம் கொண்டால் நாம்தான் பாதிக்கப்படுவோம், செல்லிடத்து சினம் மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்தி, அவர்கள் நம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை குலைத்து விடும். வெளியே சொல்லிக் கொள்வதில்லை என்றாலும் ஒவ்வொருவரிடமும் மன ஆழத்தில் நியாயபுத்தி இருக்கும். அது பிற்பாடு நம்மை கேள்வி கேட்கும். ஒரு முறை அதன் கேள்வியின் பிடியில் சிக்கி வெளிவந்த பின் செல்லிடத்து காப்பதன் அவசியம் புரியும். உண்மையென்னவெனில், உடனடியாக தராசு தட்டை தூக்கிக் கொண்டு வந்து நீதி சொல்லும் தயாரான நிலையில் மனசாட்சியை நாம் வைத்திருப்பதில்லை. சிறிய தீக்கங்குகளை உள்ளே வைத்து புகையவிடும் வித்தை மட்டும் அதற்கு நன்றாக தெரியும். அதன் விளைவாகவே , சமாதானத்திற்கு இறங்கி வருவது, " உன்னை புரிந்து கொள்ளவில்லை" என்று மன்னிப்பு கேட்பது எல்லாம் நடக்கிறது.( Every man wants to pretend as a perfect man - infront of his super -ego. ) 

    நாம் மற்றவருடைய உணர்வுகளை சரிவர கையாளுவது எப்படி என்று பார்க்கலாம். இந்த பாடத்தின் முதல்படி உணர்வுகளை புரிந்து கொள்ளுவது என்பது.
ஒருவருடைய முகபாவனை, செய்கை, வார்த்தைகள் ஆகியவற்றை கொண்டு அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது. அதற்கான காரணங்களை புரிந்து கொள்வது. அதன் நோக்கத்தை கண்டு கொண்டவுடன் தான் சந்தர்ப்பத்தை சரிவர கையாள முடியும். பொறுமையில்லாத பார்வை , கை விரல்களை மூடிக் கொண்டு நிற்பது, வெற்றுப்பார்வை , முகம் சிவக்க ஆரம்பித்தல், அல்லது கறுத்து போகுதல் போன்றவை நாம் முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம் என்பதை காட்டிவிடும். கொஞ்சம் பின்வாங்கலாம், இதமாக பேசலாம் அல்லது வேறு விசயத்தை பேசி இயல்பு நிலை வந்த உடன் திரும்பவும் ஆரம்பிக்கலாம். 

      பெரியவர்கள் எனில் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல மென்மையாக கையாள வேண்டும். அப்படியென்றால் என்ன? ஒரு தோல் உறிக்காத வாழைப்பழத்தி்ல் மெல்லிய ஊசியை மிக மெதுவாக செலுத்தி 0 விலிருந்து 360 டிகிரிவரை குறுக்காக சுற்றிவிடுங்கள்( ஊசி முனை மறுபக்க தோலின் வழியே வெளிவரக்கூடாது. ஊசியை வெளியே எடுத்து விட்டால் முழு பழமாகவே தெரியும். பிறகு உறித்து பார்க்கும்போது இரண்டு துண்டாக வாழைப்பழம் கிட்டும். அப்படித்தான் ஊசி குத்திய வடு தெரியாமல் பழத்தை ( பழத்திற்கே தெரியாது, பார்ப்பவர்க்கும் தெரியாது.) துண்டாக்குவது போல செயல்பட வேண்டும். அதற்கு எத்தனை கவனமாக இருக்க வேண்டும், நிறைய சந்தர்ப்பங்களை அலசி பார்க்கவேண்டும் அது மற்றவருடையதாக இருந்தாலும்.

    புத்திசாலித்தனமாக உணர்வுகளை கையாள என்ன வேண்டும்?. தன்னை அறிதல், மற்றவர்களை அறிந்து கொள்ளுதல், தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளுதல், மற்றவர்களுடன் சரியான தொடர்பில் இருத்தல்.
நம்முடைய புத்திசாலித்தனத்தின் அளவுகோல்கள் - ஒரு உணர்ச்சிகரமான சூழலை சமாளிப்பது,ஈகோவின் தடைகளை உணர்வது, தாழ்வு மனப்பான்மையை களைவது, சூழ் நிலைக்கு தக்க மாறிக்கொள்வது, முக்கியமாக மற்றவரின் உணர்வுகளை சரியாக கண்டுணர்வது, மற்றவர்களிடம் பரிவுடன் நடந்து கொள்வது ஆகியனவாகும். உங்களுடைய EIயை இணையத்தில் கிட்டும் on line testஐ பயன்படுத்தி கண்டு கொள்ளுங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் எப்படி நடந்து கொள்வோம் என்பதை கொண்டு புத்திசாலித்தனத்தை அளவிடுகிறார்கள். இந்த பதிவு ஒரு ஆரம்பம் மட்டுமே உங்களுடைய முயற்சிகள் பயிற்சிகள் மட்டுமே இதனை முழுமை படுத்தும்.  சீரான வாழ்க்கை அமையவும் வெற்றிகரமாக முன்னேறவும் emotional intelligence மிகவும் அவசியமாகிறது. புரிந்து கொண்டு வெற்றியை கைபற்றுங்கள். 
   -  வாழ்த்துக்களுடன் சாகம்பரி.

 


       நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது, அவற்றை கையாள்வது, சரியான  செயல்பாட்டிற்காக நம்மை உந்திச்செல்வது, மற்றவர்களுடைய உணர்வுகளை புரிந்து  கொள்வது, உறவுகளுக்கு     மதிப்பு தருவது   போன்றவை முக்கியமானவையாகும். இவற்றை தெளிவாக பார்க்கலாமா? 

     விளக்க எளிதாக இருக்கும் என்பதால், இந்த பதிவில் கோபம் என்கிற உணர்வை எடுத்துக் காட்டாக கொள்கிறேன். 

     நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது . நாம் எப்போது கோபப்படுவோம், வருத்தப்படுவோம், மகிழ்ச்சியாக உணர்வோம் என்பதை புரிந்து வைத்திருக்கவேண்டும். அப்போதுதான் அவற்றை சரிவர கையாள முடியும். பயன்படுத்துவது வேறு, கையாளுவது வேறு. கோபத்தை பயன்படுத்தி ஒரு விசயத்தை சாதித்துக் கொள்ளக்கூட முடியும், ஆனால் அது உருவாக்கிய எதிர்மறை விளைவுகளை சரி செய்ய முடியாது. கத்தியை கொலை செய்ய பயன்படுத்துவதற்கும், புற்று நோய் கட்டியை அகற்றுவதற்கும் உள்ள வித்தியாசம்தான். லாகவமாக கட்டுப்படுத்தும் தந்திரம் தெரிய வேண்டும். எல்லைகளை உணரும்போது கட்டுப்பாடும் புரிந்து விடும். ஒரு எலாஸ்டிக் நூலை அறுந்து போகாமல் இழுக்கக் கூடிய நீளம்தான் அதன் எல்லை. மீறினால் அறுந்து விடும். 

     உதாரணமாக , நம் நெருங்கிய உறவுகளிடம் கணவன்/மனைவி, மகன்/மகள் தவறு கண்டவிடத்து திருத்தும் வாய்ப்பாக - சரியான பாதைக்கு உந்திச் செல்லும்- கோபப்படலாம் - சமயத்தில் அதிர்ச்சி வைத்தியமாக கையாளலாம். அடுத்தடுத்த நிமிடங்களின் ஓட்டத்தில் கோபத்தை கரைத்துவிட வேண்டும். சற்று பொறுத்து , செய்த தவறினால் ஏற்படக்கூடிய தீமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். சில சமயம் தவறுகளின் விளைவுகளை சரி செய்யவும் நாம் உதவவேண்டும். மணிக்கணக்கில் கோபத்தை இழுத்துபிடித்துக் கொண்டு இருந்தால், நம்மை மீறிய செயல்கள் வருங்காலத்தில் நடைபெற நேரிடும். கவனிக்க வேண்டியது, அப்போதைய தவறு மட்டும் அவர்களிடம் நமக்கு பிடிக்கவில்லை என்று துல்லிமாக காட்டவேண்டும். சில சமயம் ஒரேயடியாக பிடிக்காமல் போய்விட்டதோ என்று நினைத்து விடக்கூடும். தவறு செய்து சிலரிடம் சிக்கி விட்டால், நினைவு தெரிந்த நாள் முதல் நாம் செய்த தவறுகளை மறுபடியும் மெகா சைஸில் மனக்கண்முன் ஓடவிட்டு, முத்தாய்ப்பாக "நீ எதுக்குமே லாயக்கில்லை: என்று முடிப்பார்கள். எதிரிலிருப்பவர்கள், மட்டமான திரைப்படம் ஆரம்பிக்கும் முன் உறங்கிவிடுவது போல், கவனத்தை வேறு எதிலாவது திசை திருப்பி மாய உலகத்திற்குள் நுழைந்துவிடுவார்கள். இந்த கோபத்தினால் பயனில்லை. நமக்குத்தான் சக்தி, நேரம் அத்தனையும் விரையம். 

      சரி நெருங்கிய உறவுகள் அல்லாதவரிடம் கோபப்படலாமா? அதற்கு மிக குறுகிய எல்லை மட்டுமே உண்டு. எல்லோரிடமும் கோபப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. வெளியுலகத்தை பொறுத்தவரை ஒருவரை திருத்தும் கடமை நமக்கு குறைவு. அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டலாம். அவர்களின் தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் - நமக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள்- இருந்தால், கண்டிப்பாக பேசலாம் - வார்த்தையோ முகமோ மாறக்கூடாது. அந்த தவறினை சரி செய்ய அவருக்கு உள்ள பொறுப்பையும், தார்மீக கடமையையும் கண்டிப்பாக சொல்ல வேண்டும். தலைமை அதிகாரிக்கும் வேலை பார்ப்பவருக்கும் அப்பா மகன் உறவு நிலவுவது நல்ல முன்னேற்றத்தை தரும் என்பார்கள். மேலாண்மை கோட்பாடானது , பெண் தலைமை அதிகாரிகள் ஒரு பாலமாக நின்று கற்றத்தருவதாகவும், ஆண் அதிகாரிகள் தண்டனை தருவதிலும் வெகுமதி தருவதிலும் வேலையை கற்பிப்பதாகவும் சொல்கிறது. வீட்டிலும் இதுதானே நடைபெறுகிறது. பொதுவாக கோப வீச்சின் நீளம் எதற்காக கோபப்படுகிறோம் என்பதையும், கோபத்தின் பின் விளைவுகளையும் தெளிவாக உணர்ந்து கொண்டால் குறைந்து விடுமாம்.

        சமயத்தில் உணர்ச்சிகரமான சூழல் முடிந்து பொறுமையாக ஆராயும் போது தவறாக வெளிப்படுத்தியிருப்பது புரியும். இதேபோலவே சம்பந்தப்பட்ட மற்றவரும் நினைத்து பார்ப்பார்கள். வெகு சிலரை தவிர்த்து மற்றவர்கள் பொதுவான உணர்வுகளின் பாதையில் பயணிப்பவர்தான். அந்த மற்றவரும் நாம் புரிந்து கொண்டவராக இருந்தால் இணக்கமான தருணத்திற்காக காத்து இருக்கலாமே. பேசி தீர்த்துக்கொள்ள முடியாதா என்ன? பொதுவாக என்னிடம் குடும்ப கவுன்சிலிங்கிற்கு வருபவர்கள் கோபமாக பேச ஆரம்பித்தால், பேச விட்டு விட்டு மறு நாள் வரச்சொல்வேன். மறுபடி மறு நாளும் கொட்டித் தீர்ப்பார்கள். இப்படி சில முறை வந்து சென்றபின் நியாய தர்மங்களுடன் பேச ஆரம்பிப்பார்கள். அவர்களாகவே தன்னுடைய தவறை ஒப்புக்கொள்வார்கள். மற்றவர்கள் செயலுக்கும் நியாயம் கற்பிப்பார்கள். ஏன் அப்படி மாறிப்போகிறார்கள்? உணர்வுகளை சரிவர கையாளத் தேவையான மற்ற குணங்கள் என்னென்ன? மீண்டும் அடுத்த பதிவில் தொடர்வோம். 

உணர்வுகள் என்னும் ஆயுதம - 4

     சிலரின் அனுபவங்கள் வேறு மாதிரி இருக்கும். வெப்ப வீச்சுகளை ஏற்படுத்தாமல், தனக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி தோல்வி பயத்தை உண்டு பண்ணி விடும். அவர்கள் வாழ்க்கையை நேர்மையான பார்வையில் பார்க்கமுடியாமல் சிக்கலாக்கி கொள்வதும், தவறான முடிவுகளை கையாள்வதும், மன நோய்க்கு ஆளாவதும் உண்டு. இதுவும் ஒருவகையான விளைவுதான்.

      உதாரணமாக, அலுவலகத்தில் ஒரு செயலை சரி வர முடிக்க முடியாமல் போகும்போது அதற்குரிய விளக்கத்தை தரலாம். இன்னும் கொஞ்சம் சந்தர்ப்பம் தர சொல்லலாம். இரண்டும் இல்லாமல் " அந்த வேலையை செய்யும் தகுதி எனக்கில்லை" என்று குமைவதும், மேலதிகாரியை சந்திக்க மறுத்து மட்டம் போடுவதும் மனதளவில் நம் உறுதியை குலைத்து முன்னேற்றத்தை தடுக்கும். அதைவிட கூட வேலை செய்பவர்களே நம்மை மதிக்கமாட்டார்கள். வெற்றி பெற்றவர்களை விமர்சனம் செய்து மனதளவில் தரம் குறைந்துவிடுவது உண்டு. வீட்டிலும் இப்படித்தான், நெருக்கமான உறவினர்களிடம் இது பிடிக்கும் இது பிடிக்காது என்று ஒளிவு மறைவின்றி செயல்படுவதை விடுத்து, மனதிற்குள் எல்லாவற்றையும் சேர்த்து வைத்துக் கொண்டு எதிலும் ஒட்டாமல் தனக்குள்ளேயே நியாயம் கற்பித்துக் கொண்டு, தியாக வாழ்வு வாழ்வதாக சாசனம் எழுதிக் கொண்டு. கூட்டுப் புழு போல் சுருண்டு கொண்டு வாழ்வது மொத்த குடும்பத்தையும் அவமானப்படுத்தும் விசயம் அல்லவா? என்றாவது ஒரு நாள் அத்தனை உள்ளக் குமுறல்களையும் கொட்டி தீர்க்கும்போது உறவுகள் கலைந்துவிடாதா? அனைத்தும் மாற்றங்களுக்கு உட்பட்டதுதான், அது நாம் விரும்பிய மாற்றமாக இருக்க வேண்டுமெனில் உணர்ச்சிபூர்வமான சூழ்நிலைகளை சரிவர கையாள வேண்டுமல்லவா?


      உணர்வுகள் என்னும் ஆயுதம் என்று நான் குறிப்பிட்டதின் காரணமும் அதுதான். ஏதோ பிரச்சினை ஏற்பட்டதால்தான் , உணர்ச்சிவசப்படும் சூழலை சந்திக்கின்றோம் - பதவி உயர்வு தவறிப் போயிருக்கலாம், ஒரு வேலையை கையாள்வதில் சக ஊழியருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருக்கலாம், சொன்ன பேச்சை மகன் / மனைவி கேட்காமல் ஒரு சிக்கலை ஏற்படுத்தி இருக்கலாம், இது எதுவுமே இல்லாமல் இன்ன காரணம் என்று சொல்லமுடியாமல் சிலருடன் உரசல்கள், முகம் திருப்பல்கள் ஏற்படலாம். நொடிக்குள் வயிற்றுக்குள் அமிலத்தை சுரக்க வைத்து இரத்த ஓட்டத்தை தலைக்கு செலுத்தி மூளை படிக்கும் முன்பே வார்த்தைகள் வெளிப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன. இது போன்ற தருணங்கள் கத்தியை கையாள்வது போன்றது. அது மருத்துவர் கை கத்தி போல செயல்பட்டு வியாதியை களைந்தெறிய வேண்டும். அதைவிடுத்து கொலை வாள் போலாகி மற்றவரை குலைத்துவிடக்கூடாது. எந்த கத்தியாக இருந்தாலும் கைப்பிடியை மாற்றி கூர்முனையை பிடித்தால் நம் கையையும் இழக்க நேரிடும்.

  இப்போது தலைபிற்கு வரலாம் - emotional intelligence - உணர்வு பூர்வமான புத்திசாலித்தனம் என்று நேரிடை மொழியாக்கம் செய்யப்படுகிறது. என்னை கேட்டால், உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாள்வது என்று விளக்கம் சொல்வேன். Intelligence என்றால் தேவைப்பட்ட சமயத்தில் ஏற்கனவே பதியவைக்கப்பட்ட செய்திகளை கொண்டு செயல்படுவது ஆகும். இது கணிப்பொறி உலகின் விளக்கம். உதாரணமாக சாலையில் செல்லும்போது வேகமாக வரும் பேருந்தினை பார்த்து விலக முயற்சிப்போம். அப்படியில்லையெனில், சாமர்த்தியமாக பிரேக் போட்ட ஓட்டுனரின் " அறிவில்லையா?" என்ற கேள்வியை எதிர்கொள்ள நேரிடும். அவருக்கும் இல்லையெனில் மருத்துவரிடம் இதே கேள்விக்கு பதில் சொல்ல நேரிடும். வேகமாக விலக வேண்டும் என்று எப்படித் தோன்றியது? எப்போதோ நமக்குள் பதியவைக்கப்பட்ட கருத்துதான் செயல்பட வைக்கிறது. சரிதானே? எனவே emotional intelligence , உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு , கட்டுபடுத்துவது எப்படி என்று சொல்லலாமா? அதற்கு சில புரிந்து கொள்ளல்கள் தேவை.


     நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்வது, அவற்றை கையாள்வது, சரியான செயல்பாட்டிற்காக நம்மை உந்திச்செல்வது, மற்றவர்களுடைய உண்ரவுகளை புரிந்து கொள்வது, உறவுகளுக்கு மதிப்பு தருவது போன்றவை முக்கியமானவையாகும். இவற்றை இன்னும் தெளிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாமா? 

உணர்வுகள் என்னும் ஆயுதம் -3 

         இது பற்றி சற்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கிட்டதட்ட மலரினும் மெல்லிய மனதில் சொல்லப்பட்ட கருத்துகள்தான். அதற்கு அழகான தலைப்பு கொடுத்து வந்துள்ளது. EMOTIONAL INTELLIGENCE, உணர்வுபூர்வமான புத்திசாலித்தனம். நம்மை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மீது உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த சூழ்நிலையில் உள்ளவர்களின் வேறுபட்ட பங்களிப்புகள் நமக்குள் சில சிந்தனைகளை தூண்டிவிடுகின்றன. என்ன நடக்கிறது என்று தெரியாத அந்த நிமிடத்து தடுமாறல்கள் ஒரு அலையை கிளப்பிவிடுகின்றன. குடும்ப சூழலோ அல்லது அலுவலகமோ நம்முடைய உணர்வு பூர்வமான வெளிப்பாடு அந்த நிமிடத்தின் செயல்பாட்டினை தன்வசப்படுத்தி, சூழ்நிலை கட்டுப்பாட்டினை குலைத்து நொடியில் நம்முடைய ஆக்கபூர்வமான திட்டங்களை கலைத்துவிடும்.

      உதாரணமாக , நம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டல். சட்டென கோபப்பட்டு நாம் பல தீர்மானங்களை அறிவிப்போம். எதிரிலிருப்பவர்க்கு பதில் சொல்லும் முனைப்பில் பல பதில் கேள்விகளை குற்றச்சாட்டல்களாக முன்வைப்போம். அலுவலகம் எனில் "இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை." என்று அறிவிப்போம். வீடு எனில் "என்னை குறை சொல்ல உனக்கு எந்த தகுதியும் கிடையாது" என்று மட்டம் தட்ட முயற்சிப்போம். அலுவலகத்தின் எதிர் நடவடிக்கையாக இன்னும் நம்மை குற்றவாளியாக்க முனைப்பு காட்டப்படும். உயர்பதவியில் இருப்பவர்கள் இதை செய்வதும் எளிது. நம்மிடம் தவறு இல்லை எனும்போது வார்த்தைகள் அக்க்னி ஏவல்களாக வெளிவரும். சரிதான், நம்மை சுற்றி இருப்பவர்கள் கூட நம் நியாயத்தை புரிந்து கொள்ளமுடியும். ஒரு தவிர்க்கமுடியாத கட்டத்தில் குற்றம் சாட்டியவர் ஒப்புக்கொள்ளும் நிலை வரும். இந்த பிரச்சினை இருவிதமாக வழிபடுத்தும். நாம் ஆர்பாட்டமாக கருத்துக்களை முன்வைத்து போராடும்போது வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தவர் ஆவோம். ஏனெனில் எதிரணியில் ஒருவரை - நமக்கு எதிராக - நாமாகவே சேர்த்துவிடுகிறோம். தோல்வியின் கங்குகள் பொத்திவைக்கப்பட்டு ஒரு பெரிய அழிவை ஏற்படுத்த காத்திருக்கும். அந்த சூழலில் நாம் வெளிப்படுத்திய எதிர்மறையான உணர்வு வெளிப்பாடுகள் - கோபமாக பேசுதல், தவறான வார்த்தை பிரயோகங்கள்- பார்வையாளர்களில் சிலரையும் எதிர்மறையாக எண்ணவைக்கும். நட்புகளை இழக்கலாம், வேலைகூட இழக்க நேரிடும் - நம் விருப்பம் இல்லாமல்.

    இதுவே குடும்ப சூழல் எனில், நம் எதிரே இருப்பவர் - இன்பத்திலும் துன்பத்திலும் நம்முடன் பங்கேற்கும்- நம் உறவினர்தான் என்று எண்ணாமல் வார்த்தைகள் வெளிப்பட்டு, புயல்வேகத்தில் அவர்களை தூக்கி எறிந்து பிரபஞ்சத்தில் தொலைத்துவிடும். பிறகு எல்லாம் முடிந்தபின் எஞ்சியிருப்பது எலும்பு மற்றும் சதையாலான ஒரு பிண்டம்தான். சில சமயம் வெறித்து பார்த்து புழுவென மாற்றும், சில வேளைகளில் கூட்டுபுழுவென மாறி ஒரு திரையிட்டு மறைந்து கொள்ளும். இதுவே நெருங்கிய உறவுகள் இல்லையெனில் மதியாதார் வாசல் மிதியாதே என்று வசனம் பேசிவிட்டு, உறவை மறுத்து துவேசம் கிளப்பிச் செல்லும். பிற்காலத்தில் நாமே சொல்லிக்கொள்வோம் " நான் நல்லாயிருக்கேன் என்று பொறாமை" . ஒருவருடைய முன்னேற்றத்தில் சந்தோசப்படாத உறவுகளுக்கு நாம் தந்த உள்ளீடுகளே காரணமாக இருக்கும். சமயத்தில், நம்மை சார்ந்தவர்கள் தந்தவற்றிகான பலனும்கூட நமக்கும் கிட்டும். இது போன்ற சிக்கல்களுக்கு காரணம் கண நேரத்தில் நாம் செயல்பட்டவிதம்தான். - வெகு சிலர் மட்டுமே இதுபோன்ற சூழலில் கட்டுப்பாடில்லாமல் செயல்பட்டுவிட்டு, பிறகு எப்பாடு பட்டாவது அந்த சிக்கலை சரிசெய்வர் - அது போன்ற தந்திரங்களை பயன்படுத்துவதில் பெரும்பாலானோருக்கு உடன்பாடு இருக்காது. . 
                                                                                                                                        -தொடரும்

- மகளுக்கான கடிதம் இடையிடயே தொடரும். அம்மா கடிதம் போட வேண்டிய தேவை அவ்வப்போதுதான் வருகிறது -சாகம்பரி.
உணர்வுகள் என்னும் ஆயுதம் -2

      யோசித்துப் பார்த்தால், நாம் கட்டுப்பெட்டித்தனம் என்று நினைக்கும் வரைமுறைகள்தான் நம் ஈகோவை பலப்படுத்தும் காரணிகள் ஆகிறதோ? தனி மனித முன்னேற்றத்தை தடை செய்யும் காரணியாக வரைமுறைகள் இருந்தாலும், நான் இதை கலாச்சரம் சார்ந்த சமூகத்தின் பார்வையிலிருந்துதான் கேட்கிறேன்.  என்னுடைய ஈகோவினால் எனக்குள் ஏற்படும் தயக்கம் பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தொழில் முறைகளில் என்னை வெற்றிகரமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லமுடியுமா?. 
        இது முக்கியமான கேள்வி. ஆராய்ந்து பார்க்கும் போது, இன்றைய உலகில் வெற்றியை தயக்கம் தள்ளிப் போடுகிறது. தயக்கம் என்பது சமயம் பார்த்து செயல்படுமாறு கட்டுப்படுத்தும் ஈகோவின் ஆளுமைதான் என்பது நமக்கு புரிந்திருக்கும். இன்றைய சூழ்நிலையில், முந்தினவன் கை மந்திர வாள் என்ற பழமொழிக்கு ஏற்பதான், வாய்ப்புகளும் கைகூடி வரும். எங்கள் கல்லூரிக்கு வளாக நேர்முகத்தேர்வில் பொதுவாகவே தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், தயக்கம் இல்லாமல் சரளமாக பேசக்கூடியவர்கள், பழகக்கூடியவர்கள் ஆகியோர்தான். நவீன கொள்கைகளின்படி நாம் ஈகோவிலிருந்து வெளிவந்தால்தான் தொழில் முறையில் வெற்றிக் காண முடியும். இந்த குணாதிசயம், கண்டிப்பாக ஈகோவை பலவீனப்படுத்தும். ஆனால், நம்முடைய தொழில்முறை பழக்கங்களில் இது போன்ற நடவடிக்கைகள் வெற்றி தேடித்தரும். (360 degree review வில் அனைவரிடமும் சரளமாக பேசுபவர்தான் வெற்றிபெற முடியும்). சரளமாக பழகுபவர்கள் துணிச்சல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதே பழக்கம்தான் அலுவலகம் அல்லாத இடத்திலும் வரும். அதனால் என்ன?

       ஒரு முறை நினைவு கொள்வோம். இட் என்பது சூழ்நிலையிலிருந்து கற்றுக் கொள்ளும் ஆசை மனம். ஈகோ என்பது இட்ஐ கட்டுப்படுத்தும். சரியான செயல்பாடுகளை வலியுறுத்தும். ஆனால் ஒரேயடியாக எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி எழுப்பி நம்மை தயங்க வைக்கவும் செய்யும். ஈகோவை மீறி நாம் செயல்படுவதனால், அதனை பலவீனப்படுத்துகிறோம், எனவே இட்ஐ வளர்த்துவிடுகிறோம். நமக்குத் தோன்றியபடி (கட்டுப்பாடின்றி?) செயல்படுவோம். இதுதான் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கிறது. இதில், "என்னை புரிந்து கொள்வதில்லை" என்று மற்றவர்கள் மீது புகார் வேறு சொல்வோம். உண்மையில் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில் சார்ந்த பழக்கத்திற்கும் வேறுபாடின்றி போய்விடுகிறது. எனவே இட் ,ஈகோ இரண்டும் தேவைப்பட்ட நேரத்தில் இடத்தில் சரியாக செயல்படவேண்டும். எப்படி?

     இரண்டையும் சரியாக கையாள மூன்றாவதாக ஒன்றின் உதவி தேவைப்படுகிறது. சூப்பர் ஈகோ...? இரண்டிற்கும் இடையே ஒரு இணக்கம் காண சூப்பர் ஈகோவால் முடியும். சூப்பர் ஈகோ மிகச் சரியாக செயல்படும். ஏதோ ஒரு இக்கட்டில் நாம் இருக்கும்போது சட்டென ஒரு யோசனை தந்து , நம்மை காப்பாற்றுவது இதுதான். நிதானமாக நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களை ஆராய்ந்தால், உணர்ச்சி வசப்பட்டு செயல்பட்டது (நாம் கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாமோ ? ) ரொம்பவும் யோசித்து தவறவிட்ட தருணங்கள் ( எதுவோ தடுத்திருச்சு?), நம்மை நாமே மெச்சிக்கொள்ளும் விதமாக எடுக்கப்பட்ட வியத்தகு முடிவுகள் ( உள்ளுக்குள்ள ஏதோ சொல்லுச்சு!) ஆகியவற்றின் போது ஆதிக்கம் செலுத்தியது நம் மனம்தான் என்று நினைத்திருந்த கருத்தினை இப்போது மாற்றிக்கொண்டு நம் மனம் என்பதே மூன்று குணாதிசயங்கள் ஒருங்கிணைந்ததுதான் என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்.

        சூப்பர் ஈகோ சரியாக செயல்படும்போது நம்முடைய சிக்கல்களுக்கு விடை எளிதில் கிடைத்துவிடும். இட்ஐ வளர்ப்பது நாம் உள்வாங்கும் சாமான்ய விசயங்கள்தான். ஈகோவை வளர்ப்பது நல்ல விசயங்கள், நல்ல சூழ்நிலைகள் ஆகியன. சூப்பர் ஈகோவை யாரும் வளர்க்க வேண்டியதில்லை. இயல்பாகவே நம்மை அறியாமலே உள்ளிடப்பட்ட விசயங்கள் அதனை பலப்படுத்துகின்றன. நாம் மௌனமாக இருக்கும் நிலையில் சூப்பர் ஈகோ அருமையாக செயல்படும். எப்போதெல்லாம் மௌனமாக இருப்போம்? தியானத்தில் , அமைதியான சூழ்நிலையில் , தனிமையில், ஏதோ ஒரு வேலையில் கவனமாக இருக்கும்போது - பொறி தட்டியது போல சில விசயங்கள் புலப்படும் இதெல்லாம் சூப்பர் ஈகோவின் இருப்பினை உணர்த்தும். தூசு படிந்த கண்ணாடியில் உருவம் தெரியாது என்பது போல மாசு படிந்த மனதில் இது செயல்படாது. தூய்மையான எண்ணங்கள் மூலம் சூப்பர் ஈகோவை பலப்படுத்துவோம்.


இனி சில சிந்தனைகள்:

1. தனித்திரு விழித்திரு பசித்திரு என்ற வாக்கியத்தின் விளக்கம் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகிறதா?
2. மலைக்கு செல் அல்லது கடலுக்கு செல் மனதுடன் பேசலாம் என்பதும் அதுதானோ? நிறைய வழிபாட்டுத்தலங்கள் கடற்கரையிலும் மலையிலும் அமைய இதுதான் காரணமோ.
3.அனத்து மதத்தின் வழிபாட்டு முறைகளும் சூப்பர் ஈகோவை பலப்படுத்துகின்றனவோ?
  - ஒரு இஸ்லாம் நண்பர் சொன்னது - ஆகாயத்தினை நோக்கிய பார்வையில் மானசீகமாக  உலகத்தைவிட்டு வெளிக்கிளம்பி பூமியை தொலை நோக்கு பார்வையில் பார்க்கமுடிந்தால் குறிப்பிட்ட மந்திரத்தை 300 முறை சொன்ன பலன் கிட்டும்.  இது போன்ற தருணத்தில் நம்மால் தெளிவாக சிந்திக்க முடிகிறதுதானே.

தன்னை மறத்தல் அல்லது மறுத்தல-3


      தன்னை மறத்தல் பற்றி இப்போது பார்க்கலாம். ஒரு உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையில், உடனடி செயல்பாடு இட்'ன் பொறுப்பு. அது செயல்படுமுன் அதனை கட்டுப்படுத்துவது. ஈகோவின் பொறுப்பு. சில சமயம் ஈகோவையும் மீறி நம் வெளிப்பாடுகள் இருக்கும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சுற்றி இருப்பவரை பொருட்படுத்தாமல் கோபமாக கத்துவது, அழுவது, உடல் நடுங்க கட்டுப்பாட்டை இழப்பது ஆகியன நடைபெறும். சிறு பிள்ளைகள் போல இருக்கும். ஏன் இப்படியாகிறது? பலவீனமான ஈகோவின் செயல்பாட்டை இட் எளிதாக தாண்டிவிடுகிறது. எப்போதெல்லாம் ஈகோ பலவீனமடையும். நமக்குப் பிரியமானவர்கள், நமக்கு நல்லது செய்பவர்கள் முன்னிலையில் ஈகோவின் சக்தி குறைந்து விடும். அவர்களிடம் தன்னை மறைத்தல் தேவையில்லை என்பதால். ஆனால், குறிப்பிட்டவர்களையும் தாண்டி, அனவரிடமும் இது போன்ற வெளிப்பாடுகள் நமக்கு நல்லது செய்யாது. "நான் ஒரு திறந்த புத்தகம்" என்று சொல்லிக் கொண்டு அனைவரிடமும் நம் மன உணர்வுகளை வெளிக்காட்டி கொண்டிருந்தால், தேவையில்லாத சிக்கல்கள் உருவாகும். எல்லோரிடமும் ஒளிவு மறைவில்லாமல் நன்றாக பழகுவது என்ற கொள்கை பலவீனமான ஈகோவை உருவாக்கும். இது நமக்கு ஆபத்தானது. சுதந்திரமாக பழகும் எல்லை என்பது ஒவ்வொருவரிடமும் மாறுபட வேண்டும்.. வீட்டை திறந்து போட்டு விட்டு திருடனை வரச்சொல்லிவிடுவது போல ஆகாதா. இன்றைக்கு நிறைய இளைஞர், இளைஞிகளை சிக்கலில் கொண்டு தள்ளுவது இந்த கொள்கைதானே.


    உண்மையில் எதிரில் இருப்பவர்கள் நம்மை எளிதாக எடைபோட இது ஏதுவாகி விடுகிறது. மேற்குறிப்பிட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள் அனைத்தும் வேண்டியவர் முன்னிலையில், நம்முடைய இடம் என்று உணரக்கூடிய பாதுகாப்பான எல்லையில் நடைபெறவேண்டும். நம்மை சுற்றி இருக்கும் அனைவரும், நம்முடன் பழகும் அனைவரும் நம்மை புரிந்து கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய பலம், பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. அதனை மீறி நாம் பழக ஆரம்பிக்கும்போது, அந்த மற்றவருக்கு நம்மையும் அறியாமல் ஒரு அனுமதியை அளித்துவிடுகிறோம். நாம் முற்றிலும் அவர்களுடைய கட்டுப்பாட்டிற்குள், மனதளவில் சென்றுவிடுவோம். பிறகு, பலவீனமான சந்தர்ப்பங்களில் - சமயம் பார்த்து நடந்து கொண்டு அவர்கள் எளிதாக நம்மை ஆளுமை செய்ய முடிகிறது. இதுதான், சமூக பாதிப்பிற்கு பெரிய காரணம் ஆகிறது. சாமியார்களின் வெற்றிக்கு இதுதானே காரணம். குடும்பப் பிரச்சினைகளில் அன்னியர்களின் தலையீட்டிற்கு காரணம் குடும்பத்தில் யாரோ ஒருவருடைய பலவீனமான ஈகோதான்.

      சிலர், இது போன்ற போலியான வலை வீசல்களில் மயங்கி கற்பனை காதலுக்குள் இறங்கி விடுகின்றனர். தாய் தகப்பனை மறக்க வைத்த காதல்(?), கணவன்/மனைவியையும் மறக்க வைக்கிறது. பல குடும்பங்களின் சிதைவிற்கு இதுதான் காரணம் அல்லவா? இது பெண்களுக்கு மட்டும் பொருந்தும் என்று தள்ளிவைக்க வேண்டாம். முட்டாள்தனமாக தன்னுடைய மன பலவீனம் அத்தனையும் புரிந்து கொள்ளும்படி நடந்து கொண்டு, பெண்களிடம் தன்னுடைய வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கும் ஆண்களுடைய நிலைக்கும் பலவீனமான ஈகோதான் காரணம். ( மனைவியை பற்றி அன்னியப் பெண்ணிடம் பகிர்ந்து கொள்தல், கணவனின் கெடுபிடிகளை மற்ற ஆண்களுடன் பிரஸ்தாபித்தல்)

    யோசித்துப் பார்த்தால், நாம் கட்டுப்பெட்டித்தனம் என்று நினைக்கும் வரைமுறைகள்தான் நம் ஈகோவை பலப்படுத்தும் காரணிகள் ஆகிறதோ? தனி மனித முன்னேற்றத்தை தடை செய்யும் காரணியாக வரைமுறைகள் இருந்தாலும், நான் இதை கலாச்சரம் சார்ந்த சமூகத்தின் பார்வையிலிருந்துதான் கேட்கிறேன். என்னுடைய ஈகோவினால் எனக்குள் ஏற்படும் தயக்கம் பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த தொழில் முறைகளில் என்னை வெற்றிகரமான ஒரு நிலைக்கு கொண்டு செல்லமுடியுமா?. அதே சமயம், என்னுடைய ஈகோவை பலவீனப்படுத்தும் நவீன கொள்கைகளைத் தாண்டி இல்லற வாழ்க்கையில் வெற்றி காண முடியுமா?
                                                                                                                       - அடுத்த பதிவில்
 
 தன்னை மறத்தல்அல்லது  மறுத்தல்-4                                                                                                        -

   முந்தைய பதிவில் நான் கேட்டகேள்விகளை இரண்டுவிதமாக அணுகலாம். ஒன்று சூழ்நிலைக்கு ஏற்ப வெளிப்படுத்துவது அல்லது அடக்குதல். இந்த இடத்தில் நம்மை கட்டுப்படுத்துவதுடன் சூழ்நிலையையும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம். இதனை கையாளுவது எப்படி? இரண்டாவது, இது போன்ற மறைப்புகள் இன்றி ஒருவரிடம் நம்மால் எப்போதெல்லாம் பேச முடியும்?

   முதலில், தன்னை மறுத்தல். மறைத்தல் என்றே சொல்லலாமே ஏன் மறுத்தல் என்று சொல்லவேண்டும். நமக்குள் எப்போதுமே இரண்டு குணதிசயங்கள் செயல்பாட்டில் உள்ளன என்பதை முதலில் உணரவேண்டும். ஃப்ராய்டு சொன்ன மூன்று குணதிசயங்களில் - இட், ஈகோ, சூப்பர் ஈகோ- ஏதாவது இரண்டு மட்டுமே ஒரே சமயத்தில் செயல்படும். இட் என்பது ஆசை மனம். லௌகீக விசயங்களுக்கு முதலில் இதுதான் ரியாக்ட் செய்கிறது. ஒரு சந்தோசமான விசயம் நடக்கும்போது, ஜாலியாக எம்பி குதிக்கத் தோன்றும் அல்லது சின்னதாக விசில்கூட அடிக்கத் தோன்றும். இது இட்'ன் செயல்பாடு. நம்முடைய ஈகோதான், ஆழ்மனம், இதனை கட்டுப்படுத்தும். நடு ரோட்டில் வைத்து விசிலடிக்கக்கூடாது, இத்தனை பேருக்கு முன்பு குதிக்கக்கூடாது, தனிமையில் இதையெல்லாம் செய்து கொள் என்று நாம் இட்'ன் செயல்பாட்டிற்கு போகும் முன் அழுத்தமான குரல் கொடுத்து நம்மை கட்டுப்படுத்தும். மறுத்தல் என்பது, ஈகோவின் வேலை. நமக்கு நாமே சொல்லி கட்டுப்படுத்துகிறோம்.


   தளர்ந்துபோன சில வேளைகளில் , என் பெயரை நானே சொல்லி - மெல்லிய குரலில்தான் ஆனால் அழுத்தமாக - " விடுப்பா, இன்னும் சந்தர்ப்பம் இருக்கு, ஜெயிப்போம். அது வரைக்கும் முயற்சிப்போம்." என்று தேறுதல் சொல்லி இருக்கிறேன். நம் பெயரை சொல்லி ஒரு விசயத்தை நமக்குள் பதியவைப்பது நல்ல பலன் தரும். யாரோ நம்முடன் துணைக்கு இருப்பது போன்ற உணர்வினை தரும். புதிய சக்தி கிட்டும். இங்கெல்லாம் நாம் ஈகோவை பயன்படுத்துகிறோம்.


உண்மையில் ஈகோவிற்கு இதையெல்லாம் யார் கற்றுத்தருவது. நாம்தான். பார்த்து, படித்து, கேட்டு மனதில் பதிய வைத்த விசயங்கள்தான் நம்மை ஒரு சூழ்நிலையில் இயங்க வைக்கின்றன. நல்ல வெளிப்பாடு, தவறான வெளிப்பாடு என்பன நாம் மனதில் இருத்திக் கொண்ட விசயங்களால்தான். சொல்லப்போனால் நம்முடைய சில வெளிப்பாடுகள் , யாராலோ நடிக்கப்பட்டு நமக்குள் ஒத்திகை பார்க்கப்பட்டவைதான். அதனால்தான் முற்றிலும் புதிதான ஒரு சூழ்நிலையில் செயலற்று போய் நிற்போம். திகைத்த பார்வையுடன் , அதிர்ச்சியாய் உறைந்து நிற்போம். இந்த சூழ்நிலையில் எப்படி ரியாக்ட் செய்வது என்பது இட்'ற்கும், ஈகோவிற்கும் தெரியாது. இட் சந்தர்ப்பத்தை உணர்ந்தால், ஈகோ சூழ்நிலையை எடைபோடும். 

     உதாரணமாக, நாம் ஒரு காட்சிக்குள் நுழையும்போது, அதற்கேற்ப சில எதிர்பார்ப்புகளையும், பாவனைகளையும் இட் உருவாக்கும். ஈகோ தன்னுடைய நினைவுப்பதிவுகளை திருப்பி, இது போன்ற காட்சியில் எப்படியெல்லாம் உணர்ச்சி வசப்படுவோம் என்பதை பட்டியலிட்டு தயாராக இருக்கும். உதாரணமாக , ஒரு பிரச்சினை சம்பந்தமாக முக்கியமான நபரை சந்திக்கப்போகிறோம் என்று கொள்வோம். நம் உயர் அதிகாரியாக இருக்கலாம். அவர் கேட்கப்போகும் கேள்விகளுக்கு நாம் மனதளவில் தயாராக இருப்போம். கோபம் மூட்டும் வகையில் பேசினால், எப்படி கையாளுவது என்ற முன்மாதிரி திட்டத்தை மனம் தயார் செய்யும். அதன் படியே காட்சியும் சென்றால், நல்லது. எதிர்பாராத விதத்தில் சூழ் நிலை மாறினால் - நாம்  உணர்ச்சி வசப்படும் நிலை வந்தால், ஈகோ உடனே செயலுக்கு வந்து விடும். நம்மை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஈகோவிற்கும், சூப்பர் ஈகோவிற்கும் உண்டு சூப்பர் ஈகோ நம்முடைய உயர்வான எண்ணங்களின் பிரதிநிதி. கடவுள் மாதிரி. ஆனால் நிறைய சமயங்களில் ஈகோ அளவிற்கு விரைவாக செயல்படுவதில்லை. இட் அல்லது ஈகோவின் செயல்பாடு முடிந்தபின் மெதுவாக ஆனால் தெளிவாக நம்மை பாராட்டும் அல்லது குற்றம் சாட்டும். சூப்பர் ஈகோவை நம்முடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம்.


 உணர்ச்சி வசப்படும் சூழ்நிலையில் - கண் சிவந்து உரக்க கத்துவது, கட்டுபாடின்றி நடந்து கொள்வது, வேண்டியவர்கள் முன்னிலையில் சில சமயம் ஆதங்கமாய் கண்ணில் நீர்கூட வரும் என்பது இட்'ன் விளைவு ஆகும். " இவர்கள் முன்னிலையில் கட்டுப்பாடு இழக்காதே, இப்போது என்ன நடந்துவிட்டது அமைதியாக இரு. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை, என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். " இது போன்ற கட்டுப்பாட்டு திட்டங்களை  ஈகோ செயல்படுத்தும். விரைவாக செல்லும் வண்டியை பிரேக் போட்டு நிறுத்துவது போல், கட்டுபாடு வரும். இதன் விளைவாகவும் அனிச்சையாக கண்ணில் நீர் வரும். ஆக நம்மை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டுமெனில், ஈகோவிற்கு நல்ல விசயங்களை பதிவு செய்ய வேண்டும். அதிகம் படித்தல், அதிக விசங்களை பகிர்ந்து கொள்ளுதல், தொலைகாட்சியில் நல்ல நிகழ்ச்சிகள்கூட நம் ஈகோவிற்கு நிறைய சொல்லித்தரும். டிஸ்கவரி சேனலில் , ஒரு ஓட்டப்பந்தைய வீராங்கனை எதிர்பாரா
த விபத்தில் சிக்கி முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்ட நிகழ்ச்சி எனக்கு நிறைய விசயங்களை சொல்லித் தந்தது. நம்மை கட்டுப்படுத்தும் ஈகோவை நல்லபடியாக உருவாக்கினால், அது வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது உறுதி.
                                                                                                                - இன்னும் மீதி நாளை


தன்னை மறத்தல் அல்லது மறுத்தல் -3

     ஒரு நாள் குட்டி கிருஷ்ணர் இராமயணக் கதையை கேட்டுக்கொண்டிருந்தார். அதாவது தன்னுடைய கதையை இன்னொரு முறை வாய் மொழியாக கேட்டுக்கொண்டிருந்தார். அந்த கதையின் நியாய தர்மங்கள் அத்தனையும் அவருக்கு தெரிந்திருந்தாலும், வெளியில் குட்டி கிருஷ்ணர் குழந்தை மனதுடன் கேட்டுக் கொண்டிருந்தாரம். சீதையை ராவணன் கடத்திய கட்டத்தில், தன்னிலை மறந்து வெகுண்டு " லட்சுமணா எடு வில்லை" என்று வீர முழக்கமிட்டாராம். இந்த கதையை படித்த போது எனக்குத் தோன்றியது என்னவெனில், இறைவன் தன்னிலை மறப்பானா என்ன? இல்லை, சூழ இருப்பவர்களுக்கு இதுவும் ஒரு உபதேசமா? ஒரு அதர்மம் நடக்கும் போது, காண சகிக்காத குணம்தான் முழு வீச்சில் வெளிப்பட்டதா? இதற்கு பல விளக்கங்கள் சான்றோர் தந்திருந்தாலும் இதையும் ஒரு கருத்தாக முன்வைக்கிறேன்.

    ஈஸ்வர் சந்தர் வித்யாதர் ஒரு சுதந்திர போராட்ட வீரர். அவ்வப்போது நாட்டின் சுதந்திரத்தின் தேவையை தன் கருத்துக்களால் வலியுறுத்துவார். அவரை ஆங்கிலேயர்கள் பழிவாங்க எண்ணி விருந்திற்கு அழைத்தனர். விருந்து ஆரம்பிக்கும் முன் வெள்ளித்தட்டில் பட்டுத்துணி போர்த்தி பரிசளித்தனர். அதனை திறந்து பார்த்தால் அவருடைய ஒரே மகனின் தலை அதில் வைக்கப்பட்டு இருந்தது. உணர்ச்சிகளை வெளிக்காட்டாத அவர் பரிசிற்காக நன்றி கூறி அமைதியாக விருந்தை உண்டு கிளம்பினார். உடன் வந்தவர்களுக்கோ அதிர்ச்சி, எப்படி இவ்வாறு இருக்க முடிந்தது என்று. " என் மகனின் நிலை எனக்கு பெரும் துயர்தான். ஆனால் அதனை பார்த்து நான் துடித்து கதற வேண்டும், அந்த காட்சியை பார்த்து மனம் மகிழ வேண்டும் என்று காத்திருந்தனர். அப்படி ஒரு வெற்றியை நான் அவர்களுக்கு தரவிரும்பவில்லை. அதனால்தான் அமைதியாக இருந்தேன்" என்று கண்ணில் நீர் வழிய கூறினார். இங்கும் ஒரு அநீதீ நடந்தது அதற்கான வெளிப்பாடு மாறிப் போனது.

    பொதுவாக உணர்ச்சி வசப்படக்கூடிய சூழ்நிலையில் ஒருவரது உணர்ச்சி வெளிப்பாடு, சுற்றி இருப்பவர்களின் பொருட்டு மாறுமா?. நமக்கென்று ஒரு வெளிப்பாடு இல்லையா?. நமக்கு நம்பிக்கையானவர்கள் முன்னிலையில் நாம் முழுவதுமாக நம்மை வெளிப்படுத்துவோம் என்பது மெய்யா? அப்படியெனில் நம் முன் சூழ் நிலைக்கு ஏற்ப முழுவதுமாக ரியாக்ட் செய்பவர்கள் நம்மை நம்புகிறார்கள் என்று பொருளா? கண்ணில் நீர் வழிய பேசுதல், கோபத்தின் ஒருவகை வெளிப்பாடா? அல்லது இயலாமையா? எனக்காக ஏதாவது செய்ய மாட்டாயா என்ற எதிர்பார்ப்பா? ஒரு வேளை இதனை ஆராய முடிந்தால் நம்மால் நம்மை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கும் நமக்குமான உறவினை சரியாக அளவிடமுடியுமா? இதனை புரிந்து கொண்டால் உறவுகளின் சிக்கலான முடிச்சுகளை அவிழ்க்க முடியுமா?

                                                           -  அடுத்த பதிவில் முயற்சிக்கலாமா?

தன்னிலை மறத்தல் அல்லது மறுத்தல்.- 2

 

         எனவே நான் சொல்ல வருவது என்னவென்றால் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே என்பது நம் மனதை தளரவிடாமல் உறுதியாக வைத்திருப்பதற்காக சொல்லப்பட்டது. நல்லது கெட்டது எதற்கும் உணர்ச்சியே காட்டாத பாவனையில் இருந்தால், குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதனையே கடைபிடித்தால்... நன்றாக இருக்காது - ஒரு நாடக பாவனைதான் வரும். ஒருவரை மற்றவர் புரிந்து கொள்ள தத்தம் கருத்துக்களை சொல்லித்தான் ஆக வேண்டும். முன்பெல்லாம் வீட்டில் பெரியவர்கள் ( தாத்தா, பாட்டி) இருந்தார்கள் , அவர்களின் வழியாக கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படும். இப்போது கூட்டுக் குடும்ப முறை குறைந்து விட்டதால், இவற்றை நாம்தான் சந்திக்க வேண்டும். அதற்குத்தேவையானவை, 
1. கண்டிப்பாக இதனை சரி செய்ய வேண்டும் என்கிற மன உறுதி.

2. சம்பந்தப்பட்டவர்களின் பதில் என்னவாக இருக்கும் என்ற யூகமும் வேண்டும் இரு வித கருத்தையும் யோசித்து வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாம் பதட்டப்படாமல் இருப்போம். சரியான பதிலை பொறுமையாக தர முடியும்.


3. பதட்டமான சூழ்நிலையை தவிர்க்கவும்.


4. கடைசி வார்த்தை நம் வார்த்தையாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆனால் நம்முடைய கருத்தை தெளிவாகக்கூறிவிட வேண்டும். பிறகு எப்போதும் போல சாதாரணமாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய பதில்களையும் ஒரு முறை பொறுமையாக அலசிப்பார்க்கவும். ஒரு வேளை நியாயமாக தோன்றினால் மாற வேண்டியது நாம்தான். அதற்கான காரணங்களையும் தெளிவாக சொல்லுங்கள். இல்லையென்றால் பேசி வெற்றி பெற்றுவிடலாம் என்று மற்றவர்களுக்கு தோன்றும்.


5. மிக முக்கியமான விசயம் என்றால் நேரம் கழித்து மறுபடியும் முயற்சிக்கலாம்.


6. " எதிரியின் ஆயுதத்தத்தை நாம்தான் தீர்மானிக்கின்றோம்" என்ற வாக்கியத்தை நினைவில் கொள்ளவும். ஒரு நீண்டவிவாதத்தின் பின் சமாதானத்திற்கு வருவது இயல்புதான். தேவையில்லாத மனக்கசப்புக்களை தவிர்க்கலாம்.


     இதற்கெல்லாம் பயந்து ஒதுங்கினால் , பீலி பெய் சாக்காடும்.... என்ற குறளுக்கு ஏற்ப , ஒரு நாள் எல்லாம் மடை திறந்த வெள்ளம் போல் குமுறல்கள் வெளிவரும். முதல் அத்தியாயத்தில் சொன்னது போல வேறு வழிகளில் மனதை திருப்பிக் கொண்டால் நாம் நன்றாக இருப்போம். ஆம், நாம் மட்டும்தான் நன்றாக இருப்போம். குடும்பத்தில் முக்கிய பொறுப்பில் நாம் இருந்தால் குடும்பத்தையும் பாதிக்கும். நாம் பொறுப்பில்லாதவர் ஆகிவிடுவோம். அதை விட நல்லதில் மகிழ்ந்து, அல்லாததில் வருந்தி - காரணம் கண்டுபிடித்து, கோபப்பட்டு, சரி செய்து சிரிக்கலாம். நல்ல குடும்பத்தின் தலைவராவது அத்துனை எளிதன்று. சின்ன சின்ன தவறுகளை சரி செய்வது , குடும்பத்தினருடன் உண்மையான கவனம் வைத்திருப்பது , கடந்துபோன வருத்தமான விசயங்களை மறப்பது போன்றவை நம்மை புத்துணர்வோடு வைத்திருக்கும். 
               
                இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்
                எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
               தின்று விளையாடியின்புற்றிருந்து வாழ்வீர்.
               தீமையெல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா.
                                                                                                  - மகாகவி


                             இது வரை தொடர்ந்து வந்ததற்கு நன்றி.

   யாது வரினும்... யாது போயினும்.- Part 5


     இன்றைய பதிவில் ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்டவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை சமாளித்து, அவர்களுடனான நம் உறவை எப்படி சமன் செய்வது என்று பார்க்கலாம். இந்த வகையில் முதல் இடத்தை பிடிப்பது , நம் பிள்ளைகள். இரண்டாவது வருவது நம் குடும்பத்தாரில் யாராவது தற்காலிகமாக அல்லது நிரந்தர நோயாளியாவது - மாமனார், மாமியார் போன்ற வயதானவர்கள். வயதானவர்களிடம் இயல்பாகவே நாம் கனிவுடன் நடந்து கொள்வோம். நோயின் பாதிப்பு தீவிரமாக இருக்கும் போது அவர்கள் பேச்சையும் செயலையும் மனதிற்குள் கொண்டு போகக்கூடாது. " இத்தனை நாள் இதையெல்லாம் மனதிற்குள் வைத்துக் கொண்டுதான் பழகினார்களா? " என்றெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கண்டுபிடிக்காமல் இருப்பது நல்லது. அதைவிடுத்து விளக்கம் கேட்டால், உடல் நலம் சரியில்லாதவருடன் வம்பு வளர்ப்பதாக பழிச் சொல் வரும். மேலும் இது போன்ற பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் போதும் நம்முடன் இருக்கும் மற்றவர்கள் நம்மை சரியாக புரிந்து கொள்வார்கள். இது மல்லு கட்ட வேண்டிய விசயமல்ல.

     வளர்ந்து வரும் நம் பிள்ளைகளிடம் ஏற்படும் மாற்றம்தான் , நாம் விரைவாக சரி செய்ய வேண்டியது. உங்களுக்குப் பிடிக்காத அல்லது தேவையில்லாத பழக்கங்கள் ஆரம்பிப்பது தெரிந்தால் - முதலில் பொறுமையாக அதன் பின் விளைவுகளை விளக்குங்கள். அவர்களும் பதில் பேசுவார்கள் - தற்கால பார்வை நம்மிடம் இல்லையென்றும் மற்ற நண்பர்கள் வீட்டில் அப்படி இல்லையென்றும் வாதிப்பார்கள். நூறு சதவிகித கவனத்துடன் நாம் இருந்தால் , அவர்களுக்கு விளக்கம் சொல்ல முடியும். இல்லையென்றால், உலக வழக்கப்படி குரல் உயர்த்தி பேசுவோம். ஆரம்பத்தில் பயந்து வாய் மூடினாலும், நாளடைவில் வார்த்தையாட ஆரம்பிப்பார்கள் - இதனை அம்மாக்கள்தான் அதிகம் சந்திப்பார்கள். அப்பாவிடம் முகம் திருப்பப்படும். அவர்கள் வாயாட ஆரம்பித்தால், நாம் இத்தனை நேரம் இழுத்து வைத்திருந்த பொறுமை போய்விடும். வசை பாடல் வழிமுறையாக முந்தின வாரம், முந்தின மாதம் நடந்தது, நமக்குத் தெரிந்த இது போன்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டிப் பேசுவோம்.

       இது போல நம் பெற்றோர் நம்மிடம் நடந்து கொண்ட போது நாம் மனம் நொந்து போய் , நம்மை மாற்றிக் கொள்ள முயற்சித்தோம். இந்த காலத்தில் அப்படியல்ல - நாம்தான் நேர்மையின் திருவுருவாய் பிள்ளையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசி மட்டம் தட்டி மனதை வேதனைப் படுத்தி விட்டோமோ? என்று வருத்தப்படுவோம். ஆனால், இன்றைய இளையவர்கள் " என்னை மட்டம் தட்டி விட்டீர்கள் அல்லவா?" என்று கோபிப்பது போல நடித்து சம்பந்தப்பட்ட பிரச்சினையை திசை திருப்பி விடுவார்கள். சில பிள்ளைகள் வாயே பேசாமல் சிரித்து மழுப்பி விடுவார்கள். " எனக்கு பசிக்குது, தலைவலிக்குது " என்று திசைதிருப்பி விடுவார்கள். இந்த வழி முறைகள் எதிலும் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு பதில் பேசக்கூடாது, கோபப்படவும் கூடாது. ஏற்கனவே நான் சொன்ன முழு கட்டுப்பாடு நம்மிடம் இருக்க வேண்டும் . அதற்கான பயிற்சிகளை நாம் பயில வேண்டும். மனதிற்குள் பதிய வேண்டியது , நம் பிள்ளைகளின் நல்லதிற்குதான் இதை செய்கிறோம் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும். கண்மூடித்தனமாக ஒரு விசயத்தை அவர்களை பின்பற்ற வேண்டும் என்று நாம் நினைக்கக்கூடாது. இப்படி இருந்தால் இக்கட்டான சூழ்நிலையில் பூரண மனக்கட்டுப்பாடு கிட்டும். சுயநலமில்லாத மனம், தெளிவான நோக்கம் , அதற்கேற்ப உடல் மொழி (நேற்றைய பதிவில் சொல்லியிருந்தேன்) இவையே மனக் கட்டுபாட்டின் தாரக மந்திரங்கள்.
                                                                                         - இன்னும் கொஞ்சம் நாளைய பதிவில்
                       
                       விசையுறு பந்தினைப்போல் -உள்ளம்
                       வேண்டிய
படி செல்லும் உடல் கேட்டேன்.
                       நசையறு மனம் கேட்டேன்- நித்தம் ----
                       ------------ ----------- ----------
                      அசைவறு மதி கேட்டேன் ------

                                                                           - மகாகவி பாரதி

ாது வரினும்... யாது போயினும் -Part-6


           முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல் புதிதாக வரும் உறவுகளிடம் எப்படி சுமூகமான புரிந்து கொள்ளலை ஆரம்பிப்பது எனக் காணலாம். இந்த வகையில் முக்கியமாக இடம் பிடிப்பது வீட்டிற்கு புதிதாக வரும் மருமகள் என்கின்ற உறவுதான். ஒரு பெண் ஒரு வீட்டிற்குள் புதிதாக வரும்போது நிறைய உறவுகள் ஏற்படும். மாமனார்,மாமியார், கணவன், நாத்தனார், கொழுந்தன் போன்றவை. ஒரு வீட்டில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் இருக்கும். சிலருக்கு உணவின் ருசி என்பதில்லை, தனிப்பட்ட துண்டு, சோப் வைத்துக்கொள்ளுதல், சூடாக தேநீர் அருத்துவது, சிலர் தட்டு போன்றவைகூட தனியே வைத்திருப்பார்கள். முந்தைய தலைமுறையில் திருமணமாகி வரும் பெண்கள் வீட்டில் ஒய்வு கிடைக்கும் நேரத்தில் இவற்றையெல்லாம் யாரிடமாவது கேட்டுத்தெரிந்து கொள்வார்கள். ஆனால் இப்போது அதற்கெல்லாம் நேரமில்லை முக்கியமான எட்டு மணி நேரத்தை அலுவலக வேலை அபகரித்துக் கொள்வதால். எனவே முதலிலேயே இவற்றை சொல்லி விடுங்கள், சில சமயம் என்ன நடக்கும் என்றால் புதுப்பெண் என்பதால் கொஞ்ச நாள் அனுசரித்து செல்லுவார்கள். பிறகு ஒரு பொல்லாத நாளில் குறையாக இது பறை சாற்றப்படும். சில வீடுகளில் தேதி வாரியாக இது போல நடந்த நிகழ்ச்சிகளை  பட்டியலிடுவார்கள். இது குற்றம் கண்டுபிடிக்க மட்டுமே பயன்படும். இது போல நடந்து கொள்ளாமல் ஆரம்பத்திலேயே இதமாக தெரிவித்து விடலாம். "அதெல்லாம் செஞ்சாச்சு . இருந்தாலும் சரி பட்டு வரவில்லை" என்பதெல்லாம் குறைந்த சதவிகிதத்தில்தான் இருக்கும். 

         நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். ஒருவேளை சிறு உரசல் ஏற்பட்டாலும், உடனே கொதித்துப் போய் அளவில்லாமல் வார்த்தைகளை பேசினால் சீர் செய்ய முடியாததாகிவிடும். இது போன்ற பி
ச்சினைகள் சமாதானத்திற்காக வரும்போது ஒன்று தெளிவாக புரியும். இரு தரப்பினருமே " நான் அப்படிப் பேசவில்லை" அல்லது "நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை" என்பார்கள். இதிலிருந்து ஒன்று புரியும், மனிதன் ஒரு சமூக விலங்கு. எந்த நிலையிலும் நியாயவாதியாகவே சமூகத்தின் கண்ணில்பட நினைக்கிறான். அதற்கான நடவடிக்கையே இது போன்ற சமாளிப்புகளும், சமாதானங்கள்- ஒரு ரகசியம் சொல்கிறேன் -நாமும் குடும்பம் என்ற அமைப்பை விரும்புகின்றவர்கள்தான் - ஆரம்பித்த சண்டையை லாகவமாக முடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். இது போன்ற சமாளிப்புகளை கேட்கும் போது அதனை சோதனைக்குழாயில் வைத்து ஆராயாமல் "அப்படியா? உன்னை புரிந்து கொண்டேன்" என்று சிரித்துக் கொண்டே ஒப்புக்கொண்டு விடவேண்டும். இல்லையெனில் வாக்குவாதத்தின் போது நாம் பேசியவற்றை - கண்டிப்பாக சொல்கிறேன் உங்கள் வார்த்தைகளும் கடுமையாக இருந்திருக்கும் - திரும்பவும் நம் விருப்பமில்லாமல் கேட்கவேண்டியிருக்கும் .

      ஏன் அமைதியாக ஒரு பிரச்சினையை அணுக முடியாதா? முடியும். அதற்கு நீங்கள் உறுதியான, தெளிவான மனதுடன் இருக்க வேண்டும். இவைதான் நம்முடைய body language எனப்படும் உடற் சைகைகளை கட்டுப்படுத்தும். குரலின் தொனி மிக முக்கியம். அழுத்தமாக ஆனால் குரல் உயர்த்தாமல் பேச வேண்டும். இந்த தொனிதான் எதிரில் இருப்பவர்களின் மனதையும் சேர்த்து கட்டுப்படுத்தும். நாம் சொல்வது மிக முக்கியம் எனப் புரியும். தவறான உடல்மொழி பேசுவதை தவறாக அவர்கள் மூளைக்கு தெரிவிக்கும். ஒரு கோபத்தில் இருக்கும் போது இதையெல்லாம் செய்ய முடியுமா? இதற்குதான் யோகா, தியானம் பொன்றவை பயன்படும். நம்மை நாம் தெளிவாக புரிந்து கொண்டு மற்றவரையும் சரியாக புரிந்து கொள்ள மனக்கட்டுபாடு தேவை. அதை பெற இவை மிகவும் உதவியாக இருக்கின்றன.
                                                                                                                        ......தொடர்ச்சி



யாது வரினும்... யாது போயினும்.Part-5