மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

அன்புள்ள அப்பாவிற்கு,
          நான் எழுதிக் கொண்டது. பிரியமுடன் என்றுதான் எழுத வேண்டும் , அந்த வார்த்தை மேல் நம்பிக்கை எனக்கே இல்லை. உண்மையில் பிரியமிருந்தால் இப்படி செய்திருக்க மாட்டேன். ஏன் நமக்குள் ஒத்துப் போகவில்லை? இங்கே பனியில் இரவில் தனித்திருக்கும் வேளையில் திரும்ப திரும்ப இதே கேள்விதான் நினைவிற்கு வருகிறது.

    என் சிறிய வயது கனவு, தேவதைக் கதைகளைவிட வீரக்கதைகளால் நிறைந்தது. நம் வீட்டிற்கு இரு சக்கர வண்டி முதன்முதலாக வந்த போது, உங்களுக்கு முன் அமர்ந்து  முடி பறக்க பயணித்த போது,  தேசிங்கு ராஜாவின் குதிரையை நினைத்துக் கொள்வேன்.  தலைக்கு மேல் தூக்கச் சொல்லி உலகக்தினை கீழ் நோக்கிய அலட்சிய பார்வை பார்த்திருக்கிறேன். அலுவலகம் முடிந்து நீங்கள் வரும்போது எனக்கென ஒரு தீனிப் பொட்டலம் இருக்கும். நீங்கள் வெளியூர் சென்று திரும்பும்போது இரவானாலும் காத்திருந்து எதிர் கொள்வேன். உறங்கிவிட்டாலும் உங்கள் குரல் கேட்டவுடன் விழித்துக் கொள்வேன். நீங்கள் வாங்கி வந்திருக்கும் விளையாட்டு பொருளை- பெரும்பாலும் கார் அல்லது குட்டி விமானமாக இருக்கும் -  என்னிடம் தந்துவிட்டு " காலைல எழுந்துக்கணும்ல சீக்கிரம் படு" என்று வாய் சொன்னாலும் கைகள் என்னை வருடிக் கொண்டே இருக்கும். அம்மாபோல கதைகள் சொல்லாமல் , பளிச்சென்று நீங்கள் பேசும் வார்த்தைகள் வேதவாக்காய் தோன்றியிருக்கிறன. நம் இருவருக்கும் இடையில் யாருக்கும் அனுமதியில்லாத அந்த உறவு எங்கே மாறிப் போனது?

        மாறி வரும் உலகத்தின் புதிதாக பின்னப்பட்ட  புதிய சிந்தனைகளின் சிலந்தி வலைக்குள் நான் சிக்கிக் கொண்டு ஒரு மலையுச்சியை நோக்கி ஓடுவதாக நினைத்து உங்கள் கைகளை உதறிவிட்டு விலகினேன். நான் வளர்வதாகவும் நீங்கள் வளராமல் நின்று விட்டதாகவும் தோன்றியது. என்னுடைய முடிவுகளை உங்களிடம் கலந்துரையாடக் கூட தோன்றவில்லை. நிறைய விசயங்கள் நீங்கள் புரிந்து கொள்ளமுடியாதவை , என்னுடைய பார்வை உங்களுக்கு இல்லையென்றும் நான் நினைத்தேன். அது ஒரு ஓட்டம். பொருளாதாரக் குதிரையை போர் குதிரையாக பாவித்து துரத்தி பிடித்து எப்பாடு பட்டாவது பிடித்து கொட்டிலில் அடைப்பதுதான் முக்கிய கொள்கை என்று தோன்றியது. ஓடி ஓடி படித்தேன், ஓடி ஓடி வேலை தேடினேன். உண்மையிலேயே என் ஓட்டம் பல நூறு மைல்கள் கடந்தது.

     இதனால் நீங்கள் வருத்தப்பட்டதுபோல அப்போது எனக்குத் தோன்றவில்லை. நான் அருகில் இருக்க வேண்டும் என்பது அம்மாவின் விருப்பம் மட்டுமே என்று நினைத்தேன். என்னவோ, முதலில் இருந்த பிரிவின் வலி சற்று நாட்கள் கழித்து மறைந்துவிட்டது. பிறகு அம்மாவிடம் பேசிய அளவு நான் உங்களிடம் பேசியதில்லை. எதையுமே அம்மாவின் வழியாகவே உங்களிடம் தொடர்பு கொண்டேன். இப்போது வாழ் நாளின் பாதி கழிந்தபின் நான் நிற்கும் இடம் சற்று உயரமானதுதான். வெயிலை உணராமல், மழையில் நனையாமல், யாருக்கும் தலை குனிந்து பதில் சொல்லாமல், பவ்வியமாக பேச வேண்டிய தேவை -உங்களைப் போல-  இல்லாமல் சௌகரியமான இடம். கண் விழித்த நொடியில் இருந்து உறங்கும்வரை வழுக்கிக் கொண்டே செல்லும் நொடிகள் எனக்கு சொந்தமானவை. சாதிச்சாச்சு...?

    சிறிய வயதில்  உங்களுடன் பூஜை அறையில் மந்திரம் சொல்லி  "எல்லாரையும் நல்லா வச்சிக்க"  வேண்டிக்  கொண்டது நினைவிற்கு வருகிறது. நன்றாக இருப்பது என்பது இரண்டாயிரம் மைல்களுக்கு அப்பால்தானா? சாமி நமக்கு மட்டும் வேறுவிதமாக வரம் தந்துவிட்டதோ?. 
      என் மகன் என்னை எதிர்த்து '"நோ டாடி யூ காண்ட் அண்டர்ஸ்டாண்ட்"  என்று சொல்லும் இரவுகளில்,  செம்மண் சாலையில் உங்களுடன் கைகோர்த்து சிறுவனாக நான் நடக்கும் கனவு வந்து உறக்கம் கலைக்கிறது. வீடு மாற்றி வெளியூர் செல்லும்போது முக்கியமான ஏதோ ஒன்றை மறந்துவிட்டு செல்வது போன்ற உணர்வு வருமே, அது இப்போது வருகிறது. உங்களை நான் தொலைத்து விட்டேனோ? நான் தொலைத்த திரும்பப் பெறமுடியாத விலைமதிப்பில்லாத ஒன்று நீங்கள்தான்.

     உங்களை தொலைத்து நான் தேடியதை தொலைத்து என் மகன் திரும்பவும் உங்களை தேட வைக்கின்றான். என்னுடைய விருப்பம் ஒன்றுதான், உங்கள் நினைவு எனக்கு வரும் அந்த வேளையிலேயே  உங்கள் முன் என்னை நிறுத்தக்கூடிய ஒரு மந்திரம் வேண்டும். சற்று தாமதித்தித்தாலும் ஏதோவொரு தயக்கம், கழிவிரக்கம், உங்களை நேரில் சந்திக்கும் வேளையில் எப்படி நடந்து கொள்வது என்ற ஒப்பனைகள் - நம்முடைய பழைய சில சந்திப்புகள் அப்படித்தான் நாடகத்தனமாக முடிந்தன- இவை பிரவாகமாக எழுந்து என்னை தடுத்து விடுகின்றன. நான் தொலைத்த என் அப்பா காலங்களின் இருண்ட குகைக்குள் கரைந்து மறைந்து அவரைப் போன்ற ஒரு தோற்றம் மட்டுமே எனக்குக் கிட்டுகிறதோ என்று எனக்கு சந்தேகம் வந்துவிடுகிறது. ஒன்று புரிகிறது அப்பா, ஒரு நாள் குட்டி வயதில் கால் பந்து விளையாடுகிறேன் என்று ஓடி கீழே விழுந்து அடிபட்டு போது உலகம் தெரியவில்லை உங்களை மட்டுமே தேடியது அது போல்  - தேற்றும் வழியறியாத சிறுவனாக உங்களை கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. இன்றைய 'நான்'ஐ கழற்றி வைக்கும்  அப்படி ஒரு அடிக்காகவும் வலிக்காகவும் காத்திருக்கிறேன்.

    என்றாவது ஒரு நாள் உங்கள் அருகில் அமர்ந்து இதனை வாசித்து உங்களுடைய 'குட்டி ராஸ்கலாக' மாறுவேன். அதுவரை இந்த கடிதத்தை நான் மட்டுமே படிக்க முடியும்.

                                            இருளும் ஒளியுமான உலகத்தின் ஒரு மூலையிலிருந்து
                                                            உங்களுடைய குட்டி ராஸ்கல்

அன்பு குட்டிம்மாவிற்கு,

        நலமாக இருக்கிறாயா? வீட்டில் உன் கணவரும் மற்றவர்களும் நலமா? உன்னுடைய மன நலம் , உடல் நலம் நன்றாக இருக்க வேண்டுகிறேன். மன நலம் பற்றி ஏன் சொல்கிறேன் ? எல்லாம் ராதுவின் திருமணத்தில் வைத்து நடந்த விசயம் குறித்துதான் பேசுகிறேன். 

     அங்கு நீ நடந்து கொண்ட முறை என்னை ஆச்சரியப்படுத்தியது. அந்த சூழ்நிலையில் யாராக இருந்தாலும் எதிர்த்து நின்று குரல் உயர்த்தி பேசுவார்கள். தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று வலியுறுத்தப் பார்ப்பார்கள். அத்தனை பேருக்கும் காட்சிப்பொருளாவது பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஒரு பிரளயத்தை எதிர்பார்த்து , நான் கூட பயந்து போனேன். ஆனால் நீ முகம் மாறாமல் மெல்லிய குரலில் பேசி, அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டாய். எத்தனை அருமையான பக்குவப்பட்ட செயல். மேற்கொண்டு பிரச்சினை செய்ய வழியில்லாமல் அமைதியை தந்தாய். வாழ்க்கையிலேயே நான் பெருமையாக நினைக்கும் நிமிடங்கள் அவை. அடி நெஞ்சின் ஆழத்தில் இது என்றென்றும் பனித்துளியென நின்று என்னை குளிர்வித்துக் கொண்டிருக்கும். எதனால் நீ மௌனபுரட்சி செய்தாய் என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. ஒருவேளை மனித மனதின் விந்தைகளுள் ஒன்றாக, நான் உன் செயலை ஏதோ ஒரு சுயலாபத்திற்காக செய்திருப்பாய் என்று முடிவெழுதிவிடுவேனோ என்று ஒரு சந்தேகம் எனக்கு உண்டு. ஆனால் அந்த நிமிடத்து பலனாக குடும்ப மரியாதை காக்கப்பட்டது. அதன் பிறகும் நீ நிதானமாக நடந்து இன்னும் உயர்ந்துவிட்டாய். அண்ணன் , அப்பாவிற்கு கூட தெரியாமல் அணைக்கப்பட்டது.

        இது போல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நம் குடும்ப கௌரவத்தை காப்பது நம் நடத்தையில்தான் உள்ளது. ஒன்றுமில்லாத விசயத்தை பெரிதுபடுத்தி பூகம்பம் உண்டாக்குவது உறவுகளுக்கிடையே விரிசலை தரும். அதை தவிர்ப்பது நம் பொறுப்புதான். ஏன் வசு அப்படி பேசினாள் என்று புரியவில்லை. திருமணமாகி இரண்டு மாதங்களில் அவள் நல்ல பெண்ணாகதான் நடந்து கொண்டாள். உன்னிடம் ஏன் அப்படி பேசினாள்?
ஒரு நிகழ்வு நடக்கும்போது அதில் சம்பந்தப்பட்டவர்களின் உணர்வுகள், குணாதிசயங்கள் ஒரு காரணியாக செயல்பட்டு நிகழ்வினை கடத்துகிறது, அது சந்தோச அலைகளையோ , கோப அலைகளையோ உண்டாக்கி மாறாத நினைவுகளை பதிவிட்டுவிடுகிறது. சில சமயம் எதுவுமே நிகழாமல் கடந்து சென்றாலும் நல்லதுதான்.

   வசு இன்னும் புதுப்பெண்தான், கண்ணம்மா. ஒரு குழந்தை வளர்ந்துவரும்போது தாயை நம்பிக்கையாக உணரும். பத்துமாத பந்தம் அல்லவா?. பிறகு தகப்பன் குரலை அடையாளம் கண்டு பாதுகாப்பாக உணரும். நல்ல அதிர்வலைகளை உணர்ந்தபின் மற்றவர்களிடம் அன்பு பாராட்டும். உணர்தல் என்றால் பழக்கம் வேண்டுமல்லாவா? திருமணம் முடிந்து வந்தபின் உன்னுடைய உடல் நிலை காரணமாக நீ வரவில்லை. வசுவும் புதுப்பெண்ணின் திரையகற்றி முதல் சந்திப்பு இதுதான். நான் ரொம்பவும் பெருமையாக அவளிடம் உன்னை பற்றி சொல்லியதில்லை. அது வீண் பெருமை பேசுவதாக ஆகிவிடும் என்று நினைத்தேன்.
பெருமை பேசுவது விற்பனை தந்திரமாக மட்டுமே நான் நினைத்ததால், உன்னை அவள் தானாகவே உணர்வதுதான் எனக்குப் பிறகான காலத்தின் தொடர்புகளுக்கு அடிப்படையாகும். அதனால்தான் உன்னிடமும் அவளுடைய குணாதிசயத்தை சொல்லவில்லை. எனவே அந்த சந்திப்பிற்காக எந்தவித ஒத்திகையும் நடத்தப்பட்டிருக்காது என்பது என் கணிப்பு. நான் கவனிக்காத ஒன்று , நாத்தனார் என்ற முகமூடி ( ஏற்கனவே தயாரிக்கப்பட்டு) உனக்கு அணிவிக்கப்பட்டிருக்கும்- கொஞ்சம் தொல்லைபிடித்த சாயல்கூட அதில் இருந்திருக்கலாம். எனக்குகூட அதுபோல ஒரு கொடூரமான முகமூடி இருந்திருக்கலாம், ஆனால் அவள் புதுப்பெண்ணாக இருந்ததால், அந்த முகமூடி பழகும் முறையினால் எளிதில் உடைக்கப்பட்டது. ஒரு வேளை தற்சமயம் அவளுடைய நிம்மதியான வாழ்க்கை உன்னால் பாதிக்கப்படலாம் என்ற பாட்டன் வழிக்கதைகளின் வழிகாட்டல் அவளை செயல்பட வைத்திருக்கலாம். கண்டிப்பாக ஒன்று சொல்வேன் அது விஷத்தை கக்கும் நாகத்தின் சீற்றம் அல்ல. புரியாமல் துள்ளி குதிக்கும் புள்ளிமானின் பாதுகாப்பு நடவடிக்கைதான்.

      எந்தவித முகாந்திரமும் இல்லாமல் திறந்த மனதுடன் நீ இருந்தாய் என்பது அவளுக்குப் புரிந்துவிட்டது. அவள் தவறாக பேசிய பின்னும் நீ " சென்றுவருகிறேன், அண்ணி " என்று விடைபெற்றதும், அமைதியாக சென்றதும் அவளை குற்ற உணர்வில் ஆழ்த்திவிட்டது. இப்போதும்
நான் உனக்காக அவளிடம் அதுவும் பேசவில்லை. அது உன் பக்கமாக பேசுவதாக தவறாக வழிகாட்டப்படும். அது பற்றி எதுவுமே பேசாத என் மௌனம் சிந்திக்க வைக்கும் என்று நம்பினேன். இரண்டு நாள் கழித்து அவளாகவே உன்னை பற்றி என்னிடம் விசாரித்தாள். என் கண்மணியை பற்றி சொல்ல எனக்குத் தெரியாதா என்ன? திரும்பவும் ஒரு நாள் கழித்து அந்த நிகழ்விற்காக வருத்தம் தெரிவிக்க விரும்புவதாக கூறினாள்.. கவனிக்க வேண்டியது என்னிடம் வருத்தம் தெரிவிக்க இல்லை, உன்னிடம் கேட்க வேண்டுகிறாள். அதாவது உனக்கும் அவளுக்குமான உறவை சீர்படுத்திக்கொள்ள விரும்புகிறாள், எனக்காக என்று இல்லாமல். இதுதான் நான் விரும்பியது. இளையவர்களுக்கிடையே எந்தவித கட்டாயமும் இல்லாமல் உறவு மேம்படவது நல்லது. அது புரிந்து கொள்ளுதலினால் மட்டுமே வரும். கை நீட்டும் குழந்தையின் கரம் பற்ற நீயும் விரும்புவாய் என்று எனக்குத் தெரியும். நாளை உன்னிடம் அலைபேசியில் பேசுவாள். புதிதாக ஆரம்பிக்கலாமா குட்டிம்மா?

உனக்கு பிடித்த அனைத்தையும் செய்து கொண்டு அடுத்த வாரம், நேரில் வருகிறேன்.
அன்புடன்,
ஒரு மகளின் மகளான அன்னை.

செல்ல மகளுக்கு,

       இங்கு அனைவரும் நலம். அங்கு அனைவரும் நலமா? உன் மாமியாரிடம் திருமண நாள் வாழ்த்துக்கள் சொன்னதாக தெரிவித்துவிடு. எப்படி தெரியும் என்கிறாயா? புதிய உறவுகளிடம் பேசும்போது பிடித்தமானவை மட்டுமல்ல அவர்களுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட இனிய நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
மற்றவர்களை பற்றி வீண் பேச்சு பேசுவது தவிர்க்கப்படும். அவர்களூக்கும் நம்மிடம் மரியாதை கிட்டும். பிற்பாடு தேவையில்லாத பிரச்சைகளில் நம்மை பற்றி யாரும் பேச முடியாது. " அவங்க இதுபோல பேசியிருக்க மாட்டார்களே" என்ற பதில்தான் கிட்டும்.

   நீ உன்னை நல்லபடியாக கவனித்துக் கொள்ளவேண்டும். கண்டிப்பாக நம்மை சுற்றி இருப்பவர்கள் கவனித்துக் கொண்டாலும் ஒருவித ஜாக்கிரதை உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். உணவு கட்டுப்பாடு மருத்துவர் ஆலோசனைபடி நடந்து கொள். மூத்த பெண்மணியான உன் மாமியாரும் சொல்வார்கள். ஆனால்
மனம், எண்ணங்கள் சம்பந்தப்பட்ட விசயம் நீதான் கவனமாக இருக்க வேண்டும. வயிற்றில் குழந்தை இருக்கும்போது பய உணர்வு இருக்கக்கூடாது. மிகவும் பதட்டமாகவும் சிறிய விசயகளுக்கெல்லாம் கவலைப்படுகிறவர்கள் - அவர்கள் தாயின் வயிற்றில் இருந்தபோதே பயத்தால் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்று மருத்துவம் சொல்கிறது. சற்று வயதாகும்போதே எளிதாக இரத்த அழுத்தம், பதட்டம் இவற்றிற்கு ஆளாகி விடுகிறார்கள். இன்னும் கூட பல பிரச்சினைகள் குழந்தைக்கு எதிர்காலத்தில் வரலாம். எனவே தனியாக எங்கும் செல்லாதே, இரவில் அடுத்த அறைக்கு சென்றாலும் விளக்கை போட்டுவிட்ட செல். குழந்தைகள் ஓடி விளையாடும் இடத்தில் பாதுகாப்பான தொலைவில் நில். திடீரென்று ஓசை எழுந்தால் அதிர நேரிடலாம். வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில் இவ்வளவு பார்க்கமுடியாது. அதனால் மன தைரியத்திற்காக நல்ல விசயங்களை படிக்கலாம். சிந்திக்கலாம். ஆன்மீக விசயங்களை மனதில் பதிய வைக்கலாம். வயிற்றுக் குழந்தை விழிப்புடன் உன்னுடைய எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ளும். சில குழந்தைகள் சமர்த்து என்பதன் அடிப்படை கருவில் இருக்கும்போதே தரப்படும் உள்ளீடுகள்தான். ஆழமாக பதிக்கப்படும் கருத்துக்கள் காலம் முழுமைக்கும் அவர்களுக்கு நாம் தரப்போகும் பாதுகாப்பு பத்திரம் - இன்றியமையாத சொத்து.

    அபிமன்யு அன்னையின் வயிற்றில் இருந்தபோது சக்கரவியூகம் பற்றி ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லிக்கொண்டிருந்தார். போர் முனையில் போராளிகள் எதிரிகளை அதிர் கொள்ளவும் அவர்களை முன்னேறவிடாமல் தடுக்கவும் சில அமைப்புகளில் நிறுத்தப்படுவார்கள். தாமரை மலர் விரிந்தது போன்ற அமைப்பு, சுருள் வடிவ சக்கர அமைப்பு, சர்ப்ப வடிவ அமைப்பு போன்றவை அவற்றில் சில. இதில் சக்கர வியூகம் என்பது மிக தந்திரமானது வட்டவடிவ அமைப்பில் நடுவேதான் எதிரியின் தலைமை வீரன் இருப்பான். சக்கர வியூகம் நகர நகர இந்த பக்கத்தில் யாரும் எதிர்த்து நிற்கமுடியாது. ஒரு அடிகூட முன்னேறமுடியாமல் மலைத்து நிற்க வேண்டியதுதான். இதன் அமைப்பை விவரித்து கொண்டிருந்த போது அர்சுனனின் மைந்தன் அபிமன்யும் கேட்டுக்கொண்டிருந்தான். வியூகத்தை உடைத்து உள்ளே புகும் மட்டும் கேட்டுவிட்டிருந்தவன், ஏதோ ஒரு அயர்ச்சியினால் அன்னை உறங்க ஆரம்பிக்க ஸ்ரீகிருஷ்ணர் பாதியிலேயே நிறுத்திவிட்டார். இதனால் சக்கர வியூகத்திலிருந்து வெளியே வரும் வழி அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. பின்னாளில்
அர்சுனன் சக்கர்வியூகம் பற்றி சொல்லும்போது, ஏற்கனவே தெரிந்த விசயம் போல இருந்ததாம். அதனலேயே அந்த விசயம் முதலில் தெளிவான தோற்றம் காட்டி பின்னர் வரக்கூடிய தெளிவில்லாத முடிவை மறைத்தது. அதுவே அபிமன்யூவின் முடிவிற்கும் காரணமானது. உண்மையில் இது கர்ப்பிணி பெண்கள் கேட்க வேண்டிய கதையாகும். இதில் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்னவென்றால் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே நிறைய விசயங்களை உள்வாங்குகிறது என்பதுதான்.

   நல்ல எண்ணங்கள் ஒரு நல்ல மகவை உனக்கு தரும். ஒரு தாய் வயிற்றுக்குழந்தைகளிடையே வேறுபட்ட குணாதிசயங்கள் இருக்க இதுவே காரணம். அவை கருவறையில் இருக்கும்போது வெவ்வேறு சூழ் நிலைகள் அமைந்திருக்கலாம். எல்லோரும் சொல்வதுபோல்
ஒரு குழந்தை நம் தேவையல்ல. நல்லவனாக வலம் வரப்போகும் மனிதனை தருவதுதான் முக்கியம். சின்ன விசயங்களுக்கெல்லாம் மனதை பாதிக்க விட்டோமெனில் பெரிய இழப்பு நம் குழந்தைக்கும்தான். எனவே கவனமாக இந்த பத்து மாதங்களையும் கடக்க வேண்டும்.

உன்னிடத்தில் இருக்கும் எங்கள் வீட்டுப்பெண் வாழ்க்கையை புரிந்து கொள்ள முயற்சிக்கிறாள். நீட்டிகின்ற கரத்தை பற்றிக் கொண்டு உடன் வருகிறாள். மகிழ்ச்சி. மீதி அடுத்த கடித்ததில்
அன்புடன்
ஒரு மகளின் மகளான அன்னை. 



6. ஒரு மகளின் மகளான அன்னை 

அன்பு கண்மணிக்கு,
      நலமாக இருக்கிறாயா? வீட்டில் உன் கணவரும் மற்றவர்களும் நலமா? எனக்கு ஒன்றுமில்லை. வயதாகிறது அல்லவா? ஏதாவது வரத்தான் செய்யும். தலைசுற்றி விட்டது. இனி விரதங்கள் இருப்பதை தவிர்க்கச் சொல்கிறார்கள். சட்டென்று விடமுடியாது அல்லவா? யாருக்காவது கெடுதல் வந்துவிடுமோ என்று பயம் தோன்றுகிறது. ஆனால் உனக்காக விரத நாட்களையும்,  விதிமுறைகளையும் குறைத்துக் கொள்கிறேன். அங்கு நீ என்னை பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதை என்னால் அனுமதிக்க முடியாது. உன் அப்பாதான் , உனக்கு தகவல் தெரிவித்து தேவையில்லாமல் ஆர்பாட்டம் செய்துவிட்டார். குடும்பத் தலைவர் , பொருளாதாரத்தை பற்றி மட்டுமே தெரிந்தவர், மற்
தெல்லாம் நான் பார்த்துக் கொள்வேன். திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் போனதால் பதட்டப்பட்டுவிட்டார்.

   போன கடிதத்தில் "இன்றைய வரவு செலவுகளை மட்டும் பார்ப்பதற்கு பெட்டிக் கடையா நடத்துகிறோம்" என்று சொல்லியிருந்தேன். அது அனுபவமிக்க கருத்து பொதிந்த வார்த்தைகள். உனக்கு புரியவில்லை என்று வேறு சொல்லி விட்டாய்.
இன்றைய அவசர யுகத்தில் முடிவுகளும் தீர்மானங்களும் அவசரமாக எடுக்கப்படுகின்றன. என்னுடைய தோழி கலையரசியின் சொந்தக்கார பெண் பெரிய வேலையில் இருக்கிறாள். திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்து விட்டது. திடீரென்று ஒரு நாள் தூக்கு போட்டு இறந்துவிட்டாள், குழம்பு வைப்பதற்காக காய் வெட்டியது வெட்டியபடி இருக்கிறது.மறு நாள் அலுவலகத்திற்கு உடுத்த சலவை செய்ய துணிகள் கொடுத்து விட்ட சில நிமிடங்களில் இப்படி முடிவெடுத்து விட்டாள். மனைவியை இழந்த துயரத்தில் இருந்தவனிடம் விசாரித்தால், குழந்தையை அம்மா வீட்டில் விட்டு வளர்க்கலாம் என்று முடிவெடுத்தது பிடிக்கவில்லையாம். " என்னை புரிந்து கொள்ளவில்லையா?" என்பதுதான் அவனிடம் அலைப்பேசியில் பேசிய கடைசி வார்த்தை. குழந்தையை பிரிய விரும்பாதவள் சிறு குழந்தையை தவிக்க விட்டு பொறுப்பில்லாமல் தற்கொலை ஏன் செய்து கொள்ளவேண்டும். அப்போதைய பிரச்சினையை மனதில் கொண்டு வாழ்நாள் முழுவதிற்கும் அப்படியேதான் நடக்கும் என்று தீர்மானிப்பது தவறில்லையா. குட்டிம்மா, காரணம் பற்றியே நான் பேசவில்லை, விளைவுகளைதான் பேசுகிறேன்.

    " நீ எனக்கு என்ன செய்து விட்டாய் ?" என்ற கேள்வி எங்கள் காலத்தில் எப்போதாவது எழும். நகை, பட்டுப்புடவை என எதையாவது கேட்டு அடம் பிடித்து வாங்கும்போது ஒரு பேச்சிற்காக வரும். கோரிக்கை நிறைவேறினாலும் இல்லாவிட்டாலும் அந்த கோபமும் காற்றில் வைத்த கற்பூரமாய் மறைந்துவிடும். ஆனால் இப்போது இந்த
கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. பொருளாதார பிரச்சினை இல்லாவிடினும், நாளைக்கொருதரம் சில சமயம் மணிக்கொருமுறைகூட பல்வேறு வடிவங்களில் கேட்கப்படுகின்றன. இதற்கு அப்போதைக்கு சமாதானமாக பதில் கிடைத்தாலும், நாளடைவில் அலுத்துப் போய்விடாதா. நமக்கு பிடித்தமான வார்த்தைகளே திரும்பத்திரும்ப கேட்கும் போது ஒருவித யந்திரத்தனம் வந்துவிடுகிறது. கேள்விகள் நாளடைவில் மனதில் எதிர்மறையான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்திவிடுகின்றன.

    நான் என்ன சொல்லுகிறேன் என்றால்,
இன்றைக்கு நம் வானில் இடி இடிக்கலாம். இருக்கட்டும் நேற்றைய வானில் நட்சத்திரம் கண்சிமிட்டியதே. ஏன் நாளைய வானில் வானவில் கூட வரலாம். ஏன் நம்முடைய வாழ்க்கையை இடி இடிப்பதுடன் முடித்துக் கொள்ளவேண்டும், கடைசியில் வான வில்லின் வர்ணஜாலங்களை பார்க்க முடியாமலே போய்விடுகிறது அல்லவா?. பெட்டிக்கடைக்காரர்தான் அன்றைய வரவுசெலவு பார்த்து லாபக்கணக்கு சொல்வார். பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் வருடமுடிவில்தான் கணக்கு தயாரிக்கும். ஒரு நாள் நஷ்டம் சில நாள் கழித்து லாபமானது தெரியும்.



 இல்லை, நீ நினைப்பதுபோல் இல்லை கண்ணம்மா. எல்லாவற்றிற்கும் தாமதம் தேவையில்லை. கர்ணன் தானம் கேட்ட ஒருவருக்கு இடது கையிலேயே கொடுத்துவிட்டான். அது தவறு என்றபோது, கர்ணன் சொன்னது என்னவெனில் " அவர் கேட்ட வெள்ளிப் பாத்திரம் என் இடது கையிலேயே இருந்தது, அதை நான் வலது கைக்கு மாற்றும் முன் தர்மம் செய்ய வேண்டும் என்ற மனம் மாறிவிடக் கூடாது என்று தோன்றியது . உடனேயே தந்துவிட்டேன்".
ஒரு நல்ல எண்ணம் தோன்றினால் உடனேயே செயல்படுத்திவிடு. அத்தைக்கு புடவை வாங்குவது, நாத்தனாரின் கைவேலைபாடினை பாராட்டுவது போன்றவை. இதுவே தவ்றான எண்ணம் எனில் சற்று தாமதப்படுத்து. சில நேரங்களில் சரியாக புரிந்து கொள்ளத் தாமதம் ஆகும். மகாபாரதப் போரில் " அசுவத்தாமன் யானை இறந்து விட்டது " என்ற வாக்கியத்தில் யானையை மெல்ல சொல்ல , சரியாக காதில் வாங்கிக்கொள்ளாத துரோணச்சாரியார் தன் மகன் அசுவத்தாமன் இறந்துவிட்டதாக கருதி , கவனச்சிதறல் ஏற்பட்டு உயிரை விட்டார். இத்தனைக்கும் அசுவத்தாமன் சிரஞ்சீவிகளின் ஒருவன் என்பது அவருக்கு தெரிந்திருந்தது. .

   உன்னை பற்றி உன் மாமியாருக்கு பெருமை. வினு கல்யாணத்தில் பார்த்தபோது சொன்னார். உன்னை ஏன் அழைத்து வரவில்லை என்றால், உடல் நிலை சரியில்லை என்கிறார். எனக்கு புரியாமல் இருக்குமா? பொதுவில் வைத்து சொல்லக்கூடாது என்று பார்க்கிறார் என்று எண்ணிக்கொண்டேன். மருத்துவரிடம் சென்று ஆலோசித்தபின் என்னிடம் சொல்வாராம். அப்புறம் நான் என் கண்மணியை பார்க்க ஓடி வந்துவிடுவேன்.

மற்றவை நேரில்
ஆசையுடன் காத்திருக்கும் அன்னை.

பி.கு: உன் அண்ணனுக்கு ஒரு பெண் பார்த்து விட்டோம். புகைப்படம் மற்ற விவரங்கள் நேரில் சொல்கிறேன். 



5. ஒரு மகளின் மகளான அன்னை.

அன்பு செல்லத்திற்கு,

ஆசிர்வாதங்களுடன் அம்மா எழுதிக் கொண்டது. நலமாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். உன் கணவர் வீட்டில் அனைவரும் நலமா? நான் விசாரித்ததாக சொல்லவும். உன் கடிதம் கிடைத்தது. உன்னுடன் பேச நினைக்கும் போதெல்லாம் நள்ளிரவென்றலும் கூட உன் கடித்ததை எடுத்து கையில் வைத்துக் கொண்டிருக்கிறேன். அருமையாக எழுதி இருக்கிறாய். என்னை புரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. இதுதான் எனக்கு வேண்டியது,

    இங்கு உன் அண்ணனுக்கு பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். உனக்குத் தெரியும் நம் இனிய குடும்பத்தில் மருமகளாக ஒரு நல்ல பெண் வரவேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எதிர்பார்ப்பு. உன் அத்தை சொல்கிறார் அதிக பெண் பிள்ளைகள் இருக்கும் குடும்பத்தில் பெண் எடுக்க வேண்டாமாம், அடிக்கடி ஏதாவது விசேசம் வந்து விடுமாம். வந்தால் என்ன விசேசங்களில் நம் பங்களிப்பு மிக முக்கியம்தானே, அது பணமாகவும் நல்ல மனமாகவும் இருக்க வேண்டும். என்னை பொறுத்த வரை நிறைய பெண்களுடன் வளர்ந்தால் பொறுப்பும் தானாகவே தன் கடமைகளை செய்யும் பக்குவமும் இருக்கும் என நம்புகிறேன். சகோதரிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் அதே சமயத்தில் புகுந்த வீட்டின் மேன்மையையும் பாராட்டுவார்கள்.

   அதேபோல ஒரு பெண்ணாக இருக்கும் வீட்டிலும் பெண் எடுக்க வேண்டாமாம். செல்லமாக வளர்ந்து இருப்பாள் , அவளை தன்னருகில் வைத்துக் கொள்ள பிறந்த வீட்டிலும் விரும்புவார்களாம், சிறிய விசயங்கள் பெரிது படுத்தப்பட்டுவிடுமாம். நீ அப்படியா இருக்கிறாய்? இதெல்லாம் வளர்ப்பு சம்பந்தப்பட்ட விசயம் அல்லவா?

      அப்புறம் அம்மா இல்லாத வீட்டில் பெண்ணேடுக்க வேண்டாமாம் , பிற்பாடு பிரசவம் என்று வந்துவிட்டால் வைத்துப்பார்த்துக் கொள்ள ஆள் கிடையாதாம். அவள் மேல் நான் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட அதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக ஆக்கிக்கொள்ள மாட்டேனா? அட, மருமகள் வரும் முன்பேயே பாசத்தை பார் என்கிறாயா? என் போலவே அவளும் வாழ வரும் பெண்ணல்லவா? இப்படியெல்லாம் தங்கத்தை உரசுவது போல உரசினால் உறவு ஒட்டுமா?

     நீ இந்த வீட்டுப் பெண்ணாக பிறந்தவள். தானாகவே எல்லோருடைய பிரியமும் கிட்டியிருக்கும். இங்கே வரும்போதெல்லாம் உன் உரிமை கொஞ்சல்கள் அதிகரிக்கும். ஆனால் நான் வேறு வீட்டிலிருந்து வந்தவள். ஒரு மங்கலமான நாளில் கணவன் கை பிடித்து இங்கு வருவதுடன் இது என் வீடாகி விடவில்லை. பெரியோர் புரிந்து கொள்ளவும், சிறியவர்கள் மதிப்பை பெறவும், சம வயதுடையோர் தோழமை பெறவும் பல சந்தர்ப்பங்கள் தேவைப்பட்டன. பயிற்றுவித்த அத்தனை நல்ல குணங்களும் சமயத்தில் எனக்கு உதவி என்னை நற்பெயர் எடுக்க வைத்தன.
கூட்டுக் குடும்பத்தில் நல்ல பெயரோ கெட்ட பெயரோ அழுத்தமாக கிட்டி விடும். சிக்கலான தருணத்தில் இவை யாராலாவது நினைவு கூறப்பட்டு நம்மை மறுபடியும் எடை போட்டு பார்க்கும். பிரச்சினையை சரியாக் கையாண்டு வென்று விட்டோமெனில், அன்பான குரலில் புதுப்புது பதவிகளில் அழைக்கப்படும் மகிழ்ச்சி இருக்கிறதே அதுதான் உண்மையானது. இது போன்ற எந்தவித திடீர் உற்சாகமும் தனித்து இருப்பதில் கிட்டாது. என் வாழ்க்கை என் முடிவுகள் என்று ஒரு வித கைப்புணர்வு வந்துவிடும். புகுந்த வீட்டில் வேறு வேறு சந்தர்ப்பத்தில் என்னை ஒவ்வொருவரும் ஒப்புக்கொண்ட பொழுது இனிய பரிசுகள் எனக்கு தந்து வாழ்த்துவது உன் அப்பாவின் பழக்கம். இது போன்ற அனுசரனை நம்மை எந்த சூழலையும் சமாளிக்க வைத்துவிடாதா?.

    பெண்ணெடுக்கும் போது நல்ல குடும்பமாக இருந்தால் போதுமானது என்று நினைக்கிறேன். பிறகு உனக்கும் நாத்தனார் பதவி கிடைக்கும். நாத்தனார் என்று சொல்லும்போதுதான் நினைவிற்கு வருகிறது, வசந்தா சித்தியின் பெண் கௌசியின் புகுந்த வீட்டில் அவள் நாத்தனார் ஊரிலிருந்து வந்தாலே கெடுபிடிதானாம். இவள் அவளுடன் மல்லுகட்டி கெட்டபெயர் வாங்கிகொண்டுவிட்டாள். சில சமயம் க
ணவன் வீட்டில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக பிறந்த வீட்டில் கொஞ்சம் அதிக செல்லம் கொஞ்சுவார்கள் - அதிகளம்கூட செய்வார்கள். ஒரு கோடைக்கால (வெக்கையுடன் கூடிய விடுமுறை) விடுமுறைபோல அதை அனுபவிக்க வேண்டும். வீட்டுப் பெண்களை நாம் மதிக்கப் பழகும்போது வீட்டில் இருக்கும் மற்றவர்களும் நம்மை தவறாக புரிந்து கொள்ளமாட்டார்கள். இத்தனை வருடம் வளர்ந்த வளர்த்த பாசத்தை விட்டு விட்டு மனைவி பக்கம் ஆண்கள் கட்சி தாவி விட வேண்டும் என்று விரும்பினால் நம்மை விட்டு வேறு பக்கம் தாவ எவ்வளவு நேரம் ஆகும்? இதையெல்லாம் அவளுக்கு எடுத்து சொல்லி அனுப்பினோம். உனக்கும் புரியும் என்று நினைக்கிறேன். நீ அப்படியில்லை என்றாலும் ஒரு சமாதானமாக இதை குறிப்பிடுகிறேன்.

   
இன்றைய வரவு செலவுகளை மட்டும் பார்ப்பதற்கு பெட்டிக் கடையா நடத்துகிறோம். பொறுமையான புரிந்து கொள்ளல்கள் மட்டுமே உறவுகளின் உறுதி பத்திரமாகும். எல்லாவற்றிற்கும் அடிப்படையான அன்பு சரியான பாதையில் நம்மை கொண்டு செல்லும். இந்த முறை மருமகள் புராணமாகி விட்டது, பரவாயில்லை இது நம் இருவருக்குமே பொருந்தும் நிலைதானே. அடுத்த கடிதத்தில் சந்திப்போம்.

ஒரு நற் செய்திக்காக காத்திருக்கும் அம்மா.



4..ஒரு மகளின் மகளான அன்னை. 

அன்பு குட்டிம்மாவிற்கு,

      இப்படித்தான் உன்னை சின்ன வயதில் நான் அழைத்தேன். நலமாக இருக்கிறாயா?.அப்போது நீ சிறியவள் என்பதால் உன்னை நான் கவனிக்க உன் அண்ணன் அப்பாவின் கவனிப்பில் இருந்தான். அண்ணனுக்கு என் அருகாமையும், அப்பாவிற்கு நீ செல்லமகள் ஆனதும் எப்போது என்று என்னால் நினைவுபடுத்திக்கொள்ளமுடியவில்லை. ஏதோ ஒரு கோட்டில் நம் பிரிய நேரிட்டது. அந்த கோட்டின் காரணத்தை என்னால் சொல்ல முடியவில்லை. ஒரு வேளை உன் அப்பா உன்னிடம் செல்லம் கொஞ்சியது கூட, நீ சரியாக வளர்க்கப்படாமல் போய்விடுவாயோ என்று எனக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தி இருக்கலாம். காலம் முழுவதும் நீ என் பார்வையிலேயே இருக்கப்போகிறாய் என்றால் நான் கவலைப்படத்தேவையில்லை. உன்னை வேறு இடத்திற்கு அனுப்பும் பொறுப்பு எனக்கு இருந்தது. அது காலத்தின் கட்டாயம்.

      நானும் நிறைய தடவை யோசித்தது உண்டு, ஏன் ஒரு புதிய குடும்பம் உருவாக பெண்தான் வீட்டை விட்டுச் செல்லவேண்டுமா? கட்டிக்கொடுப்பது என்பது ஆணிற்கு கிடையாதா என்று?. குழந்தை பிறப்பு என்பது பெண்ணிற்கு விதிக்கப்பட்டது.
ஒரு பெண் தாங்கும் கரு , புதிய பாடங்களையும் பார்வைகளையும் சூழ இருப்பவர்களுக்குத் தரும். எளிதாக தனக்கென்று ஒரு இடத்தை பெண்ணால் கணவன் வீட்டில் உருவாக்கிக்கொள்ளமுடியும். ஆனால் ஆணிற்கு விருந்தாளித்தனம் - பொறுப்பில்லாமல் அனுபவிப்பது - நிறைய ஆண் சிங்கங்கள் செய்வது போன்று - வந்துவிடும். பொறுப்பான பங்களிப்புகள் மட்டுமே உறவுகளை மேம்படுத்த முடியும். யாரால் எது முடியுமோ அந்த பொறுப்பை உணர்ந்து சமுதாயம் சட்டதிட்டங்களுடன் உருவாகியுள்ளது. விதி விலக்குகள் எப்போதாவதுதான் வெற்றி பெறும்.

       உன் கணவர் அப்பாவிடம் சொன்னாராம், உன்னிடம் என்னை பேசச்சொல்லி. உன் குரலை கேட்டால் நான் உடைந்து போய்விடுவேன் கண்ணம்மா. என்னுடைய வார்த்தைகள் காற்றலையில் கரைந்து போவதையும் நான் விரும்பவில்லை. எனவேதான் இக்கடிதம். இது உனக்கும் எனக்கும் மட்டுமான இணைப்பு. உனக்கு வேண்டும் நேரத்திலெல்லாம் இதனை படித்து என்னுடன் கைகோர்த்து உலா வரலாம். நீ என்னுடன் இருந்தபோதெல்லாம் பேசாமல் இருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இப்படி கரைகிறேன் என்று கேட்கிறாயல்லவா?. இப்போதும் உன்னுடன் நான் பேசவில்லை எனில் அம்மாவின் அன்பு மடி உனக்காக காத்திருப்பதை நீ உணராமல் போய்விடுவாய்.
குமரி என்ற பருவத்திலிருந்து பெண்ணாக , அன்னையாக மாறும் போது உடம்பிலும் மனதிலும் பல மாற்றங்கள் நிகழும். எதிர்காலம் பற்றிய பயம், பதட்டம், எதிரில் இருப்பது தெரியாத பனி மூட்டத்தில் சிக்கிக் கொண்ட உணர்வு வரும். கண்ணை மூடிக் கொண்டு காற்றில் ஏதாவது கரம் நம்மை பற்றிக்கொள்ளாதா என்று தேடும். மற்றவரிடம் எடுத்துச் சொல்ல முடியாத உணர்வுகள் தோன்றும். அப்போது உன்னை மடியிலிட்டு தட்டிக்கொடுத்து உறங்க வைக்க அம்மா இருக்கிறாள் என்பதை நீ நினைவு கொள்ள வேண்டும்.

     ஒரு அழகான குடும்பத்தில் உன்னை இணைத்து கொண்டுள்ளாய். கடவுள் வரைந்துள்ள குடும்ப வரை படத்தில் நீதான் அடுத்த கட்டத்தை உருவாக்கப் போகும் அடிப்படை ஓவியம்.
காட்டிலும் வனத்திலும் ஆற்றங்கரையிலும் இருக்கும் மண் விளையாட்டு பொம்மையாகவோ, வயிற்றுபசி தீர்க்கும் உணவு சமைக்குக் பாத்திரமாகவோ, கலை நயம் மிக்க சிற்பமாகவோ , மருந்தாகவோ மாற பக்குவம் செய்யப்படவேண்டும். ( கடற்கரையிலிருக்கும் மண்தான் எலெக்ட்ரானிக் பொருட்களின் மூளையை தாயாரிக்கவும், ஆற்றல் மிக்க அணு சக்தியை உருவாக்கவும் பயன்படுகிறதாம்.) நீ என்னவாகப் போகிறாய் என்று நீதான் முடிவு செய்ய வேண்டும். உன்னை நீ உருவாக்கிக் கொள்வதில் குழப்பம் மேலிட்டால் தோழியாக, நம்பிக்கையான தாதியாக நான் இருப்பதை மறவாதே.

         மகாபாரதப்போருக்கு காரணம் திரௌபதி மைத்துனனான துரியோதனனை செய்த கேலிச்செய்கைதான். ஒரு சிறிய விளையாட்டு தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உறவுகளுக்கிடையே பேரழிவை உருவாக்கியது. எனவே, யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
உன்னை உருவாக்கிக்கொள்ளும் பணிக்கு அங்குள்ள ஒவ்வொருவரும் உதவப் போகிறார்கள். கை நீட்டும் புதிய உறவுகளை சினேகித்து அனுபவத்தின் காலடியில் தடம் பார்த்து நடந்து செல், . உன் வாழ்க்கையில் தென்றல் வீசி சாரலும் கவிபாடும்.

மீண்டும் அடுத்த கடிதத்தில்
ஒரு மகளின் மகளான அன்னை.
 


3. ஒரு மகளின் மகளான அன்னை. 

அன்பு மகளுக்கு
        அம்மாவின் ஆசை முத்தங்களுடன் கடிதம். நலமாக இருக்கிறாயா? இங்கு அனைவரும் நலம். ஊரில் மற்றவர்கள் அனைவரும் நலமா? அங்கு உனக்கு எப்படி உள்ளது?. உனக்கு என் மேல் கோபம் என்று நினைக்கிறேன். அழுத விழிகளுடன் நீ சென்றது எனக்கு இன்றைக்கும் விழித்திரையில் காட்சியாக படிந்துள்ளது. கண்ணை மூடினால் என் கண்மணி என்ன செய்கிறாளோ என்று கலங்குகிறேன். எதற்கும் கெடுபிடி செய்யும், அப்பாவின் சலுகைகளை தடை செய்யும், விருப்பமானதை வாங்கித்தர கணக்கு பார்க்கும் அம்மாவா இப்படி பேசுவது என்று நினைக்கிறாயா? ஆம், உன் அம்மாதான். நித்தம் உன்னுடன் சண்டை பிடித்து, உன் அண்ணன் போல் , உன்னை இயல்பாக இருக்கவிடாதவள்தான். வீட்டு வேலைகளை பார்க்க வேலையாட்கள் இருந்தாலும் உனக்கென்று சில வேலைகளை ஒதுக்கியதன் காரணம் புரியாது. உனக்கு உன் நிறுவனத்தில் தரப்பட்ட பயிற்சி உன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். அது போல ஒரு வீட்டின் மகாராணியாய் நீ வாழ உனக்கு சில புரிந்து கொள்ளல்கள் வேண்டும்.

நாம் ஒருவரை புரிந்து கொள்ள முகம் பார்க்க வேண்டியதில்லை. செயல்களை வைத்து எடை போட வேண்டாம். நம்மை அவர்கள் ஒரு திசைக்கு திருப்ப முயற்சிப்பதை உணர்ந்து கொண்டு அவர்கள் நல்லவரா என்று புரிந்து கொள்ள வேண்டும்.
முகம் மறைக்கும் உணர்வுகள், செயல்கள் தாண்டிய எண்ணங்கள் இவற்றை நாம் புரிந்து கொண்டால், அடுத்தவரை எடை போட முடியும். அப்படி பார்க்கும்போது கெட்டவர்கள் நல்லது செய்வதும், நல்லவர்கள் கெட்டது செய்திருப்பதும் புரியும். அந்த ஏழாம் அறிவுதான் பெண்ணிற்கு தேவை.

      நீ அருமையாக சமைப்பதாக சொன்னார்கள். அத்தனையும் புது வகைகளாமே. நீ கற்றுத்தந்ததை செய்யவில்லை என்கிறாயா. அடுப்பு பற்ற வைக்க நான்தானே உந்தித்தள்ளினேன். ஒரு தெரிந்த விசயத்தை கொண்டு புதிதாக ஒன்றை உருவாக்கும் நுட்பமான திறமை பெண்ணுக்கு உண்டு. இந்த திறமை அதீத கற்பனைகளுக்கும் வழி வகுக்கும். அவற்றின் பிடியிலிருந்து வெளிவர உனக்குத் தெரியும். ஏனெனில், கனவுலக தேவதையாக நித்தம் வானத்தில் சஞ்சரிக்க நான் விட்டதில்லை.
யதார்த்தம்தான் சிறகுகளை மறைத்து பாதங்களை பதிய வைக்கும். உன் வாழ்க்கையிலும் ஊன்றி நிற்பாய்.
    புதிய இடத்திற்கு செல்லும் போது வழிகாட்டிப்பலகைகள் உதவுவதுபோல், வாழ்க்கையிலும் சில அடையாளங்கள் கிட்டும். அவற்றின் விளக்கம் அகராதியில் இல்லை. குறித்து வைத்துக்கொள். தனிமையில் அவற்றை பாடமாக்கிப்பார். புதிய உறவினர்களின் பார்வைகளை புரிந்து கொள். வார்த்தைகளை அளந்து சொல். சில சமயம் உனக்கு விருப்பமில்லாதவை நடக்கலாம். உன்னுடைய வெளிப்பாடு, பின்னர் யோசிக்கும் போது உனக்கே பிடிக்காததாக இருக்கக்கூடாது. தப்பும் தவறுமாக செய்துவிட்டு , என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்று உளறுவது தன்னை வெற்றி கொள்ள முடியாத கோழைத்தனம். அது குழந்தை மனம். அதிலிருந்து உன்னை வெளிக்கொணரவே இத்தனை செய்தேன். வேண்டியது கிடைக்கும்போது நிதானம் ஏற்படும், கிடைக்காதபோது புறந்தள்ளிவிட சொல்லும், இதுதான் மங்கையின் மனது.

     எதற்காக இத்தனை முன் ஏற்பாடுகள் என்கிறாயா?. இது வாழ்க்கைப்பாடம் மகளே.
தண்ணீரில் விழுமுன் நீச்சல் தெரிய வேண்டும் அல்லது விழுந்தால் காப்பாற்றக்கூடியவர்களை சூழ வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டாவது நம்பிக்கையானது. மனிதர் மனதை படித்தால் கிட்டும். உன்னை நெருப்பில் நடக்க விட்டேன், நெருப்பை என் நெஞ்சிற்குள் புதைத்துக் கொண்டேன். இனி முழு நிலவில் உன் முகம் தெரியும். அது புன்னகை தவழும் முகமாக இருக்கும்.

மீண்டும் அடுத்த கடிதத்தில்
ஒரு மகளின் மகளான அன்னை.


ஒரு மகளின் மகளான அன்னை.-2