மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


    இதற்கு முன்பாக வயதானவர்களை மூன்று வகையினராக பிரித்து அவர்களின் இயல்புகளை குறிப்பிட்டிருந்தேன். "ஒரு சிலர் குறிப்பிட்ட வகையில் மட்டும் இருப்பதாக சொல்லமுடியவில்லை. உதாரணமாக ஒரு சமயம் dettached வகையிலிருந்து complaining வகைக்கு மாறிவிடுகிறார்கள் ஏன்? " என்று கேட்டிருந்தனர். இது போல தன்மை மாறி நடப்பதற்கு வாழ்க்கை முறையில் ஏற்பட்ட திடீர் மாறுதல்கள் காரணமாக இருக்கலாம் - பொருளாதார மாற்றங்கள், புதிய சூழ்நிலைகள் போன்றவை. அல்லது புதிய உறவுகளின் பாதிப்பு , உடல் நிலை கோளாறு, சுற்றியிருப்பவர்களின் அணுகு முறை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். இவை அத்தனையும் மன அழுத்தத்தை ஏற்படுத்துபவை. மாற்றத்திற்கான காரணிகளை சரிசெய்யும்போது இவர்கள் பழையபடி மாறிவிடுவார்கள்.

       அணுகு முறை மாற்றம் நமக்கு சாதகமாக இருந்தால்கூட " கவலை விட்டது " என்றில்லாமல் அவர்களின் இயல்பு நிலைக்கு கொண்டு வாருங்கள் - புலம்புகிற ரகம் புலம்பிக்கொண்டேதான் இருக்கவேண்டும் அது ஒரு வடிகால், ஆரோக்கியத்தின் கதவை மூடாது. அதனால் மன அழுத்தத்தை குறைக்கவேண்டியது அவசியம். இல்லையென்றால் தேவையில்லாத பக்கவிளைவுகள் - இருதய நோய், பக்க வாதம், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை உண்டாகலாம். நமக்கு வேலைப்பளு கூடிய இன்றைய சூழ்நிலையில் அவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பது நமக்கும்தான் நல்லது.

      சில வீடுகளில் பெரியவர்களை திருத்துகிறோம் என்று அவர்களின் தற்போதைய இயலாமையை காட்டி அடக்கிவிடுவார்கள். சின்ன குழந்தைகளையே இவ்வாறு நடத்துவது தவறு என்று சொல்லும் மனோதத்துவம், இதனை கடுமையாக எதிர்க்கிறது. ஏனெனில் இவர்கள் விவரம் அறிந்த பெரியவர்கள். நமக்கு வழிகாட்டியாய் இருந்தவர்கள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஒவ்வொருமுறையும் நம்மை நகர்த்தியவரகள். வாய் மூடி மௌனியாக.... இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக...இருப்பது அவர்களை உயிரில்லாத உடல்களாக்கிவிடும். இவையெல்லாம் மனதை பாதிக்கக்கூடிய விசயங்கள். அவர்களின் கடைசி நாட்களை துன்பமிகுந்தவையாக மாற்றிவிடும்.

      அவர்களை இயல்பாக இருக்கவிடுங்கள். அவர்களை மாற்ற முயற்சிக்காமல் நாம்தான் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். கடைசி மூச்சுவரை அவர்களை சுவாசிக்க வைப்பது நம்முடைய தலையாய கடமையாகும். அவர்களின் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் அடுத்த தலைமுறைக்கும் தேவை.  

                                ....... ஒன்றை யாக்குதல் மாற்றுதல்
                                          அழித்திட லெல்லாம் நின்செய லன்று காண்
                                தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே
                                         வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெல்லாம்
                                ஆசையும் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ
                                                                                                - மகாகவி பாரதியார்


             பெரியவர்களில் இன்னும் ஒரு பிரிவினர் உள்ளனர்.  தன்னை   எதிர்காலத்தை   முழுமையாக உணர்ந்து கொண்டு தன் பாதையை அழகாக அமைத்துக் கொண்டு   தேவைக்கேற்ப வசதியுடன் அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். சுற்றியிருப்பவர்களை சார்ந்து இருக்கமாட்டார்கள். முற்போக்குவாதிகளாக இருப்பார்கள். பொதுவாக இவர்களுடன் இருப்பவர்கள் நிம்மதியான வாழ்க்கையை விரும்புவார்கள். இது dettached வகையினர். இந்த வகையினரின் முதுமைக் காலம் சௌகரியமாக இருக்கும். புதிய புதிய யுக்திகளை கற்றுக்கொண்டு தங்களை உற்சாகமாக வைத்திருப்பார்கள் . பிரச்சினை என்னவென்றால்    இவர்களின் பிள்ளைகள்தான் எல்லா விசயத்திற்கும் இவர்களின் ஆலோசனைக்காக காத்து இருப்பார்கள்.

            தங்களையும் முழுமையாக புரிந்து கொண்டு யாருக்கும் பாரமாக இராமல் , முழுமையான வாழ்க்கை வாழும் இவர்களை யாருக்குத்தான் பிடிக்காது.? சுற்றியிருக்கும் அனைவரையும் நன்கு புரிந்து வைத்திருப்பார்கள். அவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கவும் செய்வதால் அபிமானிகளுக்கு பஞ்சமே இருக்காது சிறுவர் முதல் பெரியவர்வரை பட்டியல் இருக்கும். ஆஹா இப்படியும் உள்ளார்களா என்று கேட்கத்தோன்றுகிறதா?.

          உண்மையில் இது போல உங்கள் வீட்டுப் பெரியவர் இருந்தால், அவர்களைப் புரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் உடலிலும் மனதிலும் தெம்பு இருக்கும்வரை பிரச்சினையில்லை. திடீரென்று உடல் நிலை பாதிக்கப்பட்டால் மனமும் சேர்ந்து பாதிக்கப்படும். சிறு குழந்தையை போல் மனதளவில் மாறிவிடுவார்கள். யாரையும் சார்ந்து இராமல், மற்றவருக்கு உதவி செய்து பழக்கப்பட்டதால் அசௌகரியத்தை வாய் விட்டு சொல்லவும் மாட்டார்கள். இத்தனை நாள் அவர்களின் அனுசரிப்பில் இருந்த நாம் இப்போது அவர்களை கனிவாக கவனித்துக் கொள்ளவேண்டும். பொதுவாக பெரிய இழப்பு ஏற்படும்போது - உ-ம், வாழ்க்கைத் துணையை இழப்பது போன்ற தருணத்தில் இத்தகைய பாதிப்புகள் இருக்கும். ஆல மரத்தை தாங்கும் விழுதுகள் போல நாம் அவர்களை தாங்கிப்பிடித்து தனிமை தவத்திலிருந்து வெளிக்கொணர வேண்டும். அவர்கள் சகஜ நிலையை அடையும்வரை நாம் கவனமாக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களை இழக்கவேண்டியதாகி விடும்.

                   
  மூத்தவர் பொய் நடையும் - இள
                              மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்
                      வேண்டிய கொடுத்திடுவாள்- அவை
                              விரும்புமுன் கொடுத்திட விரைந்திடுவாள்
                                                                               - மகாகவி பாரதியார் 


             இந்த முறை நாம் புரிந்து கொள்ளப்போவது எதையுமே எதிர்ப்போக்காய் செய்யும் பெரியவர்களை. அவர்கள் சகிப்புத்தன்மை இல்லாத முரட்டுக்குழந்தைகள் - உணர்ச்சிபூர்வமாக பேசினால் , Emotional blackmail செய்வது போலாகிவிடும். பொதுவாக வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து தன்னுடைய கடுமையான முயற்சியினால் முன்னேறியவர்கள் இந்த வகையினர். கடந்த கால அனுபவங்களின் தோல்வி வெற்றி காரணமாக    சில கோட்பாடுகளை வரையறுத்து வைத்திருப்பார்கள். அதனை நாம் மாற்ற முயற்சிக்கும் போது தகுந்த காரணங்களை விளக்கவேண்டியிருக்கும். பெரும்பாலும் அவர்களை முதலில் பேசவிட்டு அவர்களின் கருத்தை புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு ஒப்புதல் இல்லாமல் போனால்கூட குறுக்கிட்டு பேசக்கூடாது (எத்தனையோ முறை நம்முடைய அலுவலக அதிகாரிமுன் செய்திருப்போமே அதுபோலத்தான்). . அவர் பேசிமுடித்தபின் நம்முடைய சிரமங்கள், பின் விளைவுகள் ஆகியவற்றை கூறவேண்டும். அதற்கும் சில சமயம் செவி மடுக்கப்படாது. விவாதம் என்பதே பிரச்சினையை தலைகீழ் ஆக்கிவிடும்.  

             இந்த வகை பெரியோரிடம் அடிக்கடி கருத்துப்பரிமாற்றம் செய்ய வேண்டும் - ஒரு நாளிற்கு ஒரு முறையாவது. எப்போதுமே தொடர்பிலிருப்பது நம்முடைய பிரச்சினைகளை சட்டென புரிந்து கொள்ள உதவும். குடும்பம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருப்பது நல்லது - அப்படி ஒரு தோற்றமாவது இருக்கவேண்டும். அதுதான் அனைவருக்கும் நல்லதாக இருக்கும். அவர்களோடு கை கோர்த்து நடப்பதுதான் நல்லது. உண்மை என்னவென்றால் பிள்ளைகளின் நலனுக்காக பெரிய போராட்டமே நடத்தி அவர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்திருப்பார்கள். நாமும், அவர்கள் கடந்து வந்த பாதையின் சாதனை, வேதனைகளை புரிந்து வைத்திருப்போம். அதனை நம் துணையிடமும் பிள்ளைகளிடமும் தெளிவுபடுத்தி மரியாதையை பெற்றுத்தருவதும் நம் கடமை. " அவர் பிள்ளைதானே நான் எனக்கும் பிடிவாதம் உண்டு" என்றேல்லாம் போட்டிபோடாமல் விட்டுக்கொடுத்து பழக வேண்டும். எந்த நேரமும் மரியாதையை தேடிக்கொண்டே இருப்பார்கள்.

             பெற்றோர் எப்படியிருந்தாலும் நம் பராமரிப்பில் இருக்கும்போது, தனி கவனம் தேவை. முதல் பாகத்தில் சொன்னதுபோல "பாசம் காட்டி ஏமாற்ற முடியாது" . தனித்து நின்றல் அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று. முதுமையின் காரணமாக அவர்களின் தனிமை பழக்கப்படாத போது தீவிர மனஅழுத்தத்திற்கு ஆளாவார்கள். இன்னும் மரியாதை குறைந்து விடுமோ என்ற எண்ணத்தில் ஐம்பது வயதில்கூட தற்கொலை செய்து கொள்ளும் மனோபாவம் உடையவர்கள். பொதுவாக இது போன்ற aggerssive வகையினரின் கடைசி நாட்கள்கூட போராட்டமாக இருக்கும். அவர்களை மாற்ற முடியாது, நம்மை மாற்றிக்கொள்வதால் இனிய சூழ்நிலையினை உருவாக்க முடியும்.

              எழுதவே தயக்கமாக இருந்தாலும் தேவையிருப்பதால் சொல்கிறேன். ஒரு உயிர் பூமிக்கு வருவதற்கு தரப்படுகிற அத்தனை முக்கியத்துவமும் அந்த உயிர் மண்ணைவிட்டு செல்லும்போதும் தரப்படவேண்டும். அது ஒவ்வொரு பிள்ளையின் கடமையுமாகும். அதை சரிவர செய்யாவிட்டால் குற்றம் உள்ள நெஞ்சு நம்முடையதாகிவிடும். பிறகு பரிகாரம் தேடி ராமேஸ்வரம் போகலாமா காசி போகலாமா என்று ஜாதககட்டை தூக்கிக்கொண்டு அலையும் நிலை ஏற்படும்.

           மூத்தோரை மட்டுமே என்னுடைய பதிவுகள் ஆதரிப்பதாக புகார் எழும்பியுள்ளது. என்னுடைய பதிவினை படிப்பவர்களில் அநேகமானவர் இளைய வயதுடையோர். அவர் தன் நண்பர்களுக்கு இது போன்ற பிரச்சினைக்கு ஆலோசனை கூற வேண்டியிருக்கும். தோளில் கை போட்டுக்கொண்டு மெதுவாக அவர்களை சமாதானப்படுத்தும் பொறுப்பு உள்ளது. வயது, உடல் நிலை மற்றும் நாம் சார்ந்திருக்கும் சமுதாயத்தின் நெறிகள் இவற்றின் காரணமாக முதியோரின் நிலை எடுத்துச்சொல்ல வேண்டியதால் ஆதரிக்கவேண்டியதுதான். நேற்றைய பதிவு முதியோரிடத்து பற்று வைத்திருக்கும் இளையவர்களுக்கானது. இனி இரண்டாம் பாகத்தின் தலைப்பில் வரும் "அவர்கள்" - இளையவர்களை குறிக்கும். நண்பனுக்காக தூது சென்று ஒரு கோப்பை தேநீர் பருகிக்கொண்டே அடக்கமாக பெரியவர்களிடம் பேசவேண்டிய செய்திகள்.

                     அவர்களை புரிந்து கொள்ள முயற்சிப்போம் - இரண்டாம் பாகம்
 
          இருபது வருடத்திற்கு முந்தைய பெற்றோர் புண்ணியம் செய்தவர்கள். அன்றைய இளையவர்கள் பெரிதாக கனவு கண்டதில்லை. பொருளாதார வசதியை வைத்து குடும்பம் அமைந்ததில்லை. உதாரணமாக இருபதுகளின் முன் பாதியிலேயே திருமணம் நடந்துவிடும் - அவன் மளிகை கடையில் கணக்கெழுதும் வேலையில் இருந்தாலும். அவர்களுக்கான புதிய வாழ்க்கை அமையும் வரை வீட்டிற்கு வரும் மருமகளை கவனித்துக்கொள்வது பெரியோரின் கடமை. புகுந்த வீட்டின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொள்ள முடிந்தது - எதிர்த்து பேசாமல். மேலும் அப்போது படிப்பிற்காக பெரிய அளவில் செலவுகளும் இல்லை.  

        இன்றைய சூழ்நிலையில் " முதலில் நல்ல வேலை பிறகு சிறப்பாக திருமணம்" என்பதே கொள்கையாகிவிட்டது. திருமண நாளன்றே தனியாக வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் - இதில் பெற்றோரால் மறுக்கப்பட்ட காதல் திருமணம் வேறு சகஜமாகிவிட்டது. இன்றைக்கு ஐம்பதுகளில் இருக்கும் "அன்றைய இளையோர்" புரிந்து கொள்ளவேண்டிய விசயம் என்னவென்றால், இன்றைய இளைஞர்கள் பொருளாதார அடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர், அதிக சம்பளம் தரப்படும் வேலைகள் அவர்களின் வாழ்நாட்களின் சந்தோச தருணங்களையும் இனமான உணர்வுகளையும் விலையாக பெற்றுக்கொள்கின்றன. சுட்டெறிக்கும் நெருப்பில் நித்தம் அவர்கள் வெந்தும் வேகாமலும் வெளிவருவதை புரிந்து கொள்ளுங்கள. வேலையை தூக்கிப்போட்டுவிட்டு வரமுடியாத பணச்சிறைக்குள் அவர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் - குழந்தைகளின் படிப்பு, வாழ்க்கைத்தரம் ஆகியவை காரணமாக.  

        அன்னையின் மடி, தந்தையின் ஆதரவு இவற்றை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. அவை சுயபரிதாபத்தை வரவழைக்கும். அன்பின் வலியறியாது (மனம்) வலித்துக்கிடப்பவர்கள். இன்றைக்கு வெந்த புண்களுக்கு மருந்திடும் நிலையில் இருப்பவர்களுக்கு நாளைய கொதிக்கும் எண்ணெய் கொப்பரை, சாணமலை போன்றவற்றில் நம்பிக்கை இருக்காது. வெற்று சிரிப்பில் வெளியுலகத்தின் பார்வைக்கு வைக்கப்படும் கண்காட்சி புகைப்படங்கள். 

          ஆகவே நான் சொல்வது என்னவென்றால், கைகளில் தூக்கி தோளில் போட்டுதான் அன்பு பாரட்டவேண்டும் என்றில்லை. உடலில் தெம்பு இல்லாவிடினும் வார்த்தைகள், பார்வைகள் மூலம் மயிலிறகாய் வருடிக்கொடுக்கலாம். விட்டுக்கொடுத்தல்களினால் தேவையில்லாத நெருடல்கள் மறைந்து தேவைப்படும் போது மயிலிறகு வருடல்கள் நமக்கும் கிட்டும். 


                          பயமில்லை பரிவொன்றில்லை- எவர்
                                பக்கமுன் நின்றெதிர்ப்பக்கம் வாட்டுவதில்லை;
                         நயமிகத் தெரிந்தவன் காண்-தனி
                                 நடு நின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான்.
                                                               - கண்ணன் என் தந்தையில் பாரதியார்



   அடிக்கடி குறை சொல்லிக்கொண்டும் கோபப்பட்டுக் கொண்டிருக்கும் வயதானவர்களை சமாளிப்பது எப்படி? இது என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி. மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் பெரியவர்களை புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள் என்பதுதான். இது சரிபடாது என்று விட்டுத்தள்ளாமலும், வேறு எங்கேயும் கொண்டு தள்ளாமலும் இருப்பவர்கள் வாழ்த்துக்குரியவர்கள்.

          முதலில் குறை சொல்வது பற்றி. socio psyco analytic theoryன்படி குறை சொல்பவர்கள் மற்றவரை சார்ந்து இருக்கிறார்கள். சார்ப்பு தன்மை என்பதே நம்பிக்கையின் அடிப்படையில்தான் வரும். அவர்கள் நம் மீது அக்கரையும், நம்பிக்கையும் வைத்து இருக்கிறார்கள் , அப்படி என்றால் நாம் சரியாகவே நடந்து கொள்கிறோம் என்றாகிறது. அதையும் மீறி குறை சொல்வதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.

       ஏதாவது தவறாக நடந்துவிடுமோ ? அதன் விளைவாக குடும்பத்திற்கு தீங்கு எதுவும் நேர்ந்து விடுமோ என்ற பயம்தான். பெரியவர்கள் அவர்களுக்கு பிறகான காலத்திற்கும் குடும்ப நலனை எதிர்பார்ப்பார்கள். சில சமயம் தகுந்த விவரம் சொல்லாமல் நாம் விடுவதும் காரணமாக இருக்கும். உதாரணமாக இரவு வீடு திரும்ப நேரமாகும் என்பதை முன்பே தெரிவித்து இருக்கலாம். அந்த சில மணி நேரத் தாமதம், பயத்தினை ஏற்படுத்தி பதட்டப்பட வைக்கும். இது போன்ற சூழ்நிலையில் அட்ரினலின் சுரந்து உடலை சமப்படுத்தும். ஆனால் வயதானவர்களுக்கு இது குறைவதால், வயிற்றில் அமில சுரப்பு ஏற்பட்டு அல்சர் உருவாகலாம். பிறகு சூழ்நிலை சீரானாலும்கூட இந்த பாதிப்பு இருக்கும். மருத்துவருக்கு சிறிய அளவில் தோன்றும் இந்த கோளாறு நடைமுறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உணவை மறுத்தல், சத்து குறைதல், கை கால் குடைசல் எடுப்பது போன்றவை ஏற்படும். எழுந்து நடக்கவே தெம்பில்லாதது போல ஆகிவிடும். மன ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும். 
          
         தன்னை பற்றிய கழிவிரக்கம் கூடிப்போய் சுற்றி இருப்பவர்களை பற்றி தவறாக நினைக்கத்தோன்றும். தவறான வார்த்தைகள் வரும் - "என்னை மதிப்பது இல்லை , என்னை ஏமாற்றி விட்டாய், எனக்கு மட்டும் நல்ல பிள்ளையை கடவுள் கொடுக்காமல் போய்விட்டார் , நான் எப்ப போய் சேருவேன்னு காத்திருக்க" - இதில் ஒன்றிரண்டு வார்த்தைகளைக்கூட தாங்கும் சக்தி நியாயமான உள்ளங்களுக்கு இருக்காது. உண்மை என்னவென்றால், அவர்களால் கட்டுப்படுத்த முடியாமல் இவை வெளிவருகின்றன. பதிலுக்கு நாம் பேசினால் இது இன்னும் அதிகரிக்கும். அதன் விளைவாக ஏற்படும் கோபம், அழுகை போன்றவை அவர்கள் உடல் நலத்தை பாதிக்கும். கண்டிப்பாக நாம் விரும்பும் சூழ்நிலை வீட்டில் இருக்காது. நமது பிரியத்திற்குரிய பெற்றோருக்கும் நமக்குமான உறவு மனைவி முன்பாகவோ குழந்தைகள் அல்லது மற்றவர் முன்பாகவோ கேள்விக்குறியாவதை விரும்பமாட்டோம். இதனால் நமக்கும் மன அழுத்தம் ஏற்படும்.

  இத்தனைக்கும் காரணம் நாம் அவர்களுடன் சரிவர செய்தி பரிமாறிக்கொள்வதில்லை என்பதுதான். வாய் மொழியாக தரப்படும் விவரங்களின் அர்த்தங்களைகூட அங்க அசைவுகள் தவறாக மொழி பெயர்க்கும். அவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கும்போது எதிர் கேள்விகளுக்கு விளக்கம் நிறைய தரவேண்டி இருந்தாலும் சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்க்க முடியும். அதனால் நம் மீதே நமக்கு நம்பிக்கைகூடும். நல்லதுதானே! இத்தனை பார்த்து பார்த்து பழக வேண்டுமா என்று கேட்டால் ஒரு காலத்தில் நம்முடைய மழலையை மொழிபெயர்த்து நம்மை புரிந்து கொண்டவர்களை நாம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.  

           பல்வகை மாண்பினிடையே - கொஞ்சம்
                         பயித்தியம் அடிக்கடி தோன்றுவதுண்டு
          நல்வழி செல்லுபவரை மனம்
                        நையும்வரை சோதனைசெய் நடத்தையுண்டு
                                                  - கண்ணன் என் தந்தையில் பாரதியார்


           கண்டிப்பாக முதியோர் மன நலத்தையும் கவனித்தே ஆகவேண்டும். ஏனெனில் மருத்துவர்களின் கருத்தின்படி பெரும்பாலான உடல் நலக்குறைவிற்கு காரணம் மன அழுத்தம், கவலைகள் அதனால ஏற்படும் பதட்டம் ஆகியனவாகும். இவை சீரண மண்டலத்தை பாதிக்கலாம் முக்கியமாக கல்லீரல் பாதிக்கப்படும்.. விளைவாக நெஞ்சில் எரிச்சல், கைகால் வலி, சத்து குறைவு , மூச்சு கோளாறு தொடர்ச்சியான இருமல் ஆகியன ஏற்படும். இவை நாற்பதுகளின் ஆரம்பத்திலேயே ஏற்படலாம். டயாபடீஸ் , ஹைபர் டென்சன், இரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இல்லாதபோதே இவை அறிகுறி காட்டலாம். எந்த பரிசோதனையும் இவற்றின் ஆதிமூலத்தை அடையாளம் காட்டாது. இந்த நிலையில் அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு, சீரணிக்க சுலபமான உணவு வகைகளை தரவேண்டும். காலை உணவை சீக்கிரமாக தந்து விடவேண்டும். முடிந்தால் தேநீர் போன்றவை தரும்போதே பிஸ்கட்டையும் சேர்க்கலாம். ஒரே வேளையில் அதிகம் உண்ணுவதைவிட கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை உட்கொள்ளச் செய்யலாம்.

         மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது. பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன. விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விசயமே வந்தது. அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன. போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது. வியாபார கொள்கைகள் வாழ்க்கையிலும் வந்தபின் , எதையும் நியாயப்படுத்தும் சுயநல அரக்கன் முதலில் பலி கொண்டது இத்தகைய பொறுப்புகளைத்தான். இதன் முடிவில் மனித்தத்துவம் மரித்து போகும். நாம் அவற்றை உணர்ந்திருந்தாலும் மற்றவர்களுக்கு எடுத்துச்சொல்லுவதில் தயங்கத்தேவையில்லை. எதிர்கால உலகம் நமக்கும்தான் காத்திருக்கிறது.
 
           அடுத்தவரின் உதவி நாடும், வயதான காலத்திலும் - உரிமையிருந்தாலும், உண்மையானவர்களிடம் மட்டுமே ஆதரவு தேடும். அது கிட்டிவிட்டால் பூரண மன அமைதி கிட்டும். 

பலவீனமான முதியவர்களுக்கு சத்துணவுக் குறைபாட்டினால் பசியின்மை, குறைந்த  அளவு உணவு உட்கொள்வது,   தானாகவே எடை குறைவது போன்றவை ஏற்படலாம்.
   
ஊட்டச்சத்துள்ள எளிய உணவு வகைகள் உட்கொள்ளவும்.  
பழங்கள், காய்கறிகள், முழுமையான உணவு தானிய வகைகள், பருப்பு வகைகள், கொழுப்புக் குறைவாக உள்ள பால் கடலை வகைகள், சோயாபீன் வகைகள், மீன் ஆகியவற்றை உண்ணலாம்.  

பதப்படுத்தப்பட்ட உண்வு வகைகளான ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்கவும் பூண்டு, வெங்காயம், மற்றும் நார் சத்து மிக்க காய்கறிகள், தக்காளி, சோயா, மற்ற பருப்பு வகைகள், சிட்ரஸ் வகைப்பழங்கள், திராட்சைகள் பச்சைத் தேயிலை ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

இறைச்சி, பால்பண்ணைப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட சிலவகை உணவு வகைகள் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கோக்/பிஸ்கட்டுகள் ஆகியவற்றை தவிர்த்தோ அல்லது குறைத்தோ உட்கொள்ள வேண்டும்.  

இதய நோயாளிகள் நார்ச்சத்து வகைகளை - முழுத்தானிய வகைகள், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை - அதிகரிக்கவும். கொழுப்பு அதிகமுள்ள சிவப்பு இறைச்சி, நெய், வெண்ணெய், க்ரீம், தேங்காய் எண்ணெய் - ஆகியவற்றைக் குறைக்கவும்..

ஹைப்பர்டென்ஷன் இருந்தால் உப்பின் அளவைக் குறைக்கவும். கால்சியம் உள்ள உணவு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தினமும் உட்கொள்வதை ஆதிகரிக்கவும்.

பொதுவாகவே சரியான இடைவெளி (3 மணி நேரம்) விட்டு குறைந்த அளவு உணவை அடிக்கடி உண்ணலாம். காலை உணவை கண்டிப்பாக உண்ணவும்.

   
அதேபோல், இரவு உணவை முடிந்தவரை சீக்கிரம் சாப்பிட வேண்டும். வறுக்கப்பட்ட உணவை விட கொதிக்க வைத்த ஆவியில் வேகவைக்கப்ப்ட்ட உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிட வேண்டும் .

குடும்ப உறுப்பினர்களுடன் அமர்ந்து ஒரு வேளையாவது உண்ணுதல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.