மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்


வணக்கம். மகிழம்பூச்சரத்தினை தொடரும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி.   என்னுடைய ஆராய்ச்சி பணி இன்னும் முடிவுறவில்லை. மனித மனங்களுடைய ஆழத்தில் புதைந்து அவர்களை பாதிக்கும் மன இயல்புகளை சரி செய்யும் வழியை காண முயற்சிக்கிறேன்.  விடை இன்னும் எட்டமுடியாத ஆழத்தில் இருக்கிறது. அதனை முடித்துவிட்டு பதிவுகளை தொடரலாம் என்று எண்ணினேன். அதற்குள்ளாக உங்களிடம் சில மனோவியல் உண்மைகளை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது ஒரு தொடராக இருக்கட்டும். இந்த பதிவு யாருக்கெல்லாம் பயன்படும்? இதனை எழுத என்னை தூண்டிய நிகழ்வுகள் எவை என்று சொல்ல விரும்புகிறேன்.


      முதலில் சில செய்திகளையும் கவனம் கொள்ள விழைகிறேன். வேலைக்கு வந்துவிட்டு காலை பத்து மணிக்கே ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்... இருசக்கர வாகனத்தில் வந்து இரயில் பாதையோரத்தில் நிறுத்திவிட்டு சென்று ரயில் முன் பாய்ந்து இறந்த ஆண்... ரயில் நிலையத்தில் இரண்டாவது நடைமேடையில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர் திடீரென ரயில் முன் பாய்ந்தது... சில நொடி இடைவெளியில் கிடைத்த தனிமையில் வீட்டிற்குள்ளேயே தற்கொலை முடிவை எடுத்தவர்கள்.... தேர்வு முடிவு வெளிவந்த சில நிமிடங்களிலேயே தற்கொலை செய்து கொண்ட இளம் பிராயத்தினர்....

இந்த சம்பவங்களில் நாம் முதல் பார்வையில் நினைப்பது என்னவென்றால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவு அந்த நொடியில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதுதான். ‘காக்கை உட்கார பனம் பழம் விழுந்த’ கதையாக முடிவெடுக்கப்பட்ட அந்த கடைசி நொடியில் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள்தான் பெரும்பாலும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுகின்றனர். ஆனால், ஏற்கனவே பயத்தினாலோ... துக்கத்தினாலோ... தொடர் தோல்விகளினாலோ...  மன அழுத்தத்தில் இருப்பவர்கள் ‘பீலிபெய் சாக்காடும்’ நிலையில் இருப்பதால் சூழ்நிலையில் ஏற்படும் மிக சிறிய விருப்பத்தகாத சம்பவங்கள் கூட காலனின் கொடும் வாளாக மாறிவிடுகின்றன.



இன்னும் ஒரு விசயத்தையும் பகிர விரும்புகிறேன்.  ‘உலகம் ஒரு சிறிய கிராமம்’ ஆகிவிட்ட இந்த தகவல் தொடர்பு காலத்தில்  பல புதிய மனிதர்களை நாம் கவனிக்க (சந்திக்க அல்ல) நேரிடுகிறது.  பல்வேறு தரப்பை சார்ந்த மக்கள்-  மொழி,இனம்,மதம் மற்றும் ஊர் இவற்றால் வேறுபட்டவர்கள் நம் சூழ்புறத்தின் புதிய அடையாளமாகின்றனர்.   ஒவ்வொரு முறையும் இது போன்று புதிய சூழல் வரும்போது ஒரு புரிந்துணர்வு ஏற்பட நம்முடைய மனஇயல்புகள்தான் உதவுகின்றன.  நம்முடைய பார்வையின் கோணத்தை தீர்மானிப்பதும் இவைதான்.  மிக சமீபமாக என்னுடைய கவனத்தை இழுத்து முடிவில் ஒரு கேள்விக்களத்திற்குள் கொண்டுபோய் நிறுத்தும் ஒரே விசயம்... ஒரு ரயில் அல்லது பேருந்து பயணத்திலோ... பாதையோர நடை பழக்கத்திலோ நான் சந்திக்கின்ற குறிப்பிட்ட சில முகங்கள் – இறுக்கம் நிறைந்த... சிந்தனை வயப்பட்ட...  சிரிக்க மறந்த முகங்கள். ஏதோ ஒரு கணத்தில் வெடித்து தன்னைத்தானே அழித்துக் கொள்ள காத்திருக்கும் வெடிகுண்டுகள் போல சிலர்... (இதில் துள்ளித்திரியும் பருவத்தில் உள்ள சிறு வயதினரும் அடக்கம்).


    முதலில் நான் குறிப்பிட்ட செய்திகளுக்கும்  இப்போது நான் குறிப்பிடும் மனிதர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? மாற்றம் எதுவுமே நிகழாதபட்சத்தில் நாளைய செய்திகளாகப் போகும் இன்றைய மனிதர்கள் அவர்கள்.  இன்றைய செய்திகள் ஏதோ ஒரு வகையில் நாளை நிகழவிருக்கும் தற்கொலை முயற்சிகளுக்கு தூண்டுகோளாகவும் அமைகின்றன. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்பது உண்மை. ஆனால் ஒரு இறப்பு சக மனிதர்களிடம் கேள்விகளையும் குற்ற உணர்வுகளையும் பதிந்து செல்லக்கூடாது.  ‘அது ஒரு நல்ல ஓட்டம். நான் நன்றாக ஓடி முடித்துள்ளேன்.’ இறக்கும் தருவாயில் ஒருவரின் எண்ணம் இதுவாகவே இருக்க வேண்டும்.  அதுவே மற்றவர்களுக்கும் ஆத்மார்த்தமான பலம் தரும்.



      புலிக்கும், நாய்க்கும், குருவிக்கும் பாதுகாப்பு தேடும் சுற்றுசூழல் விழிப்புணர்வு பெருகி வரும் இந்த காலத்தில், நம்மை சுற்றியிக்கும்  வலுவிழந்த  உணர்வு சூழ் உலகத்தை மனோ பலம் மிக்கதாக ஆக்க வேண்டுமல்லவா?.  இதில் சக மனிதர்களாகிய நாம் ஏதாவது செய்ய முடியுமா?. செய்ய முடியும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த பதிவுகள் உதவும். - அடுத்த பதிவில் நம்மை அறிந்து கொள்வோம்..

10 comments:

‘அது ஒரு நல்ல ஓட்டம். நான் நன்றாக ஓடி முடித்துள்ளேன்.’ இறக்கும் தருவாயில் ஒருவரின் எண்ணம் இதுவாகவே இருக்க வேண்டும். அதுவே மற்றவர்களுக்கும் ஆத்மார்த்தமான பலம் தரும்.

நம்மை நாம் அறிய வேண்டும்..

வருக வருக என வரவேற்கிறேன்

நீண்ட நாட்களுக்குப்பின் தங்களின் வருகையும் பதிவும் மகிழ்வளிக்கிறது.

//இன்றைய செய்திகள் ஏதோ ஒரு வகையில் நாளை நிகழவிருக்கும் தற்கொலை முயற்சிகளுக்கு தூண்டுகோளாகவும் அமைகின்றன.//

ஆம். இது ஓர் மறுக்க முடியாத உண்மைதான்.

// இறப்பு என்பது தவிர்க்க முடியாதது என்பது உண்மை. ஆனால் ஒரு இறப்பு சக மனிதர்களிடம் கேள்விகளையும் குற்ற உணர்வுகளையும் பதிந்து செல்லக்கூடாது.//

போனவர் போனபின், அவருடனேயே கூட இருப்பவர்களுக்கு இது மிகவும் வேதனை + சோதனை அளிக்கக்கூடியது தான்.

//‘அது ஒரு நல்ல ஓட்டம். நான் நன்றாக ஓடி முடித்துள்ளேன்.’ இறக்கும் தருவாயில் ஒருவரின் எண்ணம் இதுவாகவே இருக்க வேண்டும். அதுவே மற்றவர்களுக்கும் ஆத்மார்த்தமான பலம் தரும்.//

தாங்கள் கூறிடும் இந்த எண்ணம் சரி தான்.

தற்கொலை செய்துகொண்டவரைப் பேட்டி கண்டால் மட்டுமே அவரின் தற்கொலை முயற்சிக்காண உண்மைக் காரணத்தையும் வேதனைகளையும் நாமும் அறியமுடியும்.

ஆனால் அவ்வாறு பேட்டிகாண்பது இயலாத காரியம் அல்லவா !

பிறரால் துப்புத்துலக்கி பிறகு கண்டுபிடிக்கப்படும் காரணங்கள் யாவுமே வெறும் ஜோடனைகளாகவும் ஹேஷ்யங்களாகவுமே இருக்கக்கூடும்.

அதனால் யாருக்கும் எந்த பயன்களும் ஏற்படாது என்பது என் தனிப்பட்ட தாழ்மையான கருத்து.

-=-=-=-=-

அன்புடன் VGK

தற்கொலை செய்பவர் தான் சாகப் போவதை மறைமுகமாக தம்மை சுற்றி உள்ளவர்களுக்கு பலவிதங்களில் செய்ய முயற்சிப்பார்கள். காரணம் தனக்கு யாராவது ஆறுதல் சொல்வார்களா அல்லது காப்பாற்ற் முன் வருவார்களா என்றுதான் ஆனால் இந்த அவசர உலகில் யாரும் அதை கண்டு கொள்ளவதில்லை என்பதுதான் உண்மை.. இந்த கால அவசர உலகில் யாரும் அடுத்தவர்களின் மனங்களை படிக்கும் கலையை அறிந்து இருக்கவில்லை...

நீண்ட காலத்திற்கு அப்புறம் வந்தாலும் தரமான பதிவோடத்தான் வந்திருக்கிறீர்கள் உங்கள் எழுத்துகளை மீண்டும் மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது....தொடருங்கள்.

மகிழம்பூ மீண்டும் மணக்க ஆரம்பித்து இருக்கிறது....

நீண்ட நாட்களுக்குப் பிறகு மிக நல்ல பகிர்வோடு வந்திருக்கிறீர்கள்...
தொடருங்கள்.

WELCOME BACK SAGAMBARI!

பல மாதங்களுக்குப்பிறகு வந்த உங்கள் பதிவு ஆழமானதாய் அர்த்தமுள்ள‌தாய் இருக்கிறது! தொடருங்கள்!!

@ இராஜராஜேஸ்வரி, நலமா தோழி. தங்கள் வருகைக்கு நன்றி.

@ நன்றி மதுரைத் தமிழன் சார். தங்களின் கருத்துரை மிக சரியானதுதான். நம்முடைய உத்தியோகம் என்பது அதிக சம்பளமும் தருகிறது அதற்கான விலையையும் அதிகமாக வெற்றுக் கொள்கிறது. மாறி வரும் சூழலிற்கு ஏற்ப நம்முடைய வாழ்க்கையை புதிய் உத்திகளின் மூலம் வளப்படுத்த முயற்சிப்போம். தொடரில் இதற்கான உத்திகளை சொல்லவிருக்கிறேன்.

@ வணக்கம். வருகைக்கு கருதிற்கும் நன்றி மனோ மேடம். இந்த பதிவு முழுமை பெற உங்களின் கருதுரைகளும் அவசியமாகிறது.

@ திரு.குமார். நலமா? வருகைக்கு நன்றி. உங்களுடைய கருத்துகளையும் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

வணக்கம் VGK Sir, தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சியளிக்கிறது. இது போன்ற சம்பவங்களில் உண்மை சில சமயம் வெளிப்படுவதில்லை. உயிருடன் இருக்கும் சிலர் தன் நன்மை கருதி பொய் கூறவும் வாய்ப்புள்ளது.

என்னுடைய முயற்சி என்னவெனில் 'வீட்டின் நலம் ஊரை வளப்படுத்தும்.ஊரின் நலம் நாட்டை வளப்படுத்தும்' என்ற கருத்தின்படி வீட்டினை கட்ட ஒவ்வொரு செங்கலாக எடுத்து வைக்க முனைகிறேன். முயற்சி பலித்தால் அழகான வீடுகள் உருவாகும் என்று ஆசை கொள்கிறேன்.

அன்புடையீர்! வணக்கம்!
அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (24/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களின் நினைவில் நிற்கும் பதிவுகளில் இன்று தங்களது தளத்தைப் பற்றி அறிந்தேன். பதிவுகளைப் படித்தேன். வாழ்த்துக்கள்.
http://drbjambulingam.blogspot.com/
http://ponnibuddha.blogspot.com/