மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

பகுதி இரண்டிற்கு செல்ல இங்கே சொடுக்கவும்..

           போன பதிவில் இடம்பெற்றிருந்த படத்தில் மஞ்சள் வர்ண கோடுகள் ஆலோசனை பிணைப்பினையும் கருநீல வண்ண கோடுகள் அறிவுரை தருவதையும் குறிக்கிறது. அறிவுரை சரியான வழிகாட்டலை பரிந்துரைக்கும். ஆலோசனை என்பது ஒருவரை கைபிடித்து வழி நடத்திச்செல்வது போன்றது இலக்கை அடையும்வரை நம் கவனம் அவர்மேல் இருக்க வேண்டும். அதற்கு மிகுந்த நேரமும் இதயபூர்வமான பங்களிப்பும் இருக்க வேண்டும். அதனால்தான் நம்முடைய உணர்வுசூழ் உலகத்தினரை சிறிய எண்ணிக்கையில் அமைத்துகொள்ள வேண்டும். அந்த படத்தில் A,B,C அனைவருமே ஒரே  குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால் கையாள எளிதாக இருக்க வேண்டும் என்பதால் மூன்று வட்டத்தில் பிரித்துள்ளேன்.

        இதிலிருந்து ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  நம்மைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் நல்ல எண்ணம் நம்மிடம் இருக்குமெனில் அவர்களுடைய மனதின் எண்ண ஓட்டங்களையும் உணர்வுகளையும் நாம் பூரணமாக தெரிந்திருக்க வேண்டும். அதற்குரிய சந்தர்ப்பங்களைஅவ்வப்போது அமைத்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு சிக்கல் ஏற்படும் தருணத்தில் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர நமக்கு கை கொடுக்கும். என்னதான் திறமைசாலியாக அனுபவசாலியாக இருந்தாலும், படகினை தயார் செய்து வைத்திருப்பவரால் மட்டுமே வெள்ளம் பெருகும் நிலையில் படகினை பாதுகாப்பாக செலுத்த முடியும், மற்றவர்களை காப்பாற்றவும் முடியும்.

இனி நம்முடைய உணர்வுசூழ் உலகத்தை பாதிக்கும் எதிர்மறை மனக்காரணிகளை வகைபடுத்தி பார்க்கலாம். அப்போதுதான் சரியான வழிகளை கையாள முடியும் அவற்றை மூன்று வகையாக பிரிக்கலாம். உணர்வுசார் மனபோராட்டம்-EMOTIONAL CONFLICT, நெறிசார் மனப்போராட்டம்- ETHICAL CONFLICT,  நெறிசார் இரண்டக நிலை - ETHICAL DILEMMA.  (இவை அனைத்துமே மனோவியல் ஆராய்ச்சிகளில் இருக்கும் புதிய வார்த்தைகள் எனவே தமிழாக்கம் என்னுடைய முயற்சி).  அனைத்து விதமான உளவியல் பிரச்சினைகளுக்கும் இவையே அடிப்படை. இனி விரிவாக காண்போம்.


உணர்வுசார் மனபோராட்டம்-EMOTIONAL CONFLICT

     இதன் அடிப்படையானது முரண்பாடான உணர்வுகளின் மோதல் ஆகும். முரண்பட்ட உணர்வுகளின் தாக்கத்தால் கட்டுப்பாடிழந்த நிலை. ஒன்று எதிரியை அழிக்க நினைக்கும் அல்லது தன்னை அழித்துக் கொள்ள நினைக்கும். மிக முக்கியமாக தன்னை பற்றிய சிந்தனையே மேலோங்கி நிற்கும். எந்த ஒரு விசயத்தையும் உள்வாங்கும்போது அதனை புரிந்துக் கொள்ளும் முறைதான் நமக்குள் ஏற்படும் உணர்வுகளும் அதன் வெளிப்பாடுகளும்.  உணர்வுகளை இரண்டு தூண்டுதல்கள் ஏற்படுத்துகின்றன. அவை சுயம்சார்ந்த தேவைகள்(wantself), கடமைசார்ந்த தேவைகள் (shouldself) ஆகும். உதாரணமாக, முக்கியமான அலுவலகத் தேர்விற்கான கேள்வித்தாள் உங்கள் கையில் தேர்விற்கு முதல் நாளே கிட்டிவிடுகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள் சுயம் சார்ந்த முடிவு எனில் அதனை பயன்படுத்திக் கொள்வீர்கள். கடமை சார்ந்த முடிவு எனில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வீர்கள். விருப்பங்களானது சுயம் சார்ந்த முடிவினையும், நெறி முறைகளானது கடமை சார்ந்த முடிவினையும் தருகின்றன.

     மிக அதிகமான தற்கொலை சம்பவங்கள் மற்றும் முயற்சிகளுக்கு இந்த எதிர்மறை காரணியே அடிப்படையாகிறது. குறிப்பிட்ட சூழ்நிலையில் சிக்கலுக்கு தீர்வானது,நம் விருப்பத்திற்கு எதிரானதாக (Conflict of interest) இருந்தால் மனப்போராட்டம் அதிகரிக்கும். எண்ண ஓட்டத்தினையையும் சிந்தனையையும் மிக விரைவாக பாதிக்கும். கடந்துபோன தோல்விகளை நினைவூட்டி தடுமாற வைக்கும் இனி அவ்வளவுதான் என்று இயலாமையை நம் மனதில் பதிக்கும். சில சமயம் ஆற்றாமையின் விளைவாக கோபத்தை அதிகரித்து, பழிவாங்கும் உணர்வை தூண்டும். அதிலும் எதிராளி தர்ம நியாயத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லது பழிக்கு பயந்தவன் என்றால், தற்கொலை முடிவை எடுக்க வைக்கும். தன்னுடைய மரணத்தால் எதிரி மனநிம்மதியிழந்து தவிப்பது போன்ற கற்பனை காட்சிகள் தோன்றி, வக்கிரத்தன்மையினை  அதிகரிக்க வைத்து உறுதியான முடிவிற்கு வழிதேடும். சரியான வழிக்காட்டுதல் இல்லையெனில் சுயபரிதாபமும் பச்சாதாபமும் அதிகரித்து தவறான முடிவிற்கு தள்ளிவிடும். இது போன்ற நிலையில் மரணத்தின் எல்லைவரை செல்லும் வரை தனக்கு நடக்கப்போகும் பாதிப்புகளை அறிய முடியாத மாயை உருவாகிவிடும். கடைசி நொடியில் தன்னை காப்பாற்றுமாறு கதறும் சம்பவங்கள் இப்படித்தான் நடக்கிறது ஒருவேளை அவர்கள் காப்பாற்றப்பட்டாலும் அதன் தாக்கம் நீண்ட  நாட்கள் அவர்களிடம் இருக்கும் சிலசமயம் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதும் நடப்பது உண்டு.

 இது போன்ற நிலையில் நம் உணர்வுசூழ் உலகத்தினர் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முகபாவனைகள், நடத்தைகள் காட்டிக் கொடுத்துவிடும்.அவ்வாறெனில்,
1. அன்பும் கனிவும் கொண்டு விசாரியுங்கள். மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிக முக்கியமான விசயமாக கையிலெடுங்கள்.

2. ஒருவர் உணர்வுகளின் திடீர் தாக்குதலில் உள்ளார் எனில் அது மூளையையோ, இதயத்தையோ அல்லது வயிற்றில் அமில சுரப்பையோ அதிகரிக்கும் முதல் இரண்டு விசயத்தில் மயக்கமடைவதும், நெஞ்சு வலிப்பதும் ஏற்படலாம். அப்போது மரணபயம் தானாகவே தோன்றிவிடும். அந்த சூழ்நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் முயற்சி தானாகவே தொடங்கிவிடும். எனவே கோபம், வேதனை, கலக்கம் போன்ற உணர்வுகள் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.

3. ஆனால், வயிற்றில் அமில சுரப்பு அதிகரித்தால், தொடர்ந்து எதிர்மறை எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். எனவே முதலில் இதனை சரி செய்ய வேண்டும். ஜில்லென்று குடிக்கக்கூடிய பக்குவத்தில் சாத்துக்குடி( நன்கு பழுத்தது) சாறு இனிப்பு சற்று அதிகம் சேர்த்து தரலாம். குளிர்ந்த பால் தரலாம் ரொம்பவும் சூடாக இல்லாமல் சாக்லேட் கலந்த பானம் (Health drinks) தரலாம். காபி, போதை பானங்கள், கார்ப்னேட்டட் குளிர் பானங்கள், மசாலா அதிகம் சேர்த்த உணவு வகைகளை தவிர்க்கவும். ஏனெனில் இவை அமிலசுரப்பினை அதிகரிக்கக்கூடியவை

4. இதன்பின் அவர்கள் உடலளவில் நிதானத்திற்கு வருவதை கண்கூடாக பார்க்கலாம்.  நல்ல காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு சென்று அமைதியாக இருங்கள். அவராக உரையாடலை தொடர வாய்ப்புள்ளது. அவர் பேசும்போது குறுக்கிட்டாமல், முழு மனதுடன் கவனமாக கேளுங்கள்.

5.  நீங்கள் பேசும்போது, தயவு செய்து அவர்களின் தவறினை சுட்டிக்காட்டாதீர்கள். அதற்கு உகந்த நேரம் இதுவல்ல. அவர்கள் உணர்வுசார் மனப்போராட்டத்தில் இருந்தார்களெனில், மற்றவர்களின் வாழ்க்கையில் அவர் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் என்று சொல்லுங்கள்.

6. அவரின் சிறப்புகளை எடுத்தியம்பி புகழவும் வேண்டாம் ஏனெனில் தற்கொலை முடிவு என்பது தன்னுடைய தகுதிக்கு ஏற்ற நிலை கிட்டவில்லை, மறுக்கப்பட்டது என்ற ஆதங்கத்தின் விளைவாகவும் இருக்கும். பெரும்பாலும் அவர்கள் தன்னை பற்றிய உயர்வான அபிப்ராயம்(High self esteem) உள்ளவர்களாகவே இருப்பார்கள்.

7. அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நினைவுபடுத்துங்கள். வாழ்ந்து ஜெயிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள். இடமாற்றம் செய்வது மிக நல்லது. எதிர்மறை காரணிகளிலிருந்தும் தோல்வியின் தாக்கத்திலிருந்தும் வெளிக்கொணரும்.

8.   குறிப்பிட்ட மனநிலையிலிருந்து அந்த நொடி அவரை வெளிக் கொணர்வதே மிக முக்கியம் பிறகு அவர் நிதானத்திற்கு வந்த பின் சுயமாக நல்ல படியாக சிந்திக்க ஆரம்பித்துவிடுவார்.

9.        சூழ்நிலையினை (if needed) அனுசரித்து Counslingற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

10. தங்களுடைய உலகினை முற்றிலும் வேறொரு கோணத்திலிருந்து புதிய பார்வையில் பார்க்க உதவுங்கள். 


உதாரணங்கள் – காதல் தோல்வி, தேர்வு தோல்வி, தொழில் நஷ்டம்,  – ஏனெனில், இவையனைத்தும் மற்றவர்களால்  தமக்கு நேர்ந்தவைகளாக எண்ணிக் கொள்வர். தராசு தட்டு  இந்த விசயத்தில் எதிரி பக்கம் சாயாது.


இன்னும் தொடரும்... 

4 comments:

//அதிலும் எதிராளி தர்ம நியாயத்திற்கு கட்டுப்பட்டவன் அல்லது பழிக்கு பயந்தவன் என்றால், தற்கொலை முடிவை எடுக்க வைக்கும். //

//5. நீங்கள் பேசும்போது, தயவு செய்து அவர்களின் தவறினை சுட்டிக்காட்டாதீர்கள். அதற்கு உகந்த நேரம் இதுவல்ல. அவர்கள் உணர்வுசார் மனப்போராட்டத்தில் இருந்தார்களெனில், மற்றவர்களின் வாழ்க்கையில் அவர் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறார் என்று சொல்லுங்கள்.//

தங்களின் இந்தக் கட்டுரை மிக அருமையாகச் செல்கிறது. பாராட்டுகள்.

மிக்க நன்றி சார். எளிமையாகவும் புரிந்து கொள்ளும் வகையிலும் பதிவிட தங்களின் கருத்துரைகள் உதவுகின்றன.

தராசு தட்டு இந்த விசயத்தில் எதிரி பக்கம் சாயாது..//

பெரும்பாலான சமயங்களில் எந்த விஷயத்திலும் எதிரிபக்கம் தராசுத்தட்டு சரிவதில்லையே..

ஒவ்வொருவரும் தனக்கான கனமான நீதியை வைத்திருப்பார்கள்..!


உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..