மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தின் பொறுப்பாசிரியராக பணியேற்கிறேன். அங்கே சந்திப்போம்.

வலைச்சரத்தின் தலைப்பு

 
வழக்கம் போலவே உங்களுடைய ஆதரவினை எதிர்பார்த்து செல்கிறேன்.ஒரு வாரம் கழித்து சந்திப்போம். நன்றி.
அன்புடன்
சாகம்பரி

உயிரை பற்றிய கவலை
தனிமையில் தொக்கி நிற்க
இருட்டு மூலையில்
மனம் மாயசக்தி தேடி
மரணத்தை வென்றிடவே
மன்றாடி வேண்டி நின்றது..
அபயம் கிட்டும் நொடிக்காக
கால்வலிக்க காத்து நின்றது.
இப்படியே போன ஒரு நாளில்
எதுவுமே இல்லாத சூன்யத்தில்
இறுதி நியாயம்  உரைத்தது
'இனி நான் மட்டும்தான்'

எனக்கான என்னுடைய
போராட்டம் ஆரம்பித்திட
உயிர் வாழ்தலின் தத்துவ
ரகசியம் புரிய வருகிறது.
எதுவும் நிலையானதுமில்லை
எதுவும் கிட்டாததும் இல்லை.
ஏனெனில்
ஒன்றை அடித்து
மற்றொன்று உயிர்வாழும்
உயிர் சங்கிலியில் நான்
முதலிடத்திலும் இல்லை
கடைசி இடத்திலும் இல்லை..


வெற்றியோ....! தோல்வியோ.....!
ஏனோ சில சிறிய பயணங்களை
உலகம் கவனப்படுத்துவதில்லை!


மழைவிட்ட  பகல் வேளையில்
சாலையை கடக்க யத்தனிக்கும்
இரயில் பூச்சியின் முயற்சியாக
வாழ்க்கையின் மறுபக்கம் தேடிட
ஊர்தலின் வேதனை தொடங்கியது.
விதவிதமான சக்கரங்கள் உருள
உராய்வின் சூடு பரவி பதிந்த
பாதையில் பயணம் ஆரம்பித்தது.

அது மறுபக்கம் சேர்ந்திடலாம்...
ஆற்றங்கரையோர நாகரிகமாக
புதிய வாழ்விடம் சேரலாம்..!
அல்லது
ஒரு அசூசையான பொருளாக
சக்கரத்தில் ஓட்டி கொண்டு
வாழ்நாளின் பாதியிலேயே
முற்றும் போட நேரிடலாம்!
மற்றொரு மழை நாளிலோ,
வாகனத்தை கழுவும்போதோ,
எஞ்சிய பாகங்கள் கிட்டலாம்
அல்லது
மறுபக்கம் சென்று சேர்ந்ததும்
யார் பார்வையிலும் படாமல்
பூமியினுள் புதைந்திருக்கலாம்.

எதுவானாலும்....
தேடலின் நிமித்தங்கள்தான்
வாழும் உலகின் எல்லையை
மாற்றி அமைக்கின்றன.


காற்றுக்கும் காற்றுக்கும்
வெள்ளி சுவரெழுப்பியே
இறகு பந்தாகி துள்ளிட,
சூரியனின் தூரிகையில்
ஏழு வர்ணம் கொண்டு
பளபளத்து பறக்கிறேன்.
இலக்கின்றி செல்கையில்
மிதத்தலின் சுகம் புரிகிறது


நான் செல்லும் பாதை
தெளிவாக இருக்கும்வரை
வழியில் சிறு குண்டூசியின்
தலையீடுகூட இல்லாதவரை
சம பலம் பலவீனத்துடன்
மற்றொரு குமிழ் வந்து
என் மீது மோதாதவரை
வெடித்து சிதறிப்போகாமல்
பத்திரமாக மிதக்கலாம்.

குறுஞ்சிரிப்பில் மலரும்
பார்வைகளில் ஊக்கமுற்று
பின்விளைவின் பயமின்றி
காற்றொடு கை கோர்த்து
வருவது வரட்டும் என்று
சித்தாந்த சிந்தனையுடன்,
பரந்து விரிந்த உலகின்
அடிப்படை அன்பு தேடி
கள்ளமின்றி மிதக்கிறேன்
ஏனெனில் என்னுள் இருப்பது
ஒரு குழந்தையின் மூச்சு !