
டெல்லி விமான நிலையத்தில் நுழைந்தது முதல் விமானத்திற்குள் சென்று இருக்கையில் அமரும்வரை, வசுமதிக்கு எதுவுமே கவனத்தில்படவில்லை. அவள் கணவர் செழியன் அவளிடம் குனிந்து, "மன்னிச்சுக்கோம்மா, நம் இருவருக்கும் அருகருகே இருக்கை கிட்டவில்லை. நான் அந்த இரண்டாவது வரிசையில் சன்னலோரத்தில்தான் அமர்ந்துள்ளேன். சென்னை வரும்வரை, அமைதியாக உறங்க முயற்சி செய்." என்று கூறிவிட்டு சென்றார். ஒதுக்கப்பட்ட இருக்கையை மாற்றிக் கொள்வது இங்கு சற்று நாகரிகம் இல்லாத விசயமாக கருதப்பட்டதால் அதனைச் செய்ய முடியவில்லை போலும். சற்று பொறுத்து, அவளருகே ஒரு வயதான பெண்மணி அமர்ந்ததும் நிம்மதியாகப்பட்டது. இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். அம்மா...! கண்கள் கலங்கின.
"அம்மாவிற்கு ரொம்பவும் சரியில்லை. சாப்பிட்டு ஒரு வாரமாகிறது. மருத்துவர் நம்பிக்கையாக எதுவும் சொல்லவில்லை." இன்று காலை, அதிசயமாக அவளை அலைப்பேசியில் அழைத்த சுந்தரண்ணா பேசியபோது ஒருவித படபடப்பு உண்டானது. கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் கழித்து அண்ணனின் அழைப்பு அவளை பயப்படுத்தியது. அண்ணன் தொடர்ந்து,
"இப்போதும் உன்னை வா என்று அழைக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் திடீரென்று கண்கள் விழித்து சுற்றியுள்ளவர்களை பார்வையால் சலித்து ஓய்ந்துபோய் மறுபடியும் கண்களை மூடிக்கொள்வதை பார்த்தால், அவர்கள் உன்னைத்தான் தேடுவதுபோல உள்ளது. எனவேதான்....." என்று கூறியதில் உள்ளம் ஒப்பாமையும், கடந்தகால கசப்பும் தெரிந்தன. விதைத்தவள் அவளே, இப்போது அறுவடை நேரம். கைக்கு கிட்டுவதை மறுக்க முடியாது.
பதினேழு வருடங்களுக்கு முன், கல்லூரிக்கு சென்ற ஒரு மழை நாளில் செழியனின் கையினை பிடித்துக் கொண்டு உறவுகளை உதறிவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டாள். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புதல் இல்லை என்ற காரணம் மட்டுமே. செழியன் இராணுவத்தில் இருந்ததும், அவனுக்கு மாமாவின் பெண் தயாராக இருந்ததும் முக்கிய காரணங்கள். கொஞ்ச நாள் கட்டாக்கில் இருந்த பின் டெல்லிக்கு மாற்றம். வினி அங்கேதான் பிறந்தாள். அதுவரை ஒரு குருவிக்கூட்டின் தனிமை போல அவளும் அவள் கணவனுமாக வாழ்ந்த வாழ்க்கையில் வினிகுட்டியின் வருகை, அவளுக்கு அன்னையின் நினைவினை மீட்டுத் தந்தது, அப்போது திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்திருந்தன. அவளுடைய பிறந்த வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட போது அம்மாதான் எடுத்தது. வசுவின் குரல் கேட்டதும், மறுமுனையிலிருந்து பதில் எதுவும் கேட்கவில்லையெனினும் தொடர்பு துண்டிக்கப்படாதது புரிந்தது. இறைவனிடம் பாவமன்னிப்பு பெறுவதுபோல் அவள் மட்டுமே பேசினாள். மன்னிப்பு வேண்டினாள். அடுத்தடுத்து அவள் அப்படியே பேசினாள். மாலை வேளையில் விளக்கேற்றி வைத்து இறைவனிடம் மனமுருக பிரார்த்திப்பது போன்ற ஈடுபாட்டுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசினாள். அவளை பற்றி, செழியனை பற்றி, வினியை பற்றி சில சமயம் டெல்லியின் வானிலை மாற்றங்களைக்கூட பேசுவாள் - பதில் கிட்டாவிடினும் அவள் நிறுத்தவில்லை.
"உன்னுடைய அழைப்பு என்று தெரிந்த உடனேயே வீட்டை பூட்டிட்டு கிளம்பியிருக்கப்போறாங்க." என்று செழியன் கேலி செய்த போதும் அவள் விடவில்லை. அவளுக்கு அம்மாவை பற்றித் தெரியும். வசுவுடைய அன்பு பற்றி அம்மாவிற்கும் தெரியும் என்று நம்பினாள். ஒரு மகாசக்தியாக அன்னையை அவள் நினைத்தாள். அம்மாவின் கடந்த கால உழைப்பு தெரியும். அந்த உழைப்பிற்கு அடிப்படை அன்பு என்கிற மந்திரம் மட்டுமே. செழியனுக்காக எதை வேண்டுமானாலும் விட முயன்ற வசுவால் அன்னையின் அன்பை விலக்க முடியவில்லை. தொடர்ந்து முயற்சித்தாள். எப்போதாவது கோபம் குறையுமல்லவா?
இறைவனுக்கு என்மேல் கோபம் என்று மனிதன்தான் நினைக்கிறான். இறைவன் எப்போதும் தன் குழந்தையின் அன்புக் குரலுக்காக காத்திருக்கிறான், அது போலத்தான் அன்னையும். தன் கை வருடலில் இல்லாத குழந்தைக்காக பரிதவிக்கிறாள் என்பதை ஒரே ஒரு தொலைப்பேசி அழைப்பு புரிய வைத்தது.. அது ஒரு அக்டோபர் மாதம். அன்றைக்கு டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருந்தது. .வசுவிற்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.. வழக்கம்போல அமைதி பாராட்டாமல், "எப்படி இருக்கே. குழந்தை நல்லாயிருக்கா? மாப்பிள்ளை எங்கேயிருக்கார்?" பதற்றத்துடன் ஒலித்த அம்மாவின் குரலுக்கு பதில் சொல்ல, இந்த முறை அவளால் முடியாமல் போய்விட்டது. கலங்கிய குரலில் பாதுகாப்பான நிலையை விவரித்தாள். அதற்குப்பிறகு ஒரு பக்கமாக மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த தொலைப்பேசி போக்குவரத்து இரண்டுபுறமும் தொடர்ந்தது. அண்ணனின் திருமணம், பேரன் பிறந்தது என பிறந்த வீட்டை பற்றிய செய்திகள் அவளுக்கு கிட்ட ஆரம்பித்தன. ஆனால் வேறு யாரும் அவளிடம் பேசவில்லை. ஒரு தண்டனைபோல அவளும் அதனை ஏற்றுக் கொண்டாள். அம்மாவிடம் பேசாமலிருப்பது, அம்மாவிற்கே தண்டனையாகிவிடும் என்பதால்தான் மௌனம் கலைத்தது.
ஆயிற்று பதினைந்து வருடங்கள் கடந்தபின் , சமீபத்தில்தான் ஒரு முறை அண்ணி பேசினாள். அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தாள். அதன் பிறகு இன்று காலைதான் அண்ணன் பேசினார். வசுமதியின் பதட்டத்தை புரிந்து கொண்ட செழியன் உடனடியாக சென்னைக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.
விமான நிலையத்தில் காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் வசுவின் எண்ணங்கள் அன்னையை சுற்றியே வந்தன. "அவங்களுக்கு சந்தோஷமா ஒரு வேளை சாப்பாடுகூட போடவில்லையே, செழியன். இங்கே வரவச்சு காசிக்கு கூட்டிட்டு போகணும்னு நினச்சேனே. எதுவுமே முடியாமல் போய்விடுமோ? எனக்காக இன்னும் கொஞ்ச நாள் கடவுள் அவர்களை உயிருடன் வைத்திருந்தால், என்னோட ஆசைக்கு அவங்கள கூட்டிட்டு வந்து சீராட்டுவேனே". பதினெட்டு வருடங்களுக்கு முன் தன் வாழ்க்கையே முக்கியம் என்று சொல்லித்தந்த மனம் இப்போது வேறு பாட்டை பாடியது.
செழியனை மட்டும் ஏற்றுக் கொண்டிருந்தால் விலைமதிக்க முடியாத அன்பினை இழந்திருக்க மாட்டாளே? அப்படியென்ன காதல் மிக முக்கியமாக போய்விட்டது. இதனை செழியனிடமே சொல்லி வேறு புலம்ப, பதில் பேச முடியாமல் அவள் தலையினை வருடிக் கொடுத்தார்.. "ஏம்ப்பா, அப்புறம்கூட அம்மாவிடம் பேச ஆரம்பித்தபின் அவங்கள பார்க்க போகணும்னு தோணலியே. ஏன்?." என்றாள். அவளே தொடர்ந்து "அவங்க கூப்பிடனும்னு எனக்கு ஒரு திமிர் இருந்திருக்கும்போல. அவங்க கூப்பிட்டா போகலாம்னு ஈகோ இருந்திருக்குமோ? ஆனால், அவங்களும் கூப்பிடலையே?".
"இல்லைடா, அண்ணன், அப்பா எல்லோரையும் கலந்துதானே அவங்க முடிவெடுக்க முடியும். குடும்ப நிம்மதி முக்கியமில்லையா?" என்று பதில் கூறினார். மேலும் அவளை புலம்ப வைக்காமல் விமானம் வந்துவிட, இருக்கையில் அமர்ந்தவுடன் அமைதியானாள்.
"சீட் பெல்ட் போட்டுக்கம்மா" அருகிலிருந்த பெண்மணியின் குரலில் நினைவுகள் கலைந்து நிமிர்ந்தாள். பெல்ட்டை அணிந்து கொண்டு மௌனமாக இருந்தவளிடம் "சென்னைக்கா? அங்கிருந்து வேறு எங்காவது செல்ல வேண்டுமா?" புன்சிரிப்புடன் கேட்டார் அவர். அவரை நிமிர்ந்து பார்த்தவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட முகமாக அவர் தெரிந்ததால் தயக்கமின்றி பதிலளித்தாள். "சென்னைக்குதான். செயிண்ட் தாமஸில் அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும்" அவளிடம் மிகவும் பிரியமாக நடந்து கொண்ட யாரையோ நினைவுப்படுத்திய முகச்சாயல் அவரிடம் இருந்தது - அது அவளுடைய கணித ஆசிரியையின் சாயல்…!
"நான் சென்னை சென்று காஞ்சிபுரம் செல்ல வேண்டும்." அவள் கேட்காமலேயே கூறினார். "அம்மாவிற்கு உடல் நலமில்லையா? " வசு, 'அம்மாவீடு' என்று உச்சரித்த போது வந்த தடுமாற்றத்தை கவனித்ததால் சரியாக கேட்டுவிட்டாரோ? அவள் தலையசைத்து ஒப்புக் கொள்ளவும்,
"எத்தனை வயதிருக்கும்?" என்றார். கணக்கிட்டு "அறுபது இருக்கும் " என்றாள்.
"உடல் நலமில்லையா?" மேற்கொண்டு அவர்களிடையே பேச்சு தொடர்ந்தது. வசுவின் முட்டாள்தனம், வேண்டுதல், புலம்பல் அத்தனையும் கேட்டபின் அவர் சொன்ன விசயம் அவளுக்குப் புரியவில்லை.
"நாம் விரும்பும் ஒன்று நம்மைவிட்டுப் போகப்போகிறதே என்ற நிலை வரும் போதுதான் மனம் அடித்துக் கொள்ளும். இதைச் செய்திருக்கலாமோ? அதைச் செய்திருக்கலாமோ என்று புலம்பும். நம்முடைய நட்டக்கணக்கை பெரிதுபடுத்திக் காட்டும். ஆனால் நமக்கு ஒருவரிடம் உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் அவர்களை வருத்தப்படுத்த விரும்பமாட்டோம். நம்முடைய வேண்டுதல்கள் எல்லாம் அதன்பின் மாறிவிடும். அவர்களின் உண்மையான நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யம்மா. சில சமயத்தில் நம்முடைய சுயவிருப்பத்தை அழித்து, விட்டுக் கொடுப்பதுகூட ஒரு தவம்தான் அதுவே அன்பிற்குரியோருக்கு தரம் வரமாகும்" என்றார். அதற்கான சரியான விளக்கத்தை தெரிந்து கொள்ளும் முன் சென்னை வந்து விட்டது.
வசுமதிக்குத்தான் வயதாகிவிட்டது சென்னைக்கு வயது இறங்கிவிட்டிருந்தது. அது இளைய தோற்றம் பெற்றிருந்ததை அவளுடைய மனநிலை சரிவர கவனிக்க விடவில்லை. அம்மா வீட்டின் முன் தோற்றம் கூட மாறிவிட்டிருந்தது. வீட்டின் வாசலிலேயே சுந்தரண்ணா நின்றார்.
"வாம்மா, வாங்க" என்று உள்ளே அழைத்து சென்றார். அம்மா படுத்திருந்த அறைக்கே உடனடியாக சென்றனர். வாயில் துண்டை பொத்திக் கொண்டு வெளியேறிய அப்பாவின் நடையில் தளர்வு இருந்தது. செழியன், சட்டென அவரை நோக்கி கை நீட்ட தயக்கம் ஏதுமின்றி பற்றிக் கொண்டார். இருவரும் வெளியேற படுக்கையின் அருகிலிருந்த நாற்காலியில் அவளை அமர சொன்ன சுந்தரண்ணன் "அவங்க பக்கத்திலேயே அமைதியா இரு.. கண் முழிச்சு பார்க்கறப்போ பேசு." என்றார்.
தலையசைத்துவிட்டு, அன்னையின் அருகில் அமர்ந்து கைகளை மென்மையாக பிடித்துக் கொண்டாள். வாய்விட்டு பேசாவிடினும் மனம் பேசியது "அம்மா, நல்லாயிருக்கியாம்மா?. நான் நல்லாயிருக்கேன். செழியன்கூட சொல்வார் உங்கம்மா உன்னை நல்லபடியா வளர்த்திருக்காங்கன்னு. எல்லாம் நீ கற்றுக் கொடுத்ததுதாம்மா? எங்கிட்ட பேசும்மா" அந்த இடத்தில் இறுக்கமான அமைதி மட்டுமே நிலவியது.
சற்று பொறுத்து உள்ளே வந்த ஒருவர் "வாம்மா, நீதான் டெல்லியிலிருக்கிற பொண்ணா? அம்மாட்ட பேசுனியா?" என்று விசாரித்தார். " அம்மாவை செக் பண்ணனும், வெளியே சற்று காத்திரம்மா" என்று கூறிவிட்டு தன் பரிசோதனையை ஆரம்பித்தார்.
"வா வசு. காபி குடி." என்று அழைத்த நடுத்தர வயது பெண்மணிதான் அண்ணி என்று புரிந்து கொண்டாள். அனைவரும் முன்னறையில் அமர்ந்திருந்தனர். அதற்குள் செழியன் அனைவரிடமும் தயக்கமின்றி உரையாட ஆரம்பித்துவிட்டது புரிந்தது. அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த செழியன் பேசுவது அவளுக்கு கேட்டது. "எப்போதும் அவளுக்கு உங்களுடைய நினைவுகள்தான். மாமா. அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள். ரொம்பவும் அன்பு வைத்திருக்கிறாள். உங்களுக்கு ஒரு முறை உடல் நலமில்லாமல் போனபோதுகூட மலைக்கோவிலில் வேண்டிக்கொண்டு விரதம் இருந்தாள். இப்போதுகூட அத்தைக்காக நிறைய வேண்டுதல்கள் செய்து இருக்கிறாள். நான்தான் ஒரு அழகான குருவிக் கூட்டை பிரித்துவிட்டேனோ என்று கவலைப்படுகிறேன்"
"இல்லை அத்தான், நான்தான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். உங்களை பார்க்கவும்தான் எனக்கு அது புரிகிறது. எங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவள் முகத்தில் எப்படி விழிப்பேன் என்று கூறியே கெடுபிடி செய்தேன், இப்போது பாருங்கள் நாம் சந்தித்துக் கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை. அம்மாவிற்கு வசுவென்றால் மிகவும் பிரியம்." இது சுந்தரண்ணாவின் பதில். வசுவிற்கு சட்டென மனம் வலித்துப் போயிற்று. அதேபோல்தான் அவளும் கடக்க முடியாத சந்தர்ப்பம் என்று அதனை நினைத்திருந்தாள். அவள் நினைத்ததை செழியன் கூறிக் கொண்டிருந்தார்.
"இத்தனை வருடம் கழிந்த பின்பும் பிரியம் இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு நெருப்பு வளையத்தை தாண்ட பயந்து நெருப்பிற்குள்ளேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்திருக்கிறோம். இடையில் வினி பிறந்த பின்பாவது வந்திருக்க வேண்டும். எது நடந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நிறைய அழகான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டோம்" செழியன் கூறியதை ஆமோதித்து அவள் அப்பா தலையசைத்தார். "பாவம், மீனாட்சி. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், எங்களுடைய கோபம் கண்டு அன்பை மறைத்து.. " ஒரு இறுக்கம் மெல்ல விடைபெற்ற சமயம் மருத்துவர் வந்தார்.
"சுந்தர், ரொம்பவும் உடல் ஒத்துழைக்க மாட்டேங்கிறதுப்பா. ஊசி மருந்தை ஏற்றுக் கொள்ளாமல் வெளித்தள்ளுகிறது" உதட்டை பிதுக்கிய வேகத்தில் புரிந்து போனது. அவசரமாக சுவற்றிலிருந்த முருகனை பார்த்த வசுவின் தோளில் கை வைத்து "வேண்டாம் வசு, வேண்டிக் கொள்ளாதே" என்ற அண்ணனை, வியப்பாக பார்த்தாள்.
மருத்துவர் சென்றபின் அவளை முன்வாசலுக்கு அழைத்து வந்து, "வசு, இது ரொம்பவும் மோசமான நிலையம்மா. அப்பாவிற்கே புரிந்துவிட்டது பார். நீ அம்மாவிற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. இதற்குமேல் அந்த உடல் தாங்காது. அவங்களை நல்லபடியாக அனுப்பி வைக்க வேண்டும்மா. மனதை தேற்றிக் கொள்" என்றார். மௌனமாக வசு நிற்கவும் சுந்தரண்ணாவே தொடர்ந்தார்.
"அவங்க நல்லா வாழ்ந்தவங்க, வசு. எந்த வேதனையும் இல்லாமல் அவங்களை அனுப்ப வேண்டியது நம்முடைய கடமைம்மா. நமக்கும் ஆகாதவங்க என்று சிலர் இருக்காங்க. மீனாட்சியம்மாவுக்கு பத்து நாளா இழுத்துக்கிட்டே இருக்காம். என்ன பாவமோ என்றெல்லாம் பேசறாங்க வசு. உனக்கே தெரியும் எத்தனை சிரமத்திலும் நம்மை நல்லபடியா வச்சிருந்தாங்க. அவங்களை சிரமப்படுத்த வேண்டாம். மனதை தேற்றிக் கொள்ளம்மா?" என, அவருடைய பேச்சு வசுவிற்கு அதிர்ச்சியளித்தது. மௌனமாக நின்றாள்.
------------------------------ --------------------- --------------------------
மேலும் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன. அம்மாவின் உயிர் ஊசலாடியது புரிந்தது. எப்போதாவது கண் விழிக்கும்போதும் அருகிலிருந்த வசுவை கண்டு கொள்ள முடியாமல் போனது. உணரும் நிலையிலும் அவர் இல்லை. அண்ணன் அவளை வெளியே வரச்சொல்லி சைகை செய்ய அறையை விட்டு வெளியே வந்தாள்.
"வசு, ஜோசியர் என்ன சொல்றாருன்னா நளைக்கு பிரதோசமாம், தயிர் சாதம் அன்னதானம் செய்துவிட்டு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டால்..." மேற்கொண்டு அவர் சொல்ல வருவதை தடுத்து "என்ன சொல்லனும்ண்ணா? எங்கம்மாவை கூட்டிட்டு போன்னா? அதுக்குத்தான் ஊரிலிருந்து வந்தேனா?” குமுறினாள்.
"வசு, உடல் இதற்கு மேல் தாங்காதம்மா. நிலமையை புரிந்து கொள்ளம்மா. நாம் இருவரும் வேண்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். தயவு செய்து..." பதில் பேசாமல், சட்டென அறைக்குள் சென்றுவிட்டாள். அம்மாவை அனுப்பி வைப்பதற்கு, அவளுடைய ஒப்புதலையும் பெறுவது சாஸ்திரத்திற்குத் தேவைபடுகிறதுபோல. அதற்குத்தான் அவளை வரவழைத்திருக்கிறார்கள். ஒரு போதும் அவளால் முடியாது.
அம்மா அவளுக்கு சக்தி வடிவம்தான். அவளுடைய குடும்பம், விவசாயம் பொய்த்துப்போய் கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தபின் ஒரு மாடிவீட்டின் ஓரறையில் குடித்தனம் இருந்தது. அப்படிப்பட்ட வசுவின் குடும்பம் நகரத்தில் சொந்த வீடு வாங்கும் அளவிற்கு திட்டமிட்டு உயர்த்தியது அம்மாதான். தன் உழைப்பு மட்டுமல்லாது கணவனின் உழைப்பையும் வீண் செய்யாமல் எதிர்கால முன்னேற்றத்திற்கான படிகட்டுகளாக மாற்றியதும் அவள்தான். அன்பு மட்டுமே அவளின் ஆயுதம், மூலதனம், உயிர் மூச்சு. அப்படிப்பட்ட அம்மாவை விட்டுக் கொடுக்க வசுவால் முடியாது.
தீர்மானமாக நினைத்துக் கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தவளின் பார்வையில் அன்னையின் உடல் நீல நிறமாக மாறுவது தெரிந்தது. அவசரமாக அவள் அழைப்பில் உள்ளே வந்த அண்ணன் "உடல் தன்னுடைய வாழ்நாளை முடித்துக் கொள்ளுவதன் அறிகுறி. கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்குதுடா." என்றார். அழுகுவதா? இனி என்ன ஆகும்.... திகைத்து பார்த்த அவள் விழிகளில் தந்தையின் இறைஞ்சுதல் பார்வை பட்டது. எல்லாமே கைவிட்ட நிலையில் இறுதி கட்ட போராட்டம் புரிந்தது "சரி, அண்ணா" என்றாள்.
அதன்பின் அம்மாவின் அறையிலேயே அமர்ந்துவிட்டாள். வாழ்வதற்கு போராடிய அம்மா, இறப்பதற்கும் போராடுகிறாள். ஒரு விசயம் புரிந்தது. வசுமதி தன்னுடையதாக நினைக்கும் ஒரு விசயம் அம்மாவுடையது. முடிவு எடுக்கும் உரிமையும் அம்மாவுடையதுதான். அவளுடைய மௌனம் கூக்குரலாக அம்மாவிற்கு புரிகிறது. பாலிற்கு அழும் கன்றைவிட்டு செல்ல மறுக்கும் தாய் பசுவைப்போல, வசுவை விட்டு செல்ல முடியாமல் தவிக்கிறாள். விமானத்தில் உடன் வந்த பெண்மணி சொன்ன "சில சமயத்தில் சுயவிருப்பத்தை அழித்து, விட்டுக் கொடுப்பதுகூட ஒரு தவம்தான்" வார்த்தையின் விளக்கம் புரிந்தது.
ஆனாலும் தாயின் மரணத்திற்காக வேண்டி நிற்பது, பெற்ற குழந்தையை கூர்வாளால் வெட்டச் சொன்னபோது தாய் மனம் பட்டபாட்டிற்கு சற்றும் குறைந்தது இல்லையே? வேண்டுதலினாலோ அல்லது வேறு ஒன்றினாலோ இறுதி மூச்சு நின்றாலும் காலமெல்லாம் அவள் இதயத்தில் ஆணியடித்து நின்று இரத்தம் வழிய வைக்காதா?. இது அவளுக்கு ஆயுள் தண்டனையாகிவிடாதா? அந்த பூஜையில் அமர்வது கூரிய முட்படுக்கையில் அமர்வதற்கு ஒப்பாதோ?
எண்ணங்களின் வலுவான தாக்குதல்களை தாங்க முடியாமல், அறையைவிட்டு வெளியேறி பூஜையறைக்குள் வசுமதி சென்றாள். வேலோடும் மயிலோடும் நின்று கொண்டிருந்த முருகனிடம் "என்னால் எப்படி சொல்லமுடியும் முருகா?. எங்கம்மாவை விட்டுத்தர என்னால் முடியாது. எதிரிக்கு கெடுதல் செய்வதையே ஒப்பாத மனம், எப்படி இதனை வேண்டும்?. இப்போதைக்கு அது சரியாக இருந்தாலும் காலமெல்லாம் என் வேண்டுதல் மனதில் கத்தி போல அறுக்குமே. பட்டணத்தார் சொன்னது போல கொன்று கொன்று தின்றேனா? அல்லது தின்று கொன்றேனா? என் பாவம் இன்னும் தீரவில்லையா?' என்று கதறினாள். சற்று நேரத்தில் அவளுடைய கதறலையும் மீறி அம்மாவின் அறையிலிருந்து அழுகுரல்கள் எழுந்தன. ஒரு உயிர்ப் பறவையின் விடுதலையை அது கூறியது. இறந்தபின்பும் தன் மகவிற்காக துடிக்கும் தாய்மை, வசுவின் வலியை புரிந்து கொண்டதோ? உணவாகவோ பாலாகவோ மட்டுமல்ல தன் மரணத்தை வரமாக தந்துகூட குழந்தையை சீராட்ட தாயால்தான் முடியும்.