---------------------------------------------------------
முதலில் திருமணம் என்ற சடங்கின் தோற்றம் பற்றி ஆராய்வோம்:
ஆதிகாலத்தில் மனிதர்களிடம், மிருகங்கள் போல வெறும் இச்சைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. அந்த நொடியின் தேவைகள்தான் முன்னின்றன. வாழ்தலின் தேவைகளுக்கான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது. மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லாத நிலையானது அடுத்த கட்டத்திற்கு முன்னேற குழுக்களாக வாழ்தல் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டது.
பெண்ணை காப்பாற்றும் பொறுப்பு ஆணுக்கும், ஆணுக்கு பாதுகாப்பு தரும் பொறுப்பு பெண்ணுக்கும் பகிரப்பட்டது. ஆண் காட்டிற்கு சென்றுவிட்டு திரும்புமுன் பெண் வீட்டை பாதுகாத்தாள். அவளுடைய நுட்பமான உணர்வுகள் மிருகங்களிடமிருந்தும் எதிரிகளிடமிருந்து ஆணை காத்தன. இவனுடய பொறுப்பு இவள் என்ற அங்கீகாரமும் பெண்ணை ஒருபடி உயர்த்தியது. நிம்மதி என்ற வார்த்தையை இருவரும் உணர்ந்தனர். அமைதியான சூழல் தாய்மையை உணர வைத்தது. குடும்பம் உருவானது. முதியவர்களை பராமரித்தல் என்பது பிற்பாடு உருவானதுதான். பிள்ளைகளின் பராமரிப்புதான் முதலில் முக்கியத்துவம் பெற்றது. ஆனாலும் பழங்காலத்தில் காதலுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. அதற்கு அடுத்த இடம் நட்பு. இலக்கியங்களில்கூட இவ்விரண்டிற்கும் தரப்பட்ட முக்கியத்துவம் தாய்மைக்கு தரப்படவில்லை. ஏன்?.
குடும்பம் குடும்பமாக வாழும் நம்முடைய கலாச்சாரத்தின் அடிப்படை எது? அன்பு.... சரிதான். பாசம், நேசம்,பரிவு, நட்பு,கருணை இவையனைத்திற்கும் தாண்டி தலைவனும் தலைவியும் கொண்டிருந்த அன்புதான் - காதல், அனைத்து உறவு பிணைப்புகளையும் பலப்படுத்தியது. இதுதான் ஆரம்பகால சிந்தனை. ஒரு நாகரிகமான சமுதாயத்தில், உறவுகளை பிணைக்கும் அடிப்படை அன்பு காதல் என்றும் சமுதாய பிணைப்புகளை பலப்படுத்துவது நட்பு என்றும் உறுதியாக நம்பப்பட்ட காலம். அதனாலேயே இலக்கியங்கள் இவை இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்தன என்று கொள்வோமா?.
இன்னும் ஆழமாக பார்க்கப்போனால் இரத்த பந்தங்களுக்கு இடையிலான பிணைப்பு தானாகவே வலிமைபடும், ஆனால் ஒரு சமுதாயம் என்று வரும்போது மனிதர் மனிதருடன் ஏற்படுத்திக் கொள்ளும் சங்கிலிப் பிணைப்பு போன்ற தொடர்புகள்தான் முன்னேற்றமான ஒழுக்கமான கலாச்சாரத்தை உருவாக்கும் என்ற ரகசியம் தெரிந்திருந்தது. இதுபோன்ற பிணைப்புகளை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஒன்று இரத்த சம்பந்தமான உறவுகளுக்கிடையேயான அன்பு -அம்மா,அப்பா,சகோதரர்..., மற்றது மாற்றாரிடம் உருவாவது. காதல்,நட்பு.. போன்றவை. நட்பு ஒரு அழகான பிணைப்பை உண்டாக்கினாலும், முக்கியத்துவம் பெற சதவிகிதம் குறைவாகவே இருந்தது. இதே சமயத்தில் ஆணும் பெண்ணுமாக இணைந்து உருவாக்கிய உறவு உறுதியாக இருந்தது. சொல்லப்போனால் ஒருவருக்காக மற்றவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் உழைப்பும் சமுதாயத்தை முன்னேற வைத்தது.
வீடு கட்டி வாழ மனிதன் கற்றுக் கொண்டதே தனக்கே உரிமையான பெண்ணிற்கு முழு பாதுகாப்பை தருவதற்காகத்தான் என்ற கருத்தும் உள்ளது. ஆண் பெண்ணின் மேல் வைத்த அன்பு வீரம், விவேகம்,புத்திசாலித்தனம், நாளைய சிந்தனைகள் பொறுப்புகள் ஆகியவற்றை தந்தது. எனவே திருமணம் என்பது உயர்திணையாக கருதப்படும் மனிதன் வாழ்வில் மேம்பாடு அடைய உதவிய வினை ஊக்கியாகவே இருந்தது. தொடர்வோம்....