அப்போதெல்லாம் வரதட்சினையெல்லாம் கிடையாது. பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை தரக்கூடிய பரிசோதனைகள் மட்டும் நடக்கும். அவன் தேர்வு செய்யப்பட்டால் பெண்ணை கரம்பிடித்து அழைத்துச்செல்லவேண்டியதுதான். மனைவிகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படவில்லை. அது அவரவர் தகுதியை பொறுத்தது.
இப்போது சில கேள்விகளுக்கு விடை கிட்டியிருக்கும்.
1. திருமணம் முடிந்தபின் பெண்தான் கணவன் வீட்டிற்கு செல்கிறாள் (ஆரம்பத்தில் 'கவர்ந்து' கொண்டு சென்ற பழக்கம்தான்)
2. இப்படி பெண் இடம் மாறிவிடுவதால் வயதானவர்கள் ஆண்களின் பராமரிப்பில் இருந்தனர். எனவே பெற்றோரை காக்கும் பொறுப்பு ஆண் மகனை சேர்ந்தது.
3. ஆண் குழந்தை இல்லாதவர்கள் உறவிலேயே பிள்ளைகளை தத்தெடுக்கும் பழக்கம் வைத்துக் கொண்டனர். வாரிசு என்ற உரிமை தந்தனர்.
4. பெண் எந்த கவலையுமின்றி முழு மனதோடு கணவன் வீட்டில் ஒரு மகாராணியைப் போல மதிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணமே வரதட்சினையின் ஆரம்பம்.
5. நுட்பமான அறிவுடைய பெண் இனம் அறிவில் சிறந்து விளங்கி கணவனுக்கு தகுந்த ஆலோசனைகள் கூறி பொறுப்புமிக்க சமுதாயத்தை உருவாக்கியது. இதற்கு அழியாத உண்மை வரலாறுகளை தன்னகத்து பதிந்துள்ள பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய சான்றுகள் உள்ளன.
இதெல்லாம் ஆரம்ப கால சிந்தனைகள்....
.திருமணம் என்பது - தலைவனும் தலைவியும் ஒருவர்மேல் மற்றவர் கொண்டிருந்த நம்பிக்கை மட்டுமே. அதுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படையான அன்பை தந்தது. அந்த நம்பிக்கையின் அளவீடுகள் மாற்றப்பட்டதன் விளைவே விவாகரத்து.
எப்போதெல்லாம் திருமணத்தின் அடிப்படை மறுக்கப்படுகிறது.. தவிர்க்க இயலாத காரணங்களாக இவற்றை கூறலாம்.
1. மனநிலை சரியில்லாதவர் - இதில் சைக்கிக் டிஸாடர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
2. குழந்தை பெறத் தகுதியில்லாதவர் (இதில் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
3. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை கொண்டிருப்பவர்.
விவாகரத்து - சமீப காலங்களில் அது நிகழும் எண்ணிக்கையினால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அது நிகழ்த்தும் பின் விளைவுகளினால் முக்கியத்துவம் பெறுகிறது. இது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கிறது என்றும் சொல்லலாம். கலாச்சாரம் பற்றி பேசும்போது சமூகத்தின் பெரும்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால்தான் முக்கியத்துவம் பெறும். மாற்றங்கள் சிறு அளவில் இருக்கும் போது பாதிப்பு ஏற்படுவதில்லை. இதற்கான சட்டதிட்டங்கள் உருவாகும் முன்பே இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கிராம பஞ்சாயத்து, குடும்பப் பெரியவர்கள், முக்கியமான சொந்தங்கள் இவர்களின் முன்னிலையில் மணமுறிவு உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தவிர்க்க இயலாத காரணங்களால் மட்டுமே அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது ஏன் கவலைப்பட வைக்கின்றன எனில் சமூகத்தின் நகர்வுகளை மாற்றியமைக்கக்கூடிய நடுத்தர குடும்பங்களில் இவை அதிகரித்துள்ளதால்தான்.
ஏன் இந்த வளர்சிதை மாற்றம் ஏற்பட்டது? அடுத்த பகுதியில் பெண்கள் சார்ந்த சூழ்நிலைகளை பார்க்கலாம்.