மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

திருமணம் என்ற ஒரு திட்டத்தை கண்டுபிடித்த புண்ணியவானே பிரமிக்கும் அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றது. அதனை முக்கியத்துவம் பெற வைத்தவர்கள் 'ஆண்கள்' மட்டும் அல்ல, பெண்ணை பெற்ற பெண்களும்தான். முதலிலேயே சொன்னபடி பெண் ஒரு போகப்பொருளாக கருதப்பட்டமையால் பயன் இருக்கும்வரை உபயோகித்துவிட்டு அழிக்கப்படும் பொருளானாள்.  

குடும்பம் என்ற பரிணாம வளர்ச்சி பெண்களையும் ஒரு படி மேல் கொண்டு சேர்த்தது. காதல் என்ற வார்த்தை பலப்படுத்தப்பட்டு ஜென்ம ஜென்மமாக தொடரும் உறவாக மாற்றப்பட்டது. அதன்பின் நல்லபடியாக 'அனுப்பி வைப்பது'வரை கணவன் மனைவிக்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டன. அவை சுகமாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அப்போதெல்லாம் வரதட்சினையெல்லாம் கிடையாது. பெண்ணை நல்லபடியாக வைத்துக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை தரக்கூடிய பரிசோதனைகள் மட்டும் நடக்கும். அவன் தேர்வு செய்யப்பட்டால் பெண்ணை கரம்பிடித்து அழைத்துச்செல்லவேண்டியதுதான். மனைவிகளின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படவில்லை. அது அவரவர் தகுதியை பொறுத்தது. 
    
இதிலும் பெண்கள் வஞ்சிக்கப்படுவதாக தோன்றியது. இன்னும் சங்கிலிப் பிணைப்பை இன்னும் சற்று இறுக்க எண்ணி, பாசம் என்ற வார்த்தையை முன் வைத்து பெண்ணை திருமணம் செய்து தரும்போது அவளுடன் பொருட்கள் தந்தனுப்பும் பழக்கமும் வந்தது. ஒருவேளை அவள் கைவிடப்பட்டாலோ ஆதரவற்று போனாலோ, இவை அவளுக்கு உதவும் என்ற எண்ணமும்தான் இதனை செய்தது. இப்படியாக குடும்பம் அமைக்கும் செலவுகள் ஆணின் கையிலிருந்து பெண்ணிற்கு மாற்றப்பட்டன. புகுந்த வீட்டிற்கு சென்ற பெண்ணும் சங்கடம் ஏதுமின்றி தன்னுடைய பொருட்களை உபயோகித்து வாழப் பழகிக் கொண்டாள்.- ஒவ்வொன்றிற்கும் தடுமாறிக் கொண்டிருந்தால் எதையுமே செய்யத் தெரியாதவள்  என்று அவளை குறைத்து மதிப்பிடும் வாய்ப்பு வந்துவிடலாம் அல்லவா? 'எத்தகைய சிறப்பான பெண் என் மனைவி' என்ற பெருமிதம்தான் ஆணை கட்டிப்போடும் தந்திரம் என்பதும் இதன் ரகசியம் ஆகும். இப்படியாக வரதட்சினை உள்ளே புகுந்தது. 

இப்போது சில கேள்விகளுக்கு விடை கிட்டியிருக்கும்.
1. திருமணம் முடிந்தபின் பெண்தான் கணவன் வீட்டிற்கு செல்கிறாள் (ஆரம்பத்தில் 'கவர்ந்து' கொண்டு சென்ற பழக்கம்தான்)
2. இப்படி பெண் இடம் மாறிவிடுவதால் வயதானவர்கள் ஆண்களின் பராமரிப்பில் இருந்தனர். எனவே பெற்றோரை காக்கும் பொறுப்பு ஆண் மகனை சேர்ந்தது.
3. ஆண் குழந்தை இல்லாதவர்கள் உறவிலேயே பிள்ளைகளை தத்தெடுக்கும் பழக்கம் வைத்துக் கொண்டனர். வாரிசு என்ற உரிமை தந்தனர்.
4. பெண் எந்த கவலையுமின்றி முழு மனதோடு கணவன் வீட்டில் ஒரு மகாராணியைப் போல மதிக்கப்பட வேண்டும் என்ற நல்லெண்ணமே வரதட்சினையின் ஆரம்பம்.
5. நுட்பமான அறிவுடைய பெண் இனம் அறிவில் சிறந்து விளங்கி கணவனுக்கு தகுந்த ஆலோசனைகள் கூறி பொறுப்புமிக்க சமுதாயத்தை உருவாக்கியது. இதற்கு அழியாத உண்மை வரலாறுகளை தன்னகத்து பதிந்துள்ள பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய சான்றுகள் உள்ளன.

இதெல்லாம் ஆரம்ப கால சிந்தனைகள்....

.திருமணம் என்பது - தலைவனும் தலைவியும் ஒருவர்மேல் மற்றவர் கொண்டிருந்த நம்பிக்கை மட்டுமே. அதுதான் எல்லாவற்றி
ற்கும் அடிப்படையான அன்பை தந்தது. அந்த நம்பிக்கையின் அளவீடுகள் மாற்றப்பட்டதன் விளைவே விவாகரத்து.

     

எப்போதெல்லாம் திருமணத்தின் அடிப்படை மறுக்கப்படுகிறது.. தவிர்க்க இயலாத காரணங்களாக இவற்றை கூறலாம்.
1. மனநிலை சரியில்லாதவர் - இதில் சைக்கிக் டிஸாடர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
2. குழந்தை பெறத் தகுதியில்லாதவர் (இதில் அனைத்துவிதமான பிரச்சினைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்)
3. திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளை கொண்டிருப்பவர்.விவாகரத்து - சமீப காலங்களில் அது நிகழும் எண்ணிக்கையினால் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் அது நிகழ்த்தும் பின் விளைவுகளினால் முக்கியத்துவம் பெறுகிறது. இது கலாச்சார சீரழிவிற்கு வழிவகுக்கிறது என்றும் சொல்லலாம்.  கலாச்சாரம் பற்றி பேசும்போது சமூகத்தின் பெரும்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும் என்றால்தான் முக்கியத்துவம் பெறும். மாற்றங்கள் சிறு அளவில் இருக்கும் போது பாதிப்பு ஏற்படுவதில்லை.  இதற்கான  சட்டதிட்டங்கள் உருவாகும் முன்பே இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. கிராம பஞ்சாயத்து, குடும்பப் பெரியவர்கள், முக்கியமான சொந்தங்கள் இவர்களின் முன்னிலையில் மணமுறிவு உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தவிர்க்க இயலாத காரணங்களால் மட்டுமே அவை அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.  இப்போது ஏன் கவலைப்பட வைக்கின்றன எனில் சமூகத்தின் நகர்வுகளை மாற்றியமைக்கக்கூடிய நடுத்தர குடும்பங்களில் இவை அதிகரித்துள்ளதால்தான். 
                 

ஏன் இந்த வளர்சிதை மாற்றம் ஏற்பட்டது? அடுத்த பகுதியில் பெண்கள் சார்ந்த சூழ்நிலைகளை பார்க்கலாம்.

 

ஒவ்வொரு திருமணமும் எப்படி சில கனவுகளை விதைக்கிறதோ அதேபோல விவாகரத்தும் சில கனவுகளை கலைத்துப் போடுகிறது.
---------------------------------------------------------

முதலில் திருமணம் என்ற சடங்கின் தோற்றம் பற்றி ஆராய்வோம்:


ஆதிகாலத்தில் மனிதர்களிடம், மிருகங்கள் போல வெறும் இச்சைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.  அந்த நொடியின் தேவைகள்தான் முன்னின்றன. வாழ்தலின் தேவைகளுக்கான தற்காப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வந்தது.  மிருகங்களுக்கும் மனிதனுக்கும் வேறுபாடு இல்லாத நிலையானது அடுத்த கட்டத்திற்கு முன்னேற குழுக்களாக வாழ்தல் என்ற கொள்கை கொண்டுவரப்பட்டது. 

பகிர்தல் என்ற வார்த்தைதான் மனிதனை அடுத்த முன்னேற்றத்திற்கு  கடத்தியது. அறிவு, வீரம், தொழில்செய் தந்திரம் போன்றவை அளவீடுகளாக கொள்ளப்பட்டு பல மட்டங்களாக குழுக்கள் உருவாகின. அதாவது சமூகம் உருவாது.  சற்று பொறுத்து மிருகங்களுடன் இட்ட சண்டைகள் மனிதர்களிடம் தோன்றி அழித்தொழித்தல் ஆரம்பித்தது. அதிலும் பெண்ணுக்காக நடந்த சண்டைகள் பிரசித்தி பெற்றவை.

காட்டிற்கு சென்று வேட்டையாடிவிட்டு திரும்பும் வரை அவன் மனம் கவர்ந்த பெண் அவனுடைய இருப்பிடத்தில் இருப்பாளா என்பதே சந்தேகமாகிவிட்டது. பெண் ஒரு போகப்பொருளாக பார்க்கப்பட்ட அதே வேளையில் இன்னொன்றும் புரிந்தது. அவளுடைய நுட்பமான அறிவு, விவேகமான சிந்தனைகள், வலிமையான மனோதிடம். அந்த சமயத்தில் பெண்ணுக்கும் ஒரு சமூக அங்கீகாரம் தேவைப்பட்டது.  இதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் போல  திருமணம் என்ற புதிய சடங்கு உருவாக்கப்பட்டது.

பெண்ணை காப்பாற்றும் பொறுப்பு ஆணுக்கும், ஆணுக்கு பாதுகாப்பு தரும் பொறுப்பு பெண்ணுக்கும் பகிரப்பட்டது. ஆண் காட்டிற்கு சென்றுவிட்டு திரும்புமுன் பெண் வீட்டை பாதுகாத்தாள். அவளுடைய நுட்பமான உணர்வுகள் மிருகங்களிடமிருந்தும் எதி
ரிகளிடமிருந்து ஆணை காத்தன. இவனுடய பொறுப்பு இவள் என்ற அங்கீகாரமும் பெண்ணை ஒருபடி உயர்த்தியது. நிம்மதி என்ற வார்த்தையை இருவரும் உணர்ந்தனர். அமைதியான சூழல் தாய்மையை உணர வைத்தது. குடும்பம் உருவானது. முதியவர்களை பராமரித்தல் என்பது பிற்பாடு உருவானதுதான். பிள்ளைகளின் பராமரிப்புதான் முதலில் முக்கியத்துவம் பெற்றது. ஆனாலும் பழங்காலத்தில் காதலுக்கே முக்கியத்துவம் தரப்பட்டது. அதற்கு அடுத்த இடம் நட்பு. இலக்கியங்களில்கூட இவ்விரண்டிற்கும் தரப்பட்ட முக்கியத்துவம் தாய்மைக்கு தரப்படவில்லை. ஏன்?. 


குடும்பம் குடும்பமாக வாழும் நம்முடைய கலாச்சாரத்தின் அடிப்படை எது? அன்பு.... சரிதான். பாசம், நேசம்,பரிவு, நட்பு,கருணை இவையனைத்திற்கும் தாண்டி தலைவனும் தலைவியும் கொண்டிருந்த அன்புதான் - காதல், அனைத்து உறவு பிணைப்புகளையும் பலப்படுத்தியது. இதுதான் ஆரம்பகால சிந்தனை. ஒரு நாகரிகமான சமுதாயத்தில், உறவுகளை பிணைக்கும் அடிப்படை அன்பு காதல் என்றும் சமுதாய பிணைப்புகளை பலப்படுத்துவது நட்பு என்றும் உறுதியாக நம்பப்பட்ட காலம். அதனாலேயே இலக்கியங்கள் இவை இரண்டிற்கும் முக்கியத்துவம் தந்தன என்று கொள்வோமா?.


இன்னும் ஆழமாக பார்க்கப்போனால் இரத்த பந்தங்களுக்கு இடையிலான பிணைப்பு தானாகவே வலிமைபடும், ஆனால் ஒரு சமுதாயம் என்று வரும்போது மனிதர் மனிதருடன் ஏற்படுத்திக் கொள்ளும் சங்கிலிப் பிணைப்பு போன்ற தொடர்புகள்தான் முன்னேற்றமான ஒழுக்கமான கலாச்சாரத்தை உருவாக்கும் என்ற ரகசியம் தெரிந்திருந்தது. இதுபோன்ற பிணைப்புகளை இரண்டுவிதமாக பிரிக்கலாம். ஒன்று இரத்த சம்பந்தமான உறவுகளுக்கிடையேயான அன்பு -அம்மா,அப்பா,சகோதரர்..., மற்றது மாற்றாரிடம் உருவாவது. காதல்,நட்பு.. போன்றவை.  நட்பு ஒரு அழகான பிணைப்பை உண்டாக்கினாலும், முக்கியத்துவம் பெற சதவிகிதம் குறைவாகவே இருந்தது. இதே சமயத்தில் ஆணும் பெண்ணுமாக இணைந்து உருவாக்கிய உறவு உறுதியாக இருந்தது. சொல்லப்போனால் ஒருவருக்காக மற்றவர் எடுத்துக் கொண்ட முயற்சியும் உழைப்பும் சமுதாயத்தை முன்னேற வைத்தது. 

வீடு கட்டி வாழ மனிதன் கற்றுக் கொண்டதே தனக்கே உரிமையான பெண்ணிற்கு முழு பாதுகாப்பை தருவதற்காகத்தான் என்ற கருத்தும் உள்ளது. ஆண் பெண்ணின் மேல் வைத்த அன்பு வீரம், விவேகம்,புத்திசாலித்தனம், நாளைய  சிந்தனைகள் பொறுப்புகள் ஆகியவற்றை தந்தது.  எனவே திருமணம் என்பது உயர்திணையாக கருதப்படும் மனிதன் வாழ்வில் மேம்பாடு அடைய உதவிய வினை ஊக்கியாகவே இருந்தது.  தொடர்வோம்....
  


    ஒரு இல்லம் உருவாவது 'அவள்' கையால்தான். அன்பு ஒன்றை மட்டும் நம்பி ஒருவன் கைப்பிடித்து வேறிடம் புகுந்து மூச்சையும் பேச்சையும் மாற்றி உயிர் சுமந்து இல்லத்தின் அடித்தளமாகும் 'அவள்' - யாரோ பெற்றார்கள் யாரோ பாராட்டினார்கள். யுகம் யுகமாக மண்ணையும் மரபையும் காத்து வாழ்ந்து மறைந்த 'அவள்', ஒவ்வொரு மனைவி உருவாகும்போதும் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டேதான் இருக்கிறாள்.

   ஒவ்வொரு மணரத்தும் உண்மையிலேயே மனரத்தைதான் குறிக்கின்றன. ஒரு திருமணம் உண்மையாக மறுதலிக்கப்படுவது பெண் நினைத்தால் மட்டுமே. இல்லத்தை பிரித்து போட்டு இருப்பதையும் இல்லாததாக்கி செல்வது மனைவி நினைத்தால்தான் முடியும்.


நேற்றுவரை மென்மையாக
கடலுக்கு சென்ற தென்றல்
புயலாக மாறியிருந்ததை
தரை தட்டிய ஒரு கப்பல்
சாய்ந்து நின்று சொன்னது
"புரிஞ்சுக்கவே முடியல"

அதேதான். உண்மையில் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. முன்பெல்லாம் விவாகரத்து என்றால்  சில தவிர்க்கமுடியாத காரணங்கள் இருப்பதை புரிந்து கொள்ளமுடியும்.  ஆனால் இப்போது நம்பமுடியாத காரணங்கள் எல்லாம் சொல்லப்படுகின்றன.  பத்து பொருத்தங்கள் என்று சொல்லப்படும் காரணங்களின் அடிப்படையானது இந்த தவிர்க்க முடியாத காரணங்களை சுட்டுகின்றன உதாரணமாக கோபம் கொள்கின்ற குணம் எனில் சாந்தமாக இருக்கும் குணாதிசயம் பொருத்தமாக கருதப்படும்.  எதுவும் இல்லாமல் ஏன் இந்த மணப்பிரிவுகள். இதற்கு என்னவெல்லாம் காரணமாகிறது என்று பார்க்கலாம். 

1. பெண்ணின் வாழ்வியல் முறைகள் மாறிப்போனது.
2. பெற்றோரின் எதிர்பார்ப்புகள் திசைமாறியது.
3. நொடிகளையும் பேரம் பேசும்  பொருளாதாரம்
4. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு தரும் வாழ்வியல் சிந்தனைகள்.

     ஒவ்வொன்றாக பிரித்து பார்க்கலாம்.  எல்லா திசையிலும் அலசினால்தானே ஒரு முடிவிற்கு வரமுடியும். ஒரு விசயம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆண்கள் வாழ்வியல் முறைகள் பற்றி குறிப்பிடவேயில்லை என்று தோன்றுகிறதுதானே. அவர்கள் மாறினாலும் மாறாவிட்டாலும் முடிவெடுப்பதில் அவர்கள் பங்களிப்பு எதுவுமே இல்லை. இந்தத் தொடரின் முடிவில் இதனை நிருபித்துவிடுவேன் என்று நம்புகிறேன். அடுத்த பதிவில் இன்னும் விளக்கமாக...


குழந்தைகள் தினத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த தொடர் எல்லையில்லாமல் விரிவடைய வேண்டும் என்று விரும்புகிறேன். என்னை இந்த தொடர் பதிவு எழுத அழைத்த சைலஜா மேடம் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த தொடர் பதிவுகள் மனிதச்சங்கிலி போல மனச்சங்கிலியால் பிணைத்து அழுத்தமாக ஒரு விசயத்தை சொல்ல வைக்கின்றன. கடலென விரியும் பதிவுகளில்  நம்முடைய கருத்தை பதிவதிலும் ஒரு மகிழ்ச்சி வரவே செய்கிறது.


இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும்போது... இதோ வீட்டின் வாசல் கதவு தட்டப்படுகிறது. புரியாத மழலை மொழியில் என்னுடைய ஒன்றரை வயது சினேகிதன் - பக்கத்துவீட்டு சாச்சு - அழைக்கிறான். கதவை திறக்கவுமே உள்ளே வந்து அமர்ந்து கொள்கிறான். வீட்டில் வேறு யார் இருந்தாலும் உள்ளே வரமாட்டான்.  அவன் பாட்டியின் குரலையும் மறுத்துவிட்டு உள்ளே வருகிறான். இனிப்பு வகைகள், ரொட்டி எதுவுமே அவனுக்குத் தேவைப்படாது. அவனுக்குத் தேவை சில படங்கள் அவற்றை பற்றிய விளக்கங்கள். விலங்குகளின் படங்களைக் காட்டி ஒலியை நான் எழுப்பிக் காட்டவும் அவனும் செய்கிறான். சற்று பொறுத்து படத்தை சுட்டிக் காட்டி அவனாகவே ஒலியெழுப்புகிறான். கிளி உறுமுகிறது... சிங்கம் கீச்சிடுகிறது... மீண்டும் என்னை செய்ய சொல்வதுபோல் சைகை செய்ய, நான் சரியாகவே ஒலியெழுப்புகிறேன். தவறாக செய்யும் மக்குப் பையனை பார்ப்பது போல் கேலியாக என்னைப் பார்க்கிறான்.

இது அவனுடைய உலகம். நான்தான் அந்த உலகத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளேன். இங்கு அவன் சொல்வதுதான் சரியாக இருக்கும். அடுத்த முறை அவனுடைய அலைவரிசைக்கு செல்ல முயற்சிக்கிறேன். இந்த முறை அவனுடைய கோட்பாட்டின்படி நான் சரியாக செய்துவிட்டேன்.  அடுத்த ஒரு மணி நேரம் கழித்து உறக்கம் வந்த கண்களுடன் அவன் சென்றபோது என்னுடைய உலகம் மிகவும் புத்தம் புதியதாக பூத்திருந்தது. அதுதான் அவர்கள் உலகம். அந்த உலகத்திற்குள் செல்ல அவர்களுடன் சேர்ந்து பயணிக்கத் தெரிந்தால் மட்டுமே அனுமதி கிட்டும். அவர்கள் கை நீட்டும் திசையில் பறக்கத் தயாராக இருக்கும் மனம் மட்டுமே அங்கே உயிர்ப்புடன் இருக்கும்.

அதுவும் இப்போது தொலைகாட்சியின் காலத்தில் அதிகம் புரிந்து கொண்டு மழலையின் எண்ணங்களுடன் அவர்கள் சிந்திக்கும் வேகம் இருக்கிறதே மிக அதிகம். நீர் நிறைந்த வாளியில் விழுந்துவிட்ட ஒரு பொம்மையை எடுத்துக் கொண்டு 'செத்துப் போயிட்டியே' என்று மூன்று வயது அம்மு அழுதபோது நானும் சோகமாக அமர வேண்டியதாகிவிட்டது. அவர்களுக்கு அனைத்தும் புரிகிறது. அவர்களுடைய மன நிலையில் அதனை எடை போடுகிறார்கள் முடிவெடுக்கிறார்கள்.

சில சமயம் நம்முடைய உலகம் சுயநலம் கருதி அவர்களை மிகவும் சிரமப்படுத்துவதை உணரும்போது வலிக்கிறது.

    - பள்ளி விழாவில் பாரதி வேடம் போட்ட மூன்று வயது சிறுவன் கூட்டத்தை பார்த்து பயந்து கண்களில் நீர் வழிய நின்றபோது.
    - ஒரு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியில் அருமையாக மழலையில் பாடிய மூன்று வயது சிறுமி சிவப்பு விளக்கு எரிந்தபோது அழ ஆரம்பித்தது.
    - கடுமையான தட்பவெப்பம் நிலவும் நம் நாட்டில்  பல அடுக்குகளாக உடை உடுத்திக் கொண்டு பொம்மைபோல வலம் வரும் குழந்தைகள் - சொல்ல முடியாமல் சிணுங்கும்போது..
    - வீட்டில்கூட ஹக்கிஸ் அணிந்திருக்கும் குழந்தைகள்
    - பெரியவர்களை தவிர்த்து பொம்மைகளுடன் மட்டுமே ரகசியம் பேசி உறங்கிப் போகும் குட்டி தேவதைகள்..

மழலை உலகம் மகத்தானதுதான். அவர்களுடன் மலை முகடுக்களில் மேகம் போல மிதக்கவும், கைக்கு கிட்டிய கண்சிமிட்டும் விண்மீன்களாக மாறவும், கண்ணை கரிக்காத நீரலைகளாக கால்களை வருடிச்செல்லவும், பூத்தூவல்களாக பனிப்பொழிவுகளை நிகழ்த்தவும் நாம் தயாராக இருந்தால் இருவருக்குமே மகத்தானதுதான்.


துல்லியமான ஒலிகளைக்கூட உணரக்கூடிய மின்தடை ஏற்பட்ட மதியங்களில் சிலவீடுகளில் ஒலிக்கும் மழலையின் சிணுங்கல் குரல்களும் மிரட்டும் அதிகார குரல்களும் எனக்குத் தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான். வாழ்க்கையின் நிதர்சனங்களால் ஒரு அழகான உலகத்தை விட்டு வெளித்தள்ளப்பட்ட நாம் அவர்களையும் வெளியே இழுக்கப் பார்க்கிறோமா? நம்மை விட விரைவாகவும் அழுத்தமாகவும்..... விளக்குங்களேன்.

உலகம் உயிர்த் துடிப்புடன் இருப்பது குழந்தைகளின் நகர்வுகளால்தான். மிக மெதுவாக இருந்தாலும்.... அது இல்லாத உலகம் வெற்று பூமிதான். இதோ என் கவிதை ஒன்று படியுங்கள்.
 

பூஜ்ஜியங்கள் பூக்குமா? .


நான், டாமி, பொம்மி, அம்மா
குட்டிப்பாப்பா, மிட்டாய்கள்
வண்ண வண்ண பலூன்கள்..
ஏதோ ஒரு நாளில் ....
என் உலகம் கலைந்தது.
கனவு கரைய மனம் கனக்க
ஒன்றுமில்லாத வெறுமையில்
வெற்றிடத்தின் குறியீடாக
பூஜ்ஜியங்கள் பதிக்கப்பட்டன.
நாட்கள், மாதங்கள், வருடங்கள்
கடந்துவிட்ட மற்றொரு நாளில்
குட்டி தேவதையின் பரிட்சயம்
அழுகையிலும் சிரிப்பிலும்
குட்டி விண்மீன் பார்வையிலும்
என்னுள் உயிரற்று இருந்த 
பூஜ்ஜியங்கள் முளைவிட்டு
பூப்பூக்க ஆரம்பித்துவிட்டன.

  சைலஜா மேடம் சொல்லியபடி , இது தொடர்பதிவு என்பதால் 2ஆண்பதிவர்கள் இரண்டு பெண் பதிவர்களை  அழைக்கிறேன். முடிவில் கவிதை ஒன்று எழுதலாம்.! முடிந்தால் புதிர்க்கேள்வியையும்  எழுப்பலாம்.

இப்போது நான் அழைப்பவர்கள்...
குழந்தைகளுக்கான வலைப்பூ வைத்திருக்கும் சிறுவர் உலகம் காஞ்சனா மேடம்.
உணர்வுபூர்வமான கவிதைகளை எழுதும் கீதமஞ்சரி கீதா.
மனம் தொடும் கவிகள் எழுதும் வசந்த மண்டபம் மகேந்திரன் 


வெவ்வேறு களங்களில் சிந்தனை பதிக்கும் தோழர். சூரியஜீவா
                                                   மிக்க நன்றி!

டெல்லி விமான நிலையத்தில் நுழைந்தது முதல் விமானத்திற்குள் சென்று இருக்கையில் அமரும்வரை, வசுமதிக்கு எதுவுமே கவனத்தில்படவில்லை. அவள் கணவர் செழியன் அவளிடம் குனிந்து, "மன்னிச்சுக்கோம்மா, நம் இருவருக்கும் அருகருகே இருக்கை கிட்டவில்லை. நான் அந்த இரண்டாவது வரிசையில் சன்னலோரத்தில்தான் அமர்ந்துள்ளேன். சென்னை வரும்வரை, அமைதியாக உறங்க முயற்சி செய்." என்று கூறிவிட்டு சென்றார். ஒதுக்கப்பட்ட இருக்கையை மாற்றிக் கொள்வது இங்கு சற்று நாகரிகம் இல்லாத விசயமாக கருதப்பட்டதால் அதனைச் செய்ய முடியவில்லை போலும். சற்று பொறுத்து, அவளருகே ஒரு வயதான பெண்மணி அமர்ந்ததும் நிம்மதியாகப்பட்டது. இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள். அம்மா...! கண்கள் கலங்கின.

"அம்மாவிற்கு ரொம்பவும் சரியில்லை. சாப்பிட்டு ஒரு வாரமாகிறது. மருத்துவர் நம்பிக்கையாக எதுவும் சொல்லவில்லை." இ
ன்று காலை, அதிசயமாக அவளை அலைப்பேசியில் அழைத்த சுந்தரண்ணா பேசியபோது ஒருவித படபடப்பு உண்டானது. கிட்டத்தட்ட பதினேழு வருடங்கள் கழித்து அண்ணனின் அழைப்பு அவளை பயப்படுத்தியது. அண்ணன் தொடர்ந்து,

"இப்போதும் உன்னை வா என்று அழைக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் திடீரென்று கண்கள் விழித்து சுற்றியுள்ளவர்களை பார்வையால் சலித்து ஓய்ந்துபோய் மறுபடியும் கண்களை மூடிக்கொள்வதை பார்த்தால், அவர்கள் உன்னைத்தான் தேடுவதுபோல உள்ளது. எனவேதான்....." என்று கூறியதில் உள்ளம் ஒப்பாமையும், கடந்தகால கசப்பும் தெரிந்தன. விதைத்தவள் அவளே, இப்போது அறுவடை நேரம். கைக்கு கிட்டுவதை மறுக்க முடியாது.

 பதினேழு வருடங்களுக்கு முன், கல்லூரிக்கு சென்ற ஒரு மழை நாளில் செழியனின் கையினை பிடித்துக் கொண்டு உறவுகளை உதறிவிட்டு ஊரை விட்டு வந்துவிட்டாள். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு ஒப்புதல் இல்லை என்ற காரணம் மட்டுமே.  செழியன் இராணுவத்தில் இருந்ததும், அவனுக்கு மாமாவின் பெண் தயாராக இருந்ததும் முக்கிய காரணங்கள். கொஞ்ச நாள் கட்டாக்கில் இருந்த பின் டெல்லிக்கு மாற்றம். வினி அங்கேதான் பிறந்தாள். அதுவரை ஒரு குருவிக்கூட்டின் தனிமை போல அவளும் அவள் கணவனுமாக வாழ்ந்த வாழ்க்கையில் வினிகுட்டியின் வருகை, அவளுக்கு அன்னையின் நினைவினை மீட்டுத் தந்தது, அப்போது திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்திருந்தன. அவளுடைய பிறந்த வீட்டிற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்ட போது அம்மாதான் எடுத்தது. வசுவின் குரல் கேட்டதும், மறுமுனையிலிருந்து பதில் எதுவும் கேட்கவில்லையெனினும் தொடர்பு துண்டிக்கப்படாதது புரிந்தது. இறைவனிடம் பாவமன்னிப்பு பெறுவதுபோல் அவள் மட்டுமே பேசினாள். மன்னிப்பு வேண்டினாள். அடுத்தடுத்து அவள் அப்படியே பேசினாள். மாலை வேளையில் விளக்கேற்றி வைத்து இறைவனிடம் மனமுருக பிரார்த்திப்பது போன்ற ஈடுபாட்டுடன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் பேசினாள். அவளை பற்றி, செழியனை பற்றி, வினியை பற்றி சில சமயம் டெல்லியின் வானிலை மாற்றங்களைக்கூட பேசுவாள் - பதில் கிட்டாவிடினும் அவள் நிறுத்தவில்லை.

 "உன்னுடைய அழைப்பு என்று தெரிந்த உடனேயே வீட்டை பூட்டிட்டு கிளம்பியிருக்கப்போறாங்க." என்று செழியன் கேலி செய்த போதும் அவள் விடவில்லை. அவளுக்கு அம்மாவை பற்றித் தெரியும். வசுவுடைய அன்பு பற்றி அம்மாவிற்கும் தெரியும் என்று நம்பினாள். ஒரு மகாசக்தியாக அன்னையை அவள் நினைத்தாள். அம்மாவின் கடந்த கால உழைப்பு தெரியும். அந்த உழைப்பிற்கு அடிப்படை அன்பு என்கிற மந்திரம் மட்டுமே. செழியனுக்காக எதை வேண்டுமானாலும் விட முயன்ற வசுவால் அன்னையின் அன்பை விலக்க முடியவில்லை. தொடர்ந்து முயற்சித்தாள். எப்போதாவது கோபம் குறையுமல்லவா?

இறைவனுக்கு என்மேல் கோபம் என்று மனிதன்தான் நினைக்கிறான். இறைவன் எப்போதும் தன் குழந்தையின் அன்புக் குரலுக்காக காத்திருக்கிறான், அது போலத்தான் அன்னையும். தன் கை வருடலில் இல்லாத குழந்தைக்காக பரிதவிக்கிறாள் என்பதை ஒரே ஒரு தொலைப்பேசி அழைப்பு புரிய வைத்தது.. அது ஒரு அக்டோபர் மாதம். அன்றைக்கு டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருந்தது. .வசுவிற்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.. வழக்கம்போல அமைதி பாராட்டாமல், "எப்படி இருக்கே. குழந்தை நல்லாயிருக்கா? மாப்பிள்ளை எங்கேயிருக்கார்?" பதற்றத்துடன் ஒலித்த அம்மாவின் குரலுக்கு பதில் சொல்ல, இந்த முறை அவளால் முடியாமல் போய்விட்டது. கலங்கிய குரலில் பாதுகாப்பான நிலையை விவரித்தாள். அதற்குப்பிறகு ஒரு பக்கமாக மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்த தொலைப்பேசி போக்குவரத்து இரண்டுபுறமும் தொடர்ந்தது. அண்ணனின் திருமணம், பேரன் பிறந்தது என பிறந்த வீட்டை பற்றிய செய்திகள் அவளுக்கு கிட்ட ஆரம்பித்தன. ஆனால் வேறு யாரும் அவளிடம் பேசவில்லை. ஒரு தண்டனைபோல அவளும் அதனை ஏற்றுக் கொண்டாள். அம்மாவிடம் பேசாமலிருப்பது, அம்மாவிற்கே தண்டனையாகிவிடும் என்பதால்தான் மௌனம் கலைத்தது. 
 

ஆயிற்று பதினைந்து வருடங்கள் கடந்தபின் , சமீபத்தில்தான் ஒரு முறை அண்ணி பேசினாள். அம்மாவிற்கு உடல் நலமில்லை என்று மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்தாள். அதன் பிறகு இன்று காலைதான் அண்ணன் பேசினார். வசுமதியின் பதட்டத்தை புரிந்து கொண்ட செழியன் உடனடியாக சென்னைக்கு விமானத்தில் செல்ல ஏற்பாடுகள் செய்தார்.

விமான நிலையத்தில் காத்திருந்த இடைப்பட்ட நேரத்தில் வசுவின் எண்ணங்கள் அன்னையை சுற்றியே வந்தன. "அவங்களுக்கு சந்தோஷமா ஒரு வேளை சாப்பாடுகூட போடவில்லையே, செழியன். இங்கே வரவச்சு காசிக்கு
கூட்டிட்டு போகணும்னு நினச்சேனே. எதுவுமே முடியாமல் போய்விடுமோ? எனக்காக இன்னும் கொஞ்ச நாள் கடவுள் அவர்களை உயிருடன் வைத்திருந்தால், என்னோட ஆசைக்கு அவங்கள கூட்டிட்டு வந்து சீராட்டுவேனே". பதினெட்டு வருடங்களுக்கு முன் தன் வாழ்க்கையே முக்கியம் என்று சொல்லித்தந்த மனம் இப்போது வேறு பாட்டை பாடியது.

செழியனை மட்டும் ஏற்றுக் கொண்டிருந்தால் விலைமதிக்க முடியாத அன்பினை இழந்திருக்க மாட்டாளே? அப்படியென்ன காதல் மிக முக்கியமாக போய்விட்டது. இதனை செழியனிடமே சொல்லி வேறு புலம்ப, பதில் பேச முடியாமல் அவள் தலையினை வருடிக் கொடுத்தார்.. "ஏம்ப்பா, அப்புறம்கூட அம்மாவிடம் பேச ஆரம்பித்தபின் அவங்கள பார்க்க போகணும்னு தோணலியே. ஏன்?." என்றாள். அவளே தொடர்ந்து "அவங்க கூப்பிடனும்னு எனக்கு ஒரு திமிர் இருந்திருக்கும்போல. அவங்க கூப்பிட்டா போகலாம்னு ஈகோ இருந்திருக்குமோ? ஆனால், அவங்களும் கூப்பிடலையே?".

"இல்லைடா, அண்ணன், அப்பா எல்லோரையும் கலந்துதானே அவங்க முடிவெடுக்க முடியும். குடும்ப நிம்மதி முக்கியமில்லையா?" என்று பதில் கூறினார். மேலும் அவளை புலம்ப வைக்காமல் விமானம் வந்துவிட, இருக்கையில் அமர்ந்தவுடன் அமைதியானாள்.

"சீட் பெல்ட் போட்டுக்கம்மா" அருகிலிருந்த பெண்மணியின் குரலில் நினைவுகள் கலைந்து நிமிர்ந்தாள். பெல்ட்டை அணிந்து கொண்டு மௌனமாக இருந்தவளிடம் "சென்னைக்கா? அங்கிருந்து வேறு எங்காவது செல்ல வேண்டுமா?" புன்சிரிப்புடன் கேட்டார் அவர். அவரை நிமிர்ந்து பார்த்தவளுக்கு மிகவும் பழக்கப்பட்ட முகமாக அவர் தெரிந்ததால் தயக்கமின்றி பதிலளித்தாள். "சென்னைக்குதான். செயிண்ட் தாமஸில் அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும்" அவளிடம் மிகவும் பிரியமாக நடந்து கொண்ட யாரையோ நினைவுப்படுத்திய முகச்சாயல் அவரிடம் இருந்தது - அது அவளுடைய கணித ஆசிரியையின் சாயல்…!

"நான் சென்னை சென்று காஞ்சிபுரம் செல்ல வேண்டும்." அவள் கேட்காமலேயே கூறினார். "அம்மாவிற்கு உடல் நலமில்லையா? " வசு, 'அம்மாவீடு' என்று உச்சரித்த போது வந்த தடுமாற்றத்தை கவனித்ததால் சரியாக கேட்டுவிட்டாரோ? அவள் தலையசைத்து ஒப்புக் கொள்ளவும்,

"எத்தனை வயதிருக்கும்?" என்றார். கணக்கிட்டு "அறுபது இருக்கும் " என்றாள்.

"உடல் நலமில்லையா?"  மேற்கொண்டு அவர்களிடையே பேச்சு தொடர்ந்தது. வசுவின் முட்டாள்தனம், வேண்டுதல், புலம்பல் அத்தனையும் கேட்டபின் அவர் சொன்ன  விசயம் அவளுக்குப் புரியவில்லை.

"நாம் விரும்பும் ஒன்று நம்மைவிட்டுப் போகப்போகிறதே என்ற நிலை வரும் போதுதான் மனம் அடித்துக் கொள்ளும். இதைச் செய்திருக்கலாமோ? அதைச் செய்திருக்கலாமோ என்று புலம்பும். நம்முடைய நட்டக்கணக்கை பெரிதுபடுத்திக் காட்டும். ஆனால் நமக்கு ஒருவரிடம் உண்மையான அன்பு இருக்கும் பட்சத்தில் அவர்களை வருத்தப்படுத்த விரும்பமாட்டோம். நம்முடைய வேண்டுதல்கள் எல்லாம் அதன்பின் மாறிவிடும். அவர்களின் உண்மையான நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யம்மா. சில சமயத்தில் நம்முடைய சுயவிருப்பத்தை அழித்து, விட்டுக் கொடுப்பதுகூட ஒரு தவம்தான் அதுவே அன்பிற்குரியோருக்கு தரம் வரமாகும்" என்றார். அதற்கான சரியான விளக்கத்தை தெரிந்து கொள்ளும் முன் சென்னை வந்து விட்டது.

 வசுமதிக்குத்தான் வயதாகிவிட்டது சென்னைக்கு வயது இறங்கிவிட்டிருந்தது. அது இளைய தோற்றம் பெற்றிருந்ததை அவளுடைய மனநிலை சரிவர கவனிக்க விடவில்லை. அம்மா வீட்டின் முன் தோற்றம் கூட மாறிவிட்டிருந்தது. வீட்டின் வாசலிலேயே சுந்தரண்ணா  நின்றார்.

"வாம்மா, வாங்க" என்று உள்ளே அழைத்து சென்றார்.   அம்மா படுத்திருந்த  அறைக்கே உடனடியாக சென்றனர். வாயில் துண்டை பொத்திக் கொண்டு வெளியேறிய அப்பாவின் நடையில் தளர்வு இருந்தது. செழியன், சட்டென அவரை நோக்கி கை நீட்ட தயக்கம் ஏதுமின்றி பற்றிக் கொண்டார். இருவரும் வெளியேற படுக்கையின் அருகிலிருந்த நாற்காலியில் அவளை அமர சொன்ன சுந்தரண்ணன் "அவங்க பக்கத்திலேயே அமைதியா இரு..  கண் முழிச்சு பார்க்கறப்போ பேசு." என்றார்.

தலையசைத்துவிட்டு, அன்னையின் அருகில் அமர்ந்து கைகளை மென்மையாக பிடித்துக் கொண்டாள். வாய்விட்டு பேசாவிடினும் மனம் பேசியது "அம்மா, நல்லாயிருக்கியாம்மா?. நான் நல்லாயிருக்கேன். செழியன்கூட சொல்வார் உங்கம்மா உன்னை நல்லபடியா வளர்த்திருக்காங்கன்னு. எல்லாம் நீ கற்றுக் கொடுத்ததுதாம்மா? எங்கிட்ட பேசும்மா" அந்த இடத்தில் இறுக்கமான அமைதி மட்டுமே நிலவியது.

சற்று பொறுத்து உள்ளே வந்த ஒருவர் "வாம்மா, நீதான் டெல்லியிலிருக்கிற பொண்ணா? அம்மாட்ட பேசுனியா?" என்று விசாரித்தார். " அம்மாவை செக் பண்ணனும், வெளியே சற்று காத்திரம்மா" என்று கூறிவிட்டு தன் பரிசோதனையை ஆரம்பித்தார்.

"வா வசு. காபி குடி." என்று அழைத்த நடுத்தர வயது பெண்மணிதான் அண்ணி என்று புரிந்து கொண்டாள். அனைவரும் முன்னறையில் அமர்ந்திருந்தனர். அதற்குள் செழியன் அனைவரிடமும் தயக்கமின்றி உரையாட ஆரம்பித்துவிட்டது புரிந்தது. அப்பாவின் அருகில் அமர்ந்திருந்த செழியன் பேசுவது அவளுக்கு கேட்டது. "எப்போதும் அவளுக்கு உங்களுடைய நினைவுகள்தான். மாமா. அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி என்று சொல்லிக் கொண்டேயிருப்பாள். ரொம்பவும் அன்பு வைத்திருக்கிறாள். உங்களுக்கு ஒரு முறை உடல் நலமில்லாமல் போனபோதுகூட மலைக்கோவிலில் வேண்டிக்கொண்டு விரதம் இருந்தாள். இப்போதுகூட அத்தைக்காக நிறைய வேண்டுதல்கள் செய்து இருக்கிறாள். நான்தான் ஒரு அழகான குருவிக் கூட்டை பிரித்துவிட்டேனோ என்று கவலைப்படுகிறேன்"

"இல்லை அத்தான், நான்தான் பிடிவாதமாக இருந்துவிட்டேன். உங்களை பார்க்கவும்தான் எனக்கு அது புரிகிறது. எங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவள்  முகத்தில் எப்படி விழிப்பேன் என்று கூறியே கெடுபிடி செய்தேன், இப்போது பாருங்கள் நாம் சந்தித்துக் கொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமாக இல்லை. அம்மாவிற்கு வசுவென்றால் மிகவும் பிரியம்." இது சுந்தரண்ணாவின் பதில். வசுவிற்கு சட்டென மனம் வலித்துப் போயிற்று. அதேபோல்தான் அவளும் கடக்க முடியாத சந்தர்ப்பம் என்று அதனை நினைத்திருந்தாள். அவள் நினைத்ததை செழியன் கூறிக் கொண்டிருந்தார்.

"இத்தனை வருடம் கழிந்த பின்பும் பிரியம் இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. ஒரு நெருப்பு வளையத்தை தாண்ட பயந்து நெருப்பிற்குள்ளேயே வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்திருக்கிறோம். இடையில் வினி பிறந்த பின்பாவது வந்திருக்க வேண்டும். எது நடந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நிறைய அழகான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டோம்" செழியன் கூறியதை ஆமோதித்து அவள் அப்பா தலையசைத்தார். "பாவம், மீனாட்சி. சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல், எங்களுடைய கோபம் கண்டு அன்பை மறைத்து.. " ஒரு இறுக்கம் மெல்ல விடைபெற்ற சமயம் மருத்துவர் வந்தார்.

"சுந்தர், ரொம்பவும் உடல் ஒத்துழைக்க மாட்டேங்கிறதுப்பா. ஊசி மருந்தை ஏற்றுக் கொள்ளாமல் வெளித்தள்ளுகிறது" உதட்டை பிதுக்கிய வேகத்தில் புரிந்து போனது. அவசரமாக சுவற்றிலிருந்த முருகனை பார்த்த வசுவின் தோளில் கை வைத்து "வேண்டாம் வசு, வேண்டிக் கொள்ளாதே" என்ற அண்ணனை, வியப்பாக பார்த்தாள்.

மருத்துவர் சென்றபின் அவளை முன்வாசலுக்கு அழைத்து வந்து, "வசு, இது ரொம்பவும் மோசமான நிலையம்மா. அப்பாவிற்கே புரிந்துவிட்டது பார். நீ அம்மாவிற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது. இதற்குமேல் அந்த உடல் தாங்காது. அவங்களை நல்லபடியாக அனுப்பி வைக்க வேண்டும்மா. மனதை தேற்றிக் கொள்" என்றார். மௌனமாக வசு நிற்கவும் சுந்தரண்ணாவே தொடர்ந்தார்.

"அவங்க நல்லா வாழ்ந்தவங்க, வசு. எந்த வேதனையும் இல்லாமல் அவங்களை அனுப்ப வேண்டியது நம்முடைய கடமைம்மா. நமக்கும் ஆகாதவங்க என்று சிலர் இருக்காங்க. மீனாட்சியம்மாவுக்கு பத்து நாளா இழுத்துக்கிட்டே இருக்காம். என்ன பாவமோ என்றெல்லாம் பேசறாங்க வசு. உனக்கே தெரியும் எத்தனை சிரமத்திலும் நம்மை நல்லபடியா வச்சிருந்தாங்க. அவங்களை சிரமப்படுத்த வேண்டாம். மனதை தேற்றிக் கொள்ளம்மா?" என, அவருடைய பேச்சு வசுவிற்கு அதிர்ச்சியளித்தது. மௌனமாக நின்றாள்.
                         ------------------------------             ---------------------            --------------------------

மேலும் இரண்டு நாட்கள் கழிந்துவிட்டன. அம்மாவின் உயிர் ஊசலாடியது புரிந்தது. எப்போதாவது கண் விழிக்கும்போதும் அருகிலிருந்த வசுவை கண்டு கொள்ள முடியாமல் போனது. உணரும் நிலையிலும் அவர் இல்லை. அண்ணன் அவளை வெளியே வரச்சொல்லி சைகை செய்ய அறையை விட்டு வெளியே வந்தாள்.

"வசு, ஜோசியர் என்ன சொல்றாருன்னா நளைக்கு பிரதோசமாம், தயிர் சாதம் அன்னதானம் செய்துவிட்டு சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டால்..." மேற்கொண்டு அவர் சொல்ல வருவதை தடுத்து "என்ன சொல்லனும்ண்ணா? எங்கம்மாவை கூட்டிட்டு போன்னா? அதுக்குத்தான் ஊரிலிருந்து வந்தேனா?” குமுறினாள்.

"வசு, உடல் இதற்கு மேல் தாங்காதம்மா.  நிலமையை புரிந்து கொள்ளம்மா. நாம் இருவரும் வேண்டிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள். தயவு செய்து..." பதில் பேசாமல், சட்டென அறைக்குள் சென்றுவிட்டாள். அம்மாவை அனுப்பி வைப்பதற்கு, அவளுடைய ஒப்புதலையும் பெறுவது சாஸ்திரத்திற்குத் தேவைபடுகிறதுபோல. அதற்குத்தான் அவளை வரவழைத்திருக்கிறார்கள். ஒரு போதும் அவளால் முடியாது.

அம்மா அவளுக்கு சக்தி வடிவம்தான். அவளுடைய குடும்பம், விவசாயம் பொய்த்துப்போய் கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்தபின் ஒரு மாடிவீட்டின் ஓரறையில் குடித்தனம் இருந்தது. அப்படிப்பட்ட வசுவின் குடும்பம் நகரத்தில் சொந்த வீடு வாங்கும் அளவிற்கு திட்டமிட்டு உயர்த்தியது அம்மாதான். தன் உழைப்பு மட்டுமல்லாது கணவனின் உழைப்பையும் வீண் செய்யாமல் எதிர்கால முன்னேற்றத்திற்கான படிகட்டுகளாக மாற்றியதும் அவள்தான். அன்பு மட்டுமே அவளின் ஆயுதம், மூலதனம், உயிர் மூச்சு. அப்படிப்பட்ட அம்மாவை விட்டுக் கொடுக்க வசுவால் முடியாது.

தீர்மானமாக நினைத்துக் கொண்டு அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தவளின் பார்வையில் அன்னையின் உடல் நீல நிறமாக மாறுவது தெரிந்தது. அவசரமாக அவள் அழைப்பில் உள்ளே வந்த அண்ணன் "உடல் தன்னுடைய வாழ்நாளை முடித்துக் கொள்ளுவதன் அறிகுறி. கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பிக்குதுடா." என்றார்.  அழுகுவதா? இனி என்ன ஆகும்.... திகைத்து பார்த்த அவள் விழிகளில் தந்தையின் இறைஞ்சுதல் பார்வை பட்டது. எல்லாமே கைவிட்ட நிலையில் இறுதி கட்ட போராட்டம் புரிந்தது "சரி, அண்ணா" என்றாள்.

அதன்பின் அம்மாவின் அறையிலேயே அமர்ந்துவிட்டாள். வாழ்வதற்கு போராடிய அம்மா, இறப்பதற்கும் போராடுகிறாள். ஒரு விசயம் புரிந்தது. வசுமதி தன்னுடையதாக நினைக்கும் ஒரு விசயம் அம்மாவுடையது. முடிவு எடுக்கும் உரிமையும் அம்மாவுடையதுதான். அவளுடைய மௌனம் கூக்குரலாக அம்மாவிற்கு புரிகிறது. பாலிற்கு அழும் கன்றைவிட்டு செல்ல மறுக்கும் தாய் பசுவைப்போல, வசுவை விட்டு செல்ல முடியாமல் தவிக்கிறாள்.  விமானத்தில் உடன் வந்த பெண்மணி சொன்ன "சில சமயத்தில் சுயவிருப்பத்தை அழித்து, விட்டுக் கொடுப்பதுகூட ஒரு தவம்தான்" வார்த்தையின் விளக்கம் புரிந்தது.

ஆனாலும் தாயின் மரணத்திற்காக வேண்டி நிற்பது, பெற்ற குழந்தையை கூர்வாளால் வெட்டச் சொன்னபோது தாய் மனம் பட்டபாட்டிற்கு சற்றும் குறைந்தது இல்லையே? வேண்டுதலினாலோ அல்லது வேறு ஒன்றினாலோ இறுதி மூச்சு நின்றாலும் காலமெல்லாம் அவள் இதயத்தில் ஆணியடித்து நின்று இரத்தம் வழிய வைக்காதா?. இது அவளுக்கு  ஆயுள் தண்டனையாகிவிடாதா? அந்த பூஜையில் அமர்வது கூரிய முட்படுக்கையில் அமர்வதற்கு ஒப்பாதோ?


எண்ணங்களின் வலுவான தாக்குதல்களை தாங்க முடியாமல், அறையைவிட்டு வெளியேறி பூஜையறைக்குள் வசுமதி சென்றாள். வேலோடும் மயிலோடும் நின்று கொண்டிருந்த முருகனிடம் "என்னால் எப்படி சொல்லமுடியும் முருகா?. எங்கம்மாவை விட்டுத்தர என்னால் முடியாது. எதிரிக்கு கெடுதல் செய்வதையே ஒப்பாத மனம், எப்படி இதனை வேண்டும்?. இப்போதைக்கு அது சரியாக இருந்தாலும் காலமெல்லாம் என் வேண்டுதல் மனதில் கத்தி போல அறுக்குமே. பட்டணத்தார் சொன்னது போல கொன்று கொன்று தின்றேனா?  அல்லது தின்று கொன்றேனா? என் பாவம் இன்னும் தீரவில்லையா?' என்று கதறினாள்.  சற்று நேரத்தில் அவளுடைய கதறலையும் மீறி அம்மாவின் அறையிலிருந்து அழுகுரல்கள் எழுந்தன. ஒரு உயிர்ப் பறவையின் விடுதலையை அது கூறியது.  இறந்தபின்பும் தன் மகவிற்காக துடிக்கும் தாய்மை, வசுவின் வலியை புரிந்து கொண்டதோ? உணவாகவோ பாலாகவோ மட்டுமல்ல தன் மரணத்தை வரமாக தந்துகூட குழந்தையை சீராட்ட தாயால்தான் முடியும்.
முகச்சுளிப்புடன் வெளியான
சில வார்த்தைகளின் கசப்பு
அறையில் நிரம்பி வழிந்து
வானம் வரை நிறைக்கிறது.
விழி உயர்ந்த பார்வையில்
கூச வைக்கிறது வெறுப்பு !
மேக தேவதை கை வீசி
மழை பொழிய வைக்க,
சில வார்த்தைகள் கரைந்து
வீட்டின் மேலேயே விழ
முடிந்துபோன அத்தனையும்
மறுபடியும் ஆரம்பிக்கும்
பயம் வர, நல்ல வேளையாக
சேமிக்கப்படாத மழை நீர்
குழாய் வழியாக வழிந்து
வீதியில் ஓடி கலக்கிறது.
    தன்னுடய அச்சுக் கோட்டில் சுற்றிச் சுழலும் கோள்போல் சரியாக செயலாற்றும் மனம், சில வேளைகளில்  தடுமாறிவிடும். ஒன்று எல்லாமே நன்றாக நடந்துவிட்ட போதை. இல்லை எதுவுமே சரியாக நடந்திராத சோகம்.  என்னை பொறுத்தவரை, தள்ளாடும் மனதினை சரி செய்ய இரண்டிற்கும் ஒரே தீர்வுதான் , ஒரு விடுமுறை!. எந்த தொல்லையும் இல்லாத மதிய உறக்கம் -    இது அலுவலகம் செல்லும் பெண்களுக்கான தீர்வு மட்டுமே.

    அப்படி முடிவெடுத்து, அலுவலகம் செல்லாத ஒரு மதியவேளை. பொதுவாக, மதிய நேர உறக்கமெனில் என்னுடைய வசுக்குட்டியின் அறையைத்தான் நாடுவேன் - வசு என்னுடைய பதினெட்டு வயது மகள்.  அங்குதான் ஜன்னலோர வேப்பமரம் காற்றை அனுப்பி கவிதையாய் தூங்க வைக்கும். ஆனால், இரவில் வசுக்குட்டிக்கு  பாத்தியப்பட்ட இடம் என்பதால் குடியுரிமை கிட்டாது. எனவே விடுமுறையின் உல்லாசமாக இதனை அனுபவிப்பேன். இப்போதும், கட்டிலில் படுத்து உறங்க முயற்சித்தேன். வேப்பம்பூ மணம் தேடி நாசிகள் சுவாசிக்க ஆரம்பிக்க... இமைகள் கணத்து… கண்களை மூடப்போகும் வேளையில், சட்டென அந்த வாசம் நாசியை துளைத்தது. மிக மெல்லியதாக இருந்தாலும், மனதை வருடிச் செல்லும் இதமான நறுமணம். எதுவென்று யூகிக்க முடியவில்லை. ஏனோ அடிமனதில் வலியின் ஊற்று கிளம்பியது.   அது என்றைக்கோ கண்டு பயந்த கனவின் வெளிப்பாடா அல்லது உள்ளே புதைக்கப்பட்ட மோசமான நினைவுகள் சுவாசிக்க ஆரம்பிக்கின்றனவா?

    கல் விட்டெறிந்த குளம் போல் மனம் கலைந்துபோனது. பதட்டம் ஊறியது. உடனடியாக மூலக்காரணத்தை தேடி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். வாசனையையே  வழிகாட்டியாக கொண்டு தேடுதலை ஆரம்பித்தேன். தலையணையின் அடியில்..... கட்டில் அருகில்....  அலமாரியில்.... புத்தகங்களுக்கிடையே..... தொடர்ந்து செல்லச் செல்ல வாசத்தின் வீச்சு குறைவதை உணர்ந்து திரும்பி எதிர் திசையில் பார்த்தேன். வசுவின் மேஜை!.  மூலத்தை அறியும் முந்துதலில் மேசை இழுப்பறையை அவசரமாக இழுக்க, விசை கட்டுபாடற்றுப்போய் அது தன்னுடைய நிலையிலிருந்து கீழே விழுந்து அதன் ரகசியத்தை தரையெங்கும் கொட்டி கவிழ்த்தது. காய்ந்து வாடிப்போய்.... அழுத்தி எடுத்தால் துகளாகிவிடும் அபாயத்தில், குப்பையாக ......  மகிழம்பூக்கள்!

   தரையில் அமர்ந்து, பூக்கள் உருக்குலைந்துவிடாமல் பொறுக்கி எடுத்தேன். எஞ்சிருந்த வாசம் உச்சரித்தது. விசாக்கா....!. உள்ளிருந்து கிளம்பிய பொருமலில் தொண்டை வலித்து, கண்கள் கலங்கிவிட்டன. ஒரு பெருமூச்சு .. அது விசாலாட்சி என்கிற விசாக்காவிற்காக. 

   வாழ்க்கை என்பது ஒரு மாயப் புத்தகம். கடந்த அத்தியாயங்களின் சில பக்கங்களை எளிதாக புரட்ட முடியும் - அம்மா, பள்ளிக்கூடம், சொந்த ஊர் போன்றவை. சில பக்கங்களை அத்தனை எளிதில் புரட்ட முடிவதில்லை. அதற்கு ஒரு மந்திர சாவி தேவைப்படுகிறது. அப்படித்தான் விசாக்காவின் பக்கங்களை புரட்ட மந்திர சாவியாய் இந்த மகிழம்பூ வாசம்.

அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். அப்பா  ஒரு அரசாங்க அதிகாரி. அடிக்கடி மாற்றல் வந்துவிடும். அப்போது நாங்கள் சென்னையில் இருந்தோம். ஒவ்வொருவருக்கும் சொந்த ஊர் நினைவு வர சில காரணங்கள் இருக்கும். ஒன்று வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் வரும். அல்லது பெண் பிள்ளை நெடு நெடுவென்று வளர்வதை பார்க்கும்போது ஊரோடு சேரும் தவிப்பு  வரும். பின்னதுதான், என்னுடைய தந்தையின் சொந்த ஊர் பயணத்திற்கு காரணம். வேலை மாற்றல் வாங்கிக் கொண்டு காவிரிக்கரையிலிருந்த சொந்த ஊருக்கு திரும்பினோம்.

 அது சென்னை போன்ற பெரிய ஊராக இல்லாமல் சிறிய நகரமாகியிருந்த கிராமம்.  எங்கள் வீடு, ஊருக்கு கடைசியில் இருந்தது. காவிரிக்கரைக்கு அருகில் இருக்க வேண்டும் என்று கொள்ளுதாத்தா காலத்திலேயே கழனியும் காடுமாக இருந்தபோது வந்துவிட்டனராம். காலப்போக்கில்  வயல்காடு, தெருவாகி... பல்கிப்  பெருகி புறநகர் பகுதியாகி இருந்தது.  இருந்தாலும், சித்தப்பா, பெரியப்பா, மாமா என்று சொந்தங்கள் அந்தப் பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்ததால், ஒவ்வொரு வீடும் ஒரு பெரிய வீட்டின் பகுதிகள்போல் செயல்களாலும் உணர்வுகளாலும் இணைக்கப்பட்டு ஒன்றுபட்டு இயங்கி வந்தன.. எனவே, சென்னையைப் போல் சுதந்திரம் கிட்டவில்லை. "அங்கே போகாதே..",. "இப்படி ஓடாதே..", "பொம்பளப்புள்ள சத்தம்போட்டு சிரிக்கக்கூடாது.." என்ற கெடுபிடிகள். . வளர்கின்ற பெண் நல்லபடியாக  வளர்க்கப்பட வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டு வந்திருந்ததால் அப்பாவும் அம்மாவும் அப்படியே என் வாழ்க்கையை கையகப்படுத்தினர். சித்திரக்கதைகளில் வரும்  பெரிய ஆக்டோபஸின் கைகளுக்குள் சிக்கிக் கொண்ட நிலை என்னுடையது. அது தன் கையை விரிக்கும் அளவுதான் என் சுதந்திரம்


     இருண்ட என் வாழ்க்கையில் வெளிச்சம்போல் வந்தவள்தான் விசாக்கா...! என்னைவிட ஏழு வயது மூத்தவள்.  அவள்,  எனக்கு அத்தாச்சி முறை வேண்டும் ஆனால்... அழைக்க எளிதாக இருந்ததால் நானாகவே அக்கா சேர்த்துக் கொண்டேன்.

"ஒரே ஊரிலிருந்தால் முறை பழக்கம் எல்லாந்தெரியும். ஊரூரா சுத்தினா இப்படித்தான். அதுகள எங்க கொறை சொல்றது." அப்பாயியின் - அப்பாவின் அம்மா - புலம்பல் இது. .

  

    எங்களுக்கு நாலாவது வீட்டில் அவள் இருந்தாலும், முதன்முதலில் அவளை நான் பார்த்ததே எல்லைக் கோவில் திருவிழாவில் வைத்துதான். பட்டுப்பாவாடை தாவணி, தலை நிறைய மல்லிகை வைத்து, மஞ்சள் முகம் பளபளக்க, முளைப்பாரி சுமந்து சென்ற கூட்டத்தில் தேவதைபோல தெரிந்தாள். கூடியிருந்த இளம் பெண்கள் கூட்டம் அவளை தலைவியாக அங்கீகரித்து இருந்ததை அவர்களுடைய  செயல்கள் சொல்லாமல் சொல்லின.

"விசா, இத செய்யலாமா?", "இது சரியா பாருடி" கேள்விகளுக்கு விசாக்கா பதில் சொன்ன விதம் என் விழிகளை விரிய வைத்திருக்கும்போல... திரு திருவென நான் முழிப்பதை பார்த்தோ, என்னவோ என்னை நோக்கி கை நீட்டி அருகில் வருமாறு அழைத்தாள். அந்த நிமிடத்தில் இருந்து நான் விசாக்காவின் ஆறாவது விரலாக மாறிப்போனேன். அவளிடமிருந்து தேவலோக வாசனை வீசுவதாகக்கூட தோன்றியது. அவளுடைய ஆளுமை அப்படி. சும்மா தொணதொணக்கும் அப்பாயிகூட அவளிடம் மறுத்துப் பேசவில்லை.

   பதினாறு வயதினிலே ஸ்ரீதேவிபோல், விசாக்கா சத்தம்போட்டு சிரித்தாள், காதோரத்தில் ரோஜாவை சொருகியிருந்தாள், ஆடு வெட்டும் போதுகூட தயங்காமல் முன்னே நின்று பார்த்தாள். " ஏய் பொம்புளப் புள்ளைங்க எல்லாம் அந்தப்பக்கம் போ" என்று கூவிய மருளாளிகூட விசாக்காவை ஒன்றும் சொல்லவில்லை.

    வியப்பின் உச்சத்தில் நான் நின்றபோது, விசாக்கா ஒரு குதிகுதித்து வீறிட்டாள். கண்கள் நிலைகுத்த... கைகளை தலைக்குமேல் தூக்கி முறுக்கியபடி அர்த்தமில்லாத வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்தாள். " ஆத்தா... மலையேறிடும்மா" என்று உரத்த குரல்கள் கேட்க ஆரம்பித்தன. சற்று பொறுத்து மருளாளியின் விபூதி வீச்சிற்கு கட்டுப்பட்டவள்போல் மூச்சு வாங்கிக் கொண்டு சாதாரணமாகிவிட்டாள்.

"அவ மேல குல சாமி வரும்" என்ற அத்தையின் குரல் மெல்லிய பெருமையை சூடியிருந்தது.


     அவளுடைய கூச்சலில் சற்று தொலைவில் ஓடி சென்றிருந்த என்னை சகஜமாக அருகில் அழைத்துக் கொண்டாள். வினாடிக்கும் குறைவான ஒரு கால அவகாசத்தில் என்னை பார்த்து கண் சிமிட்டி சிரித்தாள். அவளுடைய நடிப்பிற்கு அந்த சோழ நாடே அடிமை என்பது அப்போதுதான் புரிந்தது. இது புரிந்தபின் விசாக்கா.. தேவதை ஸ்தானத்தில் இருந்து, தோழமை பொறுப்பிற்கு தகுதியாகிவிட்டாள். தைரிய தேவதையான  அவளுடைய சொல்லுக்கு மறு சொல் இல்லை. அவளை சுற்றிப் படர்ந்திருந்த சுதந்திரம் என் விருப்பமானது.

      பள்ளி சென்ற நேரம் தவிர மற்ற நேரங்களில், தாய் கோழியின் சிறகின் அடியில் செல்லும் கோழிக்குஞ்சுபோல் அவளுடன் திரியலானேன்.  மிதிவண்டி ஓட்டுவது, துள்ளி  ஓடும் காவிரியில் துண்டு போட்டு மீன் பிடிப்பது, பசலை கீரையின் குட்டிக்குட்டி பழங்களில் உதட்டுச் சாயம் வரைவது, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அவள் இடும் கோலத்திற்கு செம்மன் பட்டை அடிப்பது என்று விசாக்காவின் நிழலில் என் நாட்கள் கடந்தன.


ஒரு அரை வருட பரிட்சை விடுமுறையில், மதிய வேளையில் கோழித்தூக்கம் போடும்போது, சலங்கை ஒலிக்க ஜன்னல் பக்கம் வந்து அழைத்தாள்.

"ஏய், குட்டி எந்திரிச்சு வா".

     மந்திரம் போட்டதுபோல உறக்கம் ஓடிவிட, அவளைத் தொடர்ந்தேன். "எங்கேடி போற...". அப்பாயியின் குரலுக்கு "விசாக்காகூட போறேன்" என்று கூறி விட்டு ஓடினேன். வயலைத்தாண்டி காவிரியை நெருங்கும் முன் ஒரு சிறிய தோப்பு இருக்கும். அங்கே அழைத்துப்போனாள். மதிய வேளையில் பச்சை நிறத்தில் மோகினி வருமாம் என்பதை நான் குறிப்பிட "அது ஆம்பள பசங்களத்தான் பிடிக்கும்" என்று ரகசியம் பேசி நடந்தாள். "எங்கே போறோம்" எனக்கு பதில் தராமல் கையை பிடித்து இழுத்துச் சென்றாள்.

   ஒரு குட்டையான மரம் அருகே சென்றாள். குனிந்து தரையை காட்டினாள். அழுக்கு நிறத்தில் சிறிய பூக்கள்... குவியலாக உதிர்ந்து கிடந்தன. பெரிய மரத்திற்கு சற்றும் பொருந்தாத மிகச்சிறிய பூக்கள். கையில் அள்ளி எடுத்து மூக்கருகே வைத்துக் காட்டினாள். "ம்...." அற்புதமான மணம் வீசியது. கடினமான நெடியில்லை... தலைவலிக்க வைக்கும் அழுத்தமும் இல்லை... இழுத்து சுவாசித்தபோது மனமெல்லாம் மகிழ்ந்தது. (புற விசயங்களைத் தாண்டி அக விசயமாக மனம் என்ற ஒன்று இருப்பதையே அப்போதுதான் உணர்ந்தேன்) விசாக்காவிடம் வீசிய தேவலோக வாசமும் அதுதான் என்பதும் புரிந்தது.

"மயிலம்பூ" என்றாள். காய்ந்ததும் புதிதாக உதிர்ந்துமாக கலந்திருந்த குவியலில் புது பூக்களை தேடி எடுத்தாள். நானும் முயற்சித்தேன்.

"ஏங்க்கா, கீழ இருந்து பொறுக்கற, மரத்திலேர்ந்து பறிக்காலாமே" என்றேன்.

“ஊகும், மரத்தில கொம்பேறி மூக்கண் சுருண்டு படுத்திருக்கும். கடிச்சா அவ்ளோதான். கடிபட்டவங்க பொணம் சுடுகாட்டுக்கு போறவரை மர உச்சில காத்துக் கிட்டேயிருக்குமாம்" என்றாள். பிறகு,

"பொறுக்கி வைடி, இதோ வர்றேன்" என்று காணாமல் போனாள். நொடியில் திரும்பினாள். கூடவே பிரபாண்ணாவும் வந்திருந்தான். அண்ணா என்பதும் நான் வைத்ததுதான். அடிக்கடி கண்ணில் பட்டுக் கொண்டேயிருந்தால் நானாக அப்படி அழைத்தேன். எங்கள் சொந்தம் இல்லை என்பதும், கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான் என்பதும் எனக்குத் தெரியும்.  மணிதாத்தா இறந்தபின் அவர்களது மகன் வெளிநாட்டில் இருப்பதால், இவர்களுக்கு வீட்டை விற்று விட்டதாக அப்பாயியின் புலம்பலில் தெரிந்திருந்தேன். எதற்கு புலம்ப வேண்டும்? சாதி இனம் தெரியாத வெளியாட்கள் உள்ளூரில் நடமாட அனுமதித்துவிட்டதை குறித்துதான் கவலைபட்டாள்.

   பிரபாண்ணாவும் சேர்ந்து பொறுக்கினான். மெல்லிய குரலில் கலகலத்துக் கொண்டே பேசி , மடியில் நிறைய சேர்த்தோம். சற்று பொறுத்து " போகலாமா?" என்று விசாக்கா நடக்க ஆரம்பித்தாள். மரங்களின் மறைவுவரை உடன் வந்த பிரபாண்ணா திரும்பிச் சென்றுவிட்டான்.


    வீட்டு வாசலில் மாலை வேலை முறைவாசல் தெளித்துக் கொண்டிருந்த அத்தையின் "எங்கேயடி போன?" கேள்விக்கு "குட்டிம்மா மயிலம்பூ கேட்டாள். பறிக்கப் போனேன்" என்று சொன்னாள்.

"அட, அங்க பாம்பு இருக்கும் பாப்பா, இனி தனியா போகக்கூடாது" என்ற அத்தையின்  பதில் அவள் காதில் விழுந்ததுபோல் தெரியவில்லை. கிணற்றருகில் குத்துக் கல்லில் குறுநகை தவழ அமர்ந்து கொண்டாள்

."விசாக்கா, நா எப்போ மயிலம்பூ கேட்டேன்" என்ற கேள்விக்கு, சிரித்தபடி சொன்னாள் "எங்கிட்ட ஏதோ வாசம் வீசுதுன்னு சொன்னியே. இதுதான். தேங்காண்ணேயில போட்டு தடவிக்கோ வாசம் கமக்கும்" என்றாள்.

    அவள் சொன்னது போலவே தேங்காயெண்ணெயில் போட்டு தலையில் தடவிக் கொண்டு பள்ளிக்கு சென்றபோது சுற்றியிருந்த தலைகளின் வேப்பெண்ணை வாசத்தை மறைத்து நறுமணித்து அந்த குட்டி நாட்டிற்கு ராணியாகினேன். எனக்காக வெகு தொலைவு பயணித்த விசாக்காவின் அன்பையும் மெச்சி நன்றி சொன்னேன். இது பற்றி கூறியபோது " அவள்களுக்கும் கொண்டுபோய் கொடு. உன்னை தலைல தூக்கி வச்சிடுவாங்க" என்றதுடன் நில்லாமல் அந்த சனிக்கிழமை மதியமே என்னை அழைத்துச் சென்று மயிலம்பூ பறித்து தந்தாள். கூடவே பிரபாண்ணாவும்தான். இது பின்னர் அடிக்கடி நடைபெற்றது. அனேகமாக என் தோழியர் அனைவரும் வேப்ப எண்ணெய் நாற்றத்திலிருந்து விடுபட்டார்கள். கொம்பேறி மூக்கன் மற்றும் பச்சை மோகினியின் பயத்தினால், இதில் முக்கியமான பங்களிப்பு என்னுடையதாகவே இருந்தது. இதற்காகவே எனக்கும் விசாக்காவிற்குமான பிரியத்தை அதிகரித்துக் கொண்டேன்.  அதே அளவு முயற்சியில் பிரபாண்ணாவும் இருந்ததை நான் உணரவில்லை.

    ஒருநாள்  என்றைக்குமில்லாத கலவரமாக விசாக்காவிற்கு விளக்குமாறினால் அடி விழுந்தபோது திகைத்துப்போனேன். அவள் தன் வழமை போல சாமியாடுவதையும், அனைவரும் அவள் காலில் விழுந்து வணங்குவதையும் காணும் ஆவலில் நோக்கிய எனக்கும் இரண்டு அடி கிட்டியது. பெருங்குரலெடுத்து நான் அழுததை என் அத்தையின் அழுகுரல் அமுக்கிவிட்டது.

    இரவின் அமைதியில் ரகசியமாக என்னிடம் பிரபாண்ணா பற்றி கேள்விகள் கேட்டனர். குழந்தை மொழியாக நான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்டனர். "அவ தப்பு பண்ணியிருக்க மாட்டான்னு சொன்னேன்ல” என்ற அழுத அத்தையிடம் "விசாக்கா தைரிய தேவதையாக்கும் அவள் தப்பு செய்வாளா?" என்று கேட்டேன். தலையிலடித்துக் கொண்டு இன்னும் அழுகுரல் கூடியது.

   மறுநாளுக்கும் மறுநாள் வெள்ளிக்கிழமையன்று விசாக்காவிற்கு அவசரத் திருமண ஏற்பாடு நடந்தது. மணப்பெண்ணாக,  அழகாக என் அக்கா வருவாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், மணமேடைக்கு அவளை நாலு பேர் தூக்கித்தான் வந்தனர். யார் கைக்கும் அடங்காமல் துள்ளி குதித்தவளை அழுத்திப் பிடித்து தாலிகட்டப்பட்டது. "அதெல்லாம் பொறகு சரியாயிடும். மயிலம்பூ பொறுக்க போய் பச்ச மோகினி பிடிச்சிடுச்சாம்" என்று அக்காவின் புதுக்கணவன் சொல்லிக்கொண்டிருந்தான்.

   சரியாக, அன்றைக்கே பின்னிரவில் " விசாலி அடிப்பாவி" என்று அத்தையின் கூச்சல் கேட்டது. அதேதான்...! விசாக்கா என்றொரு தேவதையை வி
றைத்துப் போய் சிலையாக கிணற்றில் இருந்து தூக்கினார்கள். அந்த நேரத்து இருளில் சூழ நின்ற கூட்டத்தை தாண்டி பிரபாண்ணா வீட்டு மாடி  ஜன்னலை என் பார்வை வருட, நீர் சுமந்த கண்களும் கலைந்த தலையுமாக பிரபாண்ணாவின் முகம் தோன்றி மறைந்தது.

   மறுநாள் காலையில் மோகினி காவு கொண்ட விசாக்கா 'வாழ்வரசியாக' அலங்கார ரதமேறினாள். கடைசி நிமிடத்தில் நினைவு வந்து ஓடிப்போய் பெட்டியில் மிச்சம் வைத்திருந்த மகிழம்பூக்களை வாழ்க்கையின் கடைசி முறையாக பார்த்துவிட்டு அவளிடம் ஓப்படைத்தேன்.

   
  
  அதன் பின்னர் கிராமத்தில்தான் வளர்ப்பின் பாதுகாப்பு  கிட்டும் என்ற என் தந்தையின் நம்பிக்கை தளர்ந்துபோய் மறுபடியும் சென்னைக்கே வந்து விட்டோம்.  பிறகு, கொம்பேறி மூக்கனும் ,பச்சை மோகினியும், பிரபாண்ணாவும் என் நினைவில் இருந்து மறைந்துவிட்டாலும், கேள்விகள் மட்டும் நான் வளர வளர புதிதாக முளைத்துக் கொண்டே இருந்தன.


    நான் மகிழம்பூ கேட்டதால்தான் அது நடந்ததா?  தைரிய தேவதையான விசாக்கா ஏன் எதிர்த்துப் போராடாமல் தன்னையே அழித்துக் கொண்டாள்? இறந்துபோனவள் ஏன் திருமணத்திற்கு முன்பே அதைச் செய்யவில்லை?   ஒரு வேளை, பழசை மறந்துவிட்டு புது வாழ்க்கை வாழமுடியும் என்று பரிட்சையில் தோல்வியுற்ற பள்ளிக் குழந்தையாக நினைத்திருப்பாளோ? நினைப்பிற்கும் நடப்பிற்குமான இடைவெளியை பின்னர் வந்த நிமிடங்கள் புரிய வைத்தனவோ? அல்லது  குடும்பத்தின் மீதான தன்னுடைய அன்பை  நிலை நாட்ட அவர்கள் மகிழ்ச்சிக்காக மணம் முடித்து, பின் வாழ்க்கையை முடித்துக் கொண்டாளா? இதெல்லாவற்றையும் விட அவளின் இறந்த முகத்தில் கப்பிக் கொண்டு  நின்ற சோகம் சொல்ல மறந்த விசயம் என்ன?


    விளக்கம் பெற முடியாத இந்தக் கேள்விகள்தான் பின்னாளில் எனக்கு பாதுகாப்பு கவசமாக ஆனது.  கொம்பேறி மூக்கன்களின் பார்வைகள் பிடிபட்டுப் போய், எல்லை தாண்டும் குழந்தைத்தனம் என்னை விட்டு வெளியேறியது.   பெற்றவர்களும் உற்றவர்களும் செய்ய முடியாத நன்மையை வாழ்க்கையில் ஏதோ ஒரு நொடியில் நம்மை கடந்து போகின்றவர்கள் செய்துவிடுவார்கள். அப்படித்தான் விசாக்காவின் காலகட்டம் எனக்குள் வடு ஏற்படுத்தி சென்றது. அவளை மறந்தாலும் மறக்கமுடியாத நெறிகளை என்னுள் புதைத்துச்  சென்றது. யாருமே சொல்லித்தர முடியாத வாழ்க்கைப் பாடத்தை விசாக்கா தன் வாழ்க்கையின் மூலமாக சொல்லிச்சென்றதை என்னுள் பொதிந்து வைத்துக் கொண்டேன்.

  எங்கேயோ அடித்த கோவில் மணி நடப்பிற்கு என்னை இழுத்து வந்தது. கையில் வைத்திருந்த மகிழம்பூக்களை வெளியே சென்று கொட்டினேன். முகம் கழுவிவிட்டு . அனிச்சையாக கண்ணில் விழுந்த முடியை ஒதுக்கினேன் .... மகிழம்பூவின் வாசனை... விசாக்காவின் கதையை நினைவூட்டியது.