மகிழம்பூச்சரம்

வாடினாலும் வாசம் மாறாத எண்ணங்களின் வண்ணச்சரங்கள்......

நண்பர்கள்

நிம்மதிக்கு எதிரியான மன அழுத்ததின் காரணங்கள்:

1..அந்தஸ்த்தின் அடையாளமாகுதல்:
முதலில் முந்தைய பதிவில் குறிப்பிட்டதை எடுத்துக் கொள்வோம். வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் வருமானம் குறைந்து இருக்கும். ஓய்வு நேரம் அதிகமாக இருக்கும். குடும்பத்திற்கான நம் பங்களிப்புகள் - குழந்தைகளுக்கு படிப்பில் உதவுவது, தேடித்தேடி அருமையான உணவு வகைகளை சமைப்பது, மாலை நேரத்தில் குடும்பத்துடன் வெளியே செல்வது, வீட்டை விடுமுறை நாட்களில் அழகுபடுத்துவது போன்றவை-  அதிகமாக இருக்கும். இந்த பங்களிப்புகளை நாம் எப்போதும் குறையில்லாமல் செய்ய வேண்டும். அப்போதுதான் வீட்டில் நிம்மதியை கொண்டுவர முடியும். நம்முடைய முன்னேற்றம் குடும்பத்தினரை அவமதித்தோ அலட்சியப்படுத்தியோ இருக்கக்கூடாது.

என்னுடன் பணியாற்றுபவர் திறமையான பெண்மணி இன்றைய நிலைக்கு மேற்படிப்பு படித்தால் கல்லூரிக்கு முதல்வராகும் வாய்ப்புடையவர் .  ஆனால் இந்த வருடம் மேற்படிப்பில் சேரப்போவதில்லை என்று சொன்னபோது எனக்கு வருத்தம்தான். அவருக்கு பத்தாவது படிக்கும்  ஒரே மகன். வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் இருக்கும் மகனை (நன்றாகவே படிக்கக்கூடியவன்)  கவனிப்பதில் இருந்து தன்னுடைய கவனம் சிதறிவிடும் என்று காரணம் சொன்னபோது புரிந்து கொள்ளமுடிந்தது. சிறு வயது முதலே மகனுடைய படிப்பில் பங்கெடுத்தவர் - வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுப்பது போன்றவை  - , தற்சமயம் வாழ்க்கையின் திருப்பு முனையான முக்கியமான தேர்விற்கு அவருடைய பங்களிப்பு தேவை என்பதை உணர்ந்து இருக்கிறார். . இப்போது அவருடைய முன்னேற்றம் சற்று தள்ளிப்போகும், ஆனால் மகன் இன்னும் சிறப்பாக பரிட்சைக்கு தயாராக முடியும்.  இது போன்ற விட்டுக்கொடுத்தல்கள், அவருடைய மகனை கண்டிப்பாக சிறப்பான நிலைக்கு கொண்டுபோகும் என்பதில் சந்தேகமே இல்லை.

நான் சொல்ல வருவது என்னவென்றால், எந்த காலகட்டத்திலும் நம்முடைய பங்களிப்புகளை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு சற்றும் குறையாமல் செய்யும்போது நமக்கு உறவுகளினால் ஏற்படும் மன அழுத்தம் வருவதில்லை. இதனை முடிவு செய்வது பணத்திற்கும் மனத்திற்குமான விட்டுக் கொடுத்தல்கள்தான். ஆரம்பத்தில்  நேரம் இருக்கிறதென்று விழுந்து விழுந்து கவனித்துவிட்டு பிறகு பிஸியாகிவிட்டேன் என்று விலகுவது நம்முடன் இருப்பவர்களை மனதளவில் விலக்கி வைத்து விடும். தேவையென்றால், பொருளாதார முன்னேற்றத்தின் இன்றியமையாமையை எடுத்துச் சொல்லி குடும்பத்தின் ஒத்துழைப்புடன் அடுத்தபடியை அடைய முயற்சிக்கலாம்.


2. வேறுபட்ட மனோபாவங்கள்:
இப்போது அடுத்து கர்மயோகிகளினால் ஏற்படும் குழப்பங்களை பார்க்கலாம். சிலர் பெருமையாக சொல்லிக்கொள்வார்கள் "என் வேலைதான் எனக்கு முதல் மனைவி" என்று.  நேசித்து வேலையை செய்வதே கர்ம யோகம்தான். அதுவும் முழு மனதோடு ஒரு சிறப்பான பூஜையை செய்த பலனைத்தரும்.  ஒரு உண்மையென்னவென்றால், நம்முடைய வேலையின் சாயல் நம்முடைய நடத்தையிலேயே தெரிந்து விடும். ( இதை ஆன்மீகத்தில் சாயாரூபம் என்பார்கள். பிள்ளையார் மீது பக்தி கொண்டவர்கள் அவரைப் போலவே அதிக சதை பிடிப்புடன் இருப்பதும், பெருமாள் பக்தர்கள் ஆகர்ஷிக்கும் தன்மையுடன் இருப்பதையும் கவனித்துப் பார்த்தால் தெரியும்) இது போன்ற தோற்ற நடத்தைகள் தன் வேலையை விரும்பி செய்பவர்களுக்கு வந்துவிடும். இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால், இவர்களால் அலுவலக பாதிப்பினை வீட்டில் தவிர்க்க முடியாது. சிலர் அலுவலகத்தில் தரப்படும் பயிற்சிகளை வீட்டிலும் அமல்படுத்துவர். டைம் மேனேஜ்மெண்ட், பர்சனல் மேனேஜ்மெண்ட், டாகுமெண்ட் மேனேஜ்மெண்ட் போன்றவை இல்லத்திலும் அமல்படுத்தப்படும். நல்ல விசயம்தானே என்கிறீர்கள்...!  வேறு சிலர்,  வெளியுலகத்திற்கு கட்டுபாடாக தோற்றமளிப்பவர்கள், வீட்டில் விதிமுறைகள் மீறுவதை செய்வார்கள் - மின் விசிறியை வேகமாக சுழல விட்டு வெறும் தரையில் கன்னத்தில் கை வைத்து சயனிப்பது, பரிட்சை முடியும் வரை புத்தகங்கள் வீடு முழுவதும் சிதறி கிடப்பது, காலையில் நேரம் கழித்து எழுந்தாலும் சரியான நேரத்திற்குள் கிளம்ப அதிகளம் செய்வது, இன்னும் எத்தனையோ ...  இவர்களுக்கு சின்ன சின்ன விதிமீறல்கள் சமயத்தில் பதட்டத்தை குறைக்கும்.  ஆனால் அது மேற்குறிப்பிட்ட வேலை விரும்பிகளை மேலும் பதட்டப்படுத்தும். இரு வேறுபட்ட மனோபாவங்கள் ஒரு வீட்டில் இருந்தால், அப்புறம் நிம்மதி  வீட்டு வாசலில்கூட நிற்காது. இங்கே விட்டுகொடுத்தல் என்பது நமக்கும் மற்றவர்களுக்குமான விருப்பு வெறுப்புகள்தான். level of relaxation. ரொம்பவும் கெடுபிடியாக இல்லாமல் ரொம்பவும் விட்டுக்கொடுக்காமலும்,  எழுத்தில் இல்லாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும்.


3. இறுக்கமான நிலைப்பாடுகள்:
இல்லம் என்பது அதில் இருப்பவர்களின் வாழ்க்கை தரத்தையும் பொருளாதார வசதியையும் குறிக்காது, எத்தனை பாதுகாப்பாக நிம்மதியாக உணர்கிறார்கள் என்பதை பொறுத்தது. அங்கு இருப்பவரின் உணர்வுகள் மதிக்கப்படும்போதுதான் அவர்களின் நிம்மதியை உறுதி செய்யப்படுகிறது.  மற்றவருக்காக சிந்திப்பதும் மற்றவர்களின் இருப்பை உணர்வதும்தான் இல்லறத்தின் அழகு. முன்பெல்லாம் ஒரு தனி மனிதனின் தினப்படி அட்டவணையில் குடும்ப உறுப்பினர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது அப்படியில்லை. விடுமுறை நாட்களில்கூட அடுத்து வரும் வேலை நாளுக்கான திட்டமிடல்கள், விசேச நாட்களிலும் - ஒன்று கூடினாலும் - மனம் விட்டு பேச முடியாத நிலை. மனம் விட்டு பேசும்போது கசப்புகள் வெளிவரும், கருத்து பரிமாறல்கள் வன்மையாக மாறலாம். அதிக பட்ச எல்லைக்கு சென்று பிறகு சமாதானத்திற்கு வந்து சரியாவதற்கு ஒரு நீ...ண்ட நேரம் வேண்டும். அதற்கு அட்டவணை இடம் தராது. ஆனால் அப்படி ஒரு ரகளைக்குப்பின்  துவைத்து உலர்த்தியதுபோல் அழுக்கெல்லாம் தொலைந்துபோய் மனம் தெளிவாகி சுகமான நிம்மதி கிட்டும். அது போன்ற ஒரு சோதனைக்கு தயாராக முடிவதில்லை. நாட்கள் செல்லச்செல்ல அழுக்கின் சுமை கூடி சுமைதாங்கியாகிவிடுகிறோம். சண்டை போடவோ , சத்தம் போடவோ, சமாதானம் செய்யவோ , மன்னிப்பு கேட்கவோ ( மன்னிப்பு கேட்பது கூட ஒரு கலைதான். இது பற்றி தனியாக ஒரு பதிவிடுகிறேன்) நம்முடைய அட்டவணையில் இடம் இல்லையெனில் மனதிற்குள் அழுத்தம் கூடிவிடும். இந்த இடத்தில் விட்டுகொடுத்தல் என்பது நம்முடைய ஒரு நாளைய பொழுதில் நமக்காகவும் மற்றவருக்காகவும் ஒதுக்கும் நேரத்திற்கான சதவிகிதம்தான். 

- இன்னும் கொஞ்சம் அடுத்துவரும் கடைசி பகுதியில்

19 comments:

வாவ்.... டெம்ப்ளேட் சூப்பர்.

தமிழ்வாசிக்கு அக்காவாக இருந்து கொண்டு இந்த அளவிற்குகூட மாற்றவில்லையென்றால் எவ்வளவு பெரிய தவறு.

அன்பின் சாகம்பரி - இனிய மண நாள் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

மிக்க மகிழ்ச்சி, வாழ்த்திற்கு நன்றி ஐயா.

மிக மிக அழகாக எழுதுகிறிர்கள். வாழ்வியலை கைப்பிடித்து அழைத்து சென்று காட்டுவதை போல காட்டுகிறிர்கள். வாழ்த்துகள்.

மிகவும் அருமையாக இந்தக்கட்டுரை தொடருகிறது. பாராட்டுக்கள்.

//இரு வேறுபட்ட மனோபாவங்கள் ஒரு வீட்டில் இருந்தால், அப்புறம் நிம்மதி வீட்டு வாசலில்கூட நிற்காது. இங்கே விட்டுகொடுத்தல் என்பது நமக்கும் மற்றவர்களுக்குமான விருப்பு வெறுப்புகள்தான். level of relaxation. ரொம்பவும் கெடுபிடியாக இல்லாமல் ரொம்பவும் விட்டுக்கொடுக்காமலும், எழுத்தில் இல்லாத ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும்.//

மிகச்சரியாகச்சொல்லியுள்ளீர்கள்.
சிலவற்றை எழுத்தில் சொல்வது கூட மஹா கஷ்டம் தான்.

தொடர்ந்து எழுதுங்கள்.

மிக ஆழமாகவும் அதே சமயம்
மிகத் தெளிவாகவும் இந்தப் பதிவு உள்ளது
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சிறப்பான பகிர்வு.புது சட்டை அழகு,வாழ்த்துக்கள்.

தமிழ் உதயம் said...

மிக மிக அழகாக எழுதுகிறிர்கள். வாழ்வியலை கைப்பிடித்து அழைத்து சென்று காட்டுவதை போல காட்டுகிறிர்கள். வாழ்த்துகள்.

//ஊக்கமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி

//மிகவும் அருமையாக இந்தக்கட்டுரை தொடருகிறது. பாராட்டுக்கள்.//பாரட்டுக்களுக்கு நன்றி சார்.

//மிக ஆழமாகவும் அதே சமயம்
மிகத் தெளிவாகவும் இந்தப் பதிவு உள்ளது
பயனுள்ள பதிவு//
கருத்துரைக்கு நன்றி ரமணி சார்.

நல்லாயிருக்குல்ல. Thank you very much Mr.Shanmugavel

ஆஹா
வாழ்வியலின்
வசந்தத்தை
வசீகரமாய்
வண்ணமயமாக்கியது - உங்களின்
வளமையான
வலிமையான எழுத்து .

நாட்களின்
நகருதலில்
நலியாதிருக்கும்
உறவின்
உன்னதம்
உணர்த்தும்
உயர்ப் பதிவு

கம்பீரம் ...........

கவிதையாகவே பாராட்டா? வருகைக்கு கவிதைக்கும் நன்றி திரு.ராஜகோபாலன்

mee the firstu....

sorry teacher konjam late..

விட்டுகொடுப்பவர்கள் கெட்டுபோவது இல்லை
கேட்டுபோவர்கள் விட்டுக்கொடுப்பது இல்லை அப்படின்னு சொல்றீங்க
விளக்கும் சூழ்நிலைகளும் அருமை

கரெக்ட். வருகைக்கு நன்றி சிவா - கொஞ்சம் லேட்னாலும் க்ளாஸ்க்கு அனுமதியுண்டு.

ஹை!புது டெம்ப்லேட்?நல்லாருக்கே.
அப்படியே அந்த மரத்துக்கு கீழே மனசுக்கு பிடிச்ச ஒரு புத்தகத்தை
வாசித்துக் கொண்டு அந்த வாசிப்பை பாதிக்கா வண்ணம்
மெலிதாக ஒரு இசையை படர விட்டு இருக்கக் கூடிய அந்த நேரம் சுகமானது

***********************************

முதல் இரண்டை விட மூன்றாவதாகக் கூறிய 'இறுக்கமான நிலைப்பாடுகள்'
மிக முக்கியமான அனைவரும் படிக்க வேண்டிய கருத்து
உங்களிடம் அறிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது மேடம்
பகிர்விற்கு நன்றி

அது மகிழம்பூச்சரமாக இருந்தால் இன்னும் இனிமையாக இருக்கும். பதிவு பற்றிய பாராட்டிற்கு நன்றி ராஜி.