சாப்பாட்டிற்கான
கொஞ்சம் துரத்தல்.....
சாப்பாடோ தப்பி பிழைத்து
பயந்து ஓடுதல்.....
நேரம் கிடைத்தால்
சமையல் பாத்திரத்தால்
தலையில் விடும் அடி!
இருந்தாலும்....
சமயத்தில் .....
பசி இல்லை என்றாலும்
குணம் மாறமுடியாமல்
பூனையின் எலி வேட்டை!
சிறிய வயது சித்திரக்கதை
சிரிப்பாய்தான் இருந்தது
எலியிடம் சினேகம்கூட
எனக்குள் வளர்ந்தது.
எலிப்பொறி வடையை
கடித்த எலிக்கு மீட்புகூட
என்னால் கிட்டியது.
தப்பித்தவற்றின் வாழ்த்தும்
பெரியப்பாவின் கையில்
உயிர் விட்டவற்றின்
வெள்ளையுடை பாடல்களும்
உறங்கும்போது வந்தன.
எப்போதாவது பரிட்சையில்
தோற்றுபோனபோது .....
சின்ன சின்ன அடிபட்டு
இரத்தம் வந்தபோது....
குண்டுமணிக் கண்களின்
பழிவாங்கிய பார்வை
நினைவிற்குள் வந்தது.
சின்ன சந்தேகம்கூட வந்தது.
இறந்த பிறகு எலியெல்லாம்
பிள்ளையாரின் வாகனமானதா?
இப்போதுகூட...
------ ------ பூனைகளின்
பசி இல்லை என்றாலும்....
குணம் மாறமுடியாமல்
எலி வேட்டை தொடர்கிறது.
சிரிப்புதான் வரவில்லை
ஆனால்,
இன்றைக்கும் எலியிடம்
பிரியம் மாறாமல் .....
தப்பிக்கும் வழி தெரியவும்,
உயிர் தப்பி வாழவும்,
அப்பாவி எலிகளுக்காக
இறைவனிடம் வேண்டுகிறேன்
ஆமாம்,
எலியிடம் பிள்ளையாருக்கு
இன்றும் கருணை உள்ளதா?