ஒரு ஆங்கில நாளிதழில் வந்த செய்தி இது. முப்பது வருடங்களுக்கு முன்பு 25 சதவிகிதமாக இருந்த மன அழுத்தம் இப்போது 75 சதவிகிதமாக மாறிவிட்டது. குறிப்பாக தமிழ் நாட்டில் இதுபோன்ற மாற்றம் இருபது வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. கடவுள், குடும்பம், சத்தியம் போன்றவற்றின் மீது வைத்திருந்த பற்று இப்போது சுயநலம், தனி மனித முன்னேற்றம் என்று மாறிவிட்டதுதான் காரணமாம்.
கவனிக்க வேண்டியது தனி மனித முன்னேற்றம் என்ற வார்த்தையைதான். இந்த வார்த்தை உச்சரிக்கப்பட ஆரம்பித்ததுதான், நிறைய பொருளாதார மாற்றங்களை கொண்டு வந்தது. "ஓடு ஓடு முதலிடத்தை அடையும் வரை ஓடு, அருகில் வருபவர்களை பார்க்கத் தேவையில்லை. யார் உடன் வருகிறார்கள் என்றுகூட நிதானிக்க வேண்டாம். வெற்றி பெறுவதற்குரிய அத்தனை வழிமுறைகளையும் தொடர்ந்து ஓடு". இதுதான் தாரக மந்திரமாக மாறியது.
அந்த ஓட்டத்தில் தேசத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் குவிந்தன. அன்னிய செலாவணி அதிகரித்தது. இரவில் கூட வேலை பார்த்து, டாலரில் பணம் சம்பாதிக்கின்றனர். மக்களுக்கு - செலவு செய்யும் சக்தி அதிகரித்தது. இருபது வருடங்களுக்கு முன் பத்தாயிரம் ரூபாய் கடன் தரவே வங்கியில் வீட்டை அடமானம் வைக்க வேண்டியதாக இருந்தது. இப்போது அப்படியில்லை. பணம் புரள்கிறது. அரசாங்க வேலைக்காக காத்து இருந்து வாழ்க்கையை தொலைத்த கதையெல்லாம் முடிவுற்று, தனியார் நிறுவனங்களிலேயே அதிக சம்பளம் கிட்டுகிறது. திறமை இருக்கும் எவரும் முதல்படியை அடைய முடியும். நல்ல விசயம்தானே!
நல்லது, அப்படியானால் மன அழுத்தம் ஏன் அதிகரித்துள்ளது? பொதுவாக நகர்புறத்தில் நல்ல வசதியுடன் இருப்பவர்களுக்குதான் இது அதிகரித்துள்ளது. தனி மனித முன்னேற்றம் என்ற தாரக மந்திரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதோ? " நான் நன்றாக சம்பாதித்து என் குடும்பத்தை முன்னேற்றுவேன், என்னுடைய முன்னேற்றம்தான் குடும்ப முன்னேற்றம்" என்பது தவறிப்போய் , " நான் நன்றாக சம்பாதிக்கிறேன் " என்ற வாக்கியத்துடன் முடிந்துவிட்டது.
அளவிற்கு அதிகமான வருமானமே ஆயுதமாகிவிட்டது. அது அத்தனைபேரையும் மனதளவில் அழித்து தொலைத்து விட்டது. என்ன இப்படி ஒரு காட்டமான விமர்சனம் என்கிறீர்களா? இன்னும் கொஞ்சம் பேசலாமா?
சாலையில் ஒரு விபத்து. அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனங்களில் பறப்பவர்கள், மறுக்கவே முடியாமல் மனிதாபிமானத்தையும் தொலைத்துதான் போகிறார்கள். முடிந்தவர்கள் உதவினாலும், அன்று முழுவதும் வேலையில் மனம் ஈடுபட்டாலும் உள்ளே ஒரு அழுத்தமான குரல் கோபமாக பேசிக் கொண்டேயிருக்கிறது. அப்போது மட்டுமல்ல வீட்டில் உடல் நலம் சரியில்லாத அம்மாவை தனியாக விட்டு வந்தது பற்றி, பரிட்சைக்கு படிக்கும் குழந்தைக்கு தைரியம் கொடுக்கும் வகையில் மனம் விட்டு பேச நேரமின்மை ( இது போல பரிட்சை நேரங்களில் பேப்பர், பென்சில், ரப்பருக்கான பணத்திற்கு தடுமாறினாலும் பரிட்சை நேரத்து கெடுபிடியை குறைக்கும் வகையில் அப்பா, அம்மா பெரியவர்களின் கனிவான கவனிப்பும் நமக்கு இருந்ததே, இரவில் தேநீர், தேர்வு சமயத்தில் தெம்பான உணவு வகைகள்) இந்த இடத்தில் நாம்தான் தொலைந்து போயிருக்கிறோம். நம் உதவியின்றி அவர்கள் சமாளித்துக் கொண்டாலும் அந்த இடத்தில் அவர்களை தொலைத்துவிடுகிறோம். இப்போது பத்தாவது வகுப்பு தேர்வு எழுதிய மகனின் மதிப்பெண் எது வந்தாலும் நாம் ஒன்றும் பேச முடிவதில்லை. ஏனென்றால், நாற்று நட்டாயா? களை பறித்தாயா? என்கிற ரீதியில் கேள்விகள் எழும். ட்யூசன் வகுப்பு ஏற்பாடு செய்வதுடன் நம் கடமை முடிந்து இருக்கும். புத்திசாலிக் குழந்தைகள் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சிறு வயதிலிருந்தே அருகில் அமர்ந்து வீட்டுப்பாடம் சொல்லித் தந்து பழக்கப்பட்ட பிள்ளைகள்தா தனித்துவிடப்படும். ( அப்போது நாமும் நம் மொத்த நேரத்தையும் விலை பேசும் வேலையில் இருந்திருக்க மாட்டோம். அனுபவம் கூடக்கூட வருமானம் அதிகரித்து நம்முடைய பர்சனல் டைம்கூட பணமாகிவிடும்)
வாழ்க்கையின் ஓட்டத்தில் வருமானத்தை துரத்துவதில் எதிலேயே கவனம் இல்லாமல் முக்கியமான சிலவற்றை தொலைத்துவிட்டு மன அழுத்ததில் வாழ்க்கையின் பாதியிலேயே களைத்து விடுகிறோம். அந்த அழுத்தத்தை திருத்தக்கூடிய சில விசயங்கள் பற்றி பேசலாமா?