பிரச்சினை ஆரம்பித்த உடனேயே சம்பந்தப்பட்டவரிடம் நேரிடையாகவே பேசி விளக்கம் கேட்பது நல்லது. பிரச்சினையின் ஆரம்பம் நம்மிடம் இருந்து - அவர்கள் மேல் சந்தேகமோ, கோபமோ இருந்தால் உடனேயே பிரச்சினையை பற்றி பேச வேண்டாம். கொஞ்சம் இடைவெளி தந்து சுமுகமான முறையில் ஆரம்பிக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை: குறுக்கிட்டு குழப்ப வேண்டாம். உங்கள் மேல் சுமத்தப்படும் குற்றச்சாட்டை உடனேயே மறுத்து பேச வேண்டாம். ஏன் அவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று நமக்குத் தெரியாமலேயே போய்விடும். பிறகு கொஞ்ச நாள் கழித்து இதுவே திரும்ப நடைபெறும். ஒருவரின் வார்த்தைகளின் உண்மைக்கு மதிப்பு கொடுங்கள். "நீ எந்த விசயத்தையுமே பெரிதுபடுத்திதான் பேசுகிறாய்" என்று வாயை அடைக்காதீர்கள். இதுவும் மன வருத்ததிற்கு 'தொடரும்' போட்டுவிடும். நீங்கள் நினைப்பதுதான் சரி மற்றவர் நினைப்பது தவறு என்று முடிவு செய்ய வேண்டாம். சிலரிடம் நம்முடைய மனவருத்தத்தை சொல்லும்போதே "நீ மட்டும் யோக்கியமா?" என்று பதில் பழி வந்து சேரும். அதன் பிறகு பேசி தீ......ர்க்கத்தான் முடியும். சிலரிடம் பேசும்போதே ஒருவித சோர்வு வந்துவிடும், நம்மை பேச விடாமல் "நீ அதை பற்றித்தானே வருத்தப்படுகிறாய். எனக்கு புரிந்துவிட்டது நான் பார்த்துக் கொள்கிறேன்" என்பார்கள். மருத்துவரிடம் சென்றால்கூட நம்முடைய பிரச்சினைகளை காது கொடுத்துக் கேட்டு ஆறுதல் கூறியபின் கொடுக்கப்படும் மருந்திற்குதான் வியாதி கட்டுப்படும். சரிதானே, அதேதான் இங்கேயும் கடைபிடிக்கப்பட விரும்புவோம். நாமும் மற்றவரிடம் பேசும்போது இது போன்று 'மனதை படிக்கும் வித்தையை' கைவிட்டு நேர்மையாக அணுக வேண்டும். "என்னவோ சொல், கேட்டுத் தொலைக்கிறேன்' என்பது போன்ற இறுக்கத்தை தவிர்க்க வேண்டும்.
நாம் பேசும்போது செய்ய வேண்டியவை:
பிரச்சினையின் பாதிப்புகள், மாற்றிக் கொள்ளவேண்டிய கருத்துக்கள், ஏன் அவற்றை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி தெளிவாக அமைதியாக சொல்ல வேண்டும். அவர்கள் குறுக்கிட்டால் , மிகவும் நிதானமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் உங்களுடைய விளக்கத்தை தொடருங்கள். ஏனெனில் சமாதனப் பேச்சிற்கு அழைத்தது நீங்கள்தான். " குறுக்கிட்டு பேசாதே" என்று அதட்டுவது, கோபம் கொள்வது போன்றவை ' தடங்கலுக்கு வருத்துகிறோம்' போட வைத்துவிடும். பேச்சு வார்த்தையின் முழு கட்டுப்பாடும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஒரு சமாதானமான முடிவிற்கு வந்தே தீர வேண்டும் என்ற உறுதி மிக முக்கியம்.
செய்யக்கூடாதவை: அவர்களுடைய குண நலன்களை விமர்சிக்க வேண்டாம். "அப்பவே அவன் சொன்னான் நீ சரியான முசுடு என்று. இப்ப புரிஞ்சுகிட்டேன்" இது போன்ற வார்த்தைகள் மற்றவரை காயப்படுத்தும். சில நேரங்களில், தனிமையில் நம்மையும் காயப்படுத்தும். அப்புறம் , மத்தியஸ்த்தம் பேச வேறு யாராவது வர வேண்டும். எப்போதுமே நாம்தான் வெற்றி பெற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள். விட்டுக் கொடுத்தல்கள் வாழ்க்கையை விலை மதிப்பற்றதாக்கும். கணவன் மனைவி சண்டையில் தோல்வியை ஒப்புக்கொண்டவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் என்பார்கள். ஆகவே வார்த்தைக்கு வார்த்தை மல்லுகட்டி கடைசி வார்த்தையை நூல் பிடித்து திருப்பி என வளர்த்துக் கொண்டே போக வேண்டாம்.
பேச்சு வார்த்தை என்பது மாசுபட்ட கண்ணாடியை துடைத்து , முகம் பார்த்தல் போல அழகாக இருக்க வேண்டும். அதே கண்ணாடியை கீழே போட்டு உடைத்து சிதிலமடைந்த பல முகங்களாக நம்மை பார்ப்பதற்கல்ல.